பொய்யை புரட்டை எதிர்த்தே அவள் ஆயுதம் ஏந்தி இருக்கிறாள் என்றே எனக்கு நம்பப்பிடித்திருக்கிறது..அந்த மகாசக்தியின் தரிசனத்திற்காகவே காத்துக்கொண்டும் இருந்திருக்கிறேன்.
கவிஞர்கள்,ஓவியர்கள் சிற்பிகள் பலரது கற்பனையில் உருவான பிம்பத்தையே நானும் ஏற்றுக்கொன்டிருந்திருக்கிறேன். அவ்வப்போது பக்தியை மீறும் சலிப்பில் அந்த பிம்பத்தையும் சந்தேகித்திருக்கிறேன்.
இனி அப்படி ஒரு வினா உள்ளே வராது.
சக்தி எப்படியிருப்பாள் என்று ஒரு நிஜத்தின் படம் இப்போது உள்ளது..
இவள் வெறியோடு நிற்கவில்லை, வீரத்தோடு நிற்கிறாள்.
கயமையைக் கொல்ல நிமிர்ந்தெழுந்திருக்கிறாள்.
துப்பாக்கிகள், பெரும்படை, திமிர் எல்லாம் மிகுந்த எதிரிகளை எதிர்த்து நிற்கிறாள்.
இவள் இப்போது நான் கற்பனையில் கண்டு வந்த தெய்வத்தின் நிஜ வடிவம்.
இவள் பிம்பம் அல்ல, சத்தியம்.
இவளையே இப்போது நான் வணங்குகிறேன்.
இவள் என் தெய்வம் தான்.
யாரையாவது தெய்வமாக்கிவிட்டால், அதில் ஒரு செளகரியம் உள்ளது.
"சே நானெல்லாம் சாதரண மனுஷன் தானே, இப்படி அநியாயத்தை எதிர்க்கத்தானே சாமி இருக்கு.."என்று கோழைத்தனத்திற்கு ஒப்பனை கூட்டிக்கொள்ளலாம்.
அவள் தெய்வம்- எனக்காகவும் எல்லாருக்காகவும் போரிடுவாள், நான் மனிதன்- அவளை வணங்கி வியந்து, என் வேலையைப் பார்க்கப்போய்விடுவேன். மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தன் வசதிகளுக்கு எந்த பங்கமும் வராதபோது. தெய்வம் மானுட உருவில் வெளிப்படும், நேர்மையின் வீரம் தேவைப்படும்போது.
இப்படியொரு பெண், அந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததாக நாளை கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம்..
அப்போதும் என் பக்தி பகிரங்கமாக இருக்குமா அல்லது போலியான பகுத்தறிவோடு இந்த தேவதையை நிராகரிக்குமா தெரியவில்லை. உள்ளே மட்டும் தெய்வமாக அவள் ஒளிர்வாள்.