Sunday, December 27, 2009

என்னை எழுத வைத்தவர்கள், தடுத்தவர்கள்.

என்னை எழுதவைப்பது என் தன்னம்பிக்கைதான். தட்டச்சில் தடுமாற்றம் இருந்தாலும், இலக்கணம் முழுமையாகத்தெரியாமலும், ஆங்கிலத்தில் சிந்தித்துப்பழகி அதையே தமிழாக்கிக்கொள்ளும் ஒரு தயக்கத்திலும்..நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆனாலும், என்னை எழுதத் தூண்டியவர்கள் ஏராளம். வெறும் சந்தமாக மனப்பாடம் செய்த கம்பன், விஸ்வநாதன்-ராமமூர்த்தியுடன் மனத்துள் இசையாய் தமிழ்க் காதலூட்டிய கண்ணதாசன், அறிவுஜீவி அடையாளத்திற்காக ஆரம்பித்தாலும் அப்புறம் உள்ளே சென்று சுட்ட பாரதி..(பட்டுக்கோட்டை அப்புறம்தான்). எப்படியாவது தமிழ் இலக்கணச்சுத்தத்துடன் கற்கவேண்டுமென்று எனக்கு வெறியூட்டிய பண்டிதநடேசனார், இவர்களுக்கப்பால் நா.பா., ஜேகே, லாசரா, சுஜாதா.. இது ஒரு மிக நீளமான பட்டியல்.

மொழிநேர்த்தி மட்டுமல்ல உள்ளடக்கமும் முக்கியம் என்று புரிய பதின்வயதுகளைக் கடக்கவேண்டியிருந்தது. இவர்களைப் படித்தும், கேட்டும் தமிழில் நானும் எழுதவேண்டும் என்று இயல்பாக எனக்கு வந்த ஆசையை என் விடலைஎழுத்துக்களைக்கூடக் கவிதைகளாய் பாராட்டிக் கொம்பு சீவிவிட்ட நண்பர்கள்.. இப்படி நான் எழுத ஆசைப்பட்டதற்கு நிறையபேர் காரணம்.

என்னை எழுதத் தடுத்தவர்களும் முக்கியம். 1970களின் ஆரம்பத்தில் மீரா எழுதிய கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தான் எனக்கு டாகூரில் கொஞ்சம் கிப்ரானில் கொஞ்சம் திருடி தமிழாக்கவைத்தது.. அது அந்தப் புத்தகத்தைக்கூடப் படிக்காத என் சக மாணவரிடையே ஒரு நட்சத்திர அந்தஸ்து கொடுத்த கொழுப்பில், நானும் கவிதை எழுதுவதாய் செருக்குடன் இருந்தபோதுதான் அன்றைய இலக்கியத்துக்கான அறிமுகமாய் கசதடபற, ழ. பிரக்ஞை மற்றும் உள்ளடக்கத்திற்கு ஈடான வடிவமைப்புடன் ஃ ஓர் எழுத்தாயுத ஏடு ஆகிய பத்திரிகைகள் படிக்க நேர்ந்தது. அதன்பின் நான்  எழுதவேண்டுமா என்றே தோன்றியது.
சகமாணவிக்காக,
அள்ளிமுடிக்காமல் அலைபாயவிட்டகுழல்
தள்ளித்தடவும் தளிர்க்கையை- உள்ளத்தின்
திரையில் வரைகின்ற திறன் உள்ள வரைஎனக்கு
இரவும் பகலும் சுகம். ..........என்று வீம்புக்கு எழுதி
பாராட்டுக்களை உதாசீனப்படுத்துவதுபோல் நடித்துக்கொண்டே ரசித்த என்னை
கவிதை எழுதுகிறாயா என்று கேட்டுக்கொள்ளவைத்தது முதலில் ஆத்மாநாம்.
பிறகு வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, இரா.மீனாட்சி எல்லாரும் என்னைக் கேலிசெய்வதுபோல் ஒரு பிரமை வரும்.  
நகுலன், மௌனி, பிச்சமூர்த்தி..என்று இன்னொரு பட்டியல் பயமுறுத்தும். ஆனாலும் அவ்வப்போது யாருக்கும் காட்டாத காகிதங்களில் சில முயற்சிகள் செய்துகொண்டுதானிருந்தேன். பிர்மீள் படிக்கும் வரை.


பார்வைச் செவிப்பறையில் பருவம் முரசறையும்.. என்று உள்ளே அதிர்ந்த அந்தக்கவிஞன்தான் என் கவிதாபிரயத்தனங்களை நிறுத்தியவன். தமிழில் கவிதை எழுத ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல ரசிக்க ஆர்வமுள்ளவர்களும் அவசியம் படிக்கவேண்டியது பிர்மீள் எழுத்துக்களைத்தான். இன்று யாரும் இல்லாமல் இல்லை. விக்ரமாதித்யன், வண்ணதாசன், லக்ஷ்மிமணிவண்ணன் என்று இன்னும் நீளமான பட்டியல் இருக்கிறது. சில பெயர்கள் நினைவுக்கு வந்தாலும் விரல்வழி பதிவுசெய்ய மனம் தயங்குகிறது. அவர்கள் கவிதை எழுதவில்லை என்பதால் அல்ல, எழுதும் பல கவிதைகளாக எனக்குப் படுவதில்லை என்பதால்.
என் கவிஞர்கள் எப்போதும் கவிதை எழுதுபவர்கள், அவ்வப்போது அல்ல.


கவிதைகள் எழுதுவதாய் என்னை ஏமாற்றிக்கொள்வதை நிறுத்திய பின்னும், எழுதவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் விடவில்லை. கதை எழுத எனக்கு வராது. எனவே கட்டுரைகள் தான் என் எழுத்துப்பணி என்பது ஆசையின் உந்துதலாக அல்லாமல் அவசியத்தின் நிர்ப்பந்தமாக அமைந்தது. அந்தநேரத்தில் எனக்கே நான் கூட்டிக்கொண்ட பொறுப்பாய் மனநலமருத்துவம் குறித்த விழிப்புணர்வும் அமைந்ததால் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். இது என் சமுதாய கடமை என்று நினைத்துக் கொள்ளவும் மனதுக்குப் பிடித்திருந்தது.

ஜாப்கைட்லைன்ஸ் எனும் பத்திரிக்கை நடத்திவந்த அசோகன் என்னை மேலும் ஊக்கியதால் எழுதினேன். நர்மதா ராமலிங்கம் அதுவரை எழுதியதைத் தொகுத்துவெளியிட்டதும் என் ஏற்கனவே ஏராளமான தன்னம்பிக்கை இன்னும் தலைவிரித்தாடியது.
பிறகு எழுதுவது தானாக நிகழ்ந்தது.
நஷ்டம் வராததால் பதிப்பகங்களும் என்னை ஊக்குவித்தன.
இது என் எழுத்தின் சுயபுராணம் அல்ல. ஒரு பின்னோக்கிய அலசல். இன்னும் என்னவோ நான் என்னையே பாராட்டிக்கொள்ளும் எழுத்து வரவில்லை.
இது எனக்கு மட்டும் நேரும் ஒரு சுயபச்சாதாபமல்ல, எழுத ஆசைப்படும் எல்லாருக்கும் ஏற்படக்கூடியதுதான் என்றும் எனக்குத் தெரிகிறது. விற்பனையாகும் எழுத்துக்களை என் பேனா உருவாக்கியிருந்தும் என் சத்தியமான சுயவிமர்சனம் இன்னும் என்னை ஓர் எழுத்தாளனாக அங்கீகரிக்கவில்லை. இதற்குக்காரணம், எழுதும் போதே இது சுஜாதா ஸ்டைலில், இது ஜெயகாந்தன் மாதிரி, இதில் கொஞ்சம் லாசரா முயற்சி பண்ணலாம் என்று எப்போதுமே வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான். வடிவத்தைவிட உள்ளடக்கம் தான் முக்கியம் என்பது இடது என்று வர்ணிக்கப்படும் தோழர்களின் எழுத்துக்கள்  மூலம்   நான் கற்ற பாடம்.

உள்ளே இருக்கும் விஷயம் உருப்படியாக இருந்தால் அதன் கட்டமைப்பு தானாய் ஒரு கம்பீர அழகுடன் மிளிரும் என்பதைத் தோழர்களிடம்தான் நான் கற்றுக்கொண்டேன். இன்றிருந்தால்“ கம்யூனிஸ ஸ்திதப்ப்ரக்ஞை! “ என்று லாசரா என்னைக் கிண்டல் செய்திருப்பார். “அப்பப்போ நீ நன்னா எழுதறே” என்று ஒரு நள்ளிரவில் என்னிடம் அவர் கூறியதை ஒரு மேதை மாணவனை ஊக்குவிப்பதாய் எடுத்துக்கொள்ளாமல், அவரைப்போல் எழுத முடியும் என்று நினைத்துக்கொண்டது தான் என் மடமையின் ஆரம்பம். அது முடியாது என்று உணர்ந்தது என் இயலாமையின் துயரமாகவும் இருந்தது.


நான் எழுதியதிலேயே எனக்குப்பிடித்த நாடகமான காஃப்காவின் விசாரணையில் ஒரு வசனம்;
யாரும் யார் மாதிரியும் ஆகிவிட முடியாது; 
அவர்கள் முன்மாதிரி என்றால் 
அவர்களுக்குமுன் அது மாதிரி யாரும் இல்லை என்பதால்தான்
இதை இன்னும் கற்றுக்கொண்டு வருகிறேன். ஆனால் இப்போது அற்புதமான எழுத்துகளைப் படிக்கும்போது, “ சே, இப்படி எழுத வேண்டும் “ என்று தோன்றுகிறது. அதுவே அந்த நேரத்தில் எழுதுவதையும் தடுக்கிறது.
சமீபத்தில் அப்படித் தடுத்தது Andre Gide

இதில் நிறைய பெயர்களை நான் உதிர்த்திருப்பது தம்பட்டத்திற்காக அல்ல, என்மூலம் சிலருக்கு சில எழுத்துகள் அறிமுகமாகாதா எனும் ஆதங்கத்தில்! இன்னும் ஒரு வாரத்தில் சென்னை புத்தகத்திருவிழா துவங்குகிறது, நான் படித்த பலரது புத்தகங்கள் அங்கு கிடக்கும்.

9 comments:

Anandi said...

thank you for the information dr.

அரங்கப்பெருமாள் said...

//இப்போது அற்புதமான எழுத்துகளைப் படிக்கும்போது, “ சே, இப்படி எழுத வேண்டும் “ என்று தோன்றுகிறது.//

உண்மை.

அன்புடன் அருணா said...

உங்கள் எழுத்துக்களைப் படித்தும் இப்படி எழுதணும்னு தோன்றுகிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நகர நாகரித்தில் வாழும் ஒரு பெயர் பெற்ற மருத்துவருக்கு இன்றைய தமிழுலகில் இருக்கக் கூடாத' வாசிப்பனுபவம் உங்களுக்கு இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்வாயிருக்கிறது.

பலருக்கு அவர்களின் பணி நெருக்கடிகள் கூட தமிழில் வாசிப்புகளை அந்நியப்படுத்தியிருக்கலாம்;ஆனால் சொல்லத் தேவையன்றி அனைத்து பல்துறை விற்பன்னர்களும்-மருத்துவர்,கணக்காளர்,பொறியாளர்-போன்றவர்கள் ஆங்கில மொழியின் வாசகர்களாக இருப்பார்கள் என்பதும் ஒரு பொதுவான விதியாயிருக்கிறது.

பிரபலமான ஒரு வேறுதுறை வித்தகர் தமிழ் வாசகராகவும் இருப்பதும்,எழுத்து மூலம் பகிர முன்வந்திருப்பதும் இன்னும் சிறந்த அறிகுறிகள்.

நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடனும்,ஆர்வத்துடனும்..

{இது எனக்கு மட்டும் நேரும் ஒரு சுயபச்சாதாபமல்ல, எழுத ஆசைப்படும் எல்லாருக்கும் ஏற்படக்கூடியதுதான் என்றும் எனக்குத் தெரிகிறது. விற்பனையாகும் எழுத்துக்களை என் பேனா உருவாக்கியிருந்தும் என் சத்தியமான சுயவிமர்சனம் இன்னும் என்னை ஓர் எழுத்தாளனாக அங்கீகரிக்கவில்லை}

excellent

ராமலக்ஷ்மி said...

பகிர்ந்து கொண்டிருக்கும் எண்ணங்கள் யாவும் அருமை.

ராமலக்ஷ்மி said...

//நான் எழுதியதிலேயே எனக்குப்பிடித்த நாடகமான காஃப்காவின் விசாரணையில் ஒரு வசனம்;
“யாரும் யார் மாதிரியும் ஆகிவிட முடியாது;
அவர்கள் முன்மாதிரி என்றால்
அவர்களுக்குமுன் அது மாதிரி யாரும் இல்லை என்பதால்தான்”
இதை இன்னும் கற்றுக்கொண்டு வருகிறேன். //

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

//வடிவத்தைவிட உள்ளடக்கம் தான் முக்கியம்//

எனக்கும் இது ஏற்புடையதாய் இருக்கிறது. நன்றி.

Jackiesekar said...

அற்புதமான ஒரு பின்னோக்கிய பயணம்...

இனியன் பாலாஜி said...

ஐயா
லா சா ரா வை தாங்களும் படித்திருக்கிறீர்கள் என்று படித்ததும் ஒரே சந்தோஷமாக‌
இருக்கிறது. ஏனென்றால் நான் சுஜாதா ,லா சா ரா ஒஷோ ஜேகே போன்றோரின்
எழுத்துக்களை விரும்பி படித்திருக்கிறேன் ஒரு காலத்தில். அதிலும் சிந்தா நதி என்னை
கவர்ந்த புத்தகம். இன்னும் புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை நாளைதான் செல்ல வேண்டும்
தங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது. நன்றாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. ஆனால்
ஒன்றே ஒன்றுதான் மிகவும் முக்கியம். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எழுதுவது
தான் மிகவும் முக்கியம்/
நன்றி
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
இனியன் பாலாஜி

ராஜா ஜி said...

இப்போதெல்லாம் உங்கள் எழுத்துக்கள் அருமை
லேசா மனச தைச்சுவிடுறிங்க
கடந்துவந்த பாதை கடினம்தான்
அம்மிகொத்தினால்தானே சிற்பம் வடிக்க பழக்கம் வரும்

Post a Comment