skip to main |
skip to sidebar
அவள் பெயர் தெரியாது, முகம் கூடச் சரியாகத் தெரியாது.
ஆனால் அவளுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.
சென்னை மருத்துவக்கல்லூரியில் கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவை தேவைப்படும்போதெல்லாம் எனக்கு அவள்தான் உதவியிருக்கிறாள்.
இடுப்பில் கூடம் சுமந்து, தலையில் சுள்ளி சுமந்து, குளத்தில் நீர் மொண்டு, மரத்தடியில் நின்று..பலவாறு எனக்கு உதவியிருக்கிறாள்.
அவசரத்திற்கு அவள் தான்.
அவளைத்தவிர சிவந்தவானம், மாட்டுவண்டி, கோவில்கோபுரம்...இவையும் எனக்கு உதவின, ஆனால் இவை அந்தந்த நேரத்துச் செலவுக்காக மட்டுமே. முக்கியமான ஒன்றிற்காக அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் அவள் தான்.
அவளது வளைவுகள் எனக்கு அனிச்சையாக வரையுமளவு பரிச்சயம். அவளை முதலில் எங்கு பார்த்திருப்பேன் என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நான் சென்னையின் மனிதன். நகைச்சுவை, பாராட்டு, கோபம், சலிப்பு என்று பல உணர்ச்சிகளையும் ‘ஓ..’ என்று வெளிப்படுத்துமளவு சென்னையின் தமிழன். என் நகரத்து வாழ்க்கையில் இப்படிக் குடம் சுமந்து, நீர் மொண்டு, தலையில் சுள்ளி தூக்கிக்கொண்டு போன பெண்களைப் பார்க்காத அளவு ஒரு சுமாரான பூர்ஷ்வா வாழ்வில் வளர்ந்தவன்.
பணம் தேவைப்பட்டது. திருடவும் பிச்சை எடுக்கவும் துணிவோ திறமையோ மனத்தின் ஒப்புதலோ இல்லாததால் படம் வரைந்து சம்பாதிப்பதைத் தவிர அன்று வேறு வழி தெரியவில்லை. அப்போது தான் அவள் தோன்றினாள் ஒருவேளை என் தந்தையின் நண்பரும் சகஓவியருமான ஜோசெப் அவளை வரைந்திருந்தது எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கும். ஆனால் அவரே “ நீ வேற மாதிரி வரையறே” என்று அவளிடமிருந்து என்னை அன்னியப்படுத்தி விட்டார். அதன்பின் அவளை சலிக்காமல், சிந்திக்காமல் வரைந்து கொண்டிருந்தேன். அன்று பிரஷில் இன்று மௌசில்!
அவளை இந்த 2010 ஆண்டிற்கான படமாக உங்களுக்கு அளிக்கிறேன். இது என் ஓவியத்திறமையின் சான்றாக அல்ல, உங்களுடன் நான் உணரும் நெருக்கத்தின் அடையாளமாக.
ஒவ்வொரு நாளும் புதிதுதான் என்றாலும், புதிய ஆண்டின் புது ஆரம்பநாள் எனும் கணக்கை நாம் ஏற்றுக்கொண்டதால், (நம் நாட்டின் ரோமாபுரி மன்னர் இதை இன்னும் மாற்றாததால்) புத்தாண்டின் முதல் நாளை நன்னாளாய்க் கருதி என் நல்வாழ்த்துகள்.
15 comments:
Wishing you this year a great writing experience , what else you need Dr? My Best wishes
இதையும் புத்தாண்டின் நினைவில் வைத்துக்கொள்வோம் :
ராத்திரி கூத்தில்
முட்டிகள் வலித்தன
அடித்த சாராயத்தின்
நாற்றம் பரவியிருந்தது
படுத்திருந்தான் மகன்
ஓட்டலில்
கருகிப்போன வயலில்
வாங்கிய புட்டியை
மிச்சம் வைக்காமல்
உறிஞ்சி குடித்தான்
அப்பன்
பாலிடாலை
பிறந்து விட்டது புத்தாண்டு
kalagam.wordpress.com
டாக்டர், உங்கள் இடுகைகளில் வரும் ஒவியங்கள் அத்தையும் நவீன வாழ்க்கையின் தெரிந்த தெரியாத கோடுகளின் உணர்ச்சியை வியப்புடன் மீட்டு வருகிறது. தொழில் முறையில் மருத்துவத்திற்காக அதிக நேரம் செலவழிக்கும் நிர்ப்பந்தத்திலும் உங்கள் தூரிகைகள் நெடுங்காலமாய் தனது வீரியத்தை இழக்காதது மட்டுமல்ல முன்னிலும் கூர்மையாய் படிமங்களை கவிதை போல உணர்த்துகின்றன. இந்த இடுகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெண்ணின் பழைய படங்கள் கைவசம் இருந்தால் வெளியிடலாம். அவற்றை காண ஆவலாக உள்ளோம். நன்றி
NEW YEAR WISHES TO YOU AND YOUR FAMILY MEMBERS.
/உங்களுடன் நான் உணரும் நெருக்கத்தின் அடையாளமாக. /
உணர்கிறோம் நாங்களும்!
அருமை.
அருமையான ஓவியம்
Wish you Very Happy New Year 2010
ஒரு நாதஸ்வரமும், நாட்டியமும் போல..
உங்கள் கவிதையும்,சித்திரமும்..
ஒன்றோடொன்று இணைந்து..இயைந்து...
மொத்தத்தில் 'சூப்பர்'
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010
முகமில்லாப்பெண் எந்த அடையாள்மும், குறிக்கோளும் இல்லாமல் வாழ்ந்து மடியும் அனேக பெண்களை நினைவுறுத்துகிறது டாக்டர் சார். அழகான ஓவியம். புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.
மனதிற்கு நெருக்கமான, சமூக அக்கறை கொண்ட பதிவுகள். உங்களை தமிழ்மண நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கு நன்றிகள். (இல்லைன்னா... இத்தனை பதிவுகள் வந்திருக்குமா! வந்திருக்கும் கொஞ்சம் தாமதமாய் வந்திருக்கும்.)
been having few problems but i couldnt contact u. can i mail? Happy new yr.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"முகம் தெரியாப் பெண்ணின்" ஓவியம் அழகு.
Post a Comment