அந்தப்பெண் ஆடும் வேகத்தைப் படம்பிடிக்க மனம் முயன்றபோது தோன்றியது தான் என் ஒருகாலத்திய ஓவியவேகமும் அதன் வீச்சின் பாணியும். அந்தப்பெண்ணை நான் முதன்முதலில் பார்த்தபோது அவர் ஒரு பள்ளிமாணவியாய் எங்கள் பள்ளியின் ஒரு விழாவிற்கு ஆடவந்தபோது! அன்றைய பிரமிப்பு இன்று வரை நிலைக்கிறது. நாளை மாற்றிச்சொல்வேனோ என்ற சந்தேகமோ தயக்கமோ இன்றி இன்று சொல்கிறேன், நான் என்றும் அலர்மேல்வள்ளியின் ரசிகன்.
அவரது நடனத்தை மேடையில் பார்க்கவேண்டும், அப்போதும் வியந்து மயங்காவிட்டால் நாட்டியம் பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். (கிட்டத்தட்ட விஜய் ரசிகன் பேசுவதுபோல் இருக்கிறதா, ரஜினி ரசிகன் பேசுவது போல் இருக்கவேண்டுமென்றால் நான் காயத்ரியைப்பற்றிப் பேசவேண்டும்).
காயத்ரியோடு பேசுமளவுக்கு எனக்குப் பழக்கம்.
அலர்மேல்வள்ளி பிரமிப்பில் இருக்கும்போதே 'பேபி' காயத்ரியின் வீணைக்கு நான் ரசிகன்.வீணை ஸரஸ்வதியின் கையிலிருந்த வாத்தியம் என்று ரவிவர்மா படம்பார்த்து நம்பிய எனக்கு, எப்போதும் அதன் மீது ஒரு பிரமிப்பு, பக்தி.
ஒரு சுவையான புராணக்கதை. சிவன் ஒருநாள் வரும்போது, சக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளது கூந்தலிழை ஒன்று அவளது மார்பகங்களைச்சுற்றிக் கெட்டியாய்க் கட்டிக் கிடக்கிறது. அவளை எழுப்ப அந்த மயிரிழையை அவன் மீட்டுகிறான். அன்று பிறந்ததாம் வீணை இன்ப நாதம்! இசை பற்றிய கற்பனை கூட எவ்வளவு மோனஸ்ருங்காரத்தில் மிளிர்கிறது! இதற்கும் என் வீணாரசனைக்கும் சம்பந்தம் இல்லை!
இந்தக்கதையை நான் தெரிந்து கொண்டதே வீணை பற்றியது என்பதால் தான். எப்படி ஒரு ரஜினி ரசிகன் வேலைக்காரன் படத்தில் வில்லனின் உடை பற்றியெல்லாம் தெரிந்துகொள்கிறானோ அப்படித்தான்!
காயத்ரியைப் பற்றித்தான் பதிவெழுத ஆரம்பித்தேன். முகம் மட்டுமல்ல அந்த அற்புத வீணாயினியின் மனமும் ஒரு குழந்தை மாதிரிதான்!அந்தக் குழந்தைத்தனம் பற்றி ஒரு சின்ன பகிர்வு..
எப்படியோ ஒருவகையில்1978 எங்கள் கல்லூரியின் விழாவை நடத்தும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது.உடனே அலர்மேல்வள்ளி நடனம், காயத்ரி வீணை என்று திட்டமிட்டுக் கேட்டால், இருவரும் ஊரில் இல்லை!அலர் இருந்தது அயல்நாட்டில், ஆனால் காயத்ரி அப்போது இருந்தது பம்பாயில். கல்லூரியிலிருந்தே பம்பாய் சண்முகானந்தா ஹாலுக்கு அழைப்பு விடுத்தேன்! பாவம் அவர் பதறிக்கொண்டு ஃபோனில் "hello, what is it? What is the problem?” என்று கேட்டு, நான் ஒரு விழாவில் வாசிக்கவேண்டும் அதற்கு சன்மானமும் கிடையாது என்று கூறியதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தது இன்றும் நினைத்துப்பார்த்தால் ஸ்டீரியோவில் உள்மனத்தில் கேட்கிறது! அப்படி அவர் பதறக் காரணம் நான் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து பேசியதை ஆபரேட்டர் சென்னை பொதுநல மருத்துவமனையிலிருந்து அனுப்பியதால் தான். Government General Hospital, Madras Medical College இரண்டும் ஒன்றுதான்!! பாவம் அந்தப்பெண் தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டார்!அரசு மருத்துவமனை தான் அப்போது, அதற்குமுன் உள்ளிருந்த அண்ணாவாக இருந்தாலும், எம்ஜியாராக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் உள்ளிருந்த கண்ணதசானாக இருந்தாலும்! அப்போலோ அப்போது பிறக்கவில்லை! என்னை இப்படி யாராவது ஒரு விழாவிற்கு அழைத்தால் அன்றைய பெயர்வெளியே தெரியாத நிலையில்கூட நான் தேடிச்சென்று அடித்திருப்பேன். அவர் 'கலைஞர்கள் மேன்மக்கள்' என்று புரியும்வகையில் , நேராக சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து இறங்கி, கல்லூரிக்கு வந்து வாசித்தார்!
அதன்பின் காயத்ரியின் வீணைநாதத்தோடு இனிய உள்ளத்தையும் ரசிக்க ஆரம்பித்தேன்.கல்யாணம் செய்துகொண்டு கொஞ்சகாலம் அவர் எங்கும் வாசிக்காமல் கணவரோடு பல நாடுகளுக்குக் கப்பல் பயணம் செய்துகொண்டிருந்தார்.
நான்தான் தீவிர ரசிகனாயிற்றே, அவ்வப்போது அவர் பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தபோது..அவ்வாறு தெரிந்துகொண்டபோது, ஒரு கச்சேரியில் பார்த்தேன். அன்று, உங்கள் பேச்சை டீவியில் கேட்கத்தவற மாட்டேன், ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்றார். என் மூளை காலுக்கும் தலைக்கும் செய்திகளை மாற்றியனுப்பியது!
பிறகு அவ்வப்போது பேசும் அளவுக்கு எங்களுக்குள் தொடர்பு இருந்தது, விட்டுப்போனது, வந்தது, தொடர்ந்தது, இப்போது விட்டுவிட்டு இருக்கிறது.
இதை எழுதுவது "ஹை எனக்கு காயத்ரியைத்தெரியுமே" என்பதற்காக அல்ல. இன்று அவருக்கு ஒரு விருது தரப்போகிறார்களாம்.அதைப்படித்த மகிழ்ச்சியில் தான் இப்பதிவு.
இன்னும் நிறைய அவரால் இயல்பாக இருந்தாலேயே சாதிக்கமுடியும்.
வீணையை ஒலிப்பதிவுக்கூடத்தில் மீட்டினால் போதும், வாழ்நாள் முழுக்க மட்டுமல்ல,
வரும் எல்லா காலங்களிலும் பெயர்கூறி படைப்பும் நிலைத்திருக்கும்.
நான் நினைப்பதைவிடவும், கற்பனைசெய்வதை விடவும் எங்கள் இருவருக்கும் பொதுவான தெய்வம் அவருக்கு மேலும் தரவேண்டுமென்பதே என் பிரார்த்தனை.
கலைஞர்கள்:ரசிகர்கள் என்னும் உறவு ஒரு நுணுக்கமான பக்தி. அதன் பயனே பிரகடனம் தான்!
6 comments:
Gud one, Doctor!
காயத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கலைஞர்கள்:ரசிகர்கள் என்னும் உறவு ஒரு நுணுக்கமான பக்தி. அதன் பயனே பிரகடனம் தான்! ............................நல்ல கலா ரசிகர்களால் தான் இந்த உலகம் இன்னும் ரசனை குறையாமல் சுற்றி கொண்டு இருக்கிறது. ரசிப்பது என்பதும் ஒரு கலைதான்.
Congratulations, Mrs.Gayathri!
எனக்கும் வீணை இசை பிடிக்கும்!
கேசட் தனியா கிடைக்குதா சார்!?
vaal there are many cds available. raagawaves is film songs rendition, WoW is western, and she has done one on ghazals too. these apart thre are regular carnatic ones by her.
Dr
I came to yr blog through gayathri madame blog really yr writing is with some thullal am i right ..rajini rasigan mathirinu sonnengalae like that...
with rgds
mala
sir , now musictherapy is for all conditons. dr.mailthili also prove in appollo hospitals.veena is good mind relaxing music like fly in air feeling
Post a Comment