Thursday, July 10, 2014

என் மாரிஸ்மைனர்.

.அம்பை தன் கார் கதை சொன்னவுடன் என் கார் கதை சொல்ல ரொம்பவும் மனம் துள்ளியது, கான மயிலாட மாதிரி

எல்லா ஏழைகளுக்கும் போலவே எனக்கும் கார் வாங்கி ஒட்டும் ஆசை இருந்த்து. பள்ளியில் என் வகுப்புத்தோழனின் அப்பா நான் பஸ்ஸுக்கு நிற்கையில் என்னையும் தன் காரில் ஏற்றிச் சென்ற அந்த இளம் வயதில் தான் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். அப்போது என் வயது பத்திருக்கலாம். விஸ்வநாதன்ராமமூர்த்தி காலம்.

அப்புறம் இருக்கும் சொல்ப வசதியும் போய், வீட்டுள் நுழைந்தால் அடுப்பில் விறகிருக்கிறதா என்று பார்த்த பின்னர்,” நான் ஹாஸ்டல் போறேன்என்று பொத்தாம் பொதுவாய் எல்லார்க்குமாய் சொல்லி விட்டுப் போன காலத்திலும், பதின் வயதுகளின் முடிவிலும், கார் கனவு கிடையாது, அன்றாட காசு பற்றியே கனவும் நினைவும்
அப்புறம் நானும் ஒரு டாக்டராகி, என்னிடமும் நிறைய நோயாளிகள் வந்த போது, நான் வாடகைக்கு இருந்த வீட்டுக்காரர், திடீரென்று ஒரு கார் கொண்டு வந்தார். அதை முன்னாள் விற்று விற்றவரிடமே திரும்பி வாங்கியிருந்தார்.
அப்போதெல்லாம் வாடகை கொடுப்பதே ப்ரதான சிந்தனை என்பதால் அந்த அழகான காரை தொட்டுப்பார்ப்பதோடு சரி.அப்புறம், அதற்கப்புறம்..பணமும் திமிரும் சேர்ந்த பின். அதே காரை அவரிடமிருந்து வாங்கினேன். அது என் மாரிஸ் மைனர்.

கார் வாங்கியபின் தான் ட்ரைவிங் ஸ்கூல் சென்றேன். அந்த கார் சொகுசும் இல்லை, சுலபமும் இல்லை, அதில் பல மீட்டர்கள் எதையும் காட்டுவதில்லைநின்று விட்டால் தான் பெட்ரோல் இல்லை என்றே தெரியும்ஆனாலும் அது எனக்குப் பிடிக்கும்.

அதனுடனான இன்றைய சுவாரஸ்யமும் அன்றைய இம்சையுமான அனுபவங்கள் ஏராளம். ஒரு முறை, ஸ்டியரிங் சுற்றவில்லை, கோபமாய் இழுத்த்தில் கையோடு வந்து விட்ட்து. தள்ளி ஓரம் சேர்ப்பதற்குள் வியர்வை, வெட்கம், வெறுப்பு எல்லாமும் கூடிப்போனது.
இன்னொரு முறை ஹைவேயில் முன்விளக்கு எரியவில்லை, முன்னால் போகும் வண்டியைப் பின்தொடர்ந்து ஓட்ட வேண்டியிருந்தது. இன்னொரு முறை, மேம்பாலத்தில் இறங்கும்போது ப்ரேக் வேலை செய்யவில்லை, ந்யுட்ரலில் இறங்கி, ஓரம் கட்டி ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டியிருந்தது.

இன்னும் என்னென்னவோ இம்சைகள் மீறி என்னென்னவோ சுக .நினைவுகளும் அந்த கார் தந்திருக்கிறது. என் பல வெற்றிகளில் என்னுடன் அந்த கார் பயணித்திருக்கிறது.

எதற்காக அந்த கார்? மாருதி வந்து விட்ட காலத்தில்? நிச்சயமாய் அழகான செல்லமான கார் என்பதால் மட்டுமல்ல. கல்லூரி காலத்தில், வெவ்வேறு வண்ண உடை இல்லாததால், எப்போதும் வெள்ளை சட்டையே போடுவதாய் காட்டிக்கொண்ட தாழ்வு மனப்பான்மையின் தற்காப்பின் இன்னொரு வடிவாகவும் இருந்திருக்கலாம்.
ஆனாலும்………………
இன்று நல்ல சௌகரியமான கார் ஓட்டினாலும்


முக்கிய முன்னாள் காதலியின் நினைவு போல முற்றாய் மங்கி மண்ணுள் புதையாமல், கண்ணுக்குத் தென்படாத இடத்தில், துருப்பிடித்து, இன்னும் தன்னை அழித்துக் கொள்ளாமல் இருக்கிறதுஎன் வீட்டின் பின்புற ஓரத்தில் என் மாரிஸ்மைனர்.

4 comments:

Unknown said...

#என் பல வெற்றிகளில் என்னுடன் அந்த கார் பயணித்திருக்கிறது.#
காரின் பெயரில்தான் மைனர் ,உங்கள் வாழ்க்கையில் அதற்கு மேஜர் பார்ட் இருக்கும் போலிருக்கே !

நாடோடிப் பையன் said...

I love Morris Minor cars. I would love to own one and restore it in the future.

அமுதா கிருஷ்ணா said...

முதல் என்றால் எதையும் எப்போதும் மறக்க முடியாது போலும்.வெள்ளை சட்டை பின்னால் ஒரு கனமான காரணம் இருக்கு.கார் கதை நானும் சொல்ல ஆவலை தூண்டுகிறது.

தருமி said...

feel that i have already read this before. a மீள் பதிவு???

Post a Comment