Tuesday, December 29, 2009

வேறு –ஒரு நாடகம் பற்றி



காஃப்கா எழுதிய எல்லாமும் என்னை உலுக்கும், அவனது நாட்குறிப்புகள் உட்பட.

 அவன் எழுதிய TRIAL எனும் முடியாத நாவல் என்னுள் கிளப்பிய அதிர்வுகள் தான் என் விசாரணை எனும் நாடகம்.

அதேபோல் என்னுள் அதிர்ந்த அவனது சிறுகதை தான் METAMORPHOSIS.
கதை இதுதான். 
அவன் ஒரு நடுத்தட்டு வர்க்கத்து, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள். ஓய்வு பெற்று வெட்டியாய் வீட்டில் இருக்கும் அப்பா, காசநோயாலோ கவலையினாலோ இருமிக்கொண்டே இருக்கும் அம்மா, கனவுகள் நிகழக்காத்திருக்கும் ஒரு தங்கை.. இதுதான் அவன் குடும்பம், வாழ்க்கை. பணியிடத்தில் அவன் அடிமை, பணம் தருவதற்கென்றே வீட்டின் இயந்திரம். ஓர் இரவு வீட்டிற்கு வெகுநேரம் கழித்து வந்து அவன் தூங்கிப்போகிறான்.மறுநாள் விடிகிறது.

காலையில் வழக்கம்போல் அப்பா தினசரியில் மூழ்கிக்கிடக்க, தங்கை ரேடியோவில் மூழ்கிக்கிடக்க, அம்மா வழக்கம்போல் இருமலுடன் சமையலில் மூழ்கிக்கிடக்க அவன் தூக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை என்பதையே அந்தக்குடும்பம் அவன் வேலைக்குப்போகும் நேரம் வரும்போதுதான் தெரிந்துகொள்கிறது.


வீட்டுக்கு வருமானம் ஈட்டும் ஒரே ஆள் என்றாலும் அவனை சோம்பேறி என்று அவர்கள் திட்டிக்கொண்டிருக்கும்போது, அவனது அலுவலக மேலாளர் வருகிறார். அவனது தந்தையிடம் ‘ இப்போதெல்லாம் அவன் ஒழுங்காக வேலை செய்வதில்லை, இப்படியே இருந்தால் வேலை போய் விடும் என்று சொல்ல, எல்லாரும் அவனைத் திட்டிக்கொண்டே எழுப்ப முயல்கிறார்கள். கதவை ஒருவழியாகத் திறக்கும்போது, அவன் ஒரு மனிதனாக இல்லாமல் ஒரு பூச்சியாக மாறியிருக்கிறான்.

ஆரம்ப அதிர்ச்சி, அச்சம், அருவெறுப்பு மெதுவாகக் கறைந்தபின், அம்மா வழக்கம்போல் இருமிக்கொண்டிருக்க, அப்பா ஒரு பகுதிநேர வேலைக்குப் போகிறார், தங்கையும் ஒரு வேலை பார்த்துக்கொள்கிறாள்.
பூச்சி அந்த அறையில் கிடக்கிறது, வேளாவேளைக்கு உணவுமட்டும் பெற்றுக்கொண்டு. அன்போ அக்கறையோ இல்லாமல் ஒரு நியமமாகவே அந்தப்பூச்சி அந்த வீட்டில் கிடக்கிறது.

தங்கை ஒருநாள் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவனை வீட்டிற்கு அழைத்துவருகிறாள். அவர்களிடையே ஒரு வருங்காலத்தின் சாத்தியமும் தென்படுகிறது.
பூச்சி வெளியே வருகிறது. வந்தவன் ஓடிவிடுகிறான். எல்லாரும் அந்தப் பூச்சியை அடித்து அந்த அறைக்குள் தள்ளுகிறார்கள். இரவு. வெகு நேரமாக அந்தப்பூச்சியிடமிருந்து வழக்கமாக வரும் சத்தங்கள் கேட்காததால் கதவைதிறந்து பார்க்க, பூச்சி செத்துக்கிடக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, குப்பை லாரி வருவதை எதிர்பார்த்து அவர்கள் ஜன்னலில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

கதை இவ்வளவுதான். நாடகமாக நான் ஆக்கியதில்.
இதை காஃப்கா காச நோய்க்காக எழுதியதாய் ஒரு குறிப்பு எங்கோ படித்திருக்கிறேன். இதை ஒரு மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கதையாக மாற்றி எங்கள் முத்ரா நாடகக்குழு போட்ட கடைசி நாடகத்தின் தலைப்பு “வேறு”.

யாரை நம்பி வாழ்வு இருப்பதாய் ஒரு குடும்பம் இருக்கிறதோ, அவன் செயலற்றுபோனால், அதே குடும்பம் தன் வாழ்வை வேறு விதமாக ஒட்டிக்கொள்ளப் பழகிவிடும். அவனிடம் அன்பும் இருக்காது, அனுதாபமும் இருக்காது. அக்கறையும் தங்கள் சௌகரியத்தின் எல்லைகளில் அத்துமீறாதவரை மட்டுமே இருக்கும்.

இதில் முக்கியமான படிமம், ஒருவன் நம் வழக்கமான இயல்பிலிருந்து நோயினால் மாறுபட்டு செயல்பட்டால், அவனது அறிவும் மனதும் நமக்கிருக்கும் உணர்ச்சிகளைப்போல் இருக்காது என்னும் ஒரு கணிப்புடனேயே அணுகுகிறோம். அவன் ஆசையுடன், பாசத்துடன், அன்புடன் நம்மை அணுகுவதையெல்லாம் புறம் தள்ளுகிறோம். இந்நிலை மாறினால்தான் அவர்களிடம் நாம் அன்பின் வெளிப்பாடு அக்கறையாக அமையும், இல்லையென்றால் அது சலிப்பு நிறைந்த ஒரு சகிப்புத்தன்மையாகவே இருந்துவிடும்.

மனநோய்க்கு ஒருகாலத்தில் மருத்துவம் சிக்கல்களைக் கட்டுப்படுத்தவே இருந்தது. இன்று, முறையாக உடனடியாக மருத்துவ உதவி கிடைத்தால், தீவிர மனநோயால் பாதிக்கப்படிருந்தாலும், மீண்டும் வேலைக்குப்போய் சமூகத்தில் சிக்கலின்றி செயல்படமுடியும் நிலை உள்ளது.

இப்படி ஒரு சிந்தனையைத் தூண்டவே இந்தக்கதை நாடகமாக அரங்கேற்றப்பட்டது. அதில் என்னிடம் பயிலவந்த மாணவியர் இருவர் நடித்து அந்தக்காலத்தில் பெண் நடிகர்கள் இல்லாத குறையை ஈடுசெய்தனர்.

இன்று இதைத்தட்டச்சு செய்யும்போது, இக்கதைக்குள் இன்னும் பல படிமங்கள் இருப்பது புரிகிறது. இதைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்ளலாமே!





இது தான் எங்கள் முத்ரா நாடகக்குழு அரங்கேற்றிய கடைசி நாடகம், 1994ல். 

அந்தக்கடைசி நாடகத்தின் கடைசியில் எடுக்கப்பட்ட படம் இது.

14 comments:

Prabu M said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார்..
உண்மை கசக்கும்!! :)

Ashok D said...

//அன்பும் இருக்காது, அனுதாபமும் இருக்காது. அக்கறையும் தங்கள் சௌகரியத்தின் எல்லைகளில் அத்துமீறாதவரை மட்டுமே//
:)

அன்புடன் அருணா said...

/யாரை நம்பி வாழ்வு இருப்பதாய் ஒரு குடும்பம் இருக்கிறதோ, அவன் செயலற்றுபோனால், அதே குடும்பம் தன் வாழ்வை வேறு விதமாக ஒட்டிக்கொள்ளப் பழகிவிடும்./
இந்த இயல்புதான் சம்பாதிப்பவர் இறந்துவிட்டால் குடும்பத்தை வேறு விதமாக ஒட்டிக்கொள்ளப் பழக்கி விடுகிறதோ?

Anandi said...

thanks for sharing dr.

தமிழநம்பி said...

சூழ்நிலை சோம்பேறியை உழைக்க வைக்கிறது.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தானே உழைக்க வைக்கிறது.

ஆனால், மாந்த நேயம், அன்புணர்ச்சி, நன்றி உணர்வு...?

அம்ருதா said...

பதிவு பல எண்ண ஓட்டங்களை ஏற்படுத்திவிட்டது.

சித்தூர் முருகேசன் said...
This comment has been removed by a blog administrator.
Dr.Rudhran said...
This comment has been removed by the author.
வம்பன் said...

திஸ் கை இஸ் ஆல்வேஸ் காஸிங் ப்ராப்லெம்ஸ் டு ஆல் ப்ரபலம்ஸ், ஹி இஸ் ய சீப் பப்ளிசிடி இடியட்,டோண்ட் மைண்ட் ஹிம் சார்

ராமலக்ஷ்மி said...

என்றோ படித்த அன்கன்டிஷனல் லவ் எனும் ஃபார்வர்டட் மெயில் ஒன்று நினைவுக்கு வருகிறது. போரில் காலினை இழந்த மகன் பெற்றவர்களிடம் தனக்கு நிகழ்ந்ததை நண்பனுக்கு நிகழ்ந்ததாகக் கூறி அவனை வீட்டுக்கு அழைத்து வரலாமா எனக் கேட்கிறான் தொலைபேசியில். முடங்கி விட்டவனைக் கவனித்துக் கொள்வதிலான சிரமங்களை ஒவ்வொன்றாக அடுக்கி மறுக்கிறார்கள் பெற்றோர். வீட்டுக்குச் செல்லாமலே இருந்து விடுகிறான் அவன்.

தருமி said...

இப்பதிவை வாசித்த போது உங்களின் 'கருணையும் கொலையும்' என்ற பதிவு நினைவுக்கு வருகிறது.

Thekkikattan|தெகா said...

அழுத்தமான பதிவு...


//இக்கதைக்குள் இன்னும் பல படிமங்கள் இருப்பது புரிகிறது.//

கண்டிப்பாக. எத்தனை குடும்பங்களில் விதவிதமான ஆடைகளுக்குள், விதவிதவமான உறவு நிலைகளில் இப்படியானதொரு ஒட்டுண்ணி வாழ்வு... நிறைய தோண்டலாமே!

சந்தனமுல்லை said...

டாக்டர் , நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து குடியிருப்பில் ஒரு குடும்பம். அதில் நீங்கள் சொன்ன எல்லோருமே உண்டு, கூடுதலாக அக்கா மட்டுமே. அந்த மகன் ஆட்டோமொபைல் ஷாப் வைத்து நன்றாக சம்பாதித்து கொடுத்திருக்கிறான். ஏதோ ஒரு நாள் தலைக்கீழாக விழுந்து மனநோயாளியாகிவிட்டான். கொஞ்ச நாட்கள் கஷ்டபட்டபின்னர் குடும்பத்தில் அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்க, அவன் ஒரு தொல்லையாக மாறிவிட்டான். அறையில் அடைத்து பூட்டுவதும், அதட்டுவதும் என்று..ஒருநாள் அவனாகவே மண்ணெண்ணெய் எடுத்து எரித்துக்கொண்டான் என்று சொல்லிவிட்டார்கள்!

அருமையான இடுகை தங்களுடையது!!

Unknown said...

நண்பரே மிக மகிழ்ச்சி இன்று உங்களின் இந்த பதிவை பார்த்ததில் எனக்கு ஒரு ஆறு அல்லது எழு வயது இருக்கும் என நினைக்கிறேன் நான் எனது சொந்த ஊரில் இருக்கும் பொது தொலைகாட்சியில் ஒரு நாடகம் பார்த்தேன் அது நீங்கள் எடுத்ததா இல்லை அதை தழுவி வேற யாரேனும் எடுத்ததா எனக்கு அதேரியாது அப்போதைய தூர்தர்ஷனில் நான் இந்த கதையை உள்ள நாடகத்தை பார்த்தேன் இப்போது அதன் பெயரையும் அதை எடுத்தவரையும் அறிந்ததில் மிக மகிழ்ச்சி

Post a Comment