ஹூஸைன் ஒரு கலைஞன். வர்த்தக நிர்ப்பந்தங்களுக்காகவும் வரைந்தாலும், தனித்திறமை உள்ள ஓவியன். இந்தியன். உலகில் இந்தியக் கலையின் நவீனத்துவம் பற்றிப் பேசப்படும்போதெல்லாம் தவிர்க்கமுடியாதவன். வயது மூத்தவன். விளம்பரப்பிரியன் என்று சொல்லப்பட்டாலும் தனித்தன்மையுள்ள கலைஞன்.
அவனுக்கு அவனது சொந்த நாட்டில் இடமில்லை.
எந்த மண்ணில் பிறந்து வண்ணம் குழைக்கக் கற்றுக்கொண்டானோ, எந்த மண்ணிலிருந்து தன் ஓவியங்களால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தானோ அவனுக்கு, அந்த மண்ணை மிதிக்கக்கூட இப்போது சாத்தியமில்லை.
அரசு அவனை வெளியேற்றவில்லை. அவன் இந்திய ‘இறையாண்மை’க்கு எதிராக எதுவும் செய்து விடவில்லை. லால்கர் தொடர்பாகக் கைது செய்யப்பட்டாளே எழுதப்படிக்கத்தெரியாத, சொந்த ஊருக்குத் திரும்பிப்போக வழிதெரியாத கிழவி, அவளைப் போல் அவன் மீது எந்த குற்றமும் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதில்லை. அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!
இன்று காலை ஹிண்டுவில் ராம் எழுதியிருந்ததைப் படித்தேன். ராம் எழுதுவதெல்லாமும் சரியல்ல என்றாலும், எப்போதாவது சரியாகவும் எழுதக்கூடும் என்பதற்கு இது ஓர் உதாரணம்! அப்போதும்கூட இதைப்பற்றி என்ன எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன், ஆனால், பதிவுகளைப்படிக்கும் போது இது கண்ணில் பட்டது. செய்திதான். ஆனால் அது எப்படிச் சொல்லப்படுகிறது என்று பார்க்கவும் வேண்டும்.
இந்த மானங்கெட்ட அரசு, தன் நாட்டின் கலைஞனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வெறி பிடித்த முட்டாள்களுக்குப் பயந்து அவன் உள்ளே வந்தால் பாதுகாப்போம் என்று சொல்லப் பயப்படுகிறது. அவனோ ஓவிய நுணுக்கத்தில் மட்டுமே புரட்சி செய்யத்துணிந்தவன், சமூகப்புரட்சியாளனோ வீரனோ அல்ல, மேலும் கிழவன்.
அவனுக்கு என்ன எதிர்ப்பு?
அவன் ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்திவிட்டானாம்! அதனால் அவன் இந்தியாவிற்குள்ளே வரக்கூடாதாம்! ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள், ஒரு முழு மலையை விற்பதற்காக வீரவசனமும் வியாபாரத் தந்திரமும் நிறைத்துப் பேசுபவர்கள் துணை நிற்கிறார்கள்! தூ என்று துப்பினால் இந்தியனான என்மீது தான் விழும்!
அவனை இன்று ஒரு நாடு பிரஜையாக ஏற்றுக் கௌரவித்துள்ளது. அதையும் செய்தியாக வெளியிடுபவர்கள், ஒரு மதத்தின் கடவுள்களை “கேவலமாக” வரைந்த ஓவியன் பற்றிய செய்திக்குறிப்பாக நமக்குத் தெரிவிக்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை ஆதிமூலம், ஸூர்யப்ரகாஷ் போன்றோரின் ஓவியநுட்பம் ஹூஸைனுக்குக் கிடையாது. ஆனால் இது அவனது ஓவியம் குறித்து அல்ல, அந்த ஓவியத்தின் கரு குறித்து! அவன் என்ன அப்படிக் கேவலமாக வரைந்தான்? சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தான் என்பதே குற்றச்சாட்டு! சீதையும் அனுமனும் நெருக்கமாக இருப்பதாய் வரைந்தான் என்று ஒரு குற்றச்சாட்டு!! நெருக்கமாய் இருந்ததால்தானே தூதுவனிடம் தன் மோதிரம் தந்தாள்? நிர்வாணமான சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?
நாட்டின் கணிம வளங்களை விற்பதற்காகக் காடுகளிலிருந்து ஆதிவாசிகளை வெளியேற்றத் துடிக்கும் அரசு, ஒரு கலைஞனை நாட்டிற்குள், அதுவும் எதிர்க்கட்சி வேண்டாம் என்று சொல்வதற்காக விடாமல் சும்மா இருக்கும் நிலையில்,, நாம் எல்லாரும் பதிவு எழுதி, பார்ப்பவர் எண்ணிக்கைப் பார்த்து, கடமையாற்றிக் கொண்டேயிருப்போம். ஜெய்ஹிந்த்.
a recent interview
6 years ago