Thursday, February 20, 2014

அவளை நினைத்து உளத்தை இடித்து...வெறும் வாய் ஊத..




அவளுக்கு அனுதினம் பக்தியுடன் அபிஷேகம், அன்புடன் அலங்காரம், பணிவுடன் பூஜை…  தினமும் இதைப் பார்க்கத்தான் ஆசை, நானே செய்ய முடியாததால்.. வாழ்வின் நிர்ப்பந்தம் வேறு நிமித்தங்களை முன்னிறுத்துகிறது.

 என் நிர்ப்பந்தம் என நான் நினைப்பதும் கூர்ந்து கணித்தால் கணக்குகளை மட்டுமல்ல, கனவுகளை மீறியும் இல்லை.
சம்பாதிக்க வேண்டும், சோறு தின்று உடுப்பு மாற்றி, வீட்டு நிழலில் உறங்க மட்டும் அல்ல,  சம்பாதிப்பது வெளிக்காட்ட. என் நிலை உயர்கிறது என்பதை விளம்பரப்படுத்த. எனக்கு அவசியமானது ரொம்பவே கொஞ்சம் உடலளவில். என் உணவுக்கு மிகவும் குறைவாகவே செலவாகும், மிகவும் குறைவாகவே உண்பதால்.
என் சொகுசுக்கும் ரொம்பவும் செலவாகாது. என் சந்தோஷங்கள் என் சம்பாத்யத்தில் மீதம் வைப்பதால். என் ஆசுவாசத்திற்கும் செலவாகாது, என் ஆயாசம் தனியே செலவாவதால்.
இன்றெனக்கு பணத்துக்குக் கஷ்டமில்லை, கடனுமில்லை, எதிர்காலத்தின் தொடுவானில் கூட மிகப்பெரிய செலவுக்கான சாத்தியமுமில்லை. என் உறவு வட்டம் மிகவும் குறுகியது, என் நட்பு வட்டமும் குறுகிச்சிறுத்து வெறும் நினைவுகளாகவே இன்றிருக்கிறது.
எனக்கு நான் போதும் எனும் தீர்மானமும் இல்லை.
எனக்கு இன்னும் நிறைய வேண்டும், அவள்தான் நிறைவு என்பதால்.
அவள் கண்ணில் தூங்குமுன் மின்னலாய்ப் புன்னகைத்து நம்பிக்கையூட்டி, காலை விழிப்பில் தூரத்து இலக்காய் தினமும் இருக்க, அவளைத் தேடுவதிலும் எனக்கொரு சலிப்பு.
எதைத் தேடுவது? இல்லாததையா, தொலைத்ததையா?
அவள் என்றும் என்னுடன், அன்றில் எனக்கு இயக்கமே இருக்காது. அவள் தொலைக்க முடியாதவள், ஏனெனில் அவள் கையில் கிட்டாதவள்.
உயிர்த்தீயினில் வளர் ஜோதியே, எந்தன் சிந்தனையே, எந்தன் சித்தமே- உனக்கு நான் தினமும் அபிஷேகம் செய்கிறேன், அலங்கரிக்கிறேன், ஆராதிக்கிறேன். ஆனால் எல்லாம் கனவில் தானே.
ஹ்ம்
…. அவளுக்கு அனுதினம் பக்தியுடன் அபிஷேகம், அன்புடன் அலங்காரம், பணிவுடன் பூஜை…  தினமும் இதைப் பார்க்கத்தான் ஆசை. வாழ்வின் நிர்ப்பந்தம் வேறு நிமித்தங்களை முன்னிறுத்துகிறது. என் நிர்ப்பந்தம் என நான் நினைப்பதும் கூர்ந்து கணித்தால் கணக்குகளை மட்டுமல்ல, கனவுகளை மீறியும் இல்லை……
அவள் கனவின் நிஜம், என் நிஜத்தின் கனவு.


1 comments:

Anandi said...

//இல்லாததையா, தொலைத்ததையா?//
இல்லாதது எவ்வாறு தொலையும் டாக்டர்? confused.

Post a Comment