இன்று ஜெயகாந்தனின் பிறந்தநாள். 75 முடிந்து, அடுத்தது ஆரம்பமாகிறது.
அவர் எனக்கு ஆசான். என் இளமையில் அவர் எனக்கொரு ஆதர்ச நாயகன். அவருடன் பேசுவோம், பழகுவோம் என்று ஒரு கனவு எனக்கு இருந்ததில்லை.
லாசரா, அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி ஆகியோரின் எழுத்துக்களை நாடகமாக்கிக் கொண்டிருந்த காலத்திலும், ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் அச்சமும் இருந்தததால், அவரை நெருங்கவில்லை.
அவரே காட்சிகளை அமைத்து வசனமும் எழுதக்கூடியவர் என்பதால், கேட்கவே மிகுந்த தயக்கம் இருந்தது.
ஒரு யதேச்சையான நிகழ்வாக எனக்கொரு விருது அவர்கையால் கிடைக்கப்பெற்ற நேரம், உங்களை நேரில் சந்திக்க இயலுமா என்று கேட்டுவிட்டேன், அவரும்," வாரும் "என்று சொல்லிவிட்டார்.
அவர் வீட்டிற்கு முதன்முறை போனபோதே இன்னொரு வாய்ப்பு கிடைக்காதோ என்று அஞ்சி உங்கள் கதையை படமாக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன். "தாராளமாக" என்று அவரும் உடனே இசைந்துவிட
அப்போது ஆரம்பமானது ரிஷிமூலம் என்னும் கனவு.
திரைக்கதை எழுதி, அவர் ஒப்புதலோடு அதை NFDC யில் சமர்ப்பித்து, ஒப்புதலும் பெற்றுவிட்டேன். மகேந்திரன் படம் முடிந்த உடன் உன் படம் தான் என்றார்கள். படத்துக்காக நான் பேசிவைத்திருந்த ஸ்ரீவித்யாவும், எல்.வைத்யநாதனும் இறந்துவிட்டார்கள். ஒரு மழையில் என் கையெழுத்துப்பிரதி கூட நனைந்து விட்டது. எத்தனையோமுறை அலைந்து அலுத்து கனவை மனப்பரணின் மூலையில் போட்டுவிட்டேன். அனால், ரிஷிமுலம் மூலம் ஏற்பட்ட ஒரு ரிஷியின் உறவாகவே ஜெகே எனக்குவிளங்குகிறார்.
எனக்கு அவர் மார்க்சியம் மட்டுமல்ல கம்பனையும் வள்ளுவனையும் கற்பித்தார்.
உரிமையோடு என் வாழ்வின் குழ்ப்பங்களுக்கும் விடை கூறியிருக்கிறார் .
பாசமும் நேசமும் என்ன என்பதை காட்டியிருக்கிறார். நான்தான் அவ்வப்போது அவரை விட்டு ஓடியிருக்கிறேன் ஆனால் அவர் என்றும் என்னிடம் அன்பு காட்டத்தயங்கியதே இல்லை.
எட்டு மாதங்கள் அவரைப்பார்க்காமலேயே ஒட்டி விட்டேன்.
பார்க்காமல் மட்டுமே, நினைக்காமல் இல்லை.
இன்று அவரின் புது வீட்டிற்கு போகிறேன். அவர் பழைய மாதிரி தான் இருப்பார் என்று தெரியும்.
செல்லமாக, கோபமாக, நெகிழ்வுடன், நட்புடன், இலக்கிய தத்துவ பரிமாறல்களுடன் அதே ஜெயகாந்தனை இன்னும் பல வருடங்கள் பார்க்கவேண்டும் என்ற பிராத்தனையுடன்,
இதுவரை அடித்ததிலேயே நீளமான பதிவை முடித்துக்கொள்கிறேன்.
maladies of the mind..
9 years ago