Thursday, May 12, 2011

மௌனத்தின் பேரிரைச்சல்


மௌனத்தின் பேரிரைச்சல்.. தோன்றிய போதே சங்கிலியாய் எண்ணங்களை இழுத்துச் சென்ற சொற்றொடர்.

கவிதையல்ல இது, கவலை; 
முரண்வாதம், முரட்டுவாதமல்ல. 
இது யோசித்த நேரம் வந்தது, 
யோசிக்க வைக்கும் என்றே எழுதப்படுகிறது. இது பொய்யுமல்லாத உண்மையுமல்லாத புதிர்நிலை. 
புரிதலுக்கான குழப்பம், புரியும் அந்த ஒரு கணத்தின் முன்னிருக்கும் இறுக்கமான தயக்கம்.  முதலில் எது மௌனம், எது இரைச்சல்? 

எது எதுவரை மௌனம் அல்லது இரைச்சல்?

அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கியம் என்றெல்லாம் பேசிக்க்கொண்டிருப்பது பேரிரைச்சலோ என்று ஒரு நெருடல் வந்து விட்ட்து. வெட்டிப்பேச்செல்லாம் கூச்சலே என்று மனம் முடிவு செய்கிறது. பலனின்றிப் பேசுவதும் பேரிரைச்சல் போடுவதும் ஒன்று என்பதை ஏற்கும் மனம், மௌனத்தின் பேரிரைச்சலை மட்டும் சந்தேகிக்கிறது. வார்த்தை ஜாலமாக வரவில்லை இந்த எண்ணக்கோலம். 

மௌனமும் மனமும் ஒன்றியிருத்தல் சாத்தியமா? 
சப்தமே இல்லாததா அல்லது சிந்தனையே இல்லாததா மௌனம்? சொல்லில்லாமல் சிந்தனை இருக்க முடியுமா? வெளிவராத வார்த்தைகள் மனத்துள்ளேயே கரைந்து விடுமா? அந்த வார்த்தைகளுக்கெல்லாமும் அர்த்தங்கள் உண்டா?
எது மௌனம்? அப்படி ஒன்று நிஜமாகவே உண்டா? மௌனம் என்பதே கற்பனை உருவாக்கிய வார்த்தை மட்டுமா? நிசப்தமல்ல மௌனம் எனும்போது மௌனத்திற்கும் ஒரு சப்தம், ஒரு ஸ்ருதி, ஒரு ஜதி உண்டா? அப்படி ஒன்றிருந்தால் அந்த மந்திர அதிர்வுக்குப் பெயர் வைப்பதே அதைக் களங்கப்படுத்தி விடாதா?

மௌனம் தன்னுடன் தான் தொடர்பு கொள்வதை நிறுத்திக்கொள்ளும் போது மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. பிறருடன் தொடர்பு கொள்ளும்போது பயன்படுத்தப்படும் மௌனம் ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னிடமே நான் பிரயோகிக்கும் மௌனம் வெட்கத்திலிருந்து தப்பிக்க ஒரு தந்திரமாகவே தெரிகிறது.
மௌனத்தை உணராமல், வரையறுக்கவும் விவரிக்கவும் தேவைப்படும் வார்த்தைகளே பேரிரைச்சலாய்த் தெரிகிறது.





4 comments:

anbu said...

மௌனத்தின் பேரிரைச்சலை மட்டும் சந்தேகிக்கிறது.----உண்மை நிஜத்தின் பேரிரைச்சலை விட

Muszhaaraff Muthunabeen said...

அருமையான பதிவு. தங்களுடைய கடந்த பதிவொன்றிற்கு(சாய்பாபா பற்றி) பின்னூட்டம் இட்டிருந்தேன். அதற்கு ஒரு சில வாசகர்கள் பதிலெழுதி இருந்தார்கள், தாங்களோ மௌனித்து விட்டீர்கள்.நானும் மௌனத்தை வலியுறுத்தியே பின்னூட்டம் இட்டிருந்த படியால் உங்கள் மௌனத்தையே எனக்கான பதில் மொழியாக எண்ணியிருந்தேன்.உங்களுடைய இந்தப்பதிவு அதை வழிமொழிவதாக உணர்கின்றேன். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உள்ளுணர்வின் ஊசலாட்டம் ஓய்வுறும் போது மௌனத்திற்குள் நீங்கள் வீசி எறியப்படும் போது ஓங்கார இரைச்சலுக்குள் தொலைந்து விட நேரிடலாம்...அந்த இரைச்சலின் இதம் பற்றி மௌனத்தால் மட்டுமே பதிவிட முடியும். வாழ்த்துகள் வைத்தியரே...
மௌனம் பற்றிய எனது பதிவு.. http://maarall.blogspot.com/2011/05/blog-post_11.html

Anandi said...

//மௌனத்தை உணராமல், வரையறுக்கவும் விவரிக்கவும் தேவைப்படும் வார்த்தைகளே பேரிரைச்சலாய்த் தெரிகிறது.//

நாடோடிப் பையன் said...

Great post, Dr. Rudhran. Thanks for sharing.
It got me to thinking.

Post a Comment