Wednesday, September 3, 2014

முதல் பத்து

முகநூலில் விளையாட்டாய் எல்லாரும் பத்து புத்தகங்கள் பட்டியலிடுவதைப் பார்த்து தோன்றியது இது!
ரொம்பவும் யோசித்து, என்னில் அதிர்வுகள் உண்டாக்கிய புத்தகங்களைப் பட்டியலிடும் போதுதான் என்னையும் எனக்குக் கொஞ்சம் தெரியவருகிறது. என் முதல் பத்து புத்தகங்கள் இவை. என்னுள் பாதிப்பையும் சிந்தையில் மாற்றத்தையும் உருவாக்கியவற்றின் பட்டியல் மிகவும் நீளம்.
1.மூன்றாம் வகுப்பில் முதல் மதிப்பென் வாங்கியதற்காக என் அம்மா குட்ஷெபர்ட் எதிரில் இருக்கும் கடைக்கு அழைத்துச்சென்று, என்ன வேணுமானாலும் வாங்கிக்கோ என்றதும் அங்கிருந்த Frank Baum எழுதிய the wizard of oz வாங்கிய பெருமை மட்டுமே அப்போது இருந்தது. எழுத்து கூட்டிப்பார்த்தும் படிக்க முடியாத வயதுக்கு மீறிய புத்தகம். அதை நான் முப்பதாண்டுகளுக்குப் பின் தான் படித்தேன்.
2. ஐந்தாம் வகுப்பின் விடுமுறையில் என் தாத்தாவின் அலமாரியில் இருந்த புத்தகத்தை நான் ஆசையோடு எடுத்து புரட்டுவதைப் பார்த்து, அவர், “ இதைப் படிக்க முடியுமானா எடுத்துட்டுப் போய் படி,” என்று சொல்ல, அந்தச் சவாலுக்காக நான் படித்த முதல் புத்தகம்- Erle Stanley Gardner எழுதிய Duplicate Daughter. பெரிதாய் உள்வாங்கியிருக்க முடியாது என்றாலும் முதலில் முழுதாய் பாடங்கள் தாண்டி படித்த புத்தகம் அது.
3.அதே காலகட்ட்த்தில் அதே அலமாரியிலிருந்து என் அம்மா எடுத்து வந்த, கல்கியிலிருந்து வாரந்தோறும் சேகரித்து பைண்ட் செய்யப்பட்ட ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகன் தான் தமிழில் படித்த முதல் புத்தகம். அப்போது வாசிப்பை அதில் வந்திருந்த மணியம், வினு ஆகியோரின் சித்திரங்கள் மேலும் சுவை கூட்டியதும் நினைவில் இருக்கிறது.
4.எட்டாவது படிக்கும் போது, Frank Richards எழுதிய Billy Bunter , Richmal Crompton எழுதிய Williams, புத்தகங்கள், ஒரு போட்டியாய் எல்லாவற்றையும் யார் முதலில் படிப்பது என்று நண்பனுடன் பந்தயித்து படித்ததும் நினைவில் இனிய பசுமை, அதற்குள் Enid Blyton தாண்டியாயிற்று.
5.ஒன்பதாவது படிக்கும்போது, மற்றவர்கள் முன் பெரிதாய்க் காட்டிக்கொள்ள, சென்னை மத்திய நூலகத்திலிருந்து Mervyn Peake எழுதிய Titus Groan எடுத்து வந்து, எல்லோருக்கும் காட்ட பள்ளிக்கும் எடுத்துச் சென்று மதிய உணவு இடைவேளையில் புரட்டிக் கொண்டிருந்து பந்தா பண்ணினாலும், நடிப்புக்காக விரித்து வைத்திருந்த புத்தகத்தின் பக்கங்களில் கண்மேய, English மீது ஓர் ஈர்ர்பு வந்த்தது இந்த புத்தகத்தினால்தான். அப்போது அதை முழுதாய்ப் படிக்கவில்லை, பிறகு தேடிதேடி அதை முழுதாய்ப் படித்தது ஐம்பதாவது வயதில்!
6.அதே காலம், பள்ளியில் பாடமாய் வைத்திருந்த Charles Dickens எழுதிய Tale of two cities ஆரம்பவரிகள் “It was the best of times.. it was the worst of times..”எழுதுவதெனில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உள்ளே ஒரு பொறி பற்றவைத்தது.
7.பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் தொடர்ந்து இரண்டாண்டுகள் தினமும் படித்தது, Shakespeareன் Midsummernight’s Dream. தினமும் Wren & Martin வைத்துக்கொண்டு, வரிக்கு வரி Midsummernight’s Dream அலசப்பட்டது. அந்த என் பள்ளியின் அந்த இரண்டாண்டுகள்தான் Englishல் எனக்கு நாட்டமும் நேர்த்தியும் உருவாக்கி வளர்த்தன. வரிவரியாய்ப் பிய்த்து காவிய வரிகளில் இலக்கணம் கற்பித்த என் ஆசிரியர்  Mathewsதான் இன்னும் படி இன்னும் எழுது என்று என்னை ஊக்குவித்தவர்.
8. அன்றைய PUCயில்தான் முதல் டாகூர். அவர் எழுதிய Gardenerதான் மொழி இவ்வளவு மிருதுவாகவும் மனதை வருடும் என்று எனக்கு உணர்த்திய புத்தகம்.
9.மருத்துவக்கல்லூரி முதலாண்டின் விடுமுறையில் முதல் தமிழ் நாவல் நா.பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள், அதையடுத்து உடனே ஜெயகாந்தனின் ‘ஓ கோகிலா என்ன செய்துவிட்டாள்’…அதற்கு அடுத்த ஆண்டு லா.ச.ராவின் அபிதா.
10.அதே காலகட்டத்தில் ஒரு நண்பனின் லாட்ஜில் காத்திருக்கும்போது, அவனது ரூம் மேட் வைத்திருந்த மீராவின்  கனவுகள்+காகிதங்கள்+கற்பனைகள். அதிலிருந்து தேட கிடைத்த பொக்கிஷம் தான் ப்ருமீளின் கைப்பிடியளவு கடல்.

இந்தப் பட்டியலைத் தொடர்வது வாழ்க்கையின் பின்னோட்டமாய் அமைந்து விட்டது.

1 comments:

Yarlpavanan said...

அருமையான பகிர்வு
தொடருங்கள்

Post a Comment