சில நேரங்களில் சில விதங்களில் நாம் மாட்டிக்கொள்வதுண்டு. அப்புறம் நினைத்துப் பார்த்தால் ஒரு வறண்ட நகைச்சுவை உணர்வோடு நாமே அதை நம்முள் பகிர்ந்து கொள்வோம், ஆனால் அந்தந்த நேரம் என்னென்ன உணர்வுகள்!
எனக்கு உண்மையில் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனாலும் நான் நாத்திகனாக நினைக்கப்படலாம். சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் சொன்னது - பண்டைய இந்து/சனாதன தர்மத்தில் கடவுள் குறித்து கேள்வி எழுப்புபவன் நாத்திகன் அல்ல, ஆனால் வேதங்களை விமர்சிப்பவனும் எள்ளி ஒதுக்குபவனும் தான் நாத்திகனாம். நான் நாத்திகனாகவே இருக்கட்டுமே, நான் கோவிலுக்குப் போகக்கூடாதா? இது தத்துவ விசாரணை குறித்த பதிவு அல்ல, ஓர் அனுபவத்தின் பகிர்வு.
நான் சும்மா இருக்கும்போது என்னிடம் வந்து “ சார் திருப்பதி வாங்க, எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்” என்று சொல்பவர்கள் நிறைய பேர். நிஜமாகவே நான் நேற்று போன போது சொன்னவன்/ள் யாரையும் காணோம். கடவுள் வீட்டுக்கு (கோயில்) போக என்ன சிபாரிசு கடிதம் என்று இறுமாப்புடன் நான் கிளம்பி விட்டேன், அம்மாவுடன்! அம்மாவுக்கு 83 வயது!
என் வீட்டில் என் அம்மா மாடிக்கும் கீழுக்கும் நடந்து செல்வதைப் பார்த்து அவர்களால் நடக்க முடியும் என்று நினைத்து விட்டேன். வீட்டை விட்டு வெளியே போய் பல மாதங்களான என் அம்மாவிற்கும் நடப்பது சிரமம் என்று தெரியாது! திருப்பதி சென்றால் மொட்டை போடாவிட்டாலும் நிறைய நடக்க வேண்டும்! தத்தித்தத்தி அம்மா நடக்க, ஆறுதலாய் என் மனைவி அவரது கைப்பிடித்துக்கொள்ள மூவரும் பயணமானோம்.
பேருந்து காலைச் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட நாங்கள் உள்ளே நுழையும்போது சக பயணிகள் பொங்கலும் பாதி வடையும் முடித்திருந்தார்கள். எல்லாரும் எங்களைப் பாவம் என்று பார்த்தார்கள். இதே கதை தொடர்ந்தபோது எங்களை இம்சை என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.
திருப்பதியில் பேருந்து மாறி திருமலை ஏறும்போதுதான் இது ஒத்துவருமா என்று எனக்குள் சந்தேகம் வந்தது. பக்கத்தில் என் மனைவி முகத்தில் எந்த பாவமும் இல்லை. என் அம்மா தூங்குவதாக நான் நினைத்துக் கொண்டேன்.
திருமலையில் தான் சக பயணிகள் “ப்ச்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள், எங்களுடன் பயணித்தவர்கள் பலர் மலையாளிகள். அவர்கள் சம்ஸாரிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு சந்தேகத் தாழ்வு மனப்பான்மை. எல்லாம் தாண்டி, ஒரு வழியாய் ஒரு கூண்டில் காத்திருக்கும் போது என் மனைவி முகத்தில் குழப்பம், அம்மா முகத்தில் வெறுப்பு. சுற்றி கூட்டம் கோவிந்தா என்று கத்திக்கொண்டிருந்தது, அவர்கள் பக்தி என்னை வெட்கப்பட வைப்பதற்குப் பதிலாக வெறுப்படையவே வைத்தது.
ஒவ்வொரு கூண்டாக முன்னேறி ( ஒவ்வொரு கூண்டிலும் பின்தங்கி ) ஒரு நெரிசலான காற்றில்லாத பகுதியில் நாங்கள் சேர்ந்தபோது, முன்னே யாரும் நகரவில்லை. பின்னால் எல்லாரும் முந்தியடிக்க முற்பட்டார்கள். வெளியேறவும் வழியின்றி தொடரவும் விருப்பின்றி அங்கே சிறையானோம்- இரண்டு மணி நேரங்கள் வியர்வை, வெறுப்பு, சுற்றிலும் பக்திகோஷம்! எவனோ எவளோ வந்து விட்டார்கள் போலிருக்கிறது நாங்கள் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டோம்.
பிறகு அதேபோல் தத்தித் தடுமாறி ஒருவழியாய் கடவுளின் வாசலை அடைந்தால்.. சுஜாதா டிமலாவில் எழுதியது போல திகைக்கும் சிலிர்ப்பு வரவில்லை ஆனாலும் மனதுக்குள் காட்சி இதமாகவே இருந்தது. வழக்கமான படங்களின் ஜொலிப்பு இல்லாமல் எந்த நகையும் பூவும் இல்லாமல் ஒரு பழுப்புத்தனத்தோடு மூலவர் தெரிய, அதை மனம் உள்வாங்கிக்கொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் நாங்கள் இழுத்து அப்பால் தள்ளப்பட, திடீரென்று யாருக்கோ கருணை! பாவம் இந் தம்மாவைப் பார்க்க விடுங்கள் என்று என் அம்மாவை மீண்டும் கூட்டிப்போய் சாமி வாசலில் இரண்டு நிமிடங்கள் நிற்க வைத்தார்கள். அனுமதியில்லாமல் நானும் என் மனைவியும் அம்மாவுக்கு என்ன ஆயிற்றோ என்று திகைத்து நிற்க, அம்மா வந்தார்கள். “நீங்க ரெண்டுபேரும்?” என்ற கேள்வியோடு.
அம்மாவுக்காக நாங்களும் எங்களுக்காக அம்மாவுமாய் செய்த இந்த தீர்த்த யாத்திரையின் விளைவு உடல் முழுக்க வலி.
பக்திக்காகவும் அல்லாமல், fashionக்காகவும் அல்லாமல், கலைத்தேடலும் இல்லாமல் கடமைக்காக நான் கோவிலுக்குச் சென்றது இதுதான் முதல் முறை.
திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமாம், காத்திருக்கிறேன். முன்பொருமுறை பல ஆண்டுகளுக்கு முன் அங்கே சென்று திரும்பி வந்தவுடன் எனக்கு வேலை கிடைத்தது. அங்கே போகாமலேயே எனக்கு சொந்தமாய் ஒரு மருத்துவமனையும் கிடைத்தது. சலிப்பும் வெறுப்புமாய் போனாலும் பலன் கிடைக்குமா? தெளிவு கிடைக்குமா?
திரும்பி வந்தவுடன் எழுதத்தோன்றியதே திருப்பம்தான் என்றால் பட்ட கஷ்டத்திற்கு அது போதாது.
maladies of the mind..
9 years ago
21 comments:
ஏன், எழுதுவது குறைந்திருக்கிறது?
//மூவருக்குமே இன்னொருவருக்காகத் தியாகம் செய்வது போன்ற இறுமாப்பு வேறு!//
:))
அடுத்தப்பதிவு தமிழகத்தின் கோயில்கலின்
சிறப்பு...
:)
நாத்திகன் என்ராலே நம்பிக்கையற்றவன் என்று தான் அடையாளப்படுத்துகிறார்கள், எனக்கு கடவுள் நம்பிக்கை தான் இல்லை, அதற்கு பதிலாக என் மேல் டன் கணக்கில் நம்பிக்கை இருக்கிறது, அப்போ நான் நாத்திகனா?
பணமும், பாவமும் மக்களிடம் மிகுதியானதால், கோவில்களில் கூட்டம் நெரிகிறது!
திருமலையில் வயதானவர்களுக்கும்/மாற்றுத் திறனாளிகளுக்கும், தரிசனம் செய்விக்க, துணை ஒருவரோடு, மூலத் துவாரத்திலிருந்து,தனியே அனுமதிக்கப் படுகிறது!(சுமார் 1 - 2 மணி நேர இடைவெளியில், ஒரு குழு செல்கிறது!)
:)
இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வரிங்க... ஆனாலும் ஜெயகாந்தன் சீடன் என்பதை கலங்கிய குழப்பத்துடன் நிருபித்துவிட்டீர்கள்....
///பக்திக்காகவும் அல்லாமல், fashionக்காகவும் அல்லாமல், கலைத்தேடலும் இல்லாமல் கடமைக்காக நான் கோவிலுக்குச் சென்றது இதுதான் முதல் முறை./// - என்று சொல்லிவிட்டு
///முன்பொருமுறை பல ஆண்டுகளுக்கு முன் அங்கே சென்று திரும்பி வந்தவுடன் எனக்கு வேலை கிடைத்தது. அங்கே போகாமலேயே எனக்கு சொந்தமாய் ஒரு மருத்துவமனையும் கிடைத்தது/// - என்று சொல்வது முரண்பட்டதாக தெரிகிறது இதில் முதல் முறை போனேன் என்பதை நம்புவதா இல்லை முன் ஒரு முறை போனேன் என்பதை நம்புவதா இரண்டையும் நம்பினால் "கடமைக்காக போனேன்" என்பதை எப்படி ஏற்றுகொள்வது.
ஏதோ சுயதேடுதல், அதில் ஒரு மறைக்கப்பட்ட சுயநலம் ஒளிந்திருக்கிறது அதுதான் கடைசியாக வரும் வார்த்தையிலும் வருகிறது... //திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமாம், காத்திருக்கிறேன். /// என்று. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "உனக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" கூழும் குடிக்கவேண்டும் ஆனால் மீசையிலும் பட கூடாது என்றால் எப்படி முடியும் படவேண்டியது படத்தான் செய்யும்.....
இந்த உலகத்தில் வெளிவேஷமான மக்கள்தான் அதிகம் பேர் உள்ளார்கள்....ஆனால் உண்மை முகம் சில நேரம் வெளிவந்துவிட்டுதான் போகிறது உங்கள் எழுத்துகள் போல்....
எங்களுக்கு (எனக்கு), உங்களை பற்றிய புரிதலுக்கு உங்கள் பதிவே உதாரணம்....நன்றி...!
பின்குறிப்பு:இதற்கு நீங்கள் விளக்க உரை நீண்டதாக எழுதலாம் உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு...!
பாசாங்கற்ற எழுத்து
//அவர்கள் சம்ஸாரிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு சந்தேகத் தாழ்வு மனப்பான்மை//
சார், உங்களுக்கே தாழ்வு மனப்பான்மைங்களா?
திருப்பதிக்கு ஒரு விண்ணப்பம். தமிழ் புரியாதவர்களுக்காகத் தமிழில் எழுதும் நிலை மாற வேண்டும்.
இதே அனுபவம் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது....அய்யோடா..
ஆலோசனை நேர காலங்களில் பிடிக்கப்படுகிறது,
மத நிந்திப்பை சிலாகித்தபோது
பிடிக்காமல் போகிறது,
நமஸ்த்துப்யம் பாடும்பொழுது
பிடிக்கப்படுகிறது.
சாதீயம் கொண்டு சாடும் பொழுது
பிடிக்காமல் போகிறது.
கடமையென அன்னையோடு கடவுளை காணும் பொழுது பிடிக்கிறது..
இது மதம் கொண்டு எழுதவில்லை.மனம் கொண்டு யோசிக்கிறேன்..எனக்கும் அவர்க்கும் மட்டுமல்ல.. மனம் கொண்ட மனிதரனைவர்க்கும் உள்ள போராட்டம்.உள்யுத்தம்.
http://kingwebnewspaper.blogspot.com/2010/09/50.html
கடவுள் தரிசனம் இப்படி இருக்குமா?
நீங்களுமா?
பக்திக்காக, சுயநலத்துக்காக, எதிர்பார்ப்புக்காகச் செல்வதை விட, கடமைக்காகக் கோவிலுக்குச் செல்வதில் அர்த்தம் இருக்கிறது என்பது என் எண்ணம். (கலைத்தேடல் விதிவிலக்கு!)
உங்கள் தாயைப் பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பிய உங்களுக்கும் உமா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல.
பி.கு. நீங்கள் ஏன் பேருந்தில் சென்றீர்கள்?
பக்திக்காக, சுயநலத்துக்காக, எதிர்பார்ப்புக்காகச் செல்வதை விட, கடமைக்காகக் கோவிலுக்குச் செல்வதில் அர்த்தம் இருக்கிறது என்பது என் எண்ணம். (கலைத்தேடல் விதிவிலக்கு!)
உங்கள் தாயைப் பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பிய உங்களுக்கும் உமா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல.
பி.கு. நீங்கள் ஏன் பேருந்தில் சென்றீர்கள்?
நான் இன்னும் திருப்பதிக்கு போனதில்லை. கூட்டமி்ல்லாத கோவில்கள் மட்டுமே என் விருப்பம். அமைதி, ஆனந்தம் அங்கேதான் கிடைக்கும். பிரபலக்கோவில்களுக்கு சிலையை ரசிக்கவும், அமைப்பினை பார்க்கவும் மட்டுமே செல்வேன்.
பக்தியை தாண்டி கோவிலுக்கு செல்ல காரணங்கள் நிறைய இருக்கின்றன.
அன்பு ருத்திரன்
பிராத்தனை என்பது ஒரு கவிதுவமனாது ........
உங்கள புத்தி அறிவதில் ஆர்வம் உள்ளது /////
பதிவு என்பது அறிவின் வெளிப்பட்டு இங்கு உள்ளது
உண்ணர்வுகள் உங்களை அங்கு கொண்டு போய் வந்தூல்லது
உங்கள ஆழ் மன உணர்வுகள் உங்களை இயக்குகிறது
இச்சா சக்தி சகலத்தையும் கொண்டு வரும்
ஆசை படுவோம் அனுபவிபோம் ./././././.
திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமாம், காத்திருக்கிறேன். /// ஏதோ சுயதேடுதல், அதில் ஒரு மறைக்கப்பட்ட சுயநலம் ஒளிந்திருக்கிறது அதுதான் கடைசியாக வரும் வார்த்தையிலும் வருகிறது.....உண்மை தான் நண்பரே .... கொஞ்சம் வயதாகி விட்டாலே ......குழப்பம் வந்து விடும் .....
திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமாம், காத்திருக்கிறேன். /// ஏதோ சுயதேடுதல், அதில் ஒரு மறைக்கப்பட்ட சுயநலம் ஒளிந்திருக்கிறது அதுதான் கடைசியாக வரும் வார்த்தையிலும் வருகிறது.....உண்மை தான் நண்பரே .... கொஞ்சம் வயதாகி விட்டாலே ......குழப்பம் வந்து விடும் .....
அந்த வினவு கும்பலிடம் அனுமதி கேட்டுத்தானே சென்றீர்கள்,
இல்லாவிட்டால் ஆயிரம் எழுதினாலும் கும்முவார்கள்.
Post a Comment