நாடக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, மனவியல் ஆர்வலர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் ஈடிபஸ். ஸோஃபக்ள்ஸ் எழுதிய கிரேக்க துன்பியல் நாடகங்களில் சிறந்த இந்நாடகம், மனவியலை அறிவியலாக நிறுவ முதல் முயற்சியெடுத்த ஸிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களையும் மிகவும் பாதித்த ஒரு நாடகம்.
ஒரு மாலை நேரம் இந்நாடகத்தைப் பார்க்கநேர்ந்த ஃப்ராய்ட் நாடகக்கருவைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் எனும் மனவியல் கோட்பாடு ஒன்றினை முன் வைத்தார். பலத்த சர்ச்சையைக் கிளப்பிய அவரது அந்த சித்தாந்தம், அறிவியல் முறைப்படி தொடர் பரிசோதனைகளால் இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அதில் ஓர் அடிப்படை இழை நிஜம் என்று பலரின் அனுபவங்களும் கூறிவந்துள்ளன.
ஃப்ராய்ட் சொன்னது: எல்லா ஆண் குழந்தைகளும் தங்கள் தாயிடம் காதலைப்போல் ஓர் ஈர்ப்பு கொள்கின்றன, அதன் காரணமாகவே தந்தையிடம் கிட்டத்தட்ட வெறுப்பும் கொள்கின்றன. அந்த ஆண் குழந்தை தன் தந்தையால் காயடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.
இதை அப்படியே எடுத்துக்கொள்வது கூடாது. எதிர்பாலினத்தின் மீதான கவர்ச்சி மட்டுமல்லாமல், தாயின் தொப்புள்கொடியிலிருந்து தொடரும் பிணைப்பின் நீட்சியாகவும்,அவள் பாலூட்டுவதால் இயல்பாய் ஏற்படும் ஒட்டுதல் என்றும் பார்க்கவேண்டும். மேலும் எல்லா ஆண் குழந்தைகளும் தந்தையை வெறுப்பதில்லை. பின் ஏன் ஃப்ராய்ட் அப்படிச் சொன்னார்?
ஃப்ராய்ட் மிகப்பெரிய மேதை, ஆனாலும் பரபரப்பிற்கும் புகழுக்கும் ஆசைப்படும் அவசரக்காரரும் கூட! இன்னும் கொஞ்சம் யோசித்து இந்த ஈர்ப்பு பாலுணர்வின் அடிப்படையில் வருவதல்ல பாசம் எனும் அன்பின் அடிப்படையில் வரும் இயல்பான ஒட்டுதல் என்று முடிவெடுக்கும் முன்பேயே இந்தக்கருத்தை வெளியிட்டு விட்டார். சில அறிவாளிகள் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்துகொள்ள மறுப்பது போல்தான் ஃப்ராய்டும் தன் கருத்தில் அடம் பிடித்தார். மானுட வளர்ச்சி, மனத்தின் வளர்ச்சி எல்லாமே பாலுணர்வின் அடிப்படையில்தான் என்று வாதிடும் அளவும் முரண்பிடித்தார்.
ஃப்ராய்ட் பற்றி பிறகு பார்ப்போம், இப்போது ஈடிபஸ் கதை....
கிரேக்க நாட்டில் மிகவும் பழைய காலத்தில்..ஓர் அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது நாட்டின் சோதிடர்களூம் பூஜாரிகளும்,' இந்தக் குழந்தை தந்தையைக் கொன்றுவிட்டு, தாயை மணந்து கொள்ளும்' என்று ஆரூடம் சொன்னார்கள். அரசனும் அதை நம்பி அந்தக்குழந்தையைக் கொன்றுவிடச் சொன்னான். குழந்தையை கொல்ல மனமில்லாத சேவகன் அதை ஒரு மலையடிவாரத்தில் விட்டுச்சென்றான்..பல ஆண்டுகளுக்குப்பின், அரசன் வேட்டைக்குப் போகும்போது வழியில் ஓர் இளைஞனிடம் சண்டைபோட அரசனை இளைஞன் கொன்று விடுகிறான்..பிறகு நாட்டிற்குள் நுழைந்து காவல் தெய்வத்தின் கேள்விகளுக்குப்பதில் சொல்லியதால், அந்த நாட்டின் வழக்கப்படி ராணியை மணக்கிறான்..அவன் தான் ஈடிபஸ், இறந்த அரசன் அவன் தந்தை, அவன் மணந்தது தன் தாயை..பிறகு பல ஆண்டுகளுக்குப்பின் நாட்டில் பஞ்சம். அது தீர்க்க ஆரூடம் கேட்கும்போது தான் உண்மை அவனுக்குத்தெரிகிறது..ராணி தற்கொலை செய்துகொள்கிறாள், ஈடிபஸ் தன்னைக் குருடாக்கிக்கொள்கிறான்.
இதை முத்ரா நாடகக்குழு தமிழில் 1988ல் அரங்கேற்றியது. அந்த நாடகத்திற்கு அரங்கு நிறைந்தது மட்டுமல்லாமல் ஆனந்தவிகடனில் வண்ணப்படத்துடன் ஒரு முழுப்பக்கப் பாராட்டும் கிடைத்தது. (அந்த நாடக அனுபவங்கள் நீளம் கருதி இன்னொரு பதிவில்).
இப்போது ஈடிபஸ் பற்றி..
கதை தான் ஆனாலும் அதிலும் சேதிகள் இருக்கின்றன.விதி வலியது அதை வெல்ல முடியாது என்பதே கதையின் மைய இழை. இது அன்றுமட்டுமல்ல, இன்றும் மக்களிடையே நிலவும் ஒரு பயன் தராத நம்பிக்கை. பயனேதும் இல்லாததால் மூட நம்பிக்கை.
தன்னை ஒருவன் கொல்வான் என்ற அச்சம் வந்தால் மனித குணம் அதற்குமுன் அவனை அழித்துவிடவேண்டுமென்றே இருக்கும். அச்சம் வந்துவிட்டால் சுயபாதுகாப்பு முக்கியமாகிவிட்டால் பாசம் மனத்தில் முதலிடம் வகிக்காது..
அம்மாவைப்போல் ஒரு மனைவி வேண்டும் என்ற ஆழ்மனத்தின் எதிர்பார்ப்பும் நிறைய ஆண்களிடம் உண்டு. தன்னைப்போல் என்றும் தனக்குப்பதிலாக என்றும் பல மாமியார்கள் பொறாமையால் வம்பு செய்வதும் இதனால் தான் என்ற நோக்கில் பார்க்கலாம்.
ஃப்ராய்ட் சொன்னது போல் தந்தை தாயிடமிருந்து பிரித்துவிடுவான் என்ற நேரடி எண்ணம் இல்லாவிட்டாலும், புரியாத வயதில் பல குழந்தைகள் தந்தையும் தாயும் இணைந்திருப்பது தங்களைத் தள்ளிவைக்கவே என்று கருதலாம்..
இங்கே நம் புராணக்கதை ஒன்றையும் இணைத்துப்பார்ப்போம்..
தேவி குளிக்கப்போகும் போது தன் உடலிலிருந்து ஒரு குழந்தையை உருவாக்கி யாரும் வராமல் காவல் இரு என்கிறாள். அவள் கணவன் ஈசன் வருகிறான், யாராயிருந்தாலும் அனுமதி இல்லை என்று அந்தக்குழந்தை சண்டக்குப்போக, தன் மனைவியின் குழந்தை என்று தெரியாத ஈசன் அதன் தலையை வெட்டிவீசுகிறான். பிறகு உண்மை தெரிய அதற்கு வேறொரு தலையைப்பொருத்திவிடுகிறான்.
இந்தக்கதையில் ஃப்ராய்ட் சொன்ன கூறுகள் உள்ளன. தாய்க்காக தந்தையை எதிர்க்கும் குழந்தை, காயடிக்கப்படுவது போல் தலை வெட்டப்படுகிறது..!! இந்தக்கதையில் இன்னொரு விஷயம்: அந்தக்குழந்தை மிகமுக்கியமான தெய்வமாக ஆனபோதும் தன் தாயைப்போல் ஒருத்தி கிடைக்காததால் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருக்கிறது!!
இதுபோல் கதைகளையெல்லாம் இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் வாழ்வில் பல அர்த்தங்கள் விரிவாகும்..
a recent interview
6 years ago
10 comments:
சுவாரசியமான விளக்கம். ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதனுடன் இந்திய மித்தாலஜியை சேர்த்து விளக்கமளித்தது இன்னும் சுவாரசியமாக இருந்தது. நன்றி!
அருமையான பதிவு
பிராய்ட் சொன்ன கருத்துடன் நானும் உடன் படுகிறேன்.
ஆண் மகனுக்கு தன தாய் மீது ஈர்ப்பு பாசம் அதிகம் வருகிறது, பெண்ணிற்கு தன் தந்தை மீது அதிக பாசம் ஈர்ப்பு வருகிறது.
ஒரு வேளை தாய் கொடுக்கும் தாய்ப்பால், தொப்புள் கோடி மூலம் ஒட்டுதல் ஈர்ப்பு உருவாகலாம் என்றால், தந்தை மீது எப்படி வருகிறது ஈர்ப்பு.
அதே போல ஆண் குழந்தை போலவே பெண் குழந்தைக்கும் தாய் பால் கொடுக்கிறாள், தொப்புள் கோடி உறவு...
முடிந்தால் நீங்கள் விளக்குங்கள்
குழந்தைகள் தனக்கும் தாய்க்குள் உள்ள தொடர்ப்பு எது என்பதை இன்னொரு கற்பிணிப் பெண்ணைப் பார்த்து தெரிந்து கொள்கிறது, நம் பிறப்புக்கும் அம்மா காரணம் என்று நம்புவதால் தாயுடன் ஒட்டுதல் மிகுதியாக இருக்கும், தந்தை எதையும் வாங்கிக் கொடுப்பவர், கொஞ்சுபவர் கிட்டதட்ட ஒரு பெரிய அண்ணன் என்பது போல் தான் தந்தையைப் பற்றி நினைக்கும். பால் உறவுகள் பற்றிய புரியும் போது தான் தன்னுடைய பிறப்பில் தந்தைக்கும் பங்கு இருப்பதை புரிந்து கொள்வார்கள். இது ஆண் குழந்தை பெண் குழந்தை இருவருக்கும் பொதுவானதே, ஆண் குழந்தைக்கு தாய்மீது ஈர்ப்பு மிகுதியாக இருப்பதற்குக் காரணம் அவளும் வருங்காலத்தில் தன்னைக் காப்பவன் என்று கூடுதல் அன்பை செலுத்துவதனால் ஏற்படும் ஒன்று என்றே நினைக்கிறேன்.
உங்கள் பதிவு அருமையாக இருந்தது. ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றி கல்லூரி நாட்களில் படித்துள்ளேன் . பகிர்வுக்கு நன்றி .
//ஃப்ராய்ட் பற்றி பிறகு பார்ப்போம்//
பிறகு சீக்கிரம் வரட்டும். ஃப்ராய்ட் குறித்த தங்கள் மதிப்பீட்டை அறிய ஆவல்.
ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பின் ஈடிபஸ் ஈர்ப்பு தொலைந்துவிடும்.இது குறித்த உங்கள் சொந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டும்.வாசகர்கள் என்ன இதிலிருந்து கற்று கொள்ளனும்?
பூங்கொத்து!
nanraai irukkiradhu :-)
இந்தக் கதையில் ஈடிபஸ் எங்கிருக்கிறது. கதைபடி அவன் வென்ற நாட்டின் அரசி யாராயிருந்தாலும் அவன் மணந்திருப்பான். ஈர்க்கப்பட்டு ஈடுபடுவதுதானே ஃப்ராய்டின் ஈடிபஸ்.
ஃப்ராய்டின் ஈடிபஸ் சிக்கலுக்கு முரண்பட்ட உளவியலாளர்கள் யார் ஸார்?
Post a Comment