திரும்பிப்பார்க்க கழுத்து திரும்பவேண்டும், கழுத்தும் சுளுக்கிக்கொள்ளலாம், எதிரே வந்து எருமை மாடும் மோதலாம். பின்னிருப்பதைப் பார்க்க விழியசைந்தால் போதும் நிற்காமல் தொடரும் பயணம்.
இங்கே நான் ஏதோ உருப்படியான மனவியல் கோட்பாடுகளை விளக்கப்போகிறேன் என்று எதிர்பார்க்கும் அன்பர்கள் இந்த வாக்கியத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். 2011 முதல் அவ்வாறு மட்டுமே எழுத முயல்கிறேன். இப்போது எழுதுவது என் மனத்தகிப்பின் தணிப்புக்காக. என் உளத்தீ சுற்றிச் சும்மா நிற்கும் ஊமைஜனங்களையும் எரித்து விடக்கூடாதே என்பதற்காக.
மறைந்திருந்து தாக்க நான் நாமம் போட்ட ராமன் இல்லை! குங்குமத்தைப் பெருமிதமாய் வைத்திருக்கும் சாக்தன்!
உலகம் சுழல்வதைத்தானே காலம் என்று கணக்கு வைத்துக்கொள்கிறோம், மீண்டும் பழைய இடத்திற்கே வருகிறேன். நான் ஆரம்பத்தில் எழுதியது கார் ஓட்டும் போது ஏற்படும் அனுபவம். இப்படித்தான் பல வருடங்களுக்கு முன் கார் ஓட்டிக் காஞ்சிக்குச் சென்றேன். காமாக்ஷி எனக்குப் ப்ரத்யக்ஷமான பரவசம்- என் சிந்தை, சித்தம், செயல், ஸ்வாசம். அவளைப் பார்க்கும் ஆசை வந்தால் அதற்கு காரணம் தேடுவதில்லை, கிளம்பி விடுவேன். அப்படி அல்ல அன்று, பல ஆண்டுகளுக்கு முன்!
என்னுடன் காரில் உமா, உமா மற்றும் மாமல்லன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் பிரபலமாகத் துடிக்கும் எழுத்தாளன். இரண்டு முறை உமா என்று எழுதி விடவில்லை, அவன் மனைவியின் பெயரும் உமா. நாங்கள் காஞ்சி நோக்கிக் காரில் என் வீட்டிலிருந்து பயணமானோம். (அவர்கள் என்னுடன் காஞ்சிக்கு வருவதற்காக என் வீட்டுக்கு வந்ததால், அவர்களை வீட்டுக்குப் போய் எழுப்பி உடனே என்னுடன் வா என்றெல்லாம் இம்சிக்கவில்லை).
“ப்ளீஸ்டா...கார் ஓட்டத்தெரியாது, காஞ்சிக்கு வழி தெரியாது, கோவிலில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாது, ப்ளீஸ், ப்ளீஸ்..கூட வாயேன்” என்று கெஞ்சிக் கொஞ்சிக் கூப்பிட்டுச் செல்லவில்லை! வரவேண்டும் என்று விரும்பிய தம்பதியரைத்தான் அழைத்துச் சென்றேன். இவன் தான் இப்போது ”ப்ளீஸ் ப்ளீஸ் நான் சிபாரிசு செய்கிறேனே” என்று ஆசைப்பட்டதாகச் சொல்கிறான்.
தட்சிணை தராமலேயே கருவறை வாசல் வரை என்னை விடுவார்கள்- பழக்கம் காரணமாக. நான் போக ஆரம்பித்த காலத்திலிருந்து என்னை காசுக்காக அவர்கள் வரவேற்றதில்லை, நான் ஜெயேந்திரன் மீது மரியாதை இல்லாதவன் என்று தெரிந்தும்! இதைப்பற்றி எழுதுகிறானாம் மீண்டு வந்து முண்டியடிக்க முயலும் எழுத்தாளன்!
நான் பாதி பார்ப்பானாம்! நான் உள்ளே சென்று சங்கரன் உட்கார்ந்த இடத்தில் உட்கார அலைந்தேனாம், அவன் மானமுடன் வெளியே (கோவிலுக்கு வெளியே அல்ல, அர்த்தமண்டபத்திற்கு வெளியே!) நின்று விட்டானாம். அவனது சுயாபிமான சுதர்ம ரோஷம் எல்லா மயிர்க் கால்களிலும் இன்னும் சிலிர்த்துக் கொண்டிருக்கிறதாம்.
நான் காமாக்ஷியையும் கம்யூனிஸத்தையும் மாறி மாறி நக்குகிறேனாம்!! காமாக்ஷியை நான் நக்கவேண்டியதில்லை, என் நாக்கே அவள்! கம்யூனிஸத்தையும் நான் நக்க வேண்டியதில்லை, நக்கிப் பிழைப்பவன் கம்யூனிஸ்ட் அல்ல!!
ஐயையோ..பின்னிருப்பதைப் பார்க்காமல் பின் திரும்பிப் பார்க்கிறேனே.. எருமை மாடு எதிர் வரப்போகிறது!!
நரசிம்மன் எனும் பெயருடைய Central Excise, Mugapairல் இப்போது வேலை செய்யும் விமலாதித்த மாமல்லன் எனும் பெயரில் உருப்படியாகவே ஒரு காலத்தில் எழுதியவனைப் பற்றித்தான் இங்கே எழுதுகிறேன். அவனை 1982 முதல் தெரியும்!
என் முதல் நாடக முயற்சியான அபிதாவின் அரங்கேற்ற நாளன்று (நாடகத்திலும்) எதுவுமே சரியாக நடக்காத எரிச்சலான ஒரு பகலில் ஓர் இளைஞனை மிரட்டியும் விரட்டியும் சிலர் நடந்துகொண்டபோது யாரென்று கேட்டதற்குச் சொல்லப்பட்ட பதில்..”விமலாதித்த மாமல்லன்னு ஒரு நல்ல ரைட்டர்...” பரீக்ஷாவிலிருந்து நான் விலகி மூன்றாண்டுகள் ஆகிவிட்டதால் அவனை அடையாளம் தெரியவில்லை. அப்புறம் எப்போதிலிருந்து என்னை இம்சிக்க ஆரம்பித்தான் என்று நினைவில்லை, அவன் அடிக்கடி என் வீட்டுக்கு (நண்பர்கள் சொன்னது போல்) நேரங்காலமில்லாமல் வருவது நிகழ்ந்தது.
அவனிடம் சில விஷயங்கள் எனக்குப் பிடித்தது. பெண்களிடம் இளிக்க மாட்டான், படிக்க ஆசைப்படுவான், டேய் ஒரு க்வார்ட்டர் வாங்கி வா என்று (அதட்டலாக அல்ல அன்புடன்தான்) சொன்னால் சைக்கிள் மிதித்து கோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டிச் சென்று வாங்கி வந்து கொடுப்பான். தமிழில் இருந்த இலக்கியப் பரிச்சயம் ஆங்கிலத்தில் இல்லையென்று அதற்காக உழைக்கத் துடிப்பான். அவ்வளவுதான்!!
அந்த காலகட்டத்தில் நான் பழகிய பேசிய அத்தனைபேரும் என்னிடம் சொன்ன விஷயம்- அவன் நல்ல எழுத்தாளன். எவருமே இன்றுவரை சொல்லாத விஷயம் ‘அவன் நல்லவன்’!!!!
எல்லாமே எச்சத்தால்தானே கணிக்கப்படும்?
இன்று என்னை தூஷிக்கிறான் (வெறுப்புமிழ்ந்து பேசுகிறான் என்பதை விடவும் இச் சொற்பிரயோகம் புரிபடுமே என்றுதான்!). ஏன்?
அவன் இணையத்திற்கு பதிவிலும் ட்விட்டிலும் பஸ்ஸிலும் வந்து சில மாதங்கள் தான் ஆயிற்று. விடுமுறையில் இருக்கிறேன் இங்கே வந்திருக்கிறேன் என்றான், வாழ்த்தினேன். இங்கே புதிய இணைப்புகள் தரும் போதை எல்லாருக்கும் தெரியும், முகம் தெரியாதவரின் ஹலோவின் முதுகுசொரிதலுக்கு இணையான சுகம் கடினம், அதில் அவன் மயங்கினான் ஈராண்டுக்கு முன் நானும் எனக்கு முன் பலரும் மயங்கியதைப்போல. அவனுக்குச் சில ஜால்ராக்கள் சேர்ந்தன. அந்த ஜால்ராக்களுக்கு ஒரு ரகசிய அட்டவணை (secret agenda என்பதை மொழி பெயர்க்கத் தெரியவில்லை) இருந்தது. அவர்களில் சிலர் ட்ராவிடர்களாகவும் ஒப்பனை போட்டுக் கொண்டு திரியும் காரியவாதிகள்!
ஆட்டை (என்று சாருவையும்) மாட்டை (என்று ஜெமோவையும்) கடித்து மனிதனைக் கடிக்க வினவு மீது பாய்ந்தான், இடையில் எஸ்ராவின் மீதும் வாந்தி எடுத்தான்! வினவு நண்பர்களும் தோழர்களும் சிலநேரம் அவசரப் பட்டாலும் எந்நேரமும் (இதுவரை) நேர்மையாகச் செயல்படுவதால் எனக்கு அவர்களிடம் உடன்பாடு! என் குங்குமப் பொட்டைச் சகித்துக்கொள்ளும் அவர்கள் கோணல்களையும் கோமாளிகளையும் சகித்துக்கொள்ளாமல் அவனையும் விமர்சித்தார்கள். வெகுண்டான்!
தூண்டிவிட ஆளிருந்தால்தானே பூணூல் வெளிவரும், வந்தது! வினவு என் பினாமி என்று கூட நம்ப ஆரம்பித்தான், ஆனால் அப்போதைக்கு விட்டுவிட்டான். மதார் என்ற ஒரு சின்னப் பெண்ணிற்காக தொலைபேசியில் ஆரம்பித்த தொல்லை, அதிஷா யுவக்ருஷ்ணா என்று நீண்டது! இந்த இம்சைக்காகத் தவிர்த்தால் அது நானே எதிரி என்று ஆகியது!!
இப்போது விக்கிலீக்ஸ் மாதிரி என்னைப் பற்றி எழுதுகிறானாம்! (நக்கின/நக்கப்பட்டலீக்ஸ் எழுதினால் என்னாவது?).
நான் பாதி பார்ப்பானாம்! என் மனைவி ஓர் ஐயர் குடும்பத்தில் பிறந்ததாலா இல்லை என் அம்மா ஓர் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்ததாலா!! பாவம் இவர்கள் பாப்பாத்திகள் என்றும் எழுதலாம் (சைக்கிள் வாசம்). பாப்பாத்திகளைப் பார்த்து நான் இளிப்பவனாம்- என் முன்னாள் மனைவியையும் சேர்த்துச் சொல்கிறானாம்! அந்த என் முன்னாள் மனைவிதான் ஒரு சிவப்பு லூனா ஓட்டிக்கொண்டு அவனது புண்யஸ்தலமான ட்ரைவினில் அவனை அடித்தவள்! இத்தனைக்கும் அடிப்பதற்கு முன் அடிப்பேன் என்று அவள் சொல்ல, அதற்கும் ‘சிபாரிசுக்காக’ இவன் என்னிடம் வர, என் நண்பர்களின் ரகசிய மகிழ்ச்சி எனக்கும் இருந்ததால் நான் சும்மா இருக்க- அந்த சுபமுகூர்த்தம் நடந்து முடிந்தது! ஐயையோ சொல்லக்கூடாத கதை சொல்லி விட்டேனா?
இதன் பிறகு என்னவெல்லாம் விக்கிலீக்ஸ் போல மாமல்லவொழுகலாகும்? கலாச்சாரக் காவலர்கள் கோபித்துக் கொள்ளும்படி நானும் உமாவும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தோம்- எட்டு வருடங்கள்! அதன் பின் நான் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் உமா அமெரிக்கா போய் சம்பாதிக்க முடிவு செய்த போது நாங்கள் சட்டத்திற்காகச் செய்துகொண்ட்து ஒரு சுயமரியாதைத் திருமணம்- எங்கள் முதன்மை சாட்சிக் கையெழுத்து கவிஞர்.மு.மேத்தாவுடையது!
வேறென்ன ஒழுகல்கள் வரும்? தெரியவில்லை! அவன் லஞ்சம் வாங்குவதை முறைப்படுத்தி வைக்க லேப்டாப் வாங்கியது வராது. கனிமொழி எனக்கு ரொம்ப ரொம்ப முன்னால்தான் தெரியும் என்று நான் சொன்னதும் வராது. மருதுவை இம்சைப்படுத்தியது வெளித் தெரிந்துவிட்டதால் உடனே ஒரு சூப்பர் மருது போஸ்ட் மட்டும் வரும்!!
மாமல்லன் எனக்குப் பிடித்தவனில்லை, ஆனாலும் சகித்து வந்தேன் பல ஆண்டுகள்! இப்போது என்ன ஆயிற்று விட்டுவிடுங்கள் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். முதிராதவன் முச்சந்தியில் நின்று கூப்பாடு போட்டால் என்ன செய்யலாம்? சொல்லுங்களேன்!
அவன் கடைசியாகப் போட்டது-<மீண்ட> பிரச்சனையே இப்ப நானாவே மீண்டுட்ட காண்டுதான்:)) மீண்டுவிட்டானா? அர்த்தம் புரியாதவர்களுக்கு – வந்த போது அந்தக் கையைப் பிடித்து பேனாவிடம் நான் கொண்டு போனேனாம். இப்போது அதுவே விரலிலும் (முகத்திலும்) மசி தடவிக் கொண்டதாம்.
“தான் பெரிய வீரனென்று தலைவிரித்துத் திரிபவரின்
ஆணவத்தை ஒடுக்கிடுவாள் ஒருத்தி
அந்த ஞானியின் பேர் உலகில் இறைவி”- adapted from கண்ணதாசன்