ஆட்டம் முடிவதில்லை தில்லையில்.
இன்னும் எத்தனை காலம்? நடராஜன் ஆடட்டும், அந்த நாட்டியம் ஒரு ககனக்கலைக்கூத்தாகவே இருக்கட்டும்..
அவன் பெயர் சொல்லி கலைஞர்கள் ஆடலாம், கயவர்கள் ஆடலாமா?
அந்தணர் என்போர் அறவோர் என்பதா நிதர்சனம்?
பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலியாய் மினுக்கிக்கொண்டிருக்கும் சாமான்யசாணக்கியனுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்லை இது குடும்ப விஷயமில்லை என்பதால் முக்கியமில்லையா?
சிதம்பரத்தில் ஆறுமுகசாமி என்னும் முதியவர் பக்திக்கும் முதுமைக்கும் உரித்தான முரட்டுப்பிடிவாதத்தில், கோவிலில் தேவாரம் பாட ஆசைப்பட்டார், மறுக்கப்பட்டதும் அடம் பிடித்தார். பொதுவாக கோவில்களில் இப்படி பக்தியோடு உரக்கப்பாடுவது குறித்து எனக்கு உடன்பாடில்லை. பலநேரம் சுருதி இல்லாமல் தாளம் இல்லாமல் சிலர் பாடுவதைக் கேட்கச்சகிக்காமல் மனத்துக்குள் 'கெட்ட' வார்த்தைகள் பொங்கிவருமே தவிர பக்தி பொங்காது. ஒருமுறை ஒரு சிறந்த பாடகி சன்னதியில் பாடிக்கொண்டிருந்த போது, என் மனம் கடவுளையும் அதன் பிம்பத்தையும் விட பாடகியின் மீதும் பாட்டின் மீதுமே லயித்திருந்தது. இங்கே பாட்டின் தரமல்ல ப்ரச்சினை. பாடுபவரும் (?ஜாதியால்) பாட்டும் (?மொழியால்) தான் ப்ரச்சினை. இதனாலேயே ம.க.இ.க போராடி நீதிமன்றம்வரை நின்று அவருக்கு அங்கே பாடும் உரிமை வாங்கித்தந்தது.
அவர் என்ன "வேர் இஸ் தி பார்டி டுநைட்" பாடவா ஆசைப்பட்டார்? தேவாரம் தானே (திருவாசகம் கூட இல்லையே)! இதில் தான் ஆதிக்கவெறியும் ஆணவமும் வெளிப்படுகிறது. இதுமேலோட்டமாகப் பார்த்தால் வெறும் ஜாதிக்கொழுப்பாகத்தோன்றும்;(இப்படி நினைத்துக்கொண்டு சுசாமி வேறு இதில் ஆடி முட்டைவாங்கியதையும் நினைவில்கொள்ள வேண்டும்) உண்மையில் இது பணப்பிரச்சினை. வருமானத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்னும் பதைபதைப்பும் தான் இங்கே பின்னணி.
அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில் தரும் பணம் நேரடியாக நடரஜனுக்குத்தான் போகவேண்டும் என்று பொது உண்டியல் வைத்ததைக்கூட அவர்கள் எதிர்த்ததிலேயே இது புரியும்.
இந்நிலையில், இப்போது-
வினவு
Posted on July 15, 2009 at 2:52 pm
FLASH NEWS
நேற்று இரவு (14.07.09 ) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி அங்கே வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட தீட்திதர்களை எதிர்த்துக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீட்திதப் பார்ப்பனர்கள் அந்த முதியவரை வயதானவர் என்றும் பாராமல் தாக்கியிருக்கின்றனர். காயமுற்ற சிவனடியார் தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். ம.க.இ.க வின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவனடியாரின் கனவான தமிழில் பாடுவதும், கோவிலை அரசு கையிலெடுப்பதும் நிறைவேறிய நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் அவர் மீது கொலைவெறியில் இருப்பதும் இப்போது அதை வெளிப்படையாக காட்டியிருப்பதும் அரசு அவாள்களைக் கண்டு பயப்படுவதன் விளைவே.
ஆட்டம் முடியவில்லை! நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?