பலர் இந்தப்பதிவின்
பின்னணி நிறம் கருப்பாய் இருப்பதால் படிக்கச் சிரமமாக இருப்பதாய் எழுதியதால்
இப்போது வண்ணத்தை மாற்றியிருக்கிறேன். ஒரு பதிவர் குறிப்பிட்டது போல் இது ஒன்றும்
கொள்கை சார்ந்த நிறம் அல்ல. அம்மாதிரி நிறங்கள் மாறுமா என்ன?
சாயங்கள் பொலிவிழக்கும், நிறங்கள் மாறாது.
எது நிறம் எது சாயம்
என்று ஒரு கேள்வி என்னுள் இப்போது எழுகிறது.
என் வாழ்க்கையில் பல
வண்ணங்கள் சாயம் என்று தெரியாமல் நிறம் என்று நம்பி ஏமாந்திருக்கிறேன். கருப்பும்
சிவப்பும் தான் முதலில். இரண்டுமே பார்வையை உடனே சுண்டியிழுக்கத்தான், அவற்றின் உள்ளர்த்தமாய் மறுப்பும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவே பல வருடங்கள் போயின.
பிறகு கருப்பும் ஒரு நாடகத்திற்கான பூச்சாய் புரிய ஆரம்பித்தபின், சிவப்பு மட்டுமே மீதமிருந்தது. சமீபகாலமாய் அந்தச் சிவப்பும் வெளுத்து
மாறிக்கொண்டிருக்கிறது.
மாற்றம் மட்டுமே
நிரந்தரம் என்றாலும், இளமையின்
ஆரம்ப ஈர்ப்புகள் அவ்வளவு சீக்கிரமாக மாறுவதும் மறைவதுமில்லை. அதனால்தான் சாயம் போன
சிவப்பைக்கூட பார்வையைக் குறுக்கிப் பளிச்சென்று தெரியப்படுத்திக் கொள்ளப்
பார்க்கிறேன். எவ்வளவு நேரம் கண்களை இடுக்கி வைத்திருக்க முடியும். கொஞ்சம் விழி
விரிந்தால் பின்னணியும் ஆழமும் புரிபட ஆரம்பிக்கும். அப்புறம் எவ்வளவு முயன்றாலும்
சாயம் நிறமாக மாறாது.
எல்லாவற்றிற்கும் ஒரு நிறம்
உண்டு. அது தேவையும் கூட. பார்வையில் பழுது வரும்வரை, நிறமே ஒரு நினைவை மீட்கும். அதுவே பல அர்த்தங்களை
உருவாக்கும். அது ஒரு ரகசியக் குறியீடாக மனத்தின் அடிநாதமாய் புரிதலை அமைத்துக்கொடுக்கும்.
நிறம் மாறாது.
உள்ளே மாறாத நிறம் இருக்கும்போது
வெளியே ஒப்பனையாகப் பூசிக்கொள்ளும் வண்ணங்களை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம்.
கறுப்பு என்ன பகுத்தறிவாளர்களின் வண்ணமா அல்லது ஐயப்ப”பக்தர்”களின் அடையாளமா? சிவப்பு மட்டுமென்ன? நக்ஸல்பாரியின்
நிறமா நந்திக்ராமத்தில் நயவஞ்சகம் புரிந்தவர்களின் சாயமா?
எந்த நிறமும் உள்ளே தான்.
வெளியே ஒப்பனைகள் கொஞ்ச நேரம்தான். ஒப்பனையோடு தூங்கிப்போகலாம், ஆனால் விழிக்கும்போது அது முகத்தை விகாரமாகக்
காட்டும். நடிப்பதாய் இருந்தால் முடித்தபின் நாடகத்திற்கான ஒப்பனைகளைக் களைய வேண்டும்.
ரசிக்கும் நாமும் நாடகம் முடியப்போவது தான் என்பதையும் உணர வேண்டும். எந்த நாடகமும்
நிரந்தரமாகத் தொடராது, எந்த வண்ணமும் நிரந்தர ஒப்பனையாக மாறாது.
நிஜமான நிறம் நம் உள்ளத்தின்
நிறம் தான். அதை வெளியே தேடி அதே போலொரு சாயமுள்ளவர்களிடம் ஈர்க்கப்படுவதும் இயல்புதான்.
ஈர்ப்பு எப்போதுமே எதிர்பார்ப்பினால்தான்.
பார்வை கூர்மையானால், நாம் ஏமாற
மாட்டோம். ஏமாற்றம் இல்லாவிட்டால் சோர்வும் கிடையாது, சலிப்பும்
வராது.
14 comments:
//ஏமாற்றம் இல்லாவிட்டால் சோர்வும் கிடையாது, சலிப்பும் வராது.//.very true thank you doctor.
கருப்பு நிறத்தை எடுத்துவிட்டதற்கு நன்றிகள்..
//அம்மாதிரி நிறங்கள் மாறுமா என்ன?//
doc, எங்கோ படித்த மாதிரி ஞாபகம் ஒருவரின் நிறங்களின் பிடிப்பிற்கும் (liking) மனத்தின் எண்ண லயிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக? அப்படி இல்லையா? நான் கூட நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் (ஆராய்ச்சி :) அடர் கறுமையை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.
நான் இப்பொழுது வைத்திருக்கும் நிறத்திற்கு முன்னால் என்னுடைய டெம்ப்ளேட் மிகவும் முகத்தில் அடிக்கும் அடர் நிறத்தில் வைத்திருந்தேன்; காட்டான் என்ற பெயருக்கு பொருத்தமாக இருக்கும் என்று. இது போலவே அங்கும் படிக்க முடியவில்லை என்று கேட்டு கொண்டதிற்கு இணங்க மென்மை நிறத்திற்கு மாற்றிவிட்டேன்.
பதிவு நன்று.
தெகா,
வண்ணங்களுக்கும் மனநிலைக்கும் தொடர்பு இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள். ஒவ்வொரு வண்ணமும் ஒரு வகை உணர்ச்சியை (நாட்டியத்தில்) காட்ட உதவும் என்பது பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
பின்னணி நிறத்தை மாற்றியதற்கு நன்றி.
//ஒப்பனையோடு தூங்கிப்போகலாம், ஆனால் விழிக்கும்போது அது முகத்தை விகாரமாகக் காட்டும். //
:-) எவ்வளவு உண்மை.
எல்லாவற்றிற்கும் ஒரு நிறம் உண்டு. அது தேவையும் கூட. பார்வையில் பழுது வரும்வரை, நிறமே ஒரு நினைவை மீட்கும். அதுவே பல அர்த்தங்களை உருவாக்கும். அது ஒரு ரகசியக் குறியீடாக மனத்தின் அடிநாதமாய் புரிதலை அமைத்துக்கொடுக்கும். நிறம் மாறாது. ............. Very nice. Good to have you back in the blog world.
கருப்புதான் புரட்சியின் நிறம் என்று நிருபித்து காண்பித்தார் அய்யா பெரியார் அதனை போய் மாற்றிவிட்டேர்களே அய்யா....
//வண்ணங்களுக்கும் மனநிலைக்கும் தொடர்பு இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள்.//
அப்போ நீங்க அப்படி கருதலையா, டாக்டர்? என்னமோ நிறங்களைக் கொண்டு கூட தெரபி கொடுப்பதாகவும் கேள்விப்படுகிறேனே? அப்போ அது?
பிகாஸோ ஓவியங்களில் ஒவ்வொரு காலகட்டத்திற்கு என வண்ணங்களின் பிரயோகத்தைக்குறிப்பிடுவார்க.அவர் மனநிலை மாறவில்லை, வண்ணங்களின் தேர்வு தான் மாறியிருந்தது
////என் வாழ்க்கையில் பல வண்ணங்கள் சாயம் என்று தெரியாமல் நிறம் என்று நம்பி ஏமாந்திருக்கிறேன்///
இது பலர் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது ..நல்ல பதிவு
welcome back after a very short gap. Came with informative (colourful) post.
கருப்பும் சிவப்பும் பற்றிய கருத்துப் பதிவு அருமை டாக்டர் சொல்லமலே புரிய வைக்கும் உங்கள் உத்தி அருமை
என் சின்ன மகனுக்கு ஏனோ கறுப்பு நிற உடைகள் மிக பிடிக்கும் ஏன் இவன் எல்லா சமயத்திலும் இதையே தேர்ந்து எடுக்கிறான் என நினைப்பேன் இதற்கு ஏதேனும் உளவியல் காரணம் இருக்கிறதா டாக்டர்
ஏடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றி என் கல்லூரிப் பருவத்தில் அறிந்தேன் எல்லாவற்றிற்கும் உங்கள் வலைத்தளத்கில் விடை இருக்கிறது டாக்டர்
ஒரு நிகழ்வு ஒருவருக்கு எழுத்தாய் மாறுகிறது ஒருவருக்கு சேவை செய்யும் வாழ்க்கையாய் மாற்றுகிறது அருமையான பகிர்வு டாக்டர் எல்லா பின்னுட்டத்தையும் இங்கேயே எழுதி விட்டேன் டாக்டர்
நிறம் இயற்கை .சாயம் அப்படி அல்ல.சரியா?
Post a Comment