சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க.....
உங்கள் அன்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என்னும் சாதாரண வார்த்தையைமட்டுமே கற்றுவைத்திருக்கிறேன்.
மீண்டும் எழுத மட்டுமல்ல மீண்டுமீண்டும் எழுதவே ஆவல்;
எழுதுகோல் இருந்தாலென்ன, எழுத்தல்லவா வேண்டும்!
எழுத என்ன தடை? படிக்க, படைத்த கண்களையுமீறி இன்னும் அன்புடன் சிலகண்கள் இருந்தும், எழுத என்ன தடை?
கர்வத்தை கூட தக்கவைத்துக்கொள்ள காரியங்கள் தேவை. பின்னால் எழுதலாம், அப்போதும் படிக்க எல்லாரும் காத்திருப்பார்கள் என்ற நிலை அன்று கம்பனுக்கோ இன்று ஜெயகாந்தனுக்கோ கூட இல்லை எனும்போது நிச்சயம் எழுதாமல் இருந்தது திமிரினால் இல்லை. எழுதவேண்டிய எல்லாவற்றையும் எழுதிமுடித்துவிட்டதாக ஓர் இறுமாப்பும் இல்லை.
மொழியற்ற மெளனம் சாத்தியமா என்று தெரியவில்லை; அதன் அருகே வரக்கூடியது மனச்சோர்வின் வெறுமை.
கடவுள் என்னும் கம்பீரக்குரல் செவிடர்களுக்கு மட்டுமே கேட்கட்டும்,(Anne Sexton எழுதியது போல) எனக்கு என்னவோ மானுட மொழியின் சப்தம் தேவைப்படுகிறது- எந்தமொழியாக இருந்தாலும்...சப்தமாக மட்டுமே இருந்தாலும்.
இருத்தலின் இயலாமை ஒரு தத்துவ விசாரணையாக இருந்தாலும், அது எல்லோர்க்கும் அவ்வப்போது அனுபவமாகவும் இருந்துவந்திருக்கிறது. அது மெளனத்தின் இடைவெளிகளை உற்றுப்பார்க்க வைக்கும் ஒரு மனநிலை. அதில் மெளனம், ஒரு பிரத்யேக பிரக்ஞை.
ஒரு அசாத்தியமான அசதி மெதுவாக மேலே படரும்போது, வலியும் சுகமாவதுபோல் மெத்தனமும் இயக்கமாகிவிடுகிறது.
சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க
maladies of the mind..
10 years ago


