“இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?” என்பதில் தொக்கியிருப்பது
என்னவெல்லாம் செய்ய முயன்றாய் என்பதே.
சும்மா ஒரு பட்டியலிட்டுப் பார்க்கிறேன், சிலவற்றை
விட்டிருக்கலாமே தவிர எவற்றையும் சும்மா சேர்த்துக் கொள்ளாத ஒரு பட்டியல், 1986ல்
ஆரம்பம். 25 வருடங்கள். அதில் கடந்த பத்தாண்டுகள் எதுவும் செய்யாமல்!
ஆனாலும்
மீண்டும் ஏதாவது செய்யத்தான் வேண்டும் என்று ஓர் உந்துதல் இரண்டு நாட்களுக்கு முன்
வந்த்து – காரணம் ஆகஸ்ட் ஆறு என்பது எனக்கு ஒரு சாதாரண நாளாகாது. 2000த்தாண்டில்,
ஏர்வாடி தர்காவில் உயிரோடு தீக்குச் சிலர் இரையாகிய நாள். அரசியல் நாடகமாகவோ,
அடுத்தவர் கவனம் ஈர்க்கவோ அவர்கள் தீக்கு இரையாகவில்லை. சட்ட்த்தின் நோக்கில் அது
கொலையாகாதிருக்கலாம் என்றாலும் அலட்சியம், அறியாமை, அக்கறையின்மை உயிர்களைக்கொல்லும்
என்று எனக்கு (பிறர்க்கும்?) உணர்த்திய நாள். அன்று இறந்தவர்கள் மனநோயாளிகள்.
தங்கள் சுயநினைவின்றி, சுயவிருப்பின்றி, ‘சொந்தக்காரர்களால்’ அந்த தர்காவில் அடைக்கப்பட்டு, ஓட முடியாமல் கால்களில் சங்கிலிகள்
பிணைக்கப்பட்டு பரிதாபமாக ஒரு தீ விபத்தில் செத்தவர்கள். அவர்களில் ஒருவரையாவது
நான் பார்த்திருக்கக்கூடும் 1986ல்.
2000ம் ஆண்டு ஏர்வாடி கொடுமை.
சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனநோயாளிகள் தப்பிக்க முடியாமல் தீக்கிரையானார்கள் –
அதே ஏர்வாடிக்கு 1986 போயிருந்தேன், சங்கிலியால் பிணைக்கப்படும் மூட நம்பிக்கை
குறித்து ஆவணப்படம் எடுத்து பதிவு செய்ய. அந்நேரம் உலக அளவில் உன்னதமான
புகைப்படக்கலைஞர் ரகுராய் என்னுடன் வந்தார். இருவரும் படம் எடுக்க ஆரம்பித்த கொஞ்ச
நேரத்தில் சிலர் தடுத்தார்கள், எதிர்த்தார்கள், வெளியேற்றினார்கள். அதுவரை
மூடநம்பிக்கை குறித்த எதிர்ப்பாக மட்டுமே சென்ற எனக்கு அதிலுள்ள வியாபாரக்
கேவலமும் புரிந்தது. எடுத்த படங்களை எனக்குத் தெரிந்த மட்டுமல்ல, அறிமுகமாகாத
ஊடகவியலாளர்களிடமும் கொடுத்தேன் ஒருவரும் சீண்டவில்லை.
பதினான்காண்டுகளுக்குப் பின், தீவிபத்து
நடந்தவுடன் முன்னம் நான் அண்டிய ஊடகக்காரர்களில் இருவர் அதே படங்களைக் கேட்டபோது
நான் தரவில்லை. எந்த வியாபாரத்துக்கும் நான் உடந்தையாக்க்கூடாது என்ற
தீர்மானத்தால்.
ஆனால் இந்த ஆண்டு (2011), ஒரு ’சமூகத்தொண்டு’ நிறுவனத்தின் சார்பாக
தோழி பொற்கொடி கேட்டுக்கொண்டவுடன் ஏர்வாடி 11ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில்
கலந்துகொண்டேன் ஓவியம் தீட்ட. கலந்து
கொண்டதன் முக்கிய காரணம் நண்பர் மருது வரைவதைப் பார்க்கத்தான் என்றாலும் ஏர்வாடி
தாக்கமும் முக்கியம். பல ஆண்டுகள் கழித்து பலர் முன்னிலையில் படம் வரைந்தேன். இது
படம் வரைந்த பெருமை பற்றிய பதிவு அல்ல.
இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் என்று
உரைத்தது; அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை செய்யட்டுமே எனும் சாய்வு நாற்காலி மனப்பான்மையும்
தவறென்று புரிந்தது. அடுத்தவர்களால் முடியாதென்பதால் அல்ல, என்னால் இன்னும்
முடியும் என்பதால்.
என்னால் என்ன முடியும்? பேச, எழுத, படம்
வரைய, நாடகம் நடத்த, ஆவணப்படம் உருவாக்க இன்னும் முடியும். ஆனால் ஒரு மெழுகுவத்தி
ஏந்தி மௌன அஞ்சலி செலுத்த முடியாது.
ஒழுகும் மெழுகு விரல் தொடுமுன்பே அடுத்து
எங்கே போகலாம் எனும் நினைப்புள்ளோருடன் இணைய முடியாது. இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம்,
பொய்யில்லாமல் பொய் எதிர்த்து.
12 comments:
செத்தவர்களும் இன்னும் அங்கே செல்பவர்களும் இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல...மடத்தனத்துக்கு மதம் ஒரு கேடா?
அங்கு செல்பவர்கள் தந்திர வியாபாரியின் கஸ்டமர்கள் ஐயா.. இஸ்லாம் எதை தடுத்துள்ளதோ அதை செய்யும் இவர்கள் என்ன வென்று சொல்வது....
நல்ல வியாபாரம் என்பதால் எங்கு எல்லா மதத்தினரும் கூடுகிறார்கள் ....
உங்களது தன்நலங் கருதா சேவை தொடர பணிவான வாழ்த்துக்கள்.
thiyagarajan
உங்களது தன்நலங் கருதா சேவை தொடர பணிவான வாழ்த்துக்கள்.
தியாகராஜன்
//ஒழுகும் மெழுகு விரல் தொடுமுன்பே அடுத்து எங்கே போகலாம் எனும் நினைப்புள்ளோருடன் இணைய முடியாது. //
உண்மைதான். ஆனால் இத்தகைய உயர்ந்த எண்ணமே பலரை தனிமைப்படுத்தியிருக்கிறது.
அலட்சியம் மற்றும் அக்கறையின்மையால் நிகழும் மரணம் மிகக்கொடியது. கயமையின் உச்சம் அல்லவா இது. கைக்கழுவிய சொந்தமும், தழுவிய கயமையும் கைக்கோர்த்து அரங்கேற்றிய வன்கொலை இது. வேலை வெட்டியற்ற நாம் தான் இதற்காக வருந்த வேண்டும் Dr .
எபோதும் போல இந்த பதிவும் என்னை ஈர்த்தது,,,தாங்கள் மட்டும் அல்ல, என்னை போன்றவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என உணர்த்துகிறது உங்கள் எழுத்து. படைப்புக்கு மிக்க நன்றி.
”ஆனால் ஒரு மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்த முடியாது.”
அம்மம்மா...இதைத்தானே நான் ஒவ்வொரு “மெழுகுவர்த்தி ஏற்றலின்” போதும் நினைக்கிறேன்...ஆனால் எங்கேயும் இப்படி பதியவில்லை...
”வெட்டிப்பேச்சு” தனிமைப்படுத்துவதாக சொல்கிறார். ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? நாமெல்லாம் இல்லையா? இதோ, டாக்டர் ஏதாவது ஒரு நல்ல திட்டம் தீட்டட்டும், நம்மிடம் சொல்லாமலா இருப்பார்? அப்போ நாமும் இணையமாட்டோமா என்ன? எந்தவித உருக்கமும் இல்லாமல் வெறும் மெழுகுவத்தி ஏற்றுபவர்களுடன் எண்ணிக்கைக்காக சேர வேண்டியதில்லை.
அது என்ன டாக்டர் சார், உங்க நடு நெற்றியில் ஒரு சிறு பள்ளம்? அது குங்குமம் போல் தெரியவில்லையே...?
மனம் வலிக்கும் பதிவு இனிய இளங்காலைவணக்கம்
Post a Comment