தானே தனக்குள்ளும் தன்னுடனும் பேசிக்கொள்வது பிரச்சினையில்லை. சில நேரங்களில் பயனுள்ளதாகவும் அமையும். இல்லாத ஒருவரிடம் பேசுவதாக நம்புவதும், இல்லாத நபர் நம்மிடம் பேசுவதாக நம்புவதும் நோய். இது மனச்சிதைவின் அடிப்படை அறிகுறி.
இதனால் தான் ‘ நீ கடவுளிடம் பேசினால் அது பிராத்தனை, கடவுள் உன்னிடம் பேசினால் அது பிரமை’ (if you speak to god it is prayer, if god speaks to you it is hallucination) என்று சொல்லப்பட்டது.
கடவுளை விடுவோம், தற்போதைக்கு, சக மனிதர்களிடம் பேசுவது என்ன? பிராத்தனையா, பகிர்தலா, பொருமலா பாசாங்கா? சக மனிதர்கள் பேசுவதைக் காதுகள் உள்வாங்கும் அளவு சிந்தனை உள்வாங்குகிறதா? அவர்கள் பேசாததைப் பேசியதாகவும், பேசியதைப் பேசாது விட்டதாகவும் நினைப்பது ஏன்? பெரும்பாலும் மனது தனக்கு விருப்பமானதை மட்டுமே அனுமதிப்பதால். இது அறிவின் சுயதணிக்கை அல்ல, ஆசையின் அச்சத்தின் பாதுகாப்புணர்வு.
பல விஷயங்களை நான் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், கோபமாக, வருத்தமாக, கேள்விகளாக... ஆனால் இவற்றில் என்னோடு நான் சந்தோஷமானவற்றைப் பேசிக்கொள்வது குறைவு. மகிழ எப்போதுமே மற்றவர் தேவை, வருத்தப்பட தனிமையே போதும். தனிமையே வருத்தமா என்பது இன்னொரு சிந்தனைத்தொடர். நான் என்னுடன் பேசிக்கொள்வதின் முக்கியமான சௌகரியம், நான் பேசுவதை நான் நிச்சயமாகக் கவனிப்பதுதான்.
வேறு யாரும் இல்லாததால்தான் நமக்குள்ளேயே பேசிக்கொள்கிறோமா? சில நேரங்களில் வேறொருவர் இருந்தாலும் நம்முடன் உரையாடிக் கொண்டிருந்தாலும் நாம் நமக்குள்ளே பேசிக்கொள்வோம். ஆனால் தொடர்ந்து சமூகத்தின் நாடகத்தில் பங்கேற்று வருவதால், முகத்தில் ஒரு புன்னகை ஓட்ட வைத்துக்கொண்டு உள்ளே எரிச்சலை நம்முடன் மட்டுமே பகிர்ந்து கொள்வோம். இந்த நடிப்பு அவசியம் என்பதால் இதை நாளும் செழுமையாக்கிக் கொள்வோம்.
நிஜத்திலேயே இதைச் செய்யும் நாம் மெய்நிகர் இணையத்தில் செய்ய மாட்டோமா! பிடிக்காத எத்தனை உரையாடல்களை, ‘வேலை இருக்கிறது’ என்று ‘தட்டி’ விடுகிறோம்! பிடித்த அத்தனை பேருடனும் நாம் ஒரு புன்னகைச் சின்னம் பரிமாறிக்கொள்கிறோம், அதில் எத்தனை வலியோ அவசரமோ வருத்தமோ இல்லாதவை? எத்தனை மனத்திலும் முகத்திலும் இல்லாமலேயே விரல்கள் தட்டி விடுபவை?
உங்களுக்குத் தெரிந்ததையே, நானும் இதுவரை சொல்லிக்கொண்டிருந்ததையே திரும்பவும் சொன்னால் நான் நல்லவன். என் மனத்தின் நிஜ உணர்வுகளை வார்த்த்தைகளாக்கினால், என்னிடம் முதலில் ஆச்சரியம், ஏமாற்றத்தினால் வருத்தம், தன்முகம் உரிக்கப்படுகிறதே என்று கோபம்..இதற்கெல்லாம் காரணம் நானும்தான் என்றாலும், மனம் அவ்வளவு சீக்கிரமா தன்னிடமே ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விடும்?
பிம்பத்தை நான் தேர்ந்தெடுத்து முனையலாம், அதை அங்கீகரிப்பதும் அப்படியே எதிர்பார்ப்பதும் யார்? நான் நடித்தவுடன் என்னைக் கைதட்டி ஊக்குவித்தது யார்? எது ஆரம்பம்? எது விளைவு?
ஒன்றிலிருந்துதான் இன்னொன்று வருகிறது என்பது நான் நம்ப விரும்பும் அறிவியல்.
ஒன்றும் அதனிடத்திலிருந்து வந்த இன்னொன்றும் ஒன்று போலத் தோன்றினாலும் வேறுவேறானவை தான், ஒன்று இன்னொன்றை உருவாக்கும்போது தன்னை இழப்பதில்லை என்று தத்துவம் சொல்கிறது. (பூர்ணமத வாக்கியம், ஈஸோபநிஷத்).
இவ்விரண்டில் எது மனத்தோடும் நடைமுறையோடும் ஒத்துவருகிறது?
ஒன்றும் அதனிடத்திலிருந்து வந்த இன்னொன்றும் ஒன்று போலத் தோன்றினாலும் வேறுவேறானவை தான், ஒன்று இன்னொன்றை உருவாக்கும்போது தன்னை இழப்பதில்லை என்று தத்துவம் சொல்கிறது. (பூர்ணமத வாக்கியம், ஈஸோபநிஷத்).
இவ்விரண்டில் எது மனத்தோடும் நடைமுறையோடும் ஒத்துவருகிறது?
நான் முழுமை என்னிலிருந்து வந்தது என் எச்சம்தான் என்றால் நான் வந்தேனே அது முழுமையா நான் முழுமையா?
தர்க்கத்தின் முடிவு மௌனம் என்றால், மௌனம் முடிவா ஆரம்பமா?
தர்க்கத்தின் முடிவு மௌனம் என்றால், மௌனம் முடிவா ஆரம்பமா?
23 comments:
//என் மனத்தின் நிஜ உணர்வுகளை வார்த்த்தைகளாக்கினால், என்னிடம் முதலில் ஆச்சரியம், ஏமாற்றத்தினால் வருத்தம், தன்முகம் உரிக்கப்படுகிறதே என்று கோபம்..இதற்கெல்லாம் காரணம் நானும்தான் என்றாலும், மனம் அவ்வளவு சீக்கிரமா தன்னிடமே ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விடும்? பிம்பத்தை நான் தேர்ந்தெடுத்து முனையலாம், அதை அங்கீகரிப்பதும் அப்படியே எதிர்பார்ப்பதும் யார்? நான் நடித்தவுடன் என்னைக் கைதட்டி ஊக்குவித்தது யார்? //
மனதை நிர்வாணப்படுத்தினால்... முதலில் வெளிப்படுவது நிச்சயமாய் மனிதமாக இருக்காது...
மனிதன் ஒரு விடயத்தில் பாராட்டுக்குரியவன்... விலங்கு இயல்புகளை மரணிக்கும் வரை கூட மறைக்க பழகிவிட்டான்...
மிக அற்புதமான பதிவு...
எழுத்தும்,ஓவியமும் பிகாசோதனமாய் என்னால் கிரகிக்க இயலா தூரம்.
@சங்கர்
//மனிதன் ஒரு விடயத்தில் பாராட்டுக்குரியவன்... விலங்கு இயல்புகளை மரணிக்கும் வரை கூட மறைக்க பழகிவிட்டான்... //
மனிதன் என்று யாரையோ ஏன் சொல்ல வேண்டும் .....நான் or நாம் என சொல்ல பழகுவோம் ...........
:-)
//உங்களுக்குத் தெரிந்ததையே, நானும் இதுவரை சொல்லிக்கொண்டிருந்ததையே திரும்பவும் சொன்னால் நான் நல்லவன். என் மனத்தின் நிஜ உணர்வுகளை வார்த்த்தைகளாக்கினால், என்னிடம் முதலில் ஆச்சரியம், ஏமாற்றத்தினால் வருத்தம், தன்முகம் உரிக்கப்படுகிறதே என்று கோபம்//
அப்பட்டமான உண்மை!
நான் மற்றும் நாம் குறுகியதாகபட்டது.... அதனால்தான்... தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி...
தனிமையே வருத்தமா என்பது இன்னொரு சிந்தனைத்தொடர்.//
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஒரு கூட்டத்தில் சென்று சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கும் போது தனிமை வருத்தமில்லை. நாமே தனிமை ஆகிக் கொண்டால் வருத்தமில்லை. தனிமைப்படுத்தப் பட்டால் வருத்தம். நன்றி, எங்கள் சிந்தனையை கூர் செய்ய உதவுவதற்கு
உரையாடல்களின் அரசியல் மிக நுட்பமானது. ஜே.கே ஒரு முறை இப்படி சொன்னதாக ஞாபகம். நாம் ஒருவர் பேசுவதை அவர் இப்படியான அர்த்தத்தில் தான் பேசுகிறார் என நினைத்து உள்வாங்குகிறோம். பேசுகிறவர் நாம் இப்படியான அர்த்தத்தில் தான் உள்வாங்குவோம் என தனக்கு தானே புரிதலை கொண்டு தன் பேச்சை வெளிபடுத்துவார். சில சமயம் இந்த உரையாடலின் இறுக்கம் இன்னும் கடினமானதாகவும் இன்னும் முடிச்சுகள் அதிகரித்தும் இருக்கலாம். ஒருவர் பேசுவதை கேட்பது என்பது நமது மனதின் எண்ணவோட்டங்களை அமைதிபடுத்தி விட்டு அவரது நிலையில் இருந்து அவர் என்ன பேசுகிறார் என்பதை உள்வாங்குவது தான்.
இது எவ்வளவு தூரம் சாத்தியம்?
//ஒன்றும் அதனிடத்திலிருந்து வந்த இன்னொன்றும் ஒன்று போலத் தோன்றினாலும் வேறுவேறானவை தான், ஒன்று இன்னொன்றை உருவாக்கும்போது தன்னை இழப்பதில்லை என்று தத்துவம் சொல்கிறது//
உண்மைதான் சார்...! பெரும்பாலும் உங்களுக்கு பின்னூட்டமிடும் போது...வார்த்தைகள் கிடைக்கமாட்டேன் என்கிறது...! நீங்கள் கூறுவதை ஆமோதிக்கும் மனோ நிலைதான் மிகுந்திருக்கிறது!
அது நீங்கள் சொல்லும் கருத்தின் சத்தியதினால்தான் என்று உணர முடிகிறது. Thanks for great sharing!
"மனோதர்க்கம் - கொஞ்சம் என்னுடன், நான்."
மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
\\ஒன்றிலிருந்துதான் இன்னொன்று வருகிறது என்பது நான் நம்ப விரும்பும் அறிவியல்.
ஒன்றும் அதனிடத்திலிருந்து வந்த இன்னொன்றும் ஒன்று போலத் தோன்றினாலும் வேறுவேறானவை தான், ஒன்று இன்னொன்றை உருவாக்கும்போது தன்னை இழப்பதில்லை என்று தத்துவம் சொல்கிறது. (பூர்ணமத வாக்கியம், ஈஸோபநிஷத்).
இவ்விரண்டில் எது மனத்தோடும் நடைமுறையோடும் ஒத்துவருகிறது? \\
எனக்கு இரண்டுமே சரிதான்.
’ஒன்று’ என்கிற இடத்தில் நம் வசதிப்படி, இயற்கை,அறிவு,இறைசக்தி
என எதை வேண்டுமானாலும் போட்டுப்பாருங்கள்.
\\தர்க்கத்தின் முடிவு மௌனம் என்றால், மௌனம் முடிவா ஆரம்பமா?\\
தர்க்கத்திற்கு முன் இருந்தது மெளனமே..
மெளனமே ஆரம்பமும் முடிவும்...
CAST AWAY என்ற திரைப்படத்தில் தீவில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், சுமார் 4 வருடங்களுக்கு ஒரு ரக்பி பந்தை நண்பனாக கருதி பேசிப்பழகும் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்கிற அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை உங்களது இந்த இடுகையை படித்ததும், புரிந்துக்கொள்ள முடிகிறது. அருமையான சிந்தனைகள்!
-
DREAMER
தர்க்கத்தின் முடிவு மௌனம் என்றால், மௌனம் முடிவா ஆரம்பமா?
.....உங்கள் இடுகையில் நீங்கள் கேட்டு இருக்கும் கேள்வி, பல சிந்தனை எண்ணங்களுக்கு ஆரம்பம். நல்ல பதிவு.
உங்களின் பல சிந்தனை கோர்வைகள், பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றன.
//ஒன்றிலிருந்துதான் இன்னொன்று வருகிறது என்பது நான் நம்ப விரும்பும் அறிவியல்.//
இது இயற்பியல்.
//ஒன்றும் அதனிடத்திலிருந்து வந்த இன்னொன்றும் ஒன்று போலத் தோன்றினாலும் வேறுவேறானவை தான்//
ஒவ்வொன்று உருவாவதிலும் பல காரணிகள் இருந்தாலும், அது உருவான பிறகு பல் வேறு காரணிகளால் எப்போதும் உருமாறி கொண்டே இருக்கும். இது உயிர்களின் நியதி. நம் இயல்பு.
நமக்கு மனதளவினாலான பல ஏமாற்றங்களுக்கு, இத்தகைய நியதிகளுக்கு உடன்பட மறுத்து நாம் ஏற்படுத்திக்கொள்ளும் எதிர்பார்ப்புகளே காரணமென்று நான் நினைக்கிறேன்.
அதுவும் முழுமை, அதிலிருந்து வெளிப்பட்ட இதுவும் முழுமை, முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்ட பின் முழுமையே எஞ்சி நிற்கிறது என்னும் உபநிஷத் வாக்கியம் ஏற்புடையதாக படுகிறது.
முழுமையிலிருந்து வெளிப்பட்டது பகுதி என்றால் இரண்டுமே பின்னம் ஆகிவிடும். மேலும் "Sum of parts is greater than whole" என்னும் தியரி படி பகுதிகளின் கூட்டமைப்பு முழுமையை மிஞ்சி விடும். இது உண்மை என்றால் மானுடம் (ஒட்டு மொத்த, ஒன்றுபட்ட மனிதர்கள்) கடவுளை விட மேலானது ஆகும். அன்று முதல் இன்று வரை இது நிருபிக்க படாததாகவே உள்ளது, காரணம் மனிதர்களிடம் உள்ள பிளவும்,வேற்றுமையும். இது தான் இயற்கையின் விளையாட்டு. தத்துவம் போதிப்பது விடுதலை என்பது தனி மனித சாத்தியம் மட்டுமே.
உங்களின் இந்த பதிவு மிகையும் பயனுள்ளது. நமக்கு நாமே பேசுவது பிராத்தனையாக அமையலாம் என்பது அருமை. ஆனால் மௌனத்தில் நுழைய இந்த பிராத்தனையை சற்று நிறுத்த வேண்டும் என்றும் அறிகிறேன்.
முடிவில்லாததை / அளக்க முடியாததை infinite என்று சொல்லலாம் அல்லவா , இந்த பிரபஞ்சம் / இயற்க்கை / கடவுள் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் ....அது முடிவில்லாதது , அதில் கொஞ்சம் சேர்த்தாலும் அது infinite தான், அதில் இருந்து கொஞ்சம் எடுத்து கொண்டாலும் அது infinite தான்
கடவுளை விடுவோம், தற்போதைக்கு, சக மனிதர்களிடம் பேசுவது என்ன? பிராத்தனையா, பகிர்தலா, பொருமலா பாசாங்கா?
- It depends on the person delivering talk and person hearing it..
If they dont take in right way it maynot be a right communication
நமக்குள்ளேயே பேசிக்கொள்கிறோ
If its thought then conversation is between 2 thoughts. Going next step
where is that 'I', is it our body with tissues or mind ?
Then from the mind originates?
Why we feel so peace ful if we dont think too much?
கடவுளை விடுவோம், தற்போதைக்கு, சக மனிதர்களிடம் பேசுவது என்ன? பிராத்தனையா, பகிர்தலா, பொருமலா பாசாங்கா?
- It depends on the person delivering talk and person hearing it.. sender and receiver should be in same mental freq.
நமக்குள்ளேயே பேசிக்கொள்கிறோ
If its thought then conversation is between 2 thoughts. Going next step
where is that 'I', is it our body with tissues or mind ?
Then from the mind originates?
Why we feel so peace ful if we dont think too much?
சார், இந்த deluxe templateன் look நல்லாவேயில்லை. படிப்பதற்கும் சிரமமாய் உள்ளது. நீங்கள் bloggerல் உள்ள minima stretch என்ற templateக்கு மாறி விடுங்கள். Minima Stretch என்ற template நல்ல வெண்மை நிறத்தில் அகலமாக இருக்கிறது. So, please change this deluxe template into minima stetch template.
sir,
u change ur template into minima stretch template which is available in blogger.
Also, u can add 'pages' widget to ur blog. u can create upto 10 pages. u can fix those stand alone pages below the header of ur blog. If u want to know how to create pages like 'home', 'about me', 'contact' etc under the header of ur blog view this http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=165955
"நான் முழுமை என்னிலிருந்து வந்தது என் எச்சம்தான் என்றால் நான் வந்தேனே அது முழுமையா நான் முழுமையா?"
பதில் மெளனம்தான் என்றால் கேள்விதான் தர்க்கத்தின் விடை. முடிவும், ஆரம்பமும் நிலைகள் மட்டுமே. நிலைகளைக் கடந்தும் தர்க்கம் நின்று விடாது.
இந்த மாதிரி உள்ளடக்கதில் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்கிறேன் சார்.
great thaught solla varthai illai,
Post a Comment