Wednesday, September 3, 2014

முதல் பத்து

முகநூலில் விளையாட்டாய் எல்லாரும் பத்து புத்தகங்கள் பட்டியலிடுவதைப் பார்த்து தோன்றியது இது!
ரொம்பவும் யோசித்து, என்னில் அதிர்வுகள் உண்டாக்கிய புத்தகங்களைப் பட்டியலிடும் போதுதான் என்னையும் எனக்குக் கொஞ்சம் தெரியவருகிறது. என் முதல் பத்து புத்தகங்கள் இவை. என்னுள் பாதிப்பையும் சிந்தையில் மாற்றத்தையும் உருவாக்கியவற்றின் பட்டியல் மிகவும் நீளம்.
1.மூன்றாம் வகுப்பில் முதல் மதிப்பென் வாங்கியதற்காக என் அம்மா குட்ஷெபர்ட் எதிரில் இருக்கும் கடைக்கு அழைத்துச்சென்று, என்ன வேணுமானாலும் வாங்கிக்கோ என்றதும் அங்கிருந்த Frank Baum எழுதிய the wizard of oz வாங்கிய பெருமை மட்டுமே அப்போது இருந்தது. எழுத்து கூட்டிப்பார்த்தும் படிக்க முடியாத வயதுக்கு மீறிய புத்தகம். அதை நான் முப்பதாண்டுகளுக்குப் பின் தான் படித்தேன்.
2. ஐந்தாம் வகுப்பின் விடுமுறையில் என் தாத்தாவின் அலமாரியில் இருந்த புத்தகத்தை நான் ஆசையோடு எடுத்து புரட்டுவதைப் பார்த்து, அவர், “ இதைப் படிக்க முடியுமானா எடுத்துட்டுப் போய் படி,” என்று சொல்ல, அந்தச் சவாலுக்காக நான் படித்த முதல் புத்தகம்- Erle Stanley Gardner எழுதிய Duplicate Daughter. பெரிதாய் உள்வாங்கியிருக்க முடியாது என்றாலும் முதலில் முழுதாய் பாடங்கள் தாண்டி படித்த புத்தகம் அது.
3.அதே காலகட்ட்த்தில் அதே அலமாரியிலிருந்து என் அம்மா எடுத்து வந்த, கல்கியிலிருந்து வாரந்தோறும் சேகரித்து பைண்ட் செய்யப்பட்ட ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகன் தான் தமிழில் படித்த முதல் புத்தகம். அப்போது வாசிப்பை அதில் வந்திருந்த மணியம், வினு ஆகியோரின் சித்திரங்கள் மேலும் சுவை கூட்டியதும் நினைவில் இருக்கிறது.
4.எட்டாவது படிக்கும் போது, Frank Richards எழுதிய Billy Bunter , Richmal Crompton எழுதிய Williams, புத்தகங்கள், ஒரு போட்டியாய் எல்லாவற்றையும் யார் முதலில் படிப்பது என்று நண்பனுடன் பந்தயித்து படித்ததும் நினைவில் இனிய பசுமை, அதற்குள் Enid Blyton தாண்டியாயிற்று.
5.ஒன்பதாவது படிக்கும்போது, மற்றவர்கள் முன் பெரிதாய்க் காட்டிக்கொள்ள, சென்னை மத்திய நூலகத்திலிருந்து Mervyn Peake எழுதிய Titus Groan எடுத்து வந்து, எல்லோருக்கும் காட்ட பள்ளிக்கும் எடுத்துச் சென்று மதிய உணவு இடைவேளையில் புரட்டிக் கொண்டிருந்து பந்தா பண்ணினாலும், நடிப்புக்காக விரித்து வைத்திருந்த புத்தகத்தின் பக்கங்களில் கண்மேய, English மீது ஓர் ஈர்ர்பு வந்த்தது இந்த புத்தகத்தினால்தான். அப்போது அதை முழுதாய்ப் படிக்கவில்லை, பிறகு தேடிதேடி அதை முழுதாய்ப் படித்தது ஐம்பதாவது வயதில்!
6.அதே காலம், பள்ளியில் பாடமாய் வைத்திருந்த Charles Dickens எழுதிய Tale of two cities ஆரம்பவரிகள் “It was the best of times.. it was the worst of times..”எழுதுவதெனில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உள்ளே ஒரு பொறி பற்றவைத்தது.
7.பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் தொடர்ந்து இரண்டாண்டுகள் தினமும் படித்தது, Shakespeareன் Midsummernight’s Dream. தினமும் Wren & Martin வைத்துக்கொண்டு, வரிக்கு வரி Midsummernight’s Dream அலசப்பட்டது. அந்த என் பள்ளியின் அந்த இரண்டாண்டுகள்தான் Englishல் எனக்கு நாட்டமும் நேர்த்தியும் உருவாக்கி வளர்த்தன. வரிவரியாய்ப் பிய்த்து காவிய வரிகளில் இலக்கணம் கற்பித்த என் ஆசிரியர்  Mathewsதான் இன்னும் படி இன்னும் எழுது என்று என்னை ஊக்குவித்தவர்.
8. அன்றைய PUCயில்தான் முதல் டாகூர். அவர் எழுதிய Gardenerதான் மொழி இவ்வளவு மிருதுவாகவும் மனதை வருடும் என்று எனக்கு உணர்த்திய புத்தகம்.
9.மருத்துவக்கல்லூரி முதலாண்டின் விடுமுறையில் முதல் தமிழ் நாவல் நா.பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள், அதையடுத்து உடனே ஜெயகாந்தனின் ‘ஓ கோகிலா என்ன செய்துவிட்டாள்’…அதற்கு அடுத்த ஆண்டு லா.ச.ராவின் அபிதா.
10.அதே காலகட்டத்தில் ஒரு நண்பனின் லாட்ஜில் காத்திருக்கும்போது, அவனது ரூம் மேட் வைத்திருந்த மீராவின்  கனவுகள்+காகிதங்கள்+கற்பனைகள். அதிலிருந்து தேட கிடைத்த பொக்கிஷம் தான் ப்ருமீளின் கைப்பிடியளவு கடல்.

இந்தப் பட்டியலைத் தொடர்வது வாழ்க்கையின் பின்னோட்டமாய் அமைந்து விட்டது.

Monday, July 14, 2014

ஜூலை பதினான்கு


இதே நாள், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலாய், ஒரு டாக்டராய் என் க்ளினிக்கில் உட்கார்ந்தேன். அன்று என்னுடன் என் நண்பனும் அவன் மனைவியும் துணைக்கு வந்தார்கள். உள்ளே உட்கார்ந்து என்ன செய்வது என்றே தெரியாமல், செய்ய எதுவும் இல்லாமல் உட்கார்ந்து வெட்டியாய் ஏதேதோ பெசிக்கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் போனபின், இன்னும் பத்து நிமிஷம் பார்க்கலாம் யாரும் வராவிட்டால் போய்விடலாம் என்று முடிவெடுத்தபோது ஒருவர் உள்ளே வந்தார்.
“நீங்க தான் டாக்டரா?”
“ஆமாங்க”
“ஆணி கீறிடுச்சு, செப்டிக் ஊசி போட்டுடுங்க”
“எங்கே அடிபட்டுச்சு, காட்டுங்க..”
“ட்ரெஸ்ஸிங் எல்லாம் வேணாங்க, ஆய்ண்ட்மெண்ட் நானே போட்டுட்டேன், ஊசி மட்டும் போடுங்க”
“ சரி, வாங்கிட்டு வாங்க” என்று டிடி எழுதிக்கொடுக்க, “ உங்க பேர் என்ன்ங்க?” என்றால்,
“தெரியாதாங்க? நான் தான் அன்வர் பாய். தோ எதித்தாப்பல நம்ம கடைதான்” என்று சொல்லி விட்டு, ஊசி வாங்கி வந்து நான் போட்ட பின், “பரவாயில்ல, வலிக்காம போட்டீங்க” என்று சொல்லி விட்டு எழுந்தார்.
ஃபீஸ் எப்படி கேட்பது, எவ்வளவு கேட்பது என்று புரியாமல் நான் பேசாமல், ஒரு மய்யமான முறுவலுடன் நிற்க, “காசு எடுத்துட்டு வரலே, கடைக்குப் போய் பையன் கிட்ட குடுத்துஅனுப்புறேன்” என்று சொல்லி விட்டுப் போனார்.
ஐந்து நிமிடத்தில் ஒரு பையன் வந்து “பாய் தரச் சொன்னார்” என்று இரண்டு ரூபாய் கொடுத்தான்- என் முதல் மருத்துவ வருமானம்.

முப்பத்தைந்தாண்டுகள் ஓடி விட்டன. எத்தனையோ பேர் ஃபீஸ் கொடுத்திருக்கிறார்கள், எத்தனையோ பேர் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள், எத்தனையோ பேரிடம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அன்வர் பாய் எனக்கு ’ஸ்பெஷல் பேஷண்ட்’. எப்போது வந்தாலும், காத்திருக்கும் கூட்ட்த்தைப் பார்த்து, “நம்ம கை ராசிங்க, க்ளினிக் நல்லா போகுது” என்று பெருமைப்படுவார்.
சில ஆண்டுகளில், பொது மருத்துவ சிகிச்சை பார்ப்பதை நிறுத்திவிட்டு, மனநல மருத்துவம் மட்டுமே நான் பார்த்துக்கொண்டிருந்தாலும், “வயிறு சரியில்லே, மாத்திரை எழுதிக்கொடுங்க, ஜெலுஸில் வேலக்காவலே” என்று வந்து நிற்பார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

மனநல மருத்துவம் மட்டுமே பார்க்க ஆரம்பித்த 1988லிருந்து இன்றைய தேதிவரை நான் பார்த்தவர்களின் எண்ணிக்கை, 25,925.  ஆனாலும் என் ‘அன்வர் பாய்’ தான் இன்று நினைவுக்கு வருகிறார்.


லட்சக்கணக்கில் பணம் கட்டி, கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாய் பொதுவாய் மருத்துவர்கள் மீது பலர் காழ்ப்பில் இருக்கிறார்களே, அவர்களுக்குத் தெரியாது இப்படி கொஞ்சமாய் காசு வாங்கியும் சிகிச்சை தரும் மருத்துவர்களும் உண்டு என்று. அவர்களுக்குத் தெரியாது என்னைப்போல் படித்து மதிப்பெண் வாங்கி அரசு மருத்துவக் கல்லூரியில் குறைந்த செலவில் படித்து ஆயிரக்கணக்கில் வெளிவருபவர்கள் தான் அதிகம் என்று. அவர்களுக்குத் தெரியாது, சிலரின் கேவலமான வியாபாரத்தனத்தை மீறி நேர்மையும் நெறியும் பிறழாத மருத்துவர்கள் இன்றும் உண்டென்று.

Thursday, July 10, 2014

என் மாரிஸ்மைனர்.

.அம்பை தன் கார் கதை சொன்னவுடன் என் கார் கதை சொல்ல ரொம்பவும் மனம் துள்ளியது, கான மயிலாட மாதிரி…

எல்லா ஏழைகளுக்கும் போலவே எனக்கும் கார் வாங்கி ஒட்டும் ஆசை இருந்த்து. பள்ளியில் என் வகுப்புத்தோழனின் அப்பா நான் பஸ்ஸுக்கு நிற்கையில் என்னையும் தன் காரில் ஏற்றிச் சென்ற அந்த இளம் வயதில் தான் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். அப்போது என் வயது பத்திருக்கலாம். விஸ்வநாதன் – ராமமூர்த்தி காலம்.

அப்புறம் இருக்கும் சொல்ப வசதியும் போய், வீட்டுள் நுழைந்தால் அடுப்பில் விறகிருக்கிறதா என்று பார்த்த பின்னர்,” நான் ஹாஸ்டல் போறேன்” என்று பொத்தாம் பொதுவாய் எல்லார்க்குமாய் சொல்லி விட்டுப் போன காலத்திலும், பதின் வயதுகளின் முடிவிலும், கார் கனவு கிடையாது, அன்றாட காசு பற்றியே கனவும் நினைவும்…
அப்புறம் நானும் ஒரு டாக்டராகி, என்னிடமும் நிறைய நோயாளிகள் வந்த போது, நான் வாடகைக்கு இருந்த வீட்டுக்காரர், திடீரென்று ஒரு கார் கொண்டு வந்தார். அதை முன்னாள் விற்று விற்றவரிடமே திரும்பி வாங்கியிருந்தார்.
அப்போதெல்லாம் வாடகை கொடுப்பதே ப்ரதான சிந்தனை என்பதால் அந்த அழகான காரை தொட்டுப்பார்ப்பதோடு சரி.அப்புறம், அதற்கப்புறம்..பணமும் திமிரும் சேர்ந்த பின். அதே காரை அவரிடமிருந்து வாங்கினேன். அது என் மாரிஸ் மைனர்.

கார் வாங்கியபின் தான் ட்ரைவிங் ஸ்கூல் சென்றேன். அந்த கார் சொகுசும் இல்லை, சுலபமும் இல்லை, அதில் பல மீட்டர்கள் எதையும் காட்டுவதில்லை – நின்று விட்டால் தான் பெட்ரோல் இல்லை என்றே தெரியும்.  ஆனாலும் அது எனக்குப் பிடிக்கும்.

அதனுடனான இன்றைய சுவாரஸ்யமும் அன்றைய இம்சையுமான அனுபவங்கள் ஏராளம். ஒரு முறை, ஸ்டியரிங் சுற்றவில்லை, கோபமாய் இழுத்த்தில் கையோடு வந்து விட்ட்து. தள்ளி ஓரம் சேர்ப்பதற்குள் வியர்வை, வெட்கம், வெறுப்பு எல்லாமும் கூடிப்போனது.
இன்னொரு முறை ஹைவேயில் முன்விளக்கு எரியவில்லை, முன்னால் போகும் வண்டியைப் பின்தொடர்ந்து ஓட்ட வேண்டியிருந்தது. இன்னொரு முறை, மேம்பாலத்தில் இறங்கும்போது ப்ரேக் வேலை செய்யவில்லை, ந்யுட்ரலில் இறங்கி, ஓரம் கட்டி ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டியிருந்தது.

இன்னும் என்னென்னவோ இம்சைகள் மீறி என்னென்னவோ சுக .நினைவுகளும் அந்த கார் தந்திருக்கிறது. என் பல வெற்றிகளில் என்னுடன் அந்த கார் பயணித்திருக்கிறது.

எதற்காக அந்த கார்? மாருதி வந்து விட்ட காலத்தில்? நிச்சயமாய் அழகான செல்லமான கார் என்பதால் மட்டுமல்ல. கல்லூரி காலத்தில், வெவ்வேறு வண்ண உடை இல்லாததால், எப்போதும் வெள்ளை சட்டையே போடுவதாய் காட்டிக்கொண்ட தாழ்வு மனப்பான்மையின் தற்காப்பின் இன்னொரு வடிவாகவும் இருந்திருக்கலாம்.
ஆனாலும்………………
இன்று நல்ல சௌகரியமான கார் ஓட்டினாலும்…


முக்கிய முன்னாள் காதலியின் நினைவு போல முற்றாய் மங்கி மண்ணுள் புதையாமல், கண்ணுக்குத் தென்படாத இடத்தில், துருப்பிடித்து, இன்னும் தன்னை அழித்துக் கொள்ளாமல் இருக்கிறது,  என் வீட்டின் பின்புற ஓரத்தில் என் மாரிஸ்மைனர்.

Thursday, February 27, 2014

சுஜாதா நினைவு

சுஜாதா நினைவு நாள் என்பது கூட முகநூல் முழங்கித்தான் தெரியுமளவு ஆகி விட்டது  வாழ்க்கை. இங்கே சுஜாதாவை முகநூலில் இம்சை நான் செய்த்தில்லை, ஆனால் மின்னஞ்சலில் கொஞ்சமும் நேரிலும் தொலைபேசியிலும் இம்சித்திருக்கிறேன்.
முதல் சுஜாதா நைலான்கயிறு மூலம்தான், அதுவும் வாராவாரம். அதிலும் அப்போது எஸ்.பாலு ஓவியம்தான் முதல் ஈர்ப்பு..அப்புறம்ம்ம்ம்ம் (சுஜாத்தாத்தனமாய்)   அங்கங்கே…..
ஒரு முறை ட்ரைவின்னில் நண்பர்களிடம், “மேல பார்ரா..பொட்டசியம் பெர்மாங்கனேட் கலந்த வானம்..” என்று ஆரம்பித்து சுஜாதாவை சிலாகித்ததும் நினைவுக்கு வருகிறது. நகுலன் தொகுத்த குருக்ஷேத்ரம் நூலில் ஸ்ரீரங்க எஸ்.ஆர். எழுதியதை ‘ இது சுஜாதா ஸ்டைல் ஆனா சுஜாதவை விட பெட்டர்’  என்று பேசியது எல்லாம் நினைவில் வருகிறது.
அந்த சுஜாதாவை நேரில் பார்த்தபோது…அது குமுதம் அலுவலகம். என்ன மாதிரி போஸ் பெண்கள் கொடுத்தால் போடப்படும் என்று சொல்லி, இதுக்கெல்லாம் ஸைக்கலாஜிகலா ஏதாவது இருக்கா என்று (இருக்காதே எனும் நமுட்டுச்சிரிப்புடன்)  கேட்டார்.
தனக்கு வேண்டிய ஒருவரை, என் க்ளினிக் அழைத்து வந்தார். ஸ்கிஸோஃப்ரீனியா சார், என்றேன், தெரியும் என்றார். (ஆனாலும் அப்புறம் எழுதிய ஆ, மற்றும் ஸில்வியாவில் நோய் பற்றி சரியாய் எழுதவில்லை).
நடுவில் அப்போது ஓஹோவென்று வளர்ந்த ஜெஜெ டிவியில், “சார் உங்க கனவுத்தொழிற்சாலை ஸீரியல் பண்ணட்டுமா” என்று கேட்டபோது “ட்ரை பண்ணுங்க” என்றார். அரசியல் மாற்றத்தில் அது அம்போவென்றானது. (அதற்காக ஸில்க்கிடம் முதன் முறை தொலைகாட்சிக்காகவும் பேசிமுடித்தபின்!!).
அப்புறம்…சில மின்னஞ்சல்கள்..
//dear sir
 i am rudhran, a psychiatrist in chennai. though i have met you on a couple of occasions i am not presumptuous to imagine tht you would recollect me.
i have embarked on a book for which i am stuck with using a nice/right word for `cult'.
would you be able to send an apt word for the same?
i know it is a bother, but i could not think of any other source.
thank you
with respects
 --
Dear Dr Rudhran
Ofcourse I know You We consulted you in xxxxxxxxx 's case
I see you inseveral tv appearances
'cult' has a religious connotation suggestive of imposition by a small group
pitivAtha vazhipAtu  comes close
Sujatha
---
dear sir
thank you very much.
it is deeply heartening to see you responding to me.

i shall not disturb you in this manner often, but i still have some words that niggle my language when i attempt to use them in tamil- relaxation for example.
Oivu would connote retiring and being calm minus work
ilaipparuthal would give an idea that one is just taking a break
by relaxation i mean a state of mind that is calm, unperturbed, active and not just resting.
i wonder.

as a novice in writing in Tamil, my immediate references to existing dictionaries are not comforting, i have to seek other right sources.
even for mentioning mobile phone in tamil, kaipesi makes me uneasy especially with my cordless phone around.
this letter is not meant to make this a discomforting or nagging chain of correspondence.
i am grateful and as always my human mind isyearning for more whenever something good is experienced.
i hope and wish i could meet you in person someday.
with repects
 --If you are not happy with oyvu ,nekizhthal or talarthal  may be tried both these words have a causative form nekizhthal /nekizhththa,l thalarthal/thalartthal 
ws 
 --------------------
இப்படி அவ்வப்போது.


அப்புறம், அவர் செத்துப்போனார். நினைவுகளை நிரந்தரமாய் விட்டு விட்டு.