பகுத்தறிவு மட்டுமே வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை.வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவமும் கூட.அறிவியல் அணுகுமுறையே பகுத்தறிய உதவும் என்பதும் என் நம்பிக்கை. ஆனால்
"பேய் பிசாசு பில்லிசூன்யம் என்பனவெல்லாம் இல்லை என்று தீர்மானமாகப் பேசும் நீ...நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு ஏன் திரிகிறாய்? உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா?"....இது தான் சமீபமாய் நான் சந்திக்கும் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி.
எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. என் அழகு தெய்வத்திடம் அளவு கடந்த பக்தியும் உண்டு. அவளை உண்மையாக விரும்பி, ஏற்றுக்கொண்டதன் பகிரங்கமான பிரகடனம் தான் என் நெற்றியிலுள்ள குங்குமம். காதலித்தவனோடு வாழ்கிறேன் என்று பெருமிதத்தோடு சில பெண்கள் அணியும் தாலி போல, விரல் மாட்டியிருக்கும் மோதிரம் போல, மெட்டி போல. இவ்வகைச்சின்னங்கள் பொதுவாக ஆணாதிக்கச்சமுதாய நிர்ப்பந்தமாகவே பல பெண்களுக்கு அமைந்துவிட்டாலும், நான் சொல்வது, இவ்வகை அடையாளங்களை நிர்ப்பந்தமில்லாமல், ஆசையோடும், பெருமிதத்தோடும் அணிந்து கொள்ளும் சிலரைப் பற்றித்தான்.
ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வீரவசனம் பேசும் போலி பகுத்தறிவாளனாக இருப்பதைவிட, நேர்மையான கடவுள் ஏற்பாளனாக இருப்பது தான் என் நெஞ்சுக்கு நிஜ நிம்மதி.
பேய் பிசாசு போன்றவை கற்பனை, ப்ரமை என்றால் கடவுள் மட்டுமென்ன சத்தியமா, நிருபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? என்னும் கேள்விக்கு என் பதில்: பேய் பிசாசு போன்று கடவுள் என்பதும் கற்பனை தான். மனிதனின் உருவாக்கம் தான், நினைவாக்கம் தான். கடவுள் என்பது சுகம் தரக்கூடிய கற்பனை, பேய் என்பது பயம் தரக்கூடிய கருத்தாக்கம்.எது மனதுக்கு இதம் தரும்?
நான் ஏன் கடவுளை காதலிக்கிறேன்? இன்னும் இணையவில்லை என்பதனாலும் இருக்கலாம்..இன்னும் வளரவில்லை என்பதனாலும் இருக்கலாம்..அனால் என் பக்தி ஒரு காதல். காதல் சுகமான அனுபவம், சுகமான எதிர்பார்ப்பு. அடிப்படையில்லாவிட்டாலும் அழகான நம்பிக்கை!
என் பக்தியின் பெயர் காதல் என்பது போல் என் அனுபவத்தில் கண்ட அழகுக்கும் அமைதிக்கும் பெயர் கடவுள். வேறு வார்த்தைகள் தெரியாததால் இப்போதைக்கு இவை.
இது குறித்து இன்னும் பின்னால்...


