வாசித்து முடிக்காத பல
புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தும் புதிதாய்ப் பார்க்கும்போதெல்லாம்
வாங்குகிறேன். அவற்றுள் வாசிக்கவே போவதில்லை என்பவையும் அடக்கம். தகவல்
களஞ்சியங்கள் அகராதிகள் மட்டுமல்ல, சில நவீனங்களும் சில பக்கங்களிலேயே படிக்க முடியாதவற்றின் அடுக்குள்
சேர்க்கின்றன. இப்போது புத்தக விழா ஆரம்பம், இன்னும் பல
வாங்கப்படும், சில அன்புடன் கொடுக்கப்படும், வேறு சில பரிந்துரைக்கப்படும். புத்தகவிழா என்னுள் பல நினைவலைகளைக்
கிளப்புகிறது.
33வது புத்தகவிழா! இதுவரை
இரண்டு ஆண்டுகள்தான் செல்லத்தவறியிருக்கிறேன். ஒருமுறை இன்னும் கொஞ்சம் காசு
சேரட்டும் இரண்டு நாள் கழித்துப்போகலாம் என்று இருந்தபோது அங்கே தீபப்பிடித்து
விழா நின்றுபோனதால்,அடுத்தது
நான் அமெரிக்காவில் இருக்க நேர்ந்ததால்.ஆரம்பத்தில் பார்க்க மட்டுமே செல்வேன், வாங்க முடியாது என்று தெரிந்தும். பிறகு வாங்கும் வசதி வந்ததும் வாங்க
ஆரம்பித்தேன். முன்பு பணமில்லாமல் வாங்காது விட்டவற்றை மட்டுமல்ல, பணம் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாதவைகளையும் வாங்கினேன்.
ஆயிரக்கணக்கில் சேர்ந்து விட்ட புத்தகங்களை வைத்துப் பராமரிப்பது சிரமமாக
இருக்கிறது, என்றாலும், இந்த ஆண்டும்
வாங்காது இருக்க முடியாது. ஒரு போதைப்பழக்கம் போல் இது ஆகிவிட்டது. பல விஷயங்களில்
ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எனக்கு இதில் ஆடம்பரம் ஓர் ஆணவநிலைக்கே போய்க்
கொண்டிருக்கிறது. இந்த ஆணவம் ஏன் வருகிறது?
கையில் காசு இல்லாதபோது
கனவுகளே போதும்; கைச்செலவுக்குக் காசு
சேர்ந்துவிட்டால் நிஜங்களும் போதுவதில்லை. இது புத்தகங்களில் மட்டுமல்ல, அனைத்திலும் தொனிக்கிறது. படிக்க ஆட்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம்
இருந்தவரை எழுத்துக்கள் கனவிலும் கவிதை கொட்டின;
பதிப்பிக்கவும் ஆட்கள் வந்துவிட்டபின், எழுத்துக்கள்
போதுமானதாய்த் தோன்றுவதில்லை. கிடைக்கும் வரைதான் எல்லாமும் சுவை என்றால் எதை
வைத்துக்கொள்வது? வசதியிருப்பதால் வாங்குவது என்றால்
வாங்குவதை நிறுத்துவது எப்போது?
புத்தகங்களும்
இப்போதெல்லாம் பார்க்கவும் அழகாய் இருக்கின்றன. கையில் எடுக்கும்போதே மனத்துள் ஒரு
இனிய எதிர்பார்ப்பினைத் தூண்டுகின்றன. அச்சுநேர்த்தியும் அதற்கு ஈடான வடிவமைப்பு
நேர்த்தியும் மயங்க வைக்கின்றன. நுகர்வு கலாச்சாரத்தில் இப்படித்தானே விற்கப்பட
வேண்டும். அதன் வீச்சாகத்தானே அவசியம் இல்லாதபோதும் வாங்க மனம் அலைகிறது!
பயன்படப்போவதையும் பயன்படுத்தப் போவதையும் மட்டுமே வாங்குவதென்றால் வீட்டில்
எவ்வளவு இடம் காலியாக இருக்கும்!
மனத்திலும் தான்.
வாங்கும் சக்தி இருப்பது போலத்தானே நினைக்கும் சக்தியும் (affordable என்ற அர்த்தத்தில்). அதுவும் கனவுகள் இலவசம் எனும்போது குப்பையாகச் சேராமலா இருக்கும்.....
வாங்காத போதும் சரி, வாங்கும் போதும் சரி,
எழுத்துக்களைத்தாண்டி எழுத்தாளர்களின் மீதும் ஒரு மோகம் ஏற்பட்டதுண்டு. ஆனால்
அவர்களில் பலரைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம், கனவுகள்
மிச்சமிருந்திருக்கும்.
எழுத எவ்வளவோ விஷயங்கள்
இருந்தும் மனம் இப்போது புத்தகங்கள் பற்றியும் புத்தக விழா பற்றியுமே
சுற்றிச்சுற்றி வருகிறது. டாஸ்மாக் கடை திறக்குமுன் காத்திருக்கும் அடிமை போல. இதனால்தான்
இந்தப்போதை பயமுறுத்துகிறது. புத்தகங்கள் மீதும் போதை குறைந்துவிட்டால் என்பது
மதுப்பழக்கத்தை விட்டுவிட்டால் எப்படி சமாளிப்பது என்று குழம்புவோர் போலத்தான் இது
என்று தோன்றுகிறது. ஒரு போதையிலிருந்து மீண்டால் நேரம் கூடுதலாய்க்கிடைக்கும், அப்போது வாழ்க்கை புதிய அறிமுகங்களையும்
அனுமதிக்கும். போதையிலிருந்துதான் மீள முடியும்,
காதலிலிருந்து அல்ல.
எழுத்து ஒரு காதலாய், ஒரு தவமாய், ஒரு
யக்ஞமாய் இருந்தது. ஆனாலும் டைரிகள் நிறைந்ததில்லை. மனத்துள்ளேயே பல வார்த்தைகள்
வாக்கியங்களாகி அழகான வடிவமைப்பு கூடிய புத்தகங்களாகி மறுநாள் விடிவதற்குள்
காணாமல் போயிருக்கின்றன. இதனால்தான் எழுத்தைக் கனவுக்கணினியில் தட்டச்சுச்செய்து
அழித்துவிடாமல், காகிதங்களில் காலத்திற்கும் பதிவு செய்வோர்
மீது ஒரு மரியாதை வருகிறது.
இதோ இந்த ஆண்டு
முடியப்போகிறது. கண்முன்னம் பிரிக்கப்படாத புதுவாசனையுடனும் புதிய
சங்கல்பங்களுடனும் டைரி. முந்தைய ஆண்டுகளின் டைரிகளும் இப்படித்தான் ஒரு வரி கூட
எழுதப்படாமல்,
உபயோகப்படுத்துவோர்க்குக் கொடுக்கப்படாமல் அழுக்கு சேர்ந்து அடுக்கிக்
கிடக்கின்றன. எண்ணங்கள் டைரிகளின் எழுத்துக்களை நம்பி இல்லை. அவற்றுக்குக்
காலக்கணக்கான வரிசைக்கிரமமும் இல்லை.
சனிக்கிழமை மாலை என்னை அங்கே
பேச அழைத்திருக்கிறார்கள்! இதற்கு முன் 1996 ல் என்னைப்பேச அழைத்திருந்தார்கள். அன்று
நான் பேசும் நேரம் தள்ளிப்போனது, காரணம், மடாதிபதி ஜெயேந்திரன் வருகை! விழா நிர்வாகிகள் அந்த மனிதனின் கால்கள் தரையில்
பட்டுவிடுமோ என்று பயந்ததுபோல மண்ணில் புரளாத குறையாகச் சுற்றி வணங்கிக்கொண்டு நடந்தார்கள்.
சில கடைகளுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆசி வாங்கிக்கொண்டார்கள், வாங்கிக்கொடுத்தார்கள். வயிற்றெரிச்சலா அருவெறுப்பா என்று புரியாத உணர்ச்சியோடு
நான் ஒரு இஸ்லாமிய புத்தகக்கடையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே அந்த “மகான்”
வந்தால் ஒரு குர்ஆன் வாங்கிக்கொடுக்கலாம் என்று காத்திருந்தேன். ம்ம்ஹூம், “புனித விழிகள்” கடையையும் பார்த்தன, ஆனால் பக்தசேவகர்களான
நிர்வாகிகள் அப்படியே வேறு பக்கமாக அழைத்துக்கொண்டு போய் விட்டார்கள்! நான் வாங்கிய
நூல் தகுதியான ஒருவர் கைகளில் கொடுத்துவிட்டு, பிறகு கூட்டத்தில்
பேசும் போது இதைக்குறிப்பிட்டுக் கண்டித்தேன். அதன் பின் அப்படி பேச வாய்ப்பு தரப்படவில்லை.
பதிவுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ
இல்லையோ, நான் நெருக்கமாகப் பழகிய இரு எழுத்தாளர்களின்
வெளியே தெரியாத படம் ஒன்றை இங்கே இணைக்கிறேன். என் அன்பின் இன்னொரு வெளிப்பாடாக! ஜெயகாந்தன் அப்போது தாடி வளர்த்திருந்தார்!!செப்டெம்பர் 2005!