Monday, August 1, 2011

சும்மா யோசித்த கதை!

கதைசொல்லி சொன்ன முதல் கதையின் மூலம் எது? ஆதிக்கும் மூலம் என்று பரம்பொருளைப் புரியா பொருளாக்கிய கலாச்சாரத்தில், கேள்விகளுக்கு விடை தேடிய காலத்துக்குப் பின் கேட்பது அநாகரிகமாகவும் அபச்சாரமாகவும் ஆக்கிக் கொண்டவர்கள் சொன்னதும் கேட்டுக்கொண்டதும் வெறும் கதைகள்தானா?

கதாகலாச்சாரத்தின் காலப்பின்னோட்டத்தில், யேசுவும், பின்னாளில் ராமக்ருஷ்ணரும் கதை சொல்லி அதன்வழி கருத்தும் சொன்னதன் முன்னமேயே பஞ்சதந்திர கதைகளும் இருந்தன..யீஸாப் கதைகளும் இருந்தன…ஆனால் இவை எப்படி வந்தன?  யேசு ஒரு தச்சுவேலை செய்தவர், ராமக்ருஷ்ணர் படிப்பறிவில்லாதவர், இருவரும் கதை சொல்லி அதன் மூலம் கருத்தும் சொல்லிக்கொடுக்க முயன்றவர்கள். இவர்களிருவருக்கும் முன்னமேயே இந்த யுத்தியைப் பயன்படுத்தி கதை சொல்லி தன் கருத்தைப் பரப்பியவர் புத்தர். அவர் கல்வியறிவும் இருந்தவர், அதைவிடவும், ‘ராஜா வீட்டுப் பிள்ளை’, அவருக்கு கதைகள் சொல்லவே சிலர் நியமிக்கப்பட்டிருக்கக்கூடும். குழந்தை தூங்கும்வரை கதை சொல்லிக்கிடந்தவர் கதைகளை எங்கிருந்து கற்றார்? அந்த காலத்தில் பஞ்சதந்திரக்கதைகள் கேட்டுச் சொன்னதாக வைத்துக்கொண்டாலும், அவற்றை உருவாக்கியவர் எங்கிருந்து எடுத்தாண்டார்? இதிகாசத்தின் இடைச்செருகல்களாக உருவாக்கப்பட்டவற்றுக்கெல்லாம் ஆதி எது? அதற்கான அவசியம் ஏன்? அதன் இன்றைய பரிணாமம் என்ன?

கதை என்பதற்கு கற்பனையோடு நிஜத்தின் களமும் வேண்டும், அதனாலேயே ஆதிகாலத்துக் கதைகள் காடுகளில், மிருகங்களிடையே நிகழ்ந்தன. இயற்கை பார்த்து வியப்பும் அச்சமும் கொண்டவரின் சுயசமாதானமாகவே உருவகிக்கப்பட்ட கடவுள்களைப் போலவே, ஆசைகளின் வெளிப்பாடுகளாக விலங்குகள் மனிதர்களைப் போல நடந்து கொண்டதாகவும், அவை ஒரு நெறிக்குட்பட்டு இயங்கியதாகவும் கதைகள் சொல்லப்பட்டிருக்கலாம். இது அன்றைய அனுமானம் குறித்த இன்றைய அனுமானம்தான்! அனுமான்ங்கள் அனைத்துமே ஆசையின் விஸ்தீரணங்கள்தான். இப்படி இருக்குமோ என்பதைவிடவும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று ஆரம்பித்து, பின்னர் தன் தவறினைத் தானே திருத்திக்கொண்ட காலத்தில், தேவையும்பட்டிருக்காது; ஆனால் இன்று திறந்தமனத்துடன் அணுகுவதாகச் சொல்லிக் கொண்டாலும், மனம் முழுக்கத் திறக்காமல் சில வசதியான ஜன்னல்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

Dr.Rudhran, dramatherapy 1992
மீண்டும் கதை பற்றி கதை பேசுவோம்! கதையின் பயன் என்னவாக இருக்கிறது என்பது இப்போது எல்லார்க்கும் தெரியும் என்பதால்தான் செய்திகள் கூட நம்பகத்தன்மை இழந்து கொண்டிருக்கின்றன. கதையும் செய்தியும் இழைத்து ஒரு சுவையான நுகர்பொருளாகியது எனும் கதை சொல்வதும் இன்று ராமன் பாலமும் அணிலுமாக நீதிமன்றத்திலெல்லாம் ஆதாரமாக வைக்கப்படுகிறது.
கதைக்கு முதல் பயன் கவனம் ஈர்த்து, அந்நேரம் கவலை, குறுகுறுப்பு ஆகியவற்றைக் குறைத்தல். ஆனால் ஆதிகாலத்தில் கதைகள் நெறி புகட்டுவதாய் உருவான அரசியல் அவசியமாகவும் ஆரம்பமாகியிருக்கலாம்.

இன்று உருவான, உருவாக்க சிலர் முயலும் கதைகள் குறித்துப் பின்னர் பரிசீலிப்போம். இப்போதைக்கு, கதை என்பதைப் பற்றி எனக்கு சொல்லிக்கொடுங்கள், கதை சொல்லிப்பாருங்கள் அதன் சுவாரஸ்யம், சிரம்ம் இரண்டுமே புரிபடும்போது, கதைசொல்லிகள் அந்தக் கதைகளின் ஆதிகர்த்தாக்கள் பற்றியும் யோசித்துப் பாருங்கள்.

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

மனம் முழுக்கத் திறக்காமல் சில வசதியான ஜன்னல்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

அன்பரசன் said...

//கதையும் செய்தியும் இழைத்து ஒரு சுவையான நுகர்பொருளாகியது எனும் கதை சொல்வதும் இன்று ராமன் பாலமும் அணிலுமாக நீதிமன்றத்திலெல்லாம் ஆதாரமாக வைக்கப்படுகிறது.//

நச்சுனு சில வரிகள்.....

கிருபாநந்தினி said...

முதல் பொய்யே முதல் கதையாக இருக்க முடியும்! அப்படியிருக்க, பொய்களை எப்படி ஆதாரமாகக் கொள்ள முடியும் என்று கேட்கிறீர்கள். சரிதானே ருத்ரன் சார்? :)

வெட்டிப்பேச்சு said...

//அனுமான்ங்கள் அனைத்துமே ஆசையின் விஸ்தீரணங்கள்தான். //

உண்மைதான் அய்யா..

eniasang said...

ஆம் கதை சொல்லிகள் சுவாரஸ்யமானவர்கள். அதுவும் பழைய கதை சொன்னவர்கள் மிகவும் அறிந்தவர்களாகத்தானிருந்திருக்க வேண்டும்.மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றே புனையப்பட்ட கதைகள் social awareness, character build up நல்லவை கெட்டது என் எளிய போதனைகள் அதனை தவறாக விளங்கிக் கொண்டவர்களே இங்கு அதிகம்.

ADMIN said...

சும்மா சொல்லக்கூடாது.. சுவைபடவே எழுதியிருக்கீங்க..!

Unknown said...

super

Post a Comment