Tuesday, April 20, 2010

வெற்றியின் விலை விமர்சனம்


வெற்றி விரும்பாத போர், மகிழ்ச்சி விரும்பாத வாழ்க்கை, சலனம் இல்லாத மனம்.. என்று தத்துவ வசீகரங்கள் எவ்வளவு சுகமாகவும், விளம்பரச் சுலபத்தோடு காணப்பட்டாலும் யதார்த்தம் வேறு தான். எல்லாமே வார்த்தைகள்தான், சிந்தனையே வார்த்தைதான், ஆனால் அர்த்தங்களே மனத்ததுள் எண்ணங்களாகின்றன. வெற்றி, மகிழ்ச்சி, சலனம் இல்லாத வாழ்க்கை ஒரு இதமான மிகையான கற்பனை.
வெற்றி மகிழ்ச்சி மட்டுமே தரும் என்பதில்லை! முக்காடு விலக்கி தெருவில் இறங்கிவிட்டால், பிறர் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பார்வைகள் எல்லாமே அன்பின் புரிதலுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. 
எல்லா பார்வைகளுமே விமர்சனங்களை உள்ளடக்கியவைதான். விமர்சனங்கள் எல்லாமுமே வருத்தப்பட வைக்க மட்டுமல்ல, சிலவற்றில் அக்கறையும் இருக்கும், பலவற்றில் பொறாமையும் வெறுப்பும் இருந்தாலும். விமர்சனங்கள் சுவாரஸ்யமானவை; அவை நம்மை மட்டுமே நமக்குக் காட்டுவதில்லை- பிறரது பார்வைக்கும் பேச்சுக்கும் உள்ளிருக்கும் அவர்களின் பொய்களையும் காட்டுவதால்.
வெற்றி, மகிழ்ச்சி, சலனம் இவை கலந்த வாழ்க்கையில் எது வெற்றி, எது மகிழ்ச்சி என்று மட்டுமல்ல, எது சலனம் என்பதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அர்த்தமாகும். வெற்றி மகிழ்ச்சி இரண்டுமே உழைப்பும் முனைப்பும் இல்லாமல் கிடைக்காது. ஆனால் சலனம் சுலபம், கிட்டத்தட்ட இலவசம்.
சலனம் வெறும் கற்பனையோ கவனச்சிதறலோ மட்டும் அல்ல, அது உள்ளிருக்கும் அடிப்படை இயக்கம். ஒரு காரியத்தில் ஈடுபடும்போது- கண் பார்த்துக் குறி வைத்தாலும், வீட்டு வாசலில்  கோலமிட்டாலும், கல்லில் சிலை வடித்தாலும்- கவனம் சிதறாது சலனம் இல்லாது மனம் இருக்கும். ஆனால் அந்தக் காரியம் முடிந்தவுடன் இயல்பாகவே ஓர் ஆயாசத்தில் ஓய்வெடுத்து அடுத்த வேலை பார்க்க ஆயத்தமாகும். வாழ்க்கையில் இந்த இடைப்பட்ட தருணங்களே அதிகம். இங்கே தான் சலனங்களும் வரும். சலனம் என்பது அடுத்தவன் உடைமையை அபகரிக்கும் ஆசையோ தன் தகுதி மீறிய யோசனையோ மட்டும் அல்ல. அது ஒரு நிலை பிறழ்தல். நேர்க்கோட்டில் நடக்கும் போது ஓரம் பார்க்கும் தடுமாறல். அது விமர்சனங்களுக்கு நேரம் செலவிடுவதும் ஆகும்.
ஆனால் விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் கருத்துடையதாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் வகையில் அமைவது எப்போதாவது தான்.  
ஓர் உதாரணம்:ஜாக்சன் போலாக் Jackson Pollock  எனும் ஓவியர் வண்ணங்களை வீசியெறிந்து அவற்றின் மூலமே சித்திரங்களை உருவாக்கியவர். நார்மென் ராக்வெல் Norman Rockwell யதார்த்தமான ஓவியங்களையே வரைந்தவர். கீழே போலாக் ஓவியத்திற்கு ராக்வெல்லின் விமர்சனம்.
பொலாக்
ராக்வெல்







இது நாகரிகம். இது நயம். இது முதிர்ச்சியான மனத்தின் வெளிப்பாடு... இணையத்தில் இது என்றாவது நேரலாம் என்ற நம்பிக்கையோடு இதைப் பதிவிடுகிறேன்.

13 comments:

AkashSankar said...

//முக்காடு விலக்கி தெருவில் இறங்கிவிட்டால், பிறர் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பார்வைகள் எல்லாமே அன்பின் புரிதலுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது.//

யாதர்த்தமான வரிகள்... சிலருக்கு ஏன் பலருக்கு... விமர்சனங்களை ஏற்று கொள்ளும் மனம் இல்லை... ஆனால் முக்காடு விலக்கி தெருவில் ராஜா நடை போட ஆசை....

நல்ல பதிவு....

Rettaival's Blog said...

விடுபட்ட இடைவெளி நிரப்புதல் வார்த்தைகளாலன்றி உணர்வுகளால் அமையப்பெறுவதே உண்மையான விமர்சனம். விருப்பங்கள், வெறுப்புகள் எல்லாமும் சேர்ந்து நிலைபிறழ்தலை தக்கவைத்தபடி உள்ளன. சலனங்களுக்கு ஆட்படாதவர் யார்?

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[சலனம் என்பது அடுத்தவன் உடைமையை அபகரிக்கும் ஆசையோ தன் தகுதி மீறிய யோசனையோ மட்டும் அல்ல. அது ஒரு நிலை பிறழ்தல். நேர்க்கோட்டில் நடக்கும் போது ஓரம் பார்க்கும் தடுமாறல். அது விமர்சனங்களுக்கு நேரம் செலவிடுவதும் ஆகும்.]]

தவறு என்பது என் கருத்து..

விமர்சனம் என்பது எதிர்மறை மட்டுமே அல்ல.. அது ஒரு கல்வி/படிப்பினை/மாற்றுப்பார்வையில் அறிவை பெறுக்குதலும்,..

ஒரு விதத்தில் வளர்ச்சியும்..

dheva said...

இது நாகரிகம். இது நயம். இது முதிர்ச்சியான மனத்தின் வெளிப்பாடு... இணையத்தில் இது என்றாவது நேரலாம் என்ற நம்பிக்கையோடு இதைப் பதிவிடுகிறேன்.

Great Sir!

Anandi said...

வாழ்த்துக்கள் doctor :)

பனித்துளி சங்கர் said...

ஜாக்சன் போலாக் பற்றி நான் அறியாத தகவல்களை உங்களின் பதிவின் வாயிலாக அறிந்துகொண்டேன் .
பகிர்வுக்கு நன்றி நண்பரே .

சுண்டெலி(காதல் கவி) said...

எதுவாக இருந்தாலும்,மற்றவரின் பார்வைக்கு வந்தால் அது விமர்சனதுக்குட்பட்டே ஆகிறது.

Athisha said...

ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க.. விமர்சனங்கள் ரொம்ப சுவாரஸ்யமானவை அதிலும் நம் மீதான எதிர்மறைனா ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம் சேர்ந்திடும்..

உமர் | Umar said...

காமராஜர் தன மீது வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்திற்கு பதில் சொன்னாராம். "எனக்கு யானைக்கால் இருக்குன்னு ஒருத்தன் சொன்னான்னா, நான் ஒவ்வொருத்தர்ட்டையும் போயி என்னோட கால காமிச்சி எனக்கு யானைக்கால் இல்லன்னா சொல்லிக்கிட்டிருக்க முடியும்?"

விட்டுத்தள்ளுங்கள் டாக்டர்! ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு பதில் கூற ஒதுக்கும் நேரம் பயன் தரக்கூடியது; வசைகளுக்கு பதில் கூற நேரம் ஒதுக்கினால், அவர்களுடைய நோக்கமான, provoking, நிறைவேறியதாய் இருக்கும்.

malar said...

'''சலனம் சுலபம், கிட்டத்தட்ட இலவசம்''


ரொம்ப உண்மை தவிற்க முடியாததும் ...

Murali said...

சில நேரங்களில், சில மனிதர்கள்.

Anonymous said...

நார்மன் ராக்வேல்லின் இந்த ஓவியத்தை நான் பார்த்ததில்லை. மனிதர் கலக்கிவிட்டார்! போலாக் ஸ்டைலிலேயே அந்த மனிதர் பார்க்கும் ஓவியம் இருக்கிறதே! ஓவியங்களை பதித்தற்கு நன்றி!

Unknown said...

வாழ்த்துக்கள் doctor :)

Post a Comment