Sunday, July 22, 2018

அவள் கோவில் பற்றி…





முன்பொருமுறை நான் எழுதியது-
‘கூத்தனூர் கோயிலில் மாத்திரம் இருப்பளோ
 வாக்திறம் நல்கும் என் தாய்”

இதில் சில கேள்விகள் எனக்கு இப்போது, சமீபமாய் வெடித்திருக்கும் ஒரு சர்ச்சையை நோக்கும் போது ( இதை முகநூலில்தான் நோக்க முடிகிறது, பல சர்ச்சைகளைப்போல். தெருவில் நடக்கையில், பல்விதங்களில் பயணிக்கையில் எந்த சர்ச்சையும் தெரிவதுமில்லை, செவிபடுவதுமில்லை. மக்களுக்கு இதற்கெல்லாம் அவகாசம் இல்லை).

எனக்குத் தோன்றிய கேள்விகள்- வாக்திறம் அவள் தருகிறாளா? அவள் தாயா? அவள் கோவில் என்பது அவள் உறைவிடமா?... இன்னும் கூட கேள்விகள் எழுகின்றன. முதலில் அவள் வாக்திறம் தருகிறாளா என்றால் தெரியவில்லை. எனக்குத் தந்தது போல் இன்னொருவர்க்கும், ஒரு மேதைக்குத் தந்தது போல் எனக்கும் வாக்திறம் வாய்ப்பதில்லை. அவள் தருகிறாள் என்றால் எல்லார்க்கும் ஒரே விதமாய் அல்லவா தந்திருக்க வேண்டும்?  அவள் தாயெனில் எல்லா பிள்ளைகளையும் ஒன்றாயல்லவா பாவிக்க வேண்டும்? அழுத பிள்ளைக்கே அமுது என்பது போல் பூஜிப்பவனுக்கே வரமெனில் அவள் எப்படி தாய்?  அவள் கடவுள் எனில் கோவிலில் மாத்திரம் இருப்பது எப்படி சாத்தியம்?
அவளை ஒரு கற்சிலையாய் கண்டிருந்தால்தான் எனக்கு இப்படி கேள்விகள் தோன்றலாம். என்னைப் பொருத்தவரை அவள் அழகுச்சிலை மீறிய அகண்டம். என் சௌகரியத்துக்காகவே அந்த எழிற்சிலை. என் கண்பார்த்த கண்ணிரண்டும் கண்ணிமைக்க மறுப்பதனால் நான் கண்ணுறங்கும் வேளையிலும் அவள் கண் கனவில் வருகிறது. அது அவள் கண் தானா? அவளுக்கு இருப்பது கண் எனும் உறுப்பா? பார்வையில் படுவதை கண்ணில் படுவதாய் சொல்லிப் பழகிவிட்டது போல், அவள் பார்வை எனும் ப்ரக்ஞையை கண் எனும் உறுப்பாய் மனோவசதி மாற்றி நினைத்துக்கொள்கிறது.
கோவிலில் அவள் இருப்பதாய் உருவாக்கிவைத்துள்ள பிரமை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதால் அதை மனம் சந்தேகங்களைப் புறந்தள்ளி ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறது. 
கோவில் ஒரு பயனுள்ள இடம். வேலையில்லா மத்யானத்தில் ஓய்வாய் அரட்டை அடிக்க, பழகியவர்களை சந்திக்க, புதியவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ள, அமைதியாய் உட்கார்ந்து யோசிக்க, இல்லத்து இறுக்கத்திலிருந்து தற்காலிகமாய் தப்பிக்க, நடை பயில, இளைப்பாற, சிற்ப நுணுக்கங்கள் ரசிக்க, கல்வெட்டுகளில் சரித்திரம் தேட, நாணமின்றி வேதனையை கண்ணீராய் வெளிப்படுத்த, பயத்துடன் வேண்டிக்கொள்ள, ப்ராத்தனை செய்து கொண்டதால் தெம்பு பெற என்று கோவில் பலவிதங்களில் பலருக்குப் பயன்படுகிறது, இதில் பக்தி என்பது உபரி மட்டுமே. 
இதே பயன்களை வெவ்வேறு இடங்களிலும் பெற முடியுமெனில் அவையும் கோவில்களா? கோவில் என்பது தெய்வநம்பிக்கை சார்ந்தது.

தெய்வம் என்பதன் புரிதலைப் பொருத்தே கோவில் என்பதன் புரிதல் அமையும். கடவுளை ஒரு கற்சிலைக்குள் அடைத்து, குறுக்கிப் பார்த்தால் கோவில் கடவுளின் வீடு மட்டுமே. அந்த வீடு கடவுளுக்குச் சொந்தம் என்பதால் நாம் அங்கே அந்நியர்கள் தான். ஆகவே இன்னொருவர் வீட்டுக்குத் தர வேண்டிய நாகரிகம் சார்ந்த மரியாதையை நாம் அங்கே தரத்தான் வேண்டும். பிடிக்காதவர் வீட்டுக்குப் போகாமல் இருப்பது போல கோவிலையும் கடவுள் வீடென்று நினைத்தால் தவிர்க்கலாம்.

கடவுளுக்கு எதற்கு வீடு என்று கோவிலை நகைப்புடன் வினவுவது நாத்திகம் என்பதைவிடவும் ஆழமான ஆன்மிகமாகும். கடவுள் எனும் யாதுமாகியதற்கு  ஒரு நிலம் ஒரு கட்டிடம் மட்டுமே சொந்தம் என்பது நிச்சயம் சரியில்லைதான். ஆனால், அந்த இடம் ஒரு சாராரின் சொந்தம். அதில் அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு கட்டிடம் எழுப்பி, தங்களுக்கு விருப்பமான ஒரு பொம்மையை வைத்து மகிழ்வதை சரியில்லை என்று சொல்ல முடியாது. உடனே சிலருக்கு மட்டும் சில சலுகைகள், சிலருக்கு மட்டும் சில தடைகள் ஏன் எனும் கேள்வி வருகிறது. அது அவர்கள் வீடு, ஆகவே அங்கே அவர்கள் தங்கள் சட்டங்களை அமல்படுத்தலாம். அவர்களது செயல்பாடுகள் சமூகத்தின் நியாயங்களை மீறும்போது யாரும் எதிர்க்கலாம். எந்த வீட்டில் ஒரு கொலை/ அடிதடி நடந்தாலும் யாரும் உள்ளே சென்று எதிர்க்கலாம் எனும் நியாயம் இதில் பொருந்தும். 
நீ நாத்திகன் என் கோவில் விஷயத்தில் நீ நுழையாதே என்று ஒரு சமூக அநீதி ஒரு கோவிலில் நடக்கும் போது யாரும் தடுக்க முடியாது.
எது சமூக நீதி? அனைவரும் சமம் என்பதே என்னைப்பொருத்த சமூக நீதி. சில கட்டங்களில் இதில் விலக்குகள் இருக்கலாம்- கற்கும் போது மாணவனும் ஆசிரியரும் சமமில்லதான்; ஆனால் பாடம் முடிந்த பின் சமம் தான். 
என்றோ எவரோ எவர் வசதிக்காகவோ சுயலாபத்திற்காகவோ எழுதி வைத்தவற்றை இன்னும் மாற்றம் அடைய முடியாத அடிப்படை அறிவியல் சூத்திரம் போல் பயன்படுத்தி, சிலரை பாகுபடுத்தி, பிற்படுத்தி, சில நேரங்களில் அவமானப்படுத்தி நடப்பது தவறு. அது கோவிலுக்குள்ளானாலும் சுடுகாட்டில் என்றாலு தவறுதான்.


எழுத எழுத என்னென்னவோ வந்து கொண்டிருக்கிறது. இதை எழுத ஆரம்பித்தது, கோவிலுக்குள் மாதவிலக்குடன் பெண்கள் வரலாமா எனும் சமீபத்திய சர்ச்சையும் அது தொடர்பாய் நடக்கும் வாதங்களையும் விதண்டாவாதங்களையும் படித்ததால் தான்.

சில விஷயங்களை பலர் புரிந்து கொள்ளாமல் பின்பற்றுவதன் கோளாறு இதில் அப்பட்டமாய்த் தெரிகிறது. மாதவிலக்கு என்பது பெண்களுக்கு ஒரு பருவத்தில் ஏற்படும் இயற்கையான உடலியக்கம். இதில் ‘தோஷம்’, ‘தீட்டு’ என்றெல்லாம் சொல்வதும் அந்நேரம் அவர்களை ஒதுக்குவதும் புரிதலில்லாத பழமை சார்ந்த மூட நம்பிக்கைதான்.
மலம் கழித்த பின் பின்னங்கால கழுவிவிட்டு வரவேண்டும் என்பது நம் பழங்கலாச்சார விதி. அப்போது உட்கார்ந்து மலம் கழித்தல் மலச்சிதறல் காலில் படுமே என்று உருவாக்கப்பட்ட விதி. இப்போதும் ‘வெஸ்டர்ன்’ கழிப்பறையில் அதைப் பின்பற்றுவது வேடிக்கையான வழக்கம். அதிலும் ஈரமான/ஈரமில்லாத இடங்களாக கழிப்பறையும் குளியலறையும் இருக்கும் இடங்களிலும் இதைப் பின்பற்றுவது மடத்தனம் தான். மாதவிலக்கின் போது கோவில் வரக்கூடாது என்பதும் இப்படித்தான்.
அக்ரகாரத்திலிருந்து அனைத்தையும் கடைபிடித்தவன் அமெரிக்கா போனதும் ( அப்படி போவதே அனாச்சாரம்) கழிப்பறையில் காகிதம் பயன்படுத்துவதில் காட்டாத ஆச்சாரத்தை மனைவி மாதவிலக்கின் போது சமையலறைக்குள் போகக்கூடாது என்று சொல்வது போலத்தான் மாதவிலக்கின் போது பெண்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பதும்.  கோவிலில் மின்விளக்குகள், மைக், எக்ஸ்ஹாஸ்ட்,குளிர்சாதனம் எல்லாம் நுழைந்தால் வராத தீட்டு, மாதவிலக்கினால் பெண்ணுக்கு எப்படி வந்து விடும்?

இங்கே சர்ச்சை இன்னொரு கோணத்தில் விதண்டாவாதமாகி விட்டது. ஒரு ‘கவிதை’ கோவிலில் பெண் தெய்வங்களுக்கு  மாதவிலக்கு இல்லையா, தீட்டு இல்லையா எனும் பொருளில் எழுதப்பட, அதை ஒரு தொலைகாட்சியில் ‘நெறியாளர்’ சொல்லிவிட,  ஆஹா என எழுந்தது முகநூலில் கோஷ- பூசல்! கவிதை என்பதைப் பற்றி இப்பொதைக்கு விட்டு விட்டு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்போம். சிந்திப்போம் என்றல்லாமல் யோசிப்போம் என்றேதான் எழுதுகிறேன், அறிந்தவர் அறிவாராக.
கோவில் புனிதம் என்பதை மறுத்து, கோவிலிலினுள்ள கடவுள் சிலைகளை சிற்பமாகவோ பொம்மையாகவோ பாவித்து, இறை நம்பிக்கை இல்லாத போது, இப்படி எழுதுவதென்பது ஒரு நகைச்சுவைக்கு உதவுமே தவிர துல்லியமான வாதத்திற்கோ விவாதத்திற்கோ பயன்படாது. இப்படி எழுதுவதை அப்படியே வாதமாக எழுத்துக்கொண்டால் எழுதியவருக்கு கடவுள் உண்டு, அது பெண் வடிவில் உண்டு, அது கோவிலில் இருக்கிறது எனும் கருத்தில் உடன்பாடு இருப்பதாகவே படும்.

ஒரு விஷயத்தை எதிர்க்க  கேலியும் கிண்டலும் ஒருவித ஆயுதம் என்றாலும், அதிலும் உள்ளார்ந்த சமரசம் செய்துகொள்ளும் தொனி வந்து விடும். ஜெயிக்க வேண்டுமென்றால், சண்டையில் கோபமும் வேண்டும், அதைவிட நேர்மையும் வேண்டும்.

அவள் கோவிலுறை தெய்வம், அதுவும் அந்த கற்சிலை உறையும் கடவுள் என்று ஏற்றால் தான் இந்த விதண்டாவாதம். 
பேச வேண்டியதும் மாற்ற வேண்டியதும் மூட நம்பிக்கைகளைத்தான். அது சீரிய சமூக அறிவியல் அடிப்படையிலான வாதங்களினால் தான் சாத்தியம்.
நான் முதலில் எழுத ஆரம்பித்ததைப் போல்- கூத்தனூர் கோவிலில் மாத்திரம் இருப்பளோ வாக்திறம் நல்கும் என் தாய். அந்த என்றல்லாமல் எந்த ஒரு தேவி சிலை பார்த்தாலும், என் அறிவில் சிலை தான் அது. உணர்வில் என் தேவியாய் அவள். உள்ளதிர் ப்ரக்ஞையில் காதலுடன்  வெடிக்கும் பெருஞ்சக்தி.


0 comments:

Post a Comment