Saturday, January 15, 2011

உமாவுக்காக இது

உமாவுக்கு இதை எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு கோபம்...எனக்கு இதில் எந்தப் பயனும் இல்லை என்ற வெறுப்பு----
இந்த நாடகம் அந்த மேடையில்......யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம்?
http://umarudhran.blogspot.com/2011/01/blog-post.html

Wednesday, January 12, 2011

முடியாத ஒரு முன்னுரை


நான் எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டதேயில்லை. எழுதியே வாய்க்குச் சோறும் வண்டிக்குப் பெட்ரொலும் போட்டுக்கொள்ள முடியும் என்று பீற்றிக்கொண்டவனும் இல்லை, அப்படி எந்த உத்தேசமும் இப்போதைக்கு இல்லை.

அதே நேரம், எழுத்துக்களைக்கூட்டி வார்த்தைகளாக்கி, வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களாக்கும் வித்தை மட்டுமே எழுத்தாளன் எனும் புகழுக்குத் தகுதியாவது இல்லை என்று மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்  -மற்றவர்க்கும் எனக்கும்.

நான் கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக்கொண்டதில்லை. சுயசௌகரிய மயக்கத்திலிருந்து மீளாமல் அப்படிச் சொல்லிக்கொள்வதன் அபத்தம் விளக்கத் தேவையிலாத வெட்டிவாதம்.

நான் நாத்திகன் என்று சொல்லிக்கொண்டதில்லை, நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். கடவுள் நம்பிக்கையும் சாதீயத்திமிரும், பார்ப்பனீய குயுக்தியும் வேறுவேறு என்பது என் இன்றைய நம்பிக்கை. நான் நம்புவதால் நீங்களும் நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்தவனும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. கம்யூனிஸத்தைப் பிரச்சாரம் செய்யாத நான் கடவுள் நம்பிக்கையும் பிரச்சாரம் செய்வதில்லை – எனக்கு இரண்டுமே பிடிக்கிறது, இன்னும் மற்றவர் மீது திணிக்கும் அளவுக்கு இல்லை.

எனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது மீறி எனக்குச் சரியில்லை என்று தோன்றினால் அதைப் பதிவிடுவதும் என் வழக்கம். சில வேளைகளில் பதிவிடாத என் மௌனம் எனக்கே கூச்சம் தந்ததும் உண்டு. இதையெல்லாம் மீறி எனக்கென்று ஒரு சமூகப்பொறுப்பு இருப்பதாக நினைப்பவன் நான்.  வயதும் வசதியும் கூடியதால் இனி களப்பணி எனக்குச் சாத்தியமில்லை. ஆகவே இப்போதைக்கு வார்த்தைகள் மட்டுமே என் வேலை.

இந்த ஆண்டு நிறைய எழுதுவதாய் இப்போதைக்கு உத்தேசம். யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ எனக்காவது பயன்படும் எனும் (கடவுள் போன்ற) நம்பிக்கையில் –இவ்வகை நம்பிக்கை தான் கனவு என்றும் ஆசை என்றும் சொல்லப்படும்: நிறைவேறினால் பேரானந்தம், நிறைவேறும் வரையும் நிழலானந்தம்.

வாழ்க்கை பற்றிய என் புரிதலை, அனுபவங்களின் அடிப்படையில் நான் அலசித் தேர்ந்துகொண்ட சித்தாந்தங்களை, என் கோணங்களை, கோணல்களை விமர்சிப்பதாய் மட்டுமல்லாமல் விளக்கி விளக்கம் பெறுவதுமாக எழுதுவதே இன்றைய சபதம்.
அடுத்த பதிவில் நட்பு பற்றி எழுதலாம், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கிசுகிசுவாக அல்ல. நேர்மையாக. பூச்சிகளையும் புழுக்களையும் அடையாளம் காட்டும் நேரத்தில் தேவரூப விந்தைகளையும் வியந்து போற்றும் வண்ணமாக.
இன்ஷா அல்லாஹ்.