வழக்கமான இரவுக்குப்பின், விழித்தான். அவனிடம் கைது
செய்யப்பட்டிருப்பதாய் சொல்லப் பட்டது.
“நீ எப்போதும்
கைதிதான், இப்போது நீ கைதானது உனக்குத் தெரிய
வந்திருக்கிறது”, என்றார்கள்.
இப்படித்தான் ஆரம்பமாகும்
காஃப்காவின் அற்புதமான நாவல். இந்த நாவலை அடிப்படையாய் வைத்து 1989ல் எழுதியதுதான்
விசாரணை நாடகம். அதன் சில வசனங்கள், இன்னும் கொஞ்சம்
யோசிக்க.
“கைதானது எப்படி?எதற்கு?” என்கிறான்,
அதற்கு அவர்கள் பதில்,”கேள்விகளை உன்னிடமே
கேட்டுக்கொள். கேள்விகளைப் பழகிக் கொண்டால், கேட்க வேண்டியவை
தோன்றும்”.
அவனது தொடரும் கேள்விகளுக்கு, ”எங்களைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ சிந்தித்து
நேரத்தை வீணாக்குவதை விட, உன்னைப் பற்றி யோசி. யோசனையில்தான்
எல்லாம். வாழ்க்கை, பிறப்பிலிருந்து ஆரம்பமாவதில்லை, யோசிப்பதிலிருந்துதான் ஆரம்பமாகிறது” என்கிறார்கள்.
இது என்ன வழக்கு? இது என்ன விசாரணை என்பதற்கு, அவன் மனத்தின் பதில், “உனக்கு எப்போது வசதியோ
அப்போதுதான் விசாரணை ஆரம்பம். இந்த வழக்கு உன்னுள். வாடிக்கையாகிவிட்ட விலங்குகள் இறுக்குவதால்
இப்போது விசாரணை. விலங்குகள் இயல்பாகி விட்டால், அதன் பெயர்
வாழ்க்கை”.
அவன் வேறுவிதமாய்
சுதந்திரமாய் இருப்பதுபோல் தெரியும் ஒருவனிடம் போகிறான். அங்கே அவனுக்குக்
கிடைக்கும் பதில்,
“விலங்குகள் இல்லாமல் யாரும் இல்லை. சிலருக்குக் கைதட்டல்கள் விலங்குகள்.
சிலருக்கு கடமைகள் விலங்குகள். வசதிப்படி விலங்குகளை ஆபரணமாய் ஆக்கிக் கொள்வதுதான்
சுதந்திரம்”.
அவன் எல்லாம் துறந்த, தெரிந்த, ஒருவனிடம்
செல்ல, அவனுக்குக் கிடைக்கும் பதில் இதுதான்.
“எல்லாரும்
கைதாகி உள்ள அமைப்பில் நீ அழுவதே உன் விலங்குகளின் சப்தம். கதவருகே வருவதே சாதனை
எனும் நடுத்தரம் அங்கேயே கல்லறையைக் காணும். ஏனென்றால்,
பதில்கள் நிறைந்த கதவின் உட்புறம் சென்றபின், கேள்விகள்
நிறைந்த வெளிப்புறம் வர முடியாது. தேவையுமில்லை என்பதால்”.
“எண்ணத்தில், செயலில் நீ நடுத்தரம்”. நடுத்தரம் என்பது
பொருளாதாரம் மட்டும் அல்ல என்பதற்காக இது எழுதப்பட்டது. இந்த நாடகம் தான் நான்
எழுதியதிலேயே பிடித்த ஒன்று. அதன் சில வசனங்களையே இங்கேயும் எழுதியிருக்கிறேன்.
![]() |
| 1989 விசாரணை நாடகத்தின் ஒரு காட்சி |
இதை இப்போது ஏன்
பதிவிடுகிறேன்? நானும் யோசிக்கத்தான்.









