Wednesday, June 30, 2010

அன்பு, நம்பிக்கை...


இரண்டுமே நல்ல வார்த்தைகள். இரண்டுமே நல்லன. ஆனால் இவ்விரண்டுமே ஏமாற்றக்கூடியவையும் ஆகும்.
அன்பு ஏமாற்றுமா? ஏற்பவர் முட்டாளாக இருந்தால்.
அன்பையும் நம்பிக்கையையும் ஏற்பவர் முட்டாளாக இருந்தால் இரண்டுமே ஏமாற்றும். இதில் தருபவர் ஒரு பொருட்டே அல்ல, பெறுபவர் குறித்தே இப்பதிவு.
இதோ, கீழே ஒரு படம். நான் வரைந்தது. இதை வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நல்லது நடக்கிறது. இப்படி நான் சொல்லவில்லை, வைத்திருப்பவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதை நான் இலவசமாகத்தான் தருகிறேன். பிரதியை திரையிலோ காகிதத்திலோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், நல்லது நடக்கும் என்கிறார்களே, நடக்கட்டுமே!


தரவிறக்கம் செய்துவிட்டீர்களா? இனி சில கேள்விகள்!
முதலில் நான் சொன்னதை நம்புகிறீர்களா? அடுத்து நான் சொன்னது போல நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை இது பொய் என்று நிரூபிக்க நாசம் தேடுவீர்களா?
எல்லாருக்குமே ஆசை உண்டு, தேவை உண்டு, இவற்றால் எதிர்பார்ப்பும் உண்டு. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு நப்பாசை குறைவு அவ்வளவுதான், இல்லை என்று ஆகி விடுவதில்லை. இலவச இணைப்பாக ஒரு விஷயம் கிடைத்தால் அதை ஏற்பதே பொதுபுத்தி.
இப்போது இந்தப் படம் நீங்கள் வைத்துக்கொள்ளும்போது உங்களுக்கு நல்லது என்று ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் இந்தப் படம்தான் என்று சொல்வீர்களா? இதை உங்களுக்குத் தெரிந்த எல்லாருக்கும் கொடுப்பீர்களா? பகிர்வதே உயர்நிலை என்று வாய் ஓதினாலும் மனம் அதனைச் செயல்படுத்த முயலுமா?
உங்களிடமே இதே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள், நிறைய விடைகள் கிடைக்கும்.

இப்போது இன்னொரு படம். 

இது ஒரு நூலுக்கு முகப்பு வரைந்து தருமாறு கேட்டதற்காக வரைந்தது. இன்னும் எனக்கு என் படம் அச்சிட்ட பிரதி கிடைக்கவில்லை. இதை ஏன் இங்கே எழுதுகிறேன்? இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன, தமிழ் வளர்க்க நடந்த செம்மொழி மாநாடு போல!

இது ஒரு மயில் என்று நான் நினைத்து வரைந்தேன்,
பார்ப்பவருக்கேற்ப என்னவாக வேண்டுமானாலும் தெரியலாம்.

Monday, June 7, 2010

சிரி, சிரி, சுடப்பட்டது ஒரு நாய் தான்!


கேலியாகவும் கோபமாகவும் பிறரை நாய் என்று சொல்வது வழக்கில் உண்டு. ‘நான் நாய் மாதிரி நடந்துக்கிட்டேன்’ என்றும் சிலநேரங்களில் சிலர் தம்மையே நொந்து விமர்சித்துக் கொள்வதும் உண்டு. இங்கே ஒரு ஜன்மம் நாயைச் சுட்டால் தன்னைச் சுட்டதாகப் புலம்பியிருக்கிறது. இது ஒன்றும் வள்ளலார் போல வாடிய பயிருக்கெல்லாம் வாடும் ஜன்மம் இல்லை, இது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளம்பரம் தேடும் ஒரு ஜந்து.

பொதுவாகவே சாமியார்களென்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஆட்களின் மீது எனக்கு மரியாதை கிடையாது. இதில் இந்து முஸ்லிம் என்று மத பேதம் எல்லாம் கிடையாது. அது என்ன இந்து பொறுக்கிகளின் மீதே அதிக காட்டம் என்றால், இவை தான் இங்கே அதிகம் ஆடுகின்றன. இவற்றுக்குத்தான் நடுநிலை/ நடுத்தர/ ‘அறிவுஜீவி’- ஆதரவும் அதிகம். சமீபத்தில் நாறிய நித்யானந்தனையே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கல்கி மீது அதன் பக்தர்களுக்கே இப்போதெல்லாம் உள்ளூர ஒரு கிலேசம் வந்திருக்க வேண்டும். ஆனால் ஜக்கியும் சிரிசிரியும் இன்னும் ரொம்பவே அமர்க்களமாகத்தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ‘ஏன் அமிர்தாம்மாவை விட்டு விட்டாய் பெண் என்பதாலா?’ என்று ஏதாவது ஒரு புறம்போக்கு கேள்வி வரும். அமிர்தாவும் சாயியும் பேசித் தொலைப்பதில்லை அதனால் அங்கே மூட பக்தி மட்டுமே. ஜ-சிரி கூட்டம்தான் இன்னும் ‘அறிவார்த்தமாக, ஆன்மார்த்தமாக’ என்றெல்லாம் கதை சொல்லி, கதை கேட்டுத் திரிகின்றன.

சாயிவும் அமிர்தம்மாவும் அறிவாளிகள் என்று அவற்றின் பக்தர்கள் கூடச் சொல்வதில்லை. அவர்களது மௌனத்தில் ஞானப்புண்ணாக்கு எல்லாம் கிடையாது, அவற்றுக்குப் பேசத் தெரியாது, பேசவும் வராது. ஜக்கி, சிரிசிரி, நித்தி மூவரும் பேசக் கூடியவர்கள். “ வல்லார்கள் யாவருக்கும் வாக்கிறந்த பூரணமாய், சொல்லாமல் சொல்லி” அவர்கள் ஆடுவதில்லை. ஒன்றுக்கு கொஞ்சம் வித்தை காட்டத் தெரியும், மற்றதுக்கு அது கூடத் தெரியாது. பேசத்தெரிந்தவற்றுக்குத்தான் படிக்கத் தெரிந்தவர்கள் படைபலமும் உண்டு. இவைதான் ஆபத்தானவை. இதில் இப்போது சிரிசிரியைப் பார்ப்போம்.

இந்த ஜன்மங்களுக்கெல்லாம் வாழ்க்கை வரலாறு என்று நிறைய புனைவுகள் இணையமெங்கும் வீரவிக்கிடக்கின்றன. இப்போதெல்லாம் எது நிஜம் என்று அவற்றையே கேட்டால் அவற்றுக்கே கூடத் தெரியாத அளவு கற்பனையாகக் கதைகள் மக்களிடம் சேர்ப்பிக்கப் பட்டுவிட்டன.

ஒருமுறை ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைகக்காட்சியில் சிரிசிரி பேட்டியைப் பார்த்தேன். அது பிறக்கும்போதே வேதவித்தாகவும் தவழும்போதே கீதாச்சாரியனாகவும் இருந்ததாய்ப் பீற்றிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன். ஆன்மீகத்தில் இதெல்லாம் சகஜம் என்று அப்போது விட்டுவிட்டேன். பிறகுதான் அவ்வப்போது அதன் விஷமும் விஷமமும் வெளித்தெரிய ஆரம்பித்தன.தமிழர்களுக்கு மே பதினெட்டு நினைவிருக்கும். அந்த நாள் திடீரென்று வந்த சுனாமியல்ல, அழிவின் ஆரம்பம் அதற்கு குறைந்த பட்சம் சில மாதங்களுக்கு முன்னமேயே துவங்கிவிட்டதன் சாட்சிதான் முத்துக்குமார் மரணம். இந்த நிலையில்,  மே 5, இந்தச் செய்தி நக்கீரனில்-

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் இலங்கை சென்று ஈழத் தமிழர்களை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருடன் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் தலைவர் பா.நடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உணவும், மருந்தும் இன்றி தவிக்கிறார்கள். எனவே இலங்கையில் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்என்று பா.நடேசன் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தற்கெல்லாம் விளக்கம் வியாக்கியானம் வேண்டுமா? இதன் தொடர்ச்சியாக அன்பும்-கருணையும் கொப்புளிக்க குரு தமிழக முதல்வரைப் பார்க்காமல் எதிர்க்கட்சிதலைவியிடம் போய் படம் காட்டுகிறாராம். சிஷ்யர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள், முட்டாள்கள் மெய்சிலிர்த்தார்கள், நடுநிலையாளர்கள் நம்பிக்கை வளர்த்துக் கொண்டார்கள்.

இது ஒன்றும் உணர்ச்சிவசப்பட்டு, ஓர் இனம் அழிகிறதே என்ற அக்கறை மிகுந்த செயல்பாடு இல்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்ட விளம்பரம். ஆன்மீக வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்ப்பா, விளம்பரம்கூட இல்லாமல் வியாபாரம் செய்ய முடியுமா என்று கேட்பவர்களும் இருக்கக்கூடும். 

எது வியாபாரம் எதற்கு விளம்பரம் என்பதில்தான் சமூக-அரசியல். இவர்கள் டாட்டாவுக்கு பாரத்ரத்னா கொடுத்தால் பரவாயில்லை அந்த ஆள் நமக்கு ஒரு குட்டி கார் செஞ்சு கொடுத்தானே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறவர்கள். 

அரசுக்குச் சாதகமானவர்களுக்குத்தான் தேசிய விருது என்பது நம் நாட்டின் எழுதப்படாத விதி. ஓட்டுப்போட்டு அரசியல் மாற்றம் கொண்டுவர நினைக்கும் நாம் இதை காலை செய்தித்தாள் மடிக்குமுன்னரே மறப்பதும் வாடிக்கை. இங்கேதான் இந்த ஜன்மம் இன்னும் கொஞ்சம் யோசித்தது.

இந்தியாவில் பிறந்தார்கள் என்பதற்காகவே இன்று விண்வெளி சென்ற, நோபெல் பரிசு வாங்கியவர்களைக் கொண்டாடும் நாட்டில், இங்கேயே வாழ்ந்து வியாபாரம் செய்யும் ஒருவனை எவ்வளவு கொண்டாடுவார்கள் என்று கணக்கு போட்டு, நோபெல் பரிசு பெறவும் இது திட்டம் போட்டது. டாகூர் வாங்கியதாலேயே நோபெல் மீது எனக்கு இருக்கும் கொஞ்ச அபிமானம், இர்விங் வாலஸ் படித்த பின்னரும் போய்விடவில்லை. இதற்கு கொடுத்திருந்தால்?!

நோபெல் பரிசின் இலக்கை நோக்கி நகர்த்தப்பட்ட காய்கள் தான் ஜம்முவில் தீவிரவாதிகளிடமும் , நக்சல் போராட்டக்காரர்களிடமும், அமைதிக்காகப் பேசுகிறேன் என்ற சவடால்கள். இவற்றின் அடுத்த கட்டம்தான் செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றும் நாடகம்.  மேடை ஏறியவன் சுலபத்தில் விலக முடியாது என்பது என் அனுபவம்.

ஒரு நல்ல நடிகன் வசனத்தை மட்டும் கவனமாகப் பேசிவிட்டுப் போய்விட மாட்டான். அரங்கின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் சமிக்ஞைகளைப் பயன்படுத்திக் கொள்வான். அது போலத்தான் இப்போதைய சிரிசிரி நாடகம்.

சென்ற 2009 ஆண்டு நடந்த ஈழநாடகம் வெற்றி பெறவில்லை. அதே மே மாதம் 2010 இன்னொரு நாடகம்! ஸத்ஸங்கத்தில் எவனோ சுட்டானாம்.இந்த ஸத்ஸங்கம் என்பதே பக்த-சிஷ்யர்களுக்கு குருமார்கள் தரும் பல்லிமிட்டாய் பிரசாதம். தங்கள் மூஞ்சியையும் முகரையையும் அவ்வப்போது காட்டி பக்தியை ஊக்குவிப்பது ஒரு சராசரி ஆன்மீக-வியாபார நடவடிக்கை. இந்தக் கூட்டத்தில் எல்லாரும் போய்விட முடியாது. பக்தர்களுக்குத்தான் முதலிடம், பணக்கார பக்தர்களுக்குத்தான் சிறப்பிடம். இப்படியோர் சிரிசிரி கூட்டத்தில்தான் துப்பாக்கிச் சூடு.


“குருவைச் சுடப் பார்த்தார்கள், தப்பித்து விட்டார்” என்று முட்டாள் பக்தன் சொல்லலாம். குருவே அப்படிச் சொன்னால்? பொங்கிவிட்டார்கள். பாஜக தலைவர் மாநில முதல்வரை உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்! குருவும் தன் கருணாவிலாசத்தோடு, சுட்டவனை மன்னித்து விட்டேன், அவனுக்கு மனம் அமைதிப்பட பயிற்சி தருகிறேன் என்கிறார். நாட்டின் உள்துறை அமைச்சரோ இது ஒன்றும் கொலைச் சதி இல்லை என்கிறார். குருவுக்கு கோபம் கொப்பளிக்கிறது, “சாரிசாரி, சிரிசிரி" என்று சும்மா இருக்கக்கூடாதே என்று இந்திய அரசுக்கு எங்கே குத்துமோ அங்கே குத்தப்பார்க்கிறார்- நக்சல்கள் இவனைக் கொல்லச் சதி செய்தார்களாம்! அடடா என்ன ஒரு ஞான திருஷ்டி!

இரண்டு நாட்களில் தெரிய வருகிறது, சுட்டவன் ஆசிரமத்தின் எதிர்பக்கம் இருந்த வீட்டின் சொந்தக்காரன்! அவன் நாய்கள் தொந்தரவு செய்தால் சுடும் ஒரு கேவலமான மனிதன், அவன் நக்சல் கிடையாது!!

சிலநேரங்களில் சிலநாடகங்கள் தானாய் முடிந்து விடும், சிலவற்றை மக்கள் முகம் சுளித்து முடித்து விடுவார்கள். நாடகக்காரன் சும்மாயிருக்க மாட்டான். அடுத்த ஸ்க்ரிப்ட் தயாராகும், அடுத்த நாடகம் அரங்கேறும். இதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். காத்திருங்கள். அதுவரை சுடப்பட்டது ஒரு நாய்தானே என்று பெருமூச்சு விடுவோம்.

சுட்டிகள்-


Tuesday, June 1, 2010

நடுநிலை நாடகம்

நடக்கும் போது நாராசமாக ஒன்று எதிர்பட்டால் காறித்துப்பும்போது முகம் வலமோ இடமோ திரும்பித்தான் ஆக வேண்டும். நடுநிலையே என் பார்வை என்று நேராகப்பார்த்துக்கொண்டு நடக்கும்போதே துப்பினால் நம் மீதே தான் விழும்.

நடுநிலை சாத்தியமா? அப்படி இருப்பதாய் சொல்லிக்கொள்வது சௌகரியம். பிறரிடம் சொல்வதை விடவும் நம்மிடமே சொல்லிக்கொள்வது நிறைய நிஜங்களின் வீச்சுக்களிடமிருந்து ஒரு தற்காப்பு.
 
பெண்டுலம் வினாடிக்கொருமுறை மாறி ஆடுவதுபோல் மனம் நிமிடத்துக்கொருமுறை கூட மாறுவதில்லை, மனம் தன் நிலையின் மாறுபாட்டை ஏற்க வாரங்களும் ஆண்டுகளும் கூட ஆகலாம். ஆனால் நடுநிலை என்று நிற்கவிரும்பும் மனது நின்று போன பெண்டுலத்தின் குறியீடு போல உணர்வுமறுத்த சடலம் இல்லையா? நடுவில் தான் நிற்பேன் என்று அடம் பிடிக்கும் தராசு முள்ளை வைத்து எடை போட முடியாது இல்லையா? நடுவில் நிற்க முடியும், எவ்வளவு காலம்? நேர்குத்தி-நிற்கும் பார்வையால் எவ்வளவு பயன்?

பார்வை நடுநிலையாகாது,ஒன்றின் மீது மட்டுமே நுணுக்கமாக இருந்தாலும் முழுமையாகாது. எதிர்வரும் பன்றியை மட்டும் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் துரத்தி வரும் புலி கண்ணுக்குப் படுமா?

எப்போதும் எல்லா பக்கமும், எதிர்படுவதின் பின்புலமும் பார்ப்பதே நியாயநிலை. நான் எப்போதுமே எல்லாவற்றையும் சமமாகவே பார்ப்பேன் என்று ஏமாற்றுவதும் ஏமாற்றிக்கொள்வதும் நடுநிலை எனும் நாடகக்கலை.

என்ன எழுத வந்து என்ன எழுதுகிறேன்? எனக்கே வெட்கமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது!

என்னை opinionated என்று எனக்கு நெருக்கமானவர்களே சலித்துக் கொள்ளுமளவு அவர்கள் மீது விமர்சனவிவாதம் செய்யும் நான் இப்போது இங்கே ஏன் தயங்கித்தயங்கிச் சுற்றிச்சுற்றி வந்து சொல்ல வந்ததை விட்டுவிட்டு என்னென்னவோ சொல்கிறேன்? பயமா? அப்படியென்றால் என்ன பயம்? என் பிராபல்யம் பறிபோய் விடுமா? ஏன் பின்தொடர்வோர் என்னைப் புறக்கணிப்பார்களா? இல்லை எந்தக் கண்களின் கவனிப்பும் இல்லாமல் நான் சூம்பிப்போய் விடுவேனா? இதற்கெல்லாம் இதுவரை அக்கறை காட்டாமல் இருந்துவிட்ட நான் இப்போது மாறிவிட்டேனா?

இரண்டு நாட்களுக்கு முன் இதை நான் எழுத உட்கார்ந்திருந்தால் துப்பியிருப்பேன், ஆனால் என் எச்சில் கேவலத்தைத் தாக்காமல் வேறு எங்காவது விழுந்திருக்கும். இப்போது குறி பார்த்துச் சரியாகத் துப்பவேண்டும் என்பதால் நிதானமாகவே குறி வைக்கிறேன்.

என்ன நடக்கிறது இங்கே?

வெளியே நிஜ உலகில் நம் அவசரத்திலும் அலைச்சலிலும் கவனிக்க முடியாமல் கலைந்து போகும் தருணங்களின் பதிவுகள் தான் இங்கே நிதான பரிசீலனைக்குக் கிடக்கின்றன. வலையின் மெய்நிகர், நிஜம் போல நொடியில் காணாது போய், நினைவுகளாக பேதங்களை உள்ளடக்கி மனக்கண் முன் வருவதில்லை. இங்கே நிஜங்கள் பதிவுகளாக, நாம் மறைக்க நினைத்தாலும் முடியாதவைகளாகக் கிடக்கின்றன. ஆசுவாசத்திற்கப்புறமான மீள்பார்வைக்குக் காத்திருக்கின்றன.

இன்னும் ஒரு மாதம் கழித்து பலருக்கு இது ஞாபகத்தில்கூட இருக்காது. சம்பந்தப்படாத சூழல் மறதியில் புதையுண்டுதான் போகும். நாம் சம்பந்தப்படாத சூழல் என்று ஏதாவது எப்போதாவது எங்காவது இருக்கிறதா?


அவள் கத்தியை எடுத்தாள்- அவன் தன் கத்தியை எடுத்தான்- அவளை ஆழமாகக் குத்தினான்- அவளது குடல் வெளிவந்தது- அதை உள்ளே வைத்துத் தைத்துவிட்டால் அவள் சாக மாட்டாள்- அதனாலேயே அவர்கள் இருவரையும் கைக்குலுக்கச் சொல்வோம்! இதுதான் இன்றைய வலையுலகில் நான் பார்க்கும் நடுநிலைவாதம்!


ஒரு காட்சியா முழு நாடகம்?

நேரடியாகவே சொல்கிறேன். முல்லை-நரசிம் விஷயத்தில், எனக்கு முல்லையின் பாலினமோ பிறப்பினமோ முக்கியம் இல்லை. வன்மம் தான் முக்கியம். வக்கிரத்தின் வெளிப்பாடுதான் முக்கியம். எல்லார்க்குள்ளும் வக்ரம் இருக்கிறது என்று வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்காமல் எனக்கு ஆத்திரம் வருவதன் காரணம்- இங்கே உள்ளிருக்கும் ‘மிருகம்’ வெளிவராமல் இருப்பதே மானுடப்பண்பு, அது இங்கே மீறப் பட்டிருக்கிறது. பண்பு மீறும்போதும் பழக்கதோஷம் நடுநிலை இருப்பதாய்ச் சொல்லச் சொன்னால்? பழகியதின் சந்தர்ப்பவாதம் அல்லவா வெளிப்படுகிறது? இதை இன்னும் சுருக்கமாகவும் சுருக்கென்றும் சொன்னதால்தானே அவள் மீது வன்மம் வெறி கொண்டு வெளிப்படுகிறது?

நடுநிலை நாடகம்தான். சில நடிகர்களுக்கு அது ஆன்மதிருப்தி, சிலருக்கு அது நேரடி பயன்!வால்பிடித்துக் கொண்டு போவது சுலப சுகம்தான், முன்னே செல்வது பாதையில் ஒழுங்காய்ப் போகும்வரை. நண்பர்களுக்காக வக்காலத்து வாங்கலாம் அவர்களுக்கு நட்பின் தகுதி இருக்கும்வரை. தகுதியற்றவர்களின் நட்புக்காக நடுநிலை நாடகம் நடித்தால், நாளை திரை விழும் போது, பார்த்துக்கொண்டிருக்கும் போலிநிஜங்களும் காறி உமிழும்.

நிஜம் நடுவில் நிற்காது. நியாயம் ஒரு பக்கம்தான் சாயும் தராசு.

Thursday, May 27, 2010

முகம் மூடி..




சின்ன வயதில் முகமூடி அணிந்த நாயகனாய் ஆங்கிலத்தில் அறிமுகமாகி பின்னர் குமுதத்தில் வேதாளமாக(?)’ என்னைக் கவர்ந்த ஒரு சித்திரக்கதையின் பாத்திரம் பற்றியல்ல இது.
யதார்த்த வாழ்வில் எல்லாருமே அவ்வப்போது முகத்தைக் காட்டாமல் பற்பல ஒப்பனைகளோடு வாழ்ந்து வருகிறோம். அப்படி அவ்வப்போது முகம் மூடி, உணர்வுகளை ஒப்பனையில் மறைக்கும் பலர் பற்றியும் அல்ல இது.
மெய்நிகர் உலகில் முகத்தை மூடிக்கொண்டு வருவோர் பற்றியே இப்போது இந்த எண்ண ஓட்டம்.. 
இங்கே நேருக்கு நேர் நின்று யாரும் சிரித்துக் கொள்வதுமில்லை, அடித்துக் கொள்வதுமில்லை. இரண்டையும் செய்யும் துணிவுள்ளவர்கள்கூட இங்கே முகம் காட்ட விரும்புவதில்லை.
மெய்நிகர் உலகில் நட்பும் அன்பும், எதிர்ப்பும் வெறுப்பும் கூட மெய்நிகர்தான். என்னை வேண்டுமென்றே சீண்டியும் அவமதித்தும் எழுதுபவர்களில் சிலரைத்தெரியும் என்பதால் சொல்கிறேன். இங்கேயும் வெளியே மெய்யான உலகிலும் பலர் ஒன்றாக இருப்பதில்லை. இங்கே வீரம் போல முழங்குவோரின் முகம் என்னை நேரில் பார்க்கும்போது எவ்வளவு மாறுகிறது, (பம்முகிறது!) என்பதை அனுபவத்தில் பார்ப்பவன் நான். அப்படி அவர்களைச் சந்திக்கும்போது, இவர்களின் மெய்நிகர் அவதாரத்தைப் பற்றி எதுவும் பேசாமலேயே வேடிக்கை பார்ப்பது எனக்கு சுவையான பொழுதுபோக்காகவும் ஆகிவிட்டது! அவதாரங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. எந்தெந்த நேரத்தில் என்னென்ன பொய்களும் நிஜங்களும் விலை போகின்றனவோ அவற்றையே ஒரு பண்டமாற்றாக விளையாடுபவர்களைப் பற்றியல்ல இது. இது முகங்களுக்கு மூடி தேவைப்படுவது பற்றிய ஒரு சிந்தனை.
பொய்க்காக அல்ல ஒரு புனைபெயர் என்பது எனக்குப் புரிகிறது. கல்கி, சாண்டில்யன், சுஜாதா போல புனைப்பெயரால் நிஜப்பெயரை மக்கள் மறக்கும் அளவு சாதித்தவர்களும் உண்டுதான். ஆனால் பொய் கூறவும், புறம்பேசவும் மட்டுமே புனைப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் இங்கே நம் பதிவுலகில்தான் அதிகம் பார்க்கிறேன். முதலில் தன் பெயர் எனும் தன் அடையாளத்தை மறுக்கவும் மறைக்கவும் அவசியம் என்ன? சில இயக்கங்களைச் சார்ந்து செயல்படுவோருக்கு இத்தகைய தற்காலிக முகம்-காட்டாதிருத்தல் அவர்களின் கொள்கைகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் அவசியம் தான் என்று உணர்ந்தே இதை எழுதுகிறேன்.
வீரத்தின் விளைவுக்காகவோ, விளையாடிப் பார்க்கவோ இங்கே சிலர் முகம் எனும் பெயர் காட்டாது எழுதுகிறார்கள்.அதே நேரம் வக்கிரத்துடன் பிதற்றவும், வெறியைத் தணித்துக்கொள்ளவும் சிலர் பெயரிலாதும், பொய்ப்பெயருடனும் திரிவது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.  இவ்விரண்டு வகையும் அவரவரது தனிப்பட்ட அவசியத்தின் அடிப்படையிலான செயல்பாடு என்று ஒப்புக்கொண்டாலும், நான் இது தான், என் நிலைப்பாடு இதுதான் என்று சொல்லாமல் கொள்கை போல ஒன்றிற்காக வெட்டியாய் ஊளையிடும் சிலரை நாம் கவனிப்போம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு வாக்கியத்தைக் கூட ஒழுங்காய் எழுத முடியாதவர்களை எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் பதிவு எழுதுவதில்லை. இங்கே எல்லாருக்கும் மொழி லகுவாக அமைந்துள்ளது. மொழி நாம் நம்மைக் காட்டிக்கொள்ளும் ஒரு கருவி. அது ஒரு கண்ணாடி, அதில் நாம் நம் பிம்பத்தையும் பார்க்கலாம் எனும்போதே பிறரும் நம்முள் பார்க்கலாம் என்பதும் நிஜம். மொழி காற்றில் மிதக்கும் ஓர் அடையாள அட்டை.
நாட்டிய சாஸ்திரத்தில் மௌனம் கூட பேசும் என்பதை பல்விதங்களில் பரதமுனி விளக்கியிருப்பார். மௌனம் ஒரு மொழிச் சுரபி. அது பேசும். அது புரிந்துகொள்ளப்படும். மௌனம் சம்மதம் மட்டுமல்ல எதிர்ப்பும் ஆகும். மௌனத்தில் முகம் மூடுவது அச்சத்தினால், ஆசையைக் காட்டத் தயங்கும் நாணத்தினால், அருவெறுப்பினால், பிறகு விளையாட்டினால் என்று எளிதாய் மேலோட்டமாய்க் கணிக்கலாம். மௌனம் தாக்குதலிலிருந்து ஒரு தற்காப்பு. தாக்குவது உயிரக் குறி வைத்தாலும் உணர்ச்சியைக் குறி வைத்தாலும். பதிவுலகில் மௌனம் ஒரு தற்காப்பாக இருந்தாலும், முகம் மூடி வருவது இல்லாத வீரத்தை இருப்பதாய்க் காட்டிக்கொள்வதாகவே அமைகிறது.
முகம் எப்போதெல்லாம் மூடப்படும்? உயிர்போனால் பிணத்தின் முகம் மூடப்படும். மானம் போகும்போது உயிருள்ளவரின் முகம் மூடப்படும். ஒரு நாடகத்துக்கு அவசியமாகும்போது மூடப்படும். சில சம்பிரதாயங்களுக்காகவும் சில விதிகளுக்காகவும் மூடப்படும். இப்படியெல்லாம் மூடப்படுவோரின் முகத்தின் மூடியை மீறி அவர்களின் நிஜ முகமும் நமக்குத்தெரியும். இங்கே இப்படி எதுவுமே இல்லாமல் முகத்தை மூடிக் கொண்டு வருவதாய் நினைத்து எழுதுபவர்கள் முகம் தெரிகிறது என்பதை உணராதவர்கள். இவர்களை விட்டு விடலாமா? கோழைகள் என்று ஒதுக்கி விடலாமா? முடியாது, கூடாது.
அவரவர் தம் முகத்தைக் காட்டுவதும் மூடிக்கொள்வதும் அவர்களது விருப்பம்தான்; முகத்தை மட்டுமே மறைத்து வாய் ஓயாமல் பிதற்றுவோரைத்தான் நாம் கவனிக்க வேண்டும். முகமல்ல இங்கே முக்கியம். மொழியும் அதன் உள்ளர்த்தமும், தொனியும் அதன் பின்புலமும் அவர்களது மாயையான இல்லாத தைரியத்தையும், உருப்படாத வீர்யத்தையும் காட்டிவிடும்.
கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப் பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம் அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.



எங்கிருந்தோ எங்கள் வீட்டுக்கு வந்தஆந்தை!
இதன் பெயர் masked owl!   jan.2009.

Tuesday, May 25, 2010

தேர்வுகளும் தேர்ச்சியும்


பொதுவாக என்னிடம் படம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்போர் இப்போது கொஞ்ச காலமாய் மட்டுமே என் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார்கள்.. இதற்கு முன் அவர்களுக்கு என்ன தேவையோ அதை வரைந்து கொடுத்துவிட்டு, அவர்கள் என் படத்தை என்ன செய்கிறார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்காமல் வரைந்து கொடுத்துவிட்டு காசு பார்த்திருக்கிறேன். இதனாலேயே “இதுதான் உன் பாணி” என்று எதுவுமில்லாமல் என் படங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமாய் வந்திருக்கின்றன.
நான் சரியென்று நினைத்து வரைவது என் வாடிக்கையாளருக்குப் பிடிக்காமல் போனது பலமுறை. முன்பெல்லாம் அவர்கள் சொன்னபடி கேட்டு மீண்டும் அவரவர் விருப்புக்கு வரைந்து கொடுத்திருக்கிறேன். வசதிதானே திமிர்; இப்போதெல்லாம் வரைந்தது பிடிக்காவிட்டால் “ஓகே, விட்டுடுங்க” என்று என் படத்தை, என் வீட்டின் மூலையில் வைத்துக் கொள்கிறேன். வித்யாதர்மம் என்பது பணம் எவ்வளவு அவசியமாக அவசரமாக வேண்டும் என்பதா? லக்ஷ்மியை கைப்பிடித்துவிட்டால் ஸரஸ்வதியை “ பொத்திக்கிட்டு, சும்மா வா” என்று அதட்டலாமா? என் வரை அப்படித்தான் நடந்திருக்கிறது.
திமிர் என்பது ஒருவித தைரியம்தான். அதன் விளைவே அதைக் கொண்டவன் புத்திசாலியா முட்டாளா என்று தீர்மானிக்கிறது. வெற்றியே ஒரு குணத்தின் பண்புகளைத் தீர்மானிப்பது என்றால், அந்த வெற்றியை ஆராய வேண்டியதும் அவசியம்.இங்கே சில படங்களை இதற்காகவே பதிப்பிக்கிறேன். முதலில் என் ஜெயகாந்தனின் நூலுக்கான முகப்பு. நான் வரைந்து கொடுத்தவை இவை.

இது அட்டைப்படத்தில் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
ஆனாலும் இன்னும் சில அவர்கள் தேர்ந்தெடுக்க உதவும் என்று  தந்தவை-

 
 
.


தேர்வானது இது-







இதேபோல் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தன் புத்தகத்துக்கு வேண்டுமென்று கேட்டபோது நான் தந்த படங்கள் இவை-







தேர்வானது-


இதேபோல் இன்னும் பல உதாரணங்கள் உண்டு, அவற்றைக் காட்ட படங்கள் என்னிடம் இல்லை.

எது எப்படி தேர்வாகிறது என்பதை இன்னும் என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. காசுக்கு வேலை செய்தபின், உபரிமதிப்பில் பங்கு கேட்க எனக்குத் தோன்றியதில்லை. இப்போதெல்லாம் காசுக்காக மட்டுமின்றி, பெருமைக்காகவும் அன்பிற்காகவும் வரைந்து கொடுக்கிறேன். என் தேர்வு என் வாடிக்கையாளரின் தேர்வாக இன்னும் அமையவில்லை. 
முன்பெல்லாம் முறுக்கிக் கொள்வேன்- காசுக்காக வரைந்த காலத்திலும். இப்போதெல்லாம் சமரசம் செய்து கொள்கிறேன்- காசுக்காக மட்டுமே வரையாத போதிலும் !
ஏன்? இனியும் கைதட்டல்களும் காசும் அவசியம் என்று இல்லாத போது, மற்றவரின் மனநிலை கண்டு சகிப்பு வருகிறது. என்னுள் ஒருவித நிறைவு வந்தபின் மற்றவரது குறைவுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடிகிறது. முன்பெல்லாம் என் வறுமை, என் அவசரம், என் மனோவித்யாதர்மம்  என்றெல்லாம் சிணுங்கியதும் சீறியதும் இப்போதெல்லாம் விளையாட்டாகவே தெரிகிறது.
நான் மாறிவிட்டேனா?
என் தேர்வுகள் எப்போதும் வெகுஜனத் தேர்வாக இருந்ததில்லை. அன்னக்கிளி படம் பார்த்துவிட்டு வந்தவுடன் என் நண்பனிடம் சொன்னது, “ம்யூசிக் நல்லாருக்கு, பாவம் அந்த  ம்யூசிக் டைரக்டர்... படம் ஓடாது. அவனும் காணாம போய்டுவான்!”  இரண்டுமே நடக்கவில்லை.
வெகுஜன மனவோட்டத்திற்கேற்ப எப்போது நான் மாறுவேன்? நான் வித்தியாசமானவனோ விகிதாசாரத்தில் சிறப்பு பெறுபவனோ அல்ல, நானும் எல்லார் மாதிரியும்தான் என்று சொல்லும் போதே, நிறைய பேர் சரியா இல்லையே என்றும் நினைப்பது எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசம்-
நாளை என் கண்ணாடி என்னைப் பரிகசிக்காமல் இருக்க. இதன் விலை அதிகம்தான், இப்போதெல்லாம் இது செலவுக்குள் கட்டுப்படியாகிறது!
Arrogance of affordability, portrayed as the tolerance of a superiority!

என்பது மட்டுமல்லாமல் இப்போது தொழில்நுட்பம் வேலையை ரொம்பவும் சுலபமாக்கிவிட்டது.





இது தூரிகையால் வந்தது.




இது மௌஸ் கொண்டு வரைந்தது.

இரண்டையும் ஒரே கை வரைந்தாலும், ஒன்று சிரத்தையில் கவனம் அவசியமானதாக்கி மற்றது அசிரத்தையைக் கூட சரிசெய்யும் சௌகரியத்தில் வந்தது... அப்புறம் என்ன-

வாழ்க்கையில் காரியங்கள் சுலபமாகும்போது கோபங்களும் கொஞ்சம் தணிந்துதான் போகின்றன.

Friday, May 21, 2010

பாதிப்பும் படிப்பும்


இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை; நேரமில்லை என்பதாலோ படிக்குமளவு முக்கியமானவை இல்லை என்பதாலோ இல்லை, மனத்தளவில் படிப்பதில் ஈடுபாடு குறைந்திருக்கிறது. இது அவ்வப்போது நேரும் என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக இப்படி இருக்கிறது. இந்த நிலை ஆரம்பமாகும் முந்தைய வாரம் என் நண்பர் ஒரு மாதத்தில் எவ்வளவு படிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சுமாராகப் பத்து நூல்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் என் மனைவி, இந்த மாதிரி படித்துக் கொண்டிருந்தால்புத்தகங்கள் வாங்கிக் கட்டுப்படியாகாது' என்று சொல்லியிருக்கிறாள். சுவாசத்திற்கு அடுத்து நான் உயிருடன் இருக்க, படிப்பது எனக்கு அவ்வளவு அவசியமான ஒன்று.
இன்றும் தினமும் பத்திரிகைகளைப் பார்க்கிறேன். படிப்பதில்லை, மேய்கிறேன். பதிவுகளை தினமும் பார்க்கிறேன், சிலவற்றைப் படிக்கிறேன், பலவற்றை பக்கங்களை வேகமாகக் கீழிறக்கியவாறு மேய்ந்து முடிக்கிறேன். உறக்கம் குறையவில்லை, உணவும் குறையவில்லை. செய்யும் வேலையில் சிரத்தையும் குறையவில்லை. உறவு வட்டமோ வருமானமோ குறைந்து விடவில்லை, அடைய விரும்பும் எதுவுமே தொடுவானுக்கு அப்பால் தொலைந்திருக்கவில்லை.
எழுத முடியாமலில்லை, எழுதுவதற்கு விஷயம் இல்லாமலும் இல்லை; பதிவெழுதுவது என்பது நிர்ப்பந்தமாகி விடவும் இல்லை. ஓவியம் வரைய முடியாமலில்லை, வரைந்து கொடுக்கவும் அவசரமான நிமித்தங்களும் இல்லை.
ஏன் இந்த மாற்றம்? இது தளர்ச்சியா இல்லை மலையேறும்போது எதிர்படும் சமதளமா? எந்தக் கேள்விக்கும் மனம் உடனே எடுத்து வைக்கும் பதில் அந்தந்த நேரத்துக்கான சௌகரியமே தவிர சத்தியம் அல்ல.  இப்போது மனம் சொல்லிக் கொள்ளும் பொய், இது ஒரு தற்காலிக ஓய்வு என்பதே. எதிலிருந்து ஓய்வு? வாழ்வின் இதுவரை உயிர்ப்பித்துக் கொண்டிருந்த ஆதார இயக்கத்திலிருந்தா?
தேர்வுக்காகப் படித்த காலத்திலேயே தேர்ந்தெடுத்துத்தான் படித்திருக்கிறேன். மருத்துவக் கல்லூரியில் விடுதியில் சக மாணவர்கள் தடிமனான புத்தகங்களில் உடலியங்கியல் படிக்கும் நேரத்தில் அதைவிடவும் உள்வாங்கிக்கொள்ளச் சிரமமான சார்த்தரின் நாசியா படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்-  பரீட்சைக்குத் தேவையான அளவு படித்து விட்டதால் மட்டுமல்ல, அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு பாசாங்கிற்காக. அவசியம் கருதிப் படிக்கவில்லை ஆசைப்பட்டுத்தான் படித்தேன் என்பது கூட உறுத்தலாக இருக்கிறது. ஆசையல்லவா அவசியங்களை உருவாக்கி விடுகிறது!
பாடம் என்பது ஒரு நிர்ப்பந்தமான படிப்பு என்றாலும், நிர்ப்பந்திக்கப் படும்போதெல்லாம் நான் எளிதாய்க் கடமைகளை முடித்துக்கொள்ளவே முயன்றிருக்கிறேன். இது சோம்பலாகவும் இருந்திருக்கலாம், திமிராகவும் இருந்திருக்கலாம். மொழி எனக்குச் சுலபமாகக் கைவந்ததால், படித்தை எல்லாமும் சுருக்கி நினைவில் வைத்துக் கொண்டு பரீட்சையில் விரிவாக எழுதித் தப்பித்திருக்கிறேன். படித்துத் தேர்ச்சி பெற்றதாய் அறிவிக்கப்பட்ட பாடங்களில்கூட நான் மதிப்பெண்களுக்காக என்பதைவிடவும் மனோசுகத்திற்காகப் படித்ததுதான் அதிகம்.
பாடம், படிப்பு என்று என் சிந்தனை இப்போது அலைவது நேற்று என் மனைவி வினவு ஆரம்பித்த ஒரு தொடர்பதிவிற்காக எழுதியதைப் (பதிவின் சுட்டி) படித்ததால்தான்.  இதுவல்ல நான் எழுத ஆரம்பித்த விஷயம். “நான் படிப்பதில்லை என்பதா படிக்க என்னால் முடியவில்லை என்பதா” என்ற கேள்வியே இத்தனை வார்த்தைகளுக்கும் காரணம்.
அது எப்படி தினமும் சாப்பிடும்போதும், தூங்குமுன்னும், தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதும் படித்துக் கொண்டேயிருந்தவனுக்கு இப்போது படிக்க முடியாமல் போகும்? இதேபோல் இதை ஒரு பிரச்சினை என்று என்னிடம் யாராவது சொல்லும்போது நான் சொல்லிக் கொடுப்பது இதுதான்- முதலில் ராஜேஷ்குமார் படியுங்கள், படிப்பது பழக்கமாகிவிடும், பிறகு ரஷ்ய மொழிபெயர்ப்புகள் படிப்பதும் சுலபாமாகிவிடும்’. மற்றவர்க்கு சொல்லிக்கொடுப்பதைத் தன்  வாழ்விலும் முயல வேண்டும் என்று நினைப்பவன் என்பதால் நானும் இதை முயன்று பார்த்தேன் முடியவில்லை. மிகுந்த சுவாரஸ்யத்துடன் அந்த நாவல் விறுவிறுப்பாகப் போகும்போதே மனம் சீ.. இந்த நேரத்தில் பின் நவீனத்துவக் கோட்பாடுகளின் நுண்ணரசியல் பற்றி புத்தகம் படிக்கவில்லையே என்று ஒரு குற்ற உணர்வைக் கிளப்பும். முடியாததைச் செய்ய முயல்வது முயற்சி, முடிந்ததைச் செய்வது பயிற்சி என்று தெரிந்தாலும் மனம் முடிந்தததைக் கூடச் செய்யாவிடாமல் முரண்பிடித்து மனம் வருந்தவே விரும்பும்.
இது நிஜம். வருத்தம் வலி மட்டுமல்ல, ஒரு சுகம். அழுதால்தான் பால் கிடைக்கும் என்று கற்றுக்கொண்ட குழந்தை  பசியால் கூட அழுவதில்லை, யாரும் தன்னைக் கொஞ்சவில்லையே என்றும் அழும். இந்த அனிச்சை கவனஈர்ப்பு காலந்தோறும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படும். மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான். இதன் முதல் கட்டம் மனம், என்னால் முடியாது என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது. இந்த அவலம் அசிங்கமானதோ அருவருப்பானதோ அல்ல, இயல்பானது. உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.
இப்போது நான் படிக்க முடியவில்லை என்று புலம்புவதும் இப்படித்தான். யாராவது இனி இப்படிப் படியேன் என்று சொல்ல வரமாட்டார்கள் என்று முடிவானால், ஒன்று படிக்க ஆரம்பிப்பேன் அல்லது புலம்பாமல் இருப்பேன். 

Wednesday, May 19, 2010

செல்லக் குழந்தை பிறந்தநாள்.


நாளை எங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைக்குப் பிறந்தநாள். குழந்தைக்கு மூன்று வயதாகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும், அந்த வீட்டுக்குழந்தை செல்லம்தான். அதன் பிறந்தநாள் விசேஷம்தான். அப்படி எங்கள் வீட்டில் முதலில் பிறந்து தவழ்ந்த குழந்தை பற்றி யோசிக்கும்போது வேறு சில விஷயங்களும் தோன்றுவதால்தான் இந்தப்பதிவு.
நானும்கூட எங்கள் வீட்டுக்கு அந்த வயதில் ஒரு செல்லக் குழந்தைதான். அன்று ஒரே குழந்தை என்பதால் இதேபோல ரொம்பச்செல்லக் குழந்தைதான். ஆனால் அதே செல்லக்குழந்தையான நான், சிடுசிடுக்கும் விடலையாகவும், சுயமாய் முடிவெடுக்கும் இளைஞனாகவும், என் முந்தைய தலைமுறையின் கணிப்பின்படி சொல்பேச்சு கேட்காதவனாகவும் மாறும்போது செல்லமானவனாக இருந்திருப்பேனா?
எனக்கு அடுத்த தலைமுறையும் இந்தக்குழந்தைக்குத் தாயாகவும் இருக்கும் பெண்ணும் ஒரு காலத்தில் எனக்குச் செல்லமான குழந்தையாகவே இருந்தாள். அவள் பாடப்புத்தகத்தில் படம் வரைந்து கொடுக்கும்படி கேட்ட சிறுமியாகவும், என்னிடம் சண்டைபோடவே தயாராக இருந்த கல்லூரி மாணவியாகவும், வேலை பார்க்கும் போது சண்டையிட்டு உடனே சமாதானமாகிவிடும் இளம் பெண்ணாகவும், காதலுக்கு என் துணை தேவைப்பட்ட புத்திசாலியாகவும், குழந்தை பிறக்கும் முந்தைய இரவு பயத்துடன் என் கையைப் பிடித்துக் கொண்டிருந்த இன்னொரு குழந்தையாகவும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாய் ஆனால் குழந்தையாய்த்தான் இருந்திருக்கிறாள். ஆனாலும் ஆரம்பத்தில் அவளிடமிருந்த செல்லம் இப்போது இல்லை. வயதுதான் காரணமென்றால் யாருடைய வயது? குழந்தை வளர்வது செல்லமான சுகம், வளர்ந்துவிட்டால் ஏன் அதே குழந்தைதானே என்று விடுவதில்லை? குழந்தை என்பது பார்வையிலா மனத்திலா?  
நான் குழந்தையாக இருந்தபோது கிடைக்காத பல விளையாட்டுப் பொருட்கள் இப்போது கிடைக்கின்றன. இந்தக் குழந்தைக்கு நானும் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நான் வாங்குவதெல்லாம் எனக்காகவா இல்லை உண்மையிலேயே குழந்தைக்காகவா? தொடுதிரை வசதியுடன் ஒரு கணினி வாங்கிக் கொடுக்கலாம், ஆனால் அதைவிட ஒரு குப்பை லாரி பொம்மை குழந்தைக்கு மிகவும் பிடித்து விடுகிறது!
இப்படி விளையாட்டுப்பொருட்களில் ஆரம்பமாகும் நம் திணிப்பு, நம் ஆசைகளின் திரையோட்டம், குழந்தை வளர வளர அதன் கல்வி, அதன் நட்பு, அதன் தொழில் அதன் மணவாழ்வு என்று தொடர்ந்து கொண்டே போகிறது. குழந்தை வளரும், நாம்தான் பெரியவர்களாக வளர்வதில்லை.
இந்தக் குழந்தையும் நாளை தன் விருப்பத்தைச் சொல்லும். அது என்னுடைய தேர்வுக்கு மாறாகவும் இருக்கும். அன்று நான் பக்குவமாக இருந்தால் அதுதான் உண்மையான செல்லம்.
செல்லம் என்பது கொஞ்சல் மட்டுமல்ல, கூட இருப்பது. விழாமல் நடக்க அதன் கையைப் பிடித்துக்கொள்வதல்ல, அந்தப் பிடி இறுக்கமாய் ஆகாமல், வலி தருவதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே.
இன்று இந்தக் குழந்தை செல்லம், நாளையும் என்றும் இப்படி நானும் இதனுடன் செல்லமாக இருக்கவே விரும்புகிறேன்- இன்ஷா அல்லாஹ்.
வலையில் சேமிக்க 




நாளை மூன்று வயதாகும் குழந்தை
மூன்று மாத வயதில்.