சின்ன வயதில் முகமூடி அணிந்த நாயகனாய் ஆங்கிலத்தில் அறிமுகமாகி
பின்னர் குமுதத்தில் ‘வேதாளமாக(?)’ என்னைக்
கவர்ந்த ஒரு சித்திரக்கதையின் பாத்திரம் பற்றியல்ல இது.
யதார்த்த வாழ்வில் எல்லாருமே அவ்வப்போது முகத்தைக்
காட்டாமல் பற்பல ஒப்பனைகளோடு வாழ்ந்து வருகிறோம். அப்படி அவ்வப்போது முகம் மூடி,
உணர்வுகளை ஒப்பனையில் மறைக்கும் பலர் பற்றியும் அல்ல இது.
மெய்நிகர் உலகில் முகத்தை மூடிக்கொண்டு வருவோர் பற்றியே
இப்போது இந்த எண்ண ஓட்டம்..
இங்கே நேருக்கு நேர் நின்று யாரும்
சிரித்துக் கொள்வதுமில்லை, அடித்துக் கொள்வதுமில்லை. இரண்டையும்
செய்யும் துணிவுள்ளவர்கள்கூட இங்கே முகம் காட்ட விரும்புவதில்லை.
மெய்நிகர் உலகில் நட்பும் அன்பும்,
எதிர்ப்பும் வெறுப்பும் கூட மெய்நிகர்தான். என்னை வேண்டுமென்றே சீண்டியும்
அவமதித்தும் எழுதுபவர்களில் சிலரைத்தெரியும் என்பதால் சொல்கிறேன். இங்கேயும்
வெளியே மெய்யான உலகிலும் பலர் ஒன்றாக இருப்பதில்லை. இங்கே வீரம் ‘போல’ முழங்குவோரின் முகம் என்னை நேரில்
பார்க்கும்போது எவ்வளவு மாறுகிறது, (பம்முகிறது!) என்பதை
அனுபவத்தில் பார்ப்பவன் நான். அப்படி அவர்களைச் சந்திக்கும்போது, இவர்களின் மெய்நிகர் அவதாரத்தைப் பற்றி எதுவும் பேசாமலேயே வேடிக்கை பார்ப்பது
எனக்கு சுவையான பொழுதுபோக்காகவும் ஆகிவிட்டது! அவதாரங்களில் எனக்கு நம்பிக்கையும்
இல்லை. எந்தெந்த நேரத்தில் என்னென்ன பொய்களும் நிஜங்களும் விலை போகின்றனவோ
அவற்றையே ஒரு பண்டமாற்றாக விளையாடுபவர்களைப் பற்றியல்ல இது. இது முகங்களுக்கு
மூடி தேவைப்படுவது பற்றிய ஒரு சிந்தனை.
பொய்க்காக அல்ல ஒரு புனைபெயர் என்பது எனக்குப் புரிகிறது. கல்கி,
சாண்டில்யன், சுஜாதா போல புனைப்பெயரால் நிஜப்பெயரை மக்கள்
மறக்கும் அளவு சாதித்தவர்களும் உண்டுதான். ஆனால் பொய் கூறவும், புறம்பேசவும் மட்டுமே புனைப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் இங்கே
நம் பதிவுலகில்தான் அதிகம் பார்க்கிறேன். முதலில் தன் பெயர் எனும் தன் அடையாளத்தை
மறுக்கவும் மறைக்கவும் அவசியம் என்ன? சில இயக்கங்களைச் சார்ந்து
செயல்படுவோருக்கு இத்தகைய தற்காலிக முகம்-காட்டாதிருத்தல் அவர்களின்
கொள்கைகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் அவசியம் தான் என்று உணர்ந்தே இதை
எழுதுகிறேன்.
வீரத்தின் விளைவுக்காகவோ, விளையாடிப்
பார்க்கவோ இங்கே சிலர் முகம் எனும் பெயர் காட்டாது எழுதுகிறார்கள்.அதே நேரம்
வக்கிரத்துடன் பிதற்றவும், வெறியைத் தணித்துக்கொள்ளவும்
சிலர் பெயரிலாதும், பொய்ப்பெயருடனும் திரிவது நாம் எல்லாரும்
அறிந்த ஒன்றுதான். இவ்விரண்டு வகையும்
அவரவரது தனிப்பட்ட அவசியத்தின் அடிப்படையிலான செயல்பாடு என்று ஒப்புக்கொண்டாலும், நான் இது தான், என் நிலைப்பாடு இதுதான் என்று
சொல்லாமல் கொள்கை ‘போல’ ஒன்றிற்காக
வெட்டியாய் ஊளையிடும் சிலரை நாம் கவனிப்போம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு வாக்கியத்தைக் கூட ஒழுங்காய்
எழுத முடியாதவர்களை எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் பதிவு
எழுதுவதில்லை. இங்கே எல்லாருக்கும் மொழி லகுவாக அமைந்துள்ளது. மொழி நாம் நம்மைக் காட்டிக்கொள்ளும்
ஒரு கருவி. அது ஒரு கண்ணாடி, அதில் நாம் நம் பிம்பத்தையும்
பார்க்கலாம் எனும்போதே பிறரும் நம்முள் பார்க்கலாம் என்பதும் நிஜம். மொழி
காற்றில் மிதக்கும் ஓர் அடையாள அட்டை.
நாட்டிய சாஸ்திரத்தில் மௌனம் கூட பேசும் என்பதை
பல்விதங்களில் பரதமுனி விளக்கியிருப்பார். மௌனம் ஒரு மொழிச் சுரபி. அது பேசும்.
அது புரிந்துகொள்ளப்படும். மௌனம் சம்மதம் மட்டுமல்ல எதிர்ப்பும் ஆகும். மௌனத்தில்
முகம் மூடுவது அச்சத்தினால், ஆசையைக் காட்டத் தயங்கும் நாணத்தினால், அருவெறுப்பினால், பிறகு விளையாட்டினால் என்று
எளிதாய் மேலோட்டமாய்க் கணிக்கலாம். மௌனம் தாக்குதலிலிருந்து ஒரு தற்காப்பு.
தாக்குவது உயிரக் குறி வைத்தாலும் உணர்ச்சியைக் குறி வைத்தாலும். பதிவுலகில் மௌனம்
ஒரு தற்காப்பாக இருந்தாலும், முகம் மூடி வருவது இல்லாத
வீரத்தை இருப்பதாய்க் காட்டிக்கொள்வதாகவே அமைகிறது.
முகம் எப்போதெல்லாம் மூடப்படும்? உயிர்போனால்
பிணத்தின் முகம் மூடப்படும். மானம் போகும்போது உயிருள்ளவரின் முகம்
மூடப்படும். ஒரு நாடகத்துக்கு அவசியமாகும்போது மூடப்படும். சில சம்பிரதாயங்களுக்காகவும்
சில விதிகளுக்காகவும் மூடப்படும். இப்படியெல்லாம் மூடப்படுவோரின் முகத்தின்
மூடியை மீறி அவர்களின் நிஜ முகமும் நமக்குத்தெரியும். இங்கே இப்படி எதுவுமே
இல்லாமல் முகத்தை மூடிக் கொண்டு வருவதாய் நினைத்து எழுதுபவர்கள் முகம் தெரிகிறது
என்பதை உணராதவர்கள். இவர்களை விட்டு விடலாமா? கோழைகள் என்று
ஒதுக்கி விடலாமா? முடியாது, கூடாது.
அவரவர் தம் முகத்தைக் காட்டுவதும் மூடிக்கொள்வதும் அவர்களது
விருப்பம்தான்; முகத்தை மட்டுமே மறைத்து வாய் ஓயாமல் பிதற்றுவோரைத்தான் நாம்
கவனிக்க வேண்டும். முகமல்ல இங்கே முக்கியம். மொழியும் அதன் உள்ளர்த்தமும், தொனியும் அதன் பின்புலமும் அவர்களது மாயையான இல்லாத தைரியத்தையும், உருப்படாத வீர்யத்தையும் காட்டிவிடும்.
கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள
எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப்
பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை
அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம்
அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.
இதன் பெயர் masked owl! jan.2009.