Wednesday, December 30, 2009

கருணையும் கொலையும்


அருணா என்ற பெண் உடலா உயிரா? 1973 முதல் இன்றுவரை அவள் எவ்வித உணர்வுமின்றி படுக்கையில் கிடக்கிறாள். உயிர் போகவில்லை; உணவு உடலுள் செல்கிறது. தனியாய் ஒரு மருத்துவமனையின் மூலையறையில் தனியாய் இருக்கிறோம் என்று தெரிந்துதான் அந்த உயிர் இன்னும் உடலை விட்டுப் பிரியாமல் இருக்கிறதா? அந்த உடல் இனி எழுந்து நடக்காது, வாய் பேசாது, சிரித்துத் தவழ்ந்து ஒரு குழந்தை எதிர் வந்தால் தூக்கிக்கொஞ்ச கை நீளாது. ஆனால் அவளுக்கு ஒரு படுக்கை இருக்கிறது, சரியான நேரத்துக்கு உணவு கிடைக்கிறது, உடல் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. 

அவள் மூச்சுத்திணறி நினைவு இழக்கும்போது, வயது 25. அவள் கடைசியாகச் சிரித்தது அன்றுதான், கடைசியாகக் கதறியதும் அன்றுதான். 60 வயது என்பது வெறும் ஆண்டுகளின் கணக்கு மட்டுமே. அவள் மனதுக்கு என்ன வயதிருக்கும்? கண்களில் காணாதுபோன 36 வருடங்கள், அவளது மூளையில் என்ன விதத்தில் பதிவாகியிருக்கும்? அவள் காதுகள் வழியே ஒலிகள் உட்புகுந்தாலும் என்னென்ன அர்த்தங்க்களை அமைத்துக்கொள்ளும்? பர்மனின் இசைக்கும் ரஹ்மானின் இசைக்கும் ஏற்பட்டுள்ள மாறுதல்களை உள் அமையும் ரசனை எவ்வாறு புரிந்துகொள்ளும்? எதை இன்று தேர்ந்தெடுத்துக் கேட்க விரும்பும்? 

செயலற்று இருக்கும் அந்த உடல்தான் அருணாவா? அவள் சிதைந்தபின் சில ஆண்டுகள் காத்திருந்த காதலனுக்கும், அவளை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த கயவனுக்கும் காலம் வாழ்க்கையின் வேறுவேறு அவசியங்களை அமைத்துக் கொடுத்துவிட்டது. சட்டத்தின் சல்லடைவழியே அந்தக் கயவன் ஒரு குறிப்பிட்ட தண்டனையின் குறிப்பிட்ட காலம் முடிந்ததால் வேறு ஊரில் குற்றவாளியாகக்கூடக் கருதப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பான். 
அவள் செத்துக்கொண்டிருக்கிறாள், மிகமிக மெதுவாக. 
இப்படியொரு வாழ்வு தேவையில்லை, அவளைக்கொன்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள், ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.கொல்வதென்றால் எப்படி என்று யாரும் சொல்லவில்லை. சில நினைவிழந்த நிலையில் இருக்கும் தீவிரநோயாளிகளைப்போல் அவளது மூச்சையும் இதயத்தையும் யந்திரங்கள் இயக்கிக்கொண்டிருக்கவில்லை; அப்படி இருந்தால் அந்த யந்திரத்தின் ஓட்டத்தை நிறுத்தி அவளது உயிரையும் அழித்துவிடலாம். இவள் சும்மா கிடக்கிறாள். சில ஆயாக்களும் சில செவிலியர்களும் அவளுக்கு உணவு ஊட்டி, உடலைப் பராமரிக்கிறார்கள். 36 ஆண்டுகளாக இப்படிக்கிடக்கிறாள். அவளைக் கொல்வது கருணையா? 


அவளைப்பற்றிப் படிக்கும்போது ஒரு பரிதாப உணர்வு மனத்துள் எழுவது இயல்பு. அவள் படிக்கும் நமக்கெல்லாம் ஒரு பெயர். சில பத்திரிகைகள் வெளியிட்ட அவளது படம் 1973க்கு முந்தையது.வெறும் ஒரு பெயராக, எப்போதோ எடுக்கப்பட்ட படம்வழி ஒரு பிம்பமாக அவள் நம்முள் ஏற்படுத்தும் அந்தக் ‘கருணை’ உணர்வு நிஜமாகவே நமக்குள் இருக்கிறதா? இல்லை இதற்கெல்லாம் பரிதாபப்பட வேண்டும் எனும் சமூக நியதியை நாமே நமக்குக் கற்பித்துக்கொள்கிறோமா? 

கருணையின் பெயரால் அவளைக் கொள்ளவேண்டும் என்று வாதிடுவோருக்கும் ஒரு நியாயம் இருக்கும் வாதிட. என் இப்பதிவின் அக்கறை அவர்களின் நியாயத்தைப் பற்றியல்ல, நம் கருணையின் வீச்சு பற்றி, அதன் போக்கு பற்றி. 

அன்னியமானதால்தான் அவள் மீது நமக்குக் கருணை வருகிறதா? அவளே நமக்கு நெருக்கமானவளாக, நாம் பழகிய ஒருவளாக இருந்தால் இதே கருணை வருமா? கருணை என்பது அன்பின் வெளிப்பாடு. அன்பு என்பதும் ஒரு பிரதிபலிப்பில்லாமல் தொடர்வதில்லை. 

நண்பராக இருந்தாலும், நாயாக இருந்தாலும், நெருங்கிய உறவினராக இருந்தாலும் நாம் அன்பு காட்டி அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எதிர்வினை இல்லாவிட்டால், எவ்வளவு காலம் அதே அளவில் அதே அன்பு தொடரும்? வெறுப்பு வராவிட்டாலும் சலிப்பு வரும். அந்தச் சலிப்பு ஒருநாள் அக்கறையின்மையாக மாறும். முன்பு நாம் அன்பு காட்டியவர் அந்த நேரத்தில் என்ன ஆனாலும் நமக்குள் எந்த உணர்வுமீட்டலும் இருக்காது. 

வாழ அன்பு அவசியம். அன்பு வாழ அது பிரதிபலிக்கப்படுவதும் அவசியம். நாம் அன்பு கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அன்பு காட்டுகிறோமா? அதற்கு நேரம் இருக்கிறதா? நெருக்கம் என்பது அன்பின் வெளிப்பாட்டிற்கு விலக்கு அளிக்கிறதா? நெருங்கிவிட்டபின் விலகப்போவதில்லை என்று தீர்மானமானபின் அன்பு மனத்துக்குள் இருந்தால் போதும் என்றால், அது அன்பு தானா? ஆரம்பத்தில் இருந்த அளவு குறைகிறது என்றால் அது முதலிலேயே அன்பு தானா இல்லை நெருக்கமாவதற்கான ஒரு யுத்தியா? உறவுகளில் சிக்கல் உள்ளவர்கள் மனத்துள் அடிக்கடி ஏற்படும் குழப்பங்களின் கேள்விகள் இவை.அன்பு காட்டுவது என்றால் எப்படி? அதுதான் இருக்கிறதே தெரியவில்லையா..என்பதே பலரது சமாதானம். 

அன்பைக் காட்டுவது புன்னகையால், புரிதலால், பகிர்தலால், நம்பிக்கையுடன் நிஜமாய் இருப்பதால்.. மிகவும் எளிது. ஆனால் இன்றைய நகரக்கலாச்சாரத்தில் நேரமின்மையே அன்பு காட்டப்படுவதைக் குறைக்கிறது. தொலைக்காட்சியில் காட்டப்படும் குடும்பக்கதைகளில் மூழ்குவோருக்கு, சொந்த குடும்பத்தின் கதையுடன் தொடர்பு குறைந்து வருகிறது. 
நுகர்வு கலாச்சாரம் ஆசைகளைத் தேவைகளாக மாற்றிவருவதால், உழைக்கவும் பணம் சேர்க்கவுமே மனம் அலைபாய்கிறது. நேரம் குறைவதால் நெருக்கமும் குறைகிறது. நெருக்கம் குறைவதால் அன்பு வெளிப்படாமல் உள்ளேயே காய்ந்து விடுகிறது. யந்திரத்தனத்தில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் சிரிக்கக்கூட திரைக்கோமாளிகள் தேவைப்படுகிறார்கள். 

ஒவ்வொரு வீட்டிலும் இப்படி உணர்வுகள் கொல்லப்படுகின்றன, உறவுகள் நசுக்கப்படுகின்றன. இது குறித்து அக்கறை வந்தால், நேரத்தை உருவாக்கிக்கொள்ளலாம். நம் மீது நமக்கே கருணை இருந்தால் நாம் உறவுகளை நம் சூழலை அன்பு மிகுந்த அமைதியுடன் அமைத்துக்கொள்ளலாம். அவசரங்கள் என்று ஓடிக்கொண்டே இருந்தால், எப்போதாவது பத்திரிகையில் யாரைப்பற்றியாவது படித்துவிட்டு, அந்தச்சில நிமிடங்கள் மட்டுமே அன்பும் கருணையும் பொங்கும்.

கொல்வது கருணையா எனும் கேள்வியை மீண்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.உயிர் என்பது வெறும் உடலின் இயக்கம் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் இயக்கமும் என்று புரிந்தால், எத்தனை உயிர்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம் என்பது புரியும். உதாசீனப்படுத்துவதும் கொலைதான், அதில் எந்தக் கருணையும் கிடையாது.

18 comments:

அரங்கப்பெருமாள் said...

இது உண்மைதான்.

”நட்டக் கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” எல்லாம் நம்மிடம்தான் உள்ள்து. சிலருக்கு(பலருக்கு?) வெளிப்படுத்தக் கூடத் தெரியாது. அதனால்தான் அதில் புரிதலும்,பகிர்தலும் முக்கியம்.

”மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்” என்றார் வள்ளுவர்.

கடைக்குட்டி said...

ஆனால் இன்றைய நகரக்கலாச்சாரத்தில் நேரமின்மையே அன்பு காட்டப்படுவதைக் குறைக்கிறது. //

கண்டிப்பாக.. அருணாவின் கதையைப் படிக்கும் போது நீங்களே சொல்வது போல் பரிதாப உணர்வு எழுவது இயல்பு.. ஏன்னா... எங்களுக்கெலாம் அது கதை..
/உதாசீனப்படுத்துவதும் கொலைதான், அதில் எந்தக் கருணையும் கிடையாது. //

ரொம்ப யோசிக்க வைத்த வார்த்தைகள்...

//

ராமலக்ஷ்மி said...

அருணாவைப் பற்றி நானும் பத்திரிகை மூலமாக அறிந்தேன். தொடர்பாக நீங்கள் சொல்லியிருப்பவை யாவும் வெகு அழகு. வாசிக்கும் அனைவரையும் சிந்திக்க வைக்கும். நல்ல பகிர்வுக்கு நன்றி.

Rajan said...

//நண்பராக இருந்தாலும், நாயாக இருந்தாலும், நெருங்கிய உறவினராக இருந்தாலும் நாம் அன்பு காட்டி அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எதிர்வினை இல்லாவிட்டால், எவ்வளவு காலம் அதே அளவில் அதே அன்பு தொடரும்? //

குட் கொஸ்டீன் !

Rettaival's Blog said...

அற்புதம் டாக்டர்! இதைப் படித்தவுடன் JUST LIKE HEAVEN என்ற சினிமா ஞாபகத்துக்கு வந்தது, அது ஒரு சாதரண காதல் கதை என்றாலும் இப்போது அதனுள் ஏதேனும் விஷயம் பொதிந்திருக்குமா என்று பார்க்கத் தோன்றுகிறது. நம் கருணைகள் எல்லாம் ஏதோ ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் வந்தாலே வெளிப்படுகிறது(சுனாமி, பூகம்பம் போன்றவைகள்). அப்படி ஒன்று நடந்தால் நாம் சிந்தும் ஆறுதல்கள்,கண்ணீரே கருணை என்ற கற்பிதம் இது நாள் வரை இருந்து வந்தது. மாற்றி யோசிக்கவைத்து விட்டீர்கள்!

அன்புடன் அருணா said...

/உதாசீனப்படுத்துவதும் கொலைதான், அதில் எந்தக் கருணையும் கிடையாது./
100%உண்மை

Bruno said...

//
நண்பராக இருந்தாலும், நாயாக இருந்தாலும், நெருங்கிய உறவினராக இருந்தாலும் நாம் அன்பு காட்டி அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எதிர்வினை இல்லாவிட்டால், எவ்வளவு காலம் அதே அளவில் அதே அன்பு தொடரும்? வெறுப்பு வராவிட்டாலும் சலிப்பு வரும். அந்தச் சலிப்பு ஒருநாள் அக்கறையின்மையாக மாறும். முன்பு நாம் அன்பு காட்டியவர் அந்த நேரத்தில் என்ன ஆனாலும் நமக்குள் எந்த உணர்வுமீட்டலும் இருக்காது.
//

உண்மைதான் சார்

குப்பன்.யாஹூ said...

cant we try to give treatment and recover her. is it a non recoverable disease.
As u said consumerism and market economy has affected our society and people are running to earn money, chasing deadlines, targets.

But what to do, we voters have opted for a capitalistic government so we have to bear with the effects.

eniasang said...

நாம் சமயங்களில் பெரிதாக ஒன்றுமில்லாமலேயே அலுத்து சலித்துக் கொள்வதெல்லாம் எத்தனை அபத்தம். ”உறவுகள் நசுக்கப்படுகின்றன” உண்மைதான். அன்பு நம்மிடமிருந்தும் செலுத்த வேண்டியவர்களிடம் உ.ம் பிள்ளைகள் அன்றாட நியமன சிக்கல்களில் மற்ற பிற உணர்வுகளே அதிகம் வெளிப்படுத்தும்படியாகி விடுகிறது உ.ம் கண்டிப்பு கட்டுப்பாடுetc.அல்லது அன்பு என்ற பெயரில் செல்லம் கொடுத்து விடுகிறோம் . வாழ தெரியாமலே வாழ்ந்து வருகிறோம் .

jothi said...

திருப்தியான பதிவை படித்த உணர்வு. நன்றி

ஜிகர்தண்டா Karthik said...

//இல்லை இதற்கெல்லாம் பரிதாபப்பட வேண்டும் எனும் சமூக நியதியை நாமே நமக்குக் கற்பித்துக்கொள்கிறோமா?//
இதுதான் உண்மையென்று நினைக்கிறேன்.

Thenammai Lakshmanan said...

//வெறுப்பு வராவிட்டாலும் சலிப்பு வரும். அந்தச் சலிப்பு ஒருநாள் அக்கறையின்மையாக மாறும். முன்பு நாம் அன்பு காட்டியவர் அந்த நேரத்தில் என்ன ஆனாலும் நமக்குள் எந்த உணர்வுமீட்டலும் இருக்காது.//

நிச்சயமாக அவள் மேல் அன்போ பரிவோ செலுத்தக்கூடியவர்களைஅவள் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறாள் ..
அவளைப் பராமரிப்பவர்கள் ---- வெவ்வேறு பணியாட்கள் மாறி இருக்கலாம்.. ஏனெனில் நீங்கள் கூறியபடி என் உறவில் வயதானவர்களே இந்த மாதிரி பராமரிக்கக் கூடிய ஒரளவேனும் அன்பு செலுத்தக் கூடிய பணியாளர்கள் கிடைத்ததால் இன்னும் 2 3 வருடங்கள் வாழ்ந்தவர்கள்... ஆனால் கோமா அல்ல.. படுத்த படுக்கை.. மற்ற எல்லோரும் கோபமும் வெறுப்பும் சலிப்பும் அடையும் போது அவர்களின் வாழ்வு முடிந்து போய் விடுகிறது ..

இது நான் கண் கூடாகக் கண்ட உண்மை ..

புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர் ருத்ரன்

இனியன் பாலாஜி said...

"இது குறித்து அக்கறை வந்தால், நேரத்தை உருவாக்கிக்கொள்ளலாம். நம் மீது நமக்கே கருணை இருந்தால் நாம் உறவுகளை நம் சூழலை அன்பு மிகுந்த அமைதியுடன் அமைத்துக்கொள்ளலாம்."
உண்மைதான் டாக்டர்
நாம்தான் அதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எல்லோருமே அன்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தால் எப்படி
நாமாவது அன்பை கொடுப்போமெ..அதனால்தான் என்னுடைய இல்லத்தில்
குடும்பக் கதைகள் ஓடாது,இரவு நேரங்களில் எனது தம்பிகள் இருவர் அவர்களது மனைவிகள்
குழந்தைகள் என்று ஒரே பட்டாளமாக அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டிருப்போம். கண்டிப்பாக
நேரத்தை ஒதுக்கியே ஆக வேண்டும். இன்றைய அவசர உலகில் ப்ணம் சம்பாதித்து கொண்டிருப்பவர்களும்
பறந்து கொண்டிருக்கிறார்கள்.பணத்தை தேடிக்கொண்டிருப்பவர்களும் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலான வீடுகளில் நாம் சென்றால் அவர்களுடன் நாமும் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டேதான்
நாமும் பேசவேண்டி இருக்கிறது.எனக்கு தெரிந்த பிரபல டாக்ட்ர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது
உடனே அவர் தொலை காட்சி பார்பதை நிறுத்தி விட்டார். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இனியாவது இதை படித்தவர்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் ந‌ல்லது
நன்றி
இனியன் பாலாஜி

hemikrish said...

//உயிர் என்பது வெறும் உடலின் இயக்கம் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் இயக்கமும் என்று புரிந்தால், எத்தனை உயிர்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம் என்பது புரியும். //

well said....

thozharmahi said...

நல்ல பகிர்வு ......

Muthiah Ramanathan said...

For some 'machine made men', she may appear to be a waste material to be thrown into the cemetery.

She is a symbol of our Collective Shame !

We need to take responsibility for her Life irrespective who perpetrated it !

Manidha neyam enbadhu idhudhan !

Not singing:

Saare jehan se Accha,
Hindustan Hamara !

Muthiah Ramanathan

Nisha said...

This is so true..every word as I understand it...is hitting into the core issue of humanity. I can relate your view on these abstract concepts to a quote -
O"If a person loves only one other person, and is indifferent to his fellow men, his love is not love but a symbiotic attachment, or an enlarged egotism"
May be it is the enlarged egotism of ours that is being conditional and is expecting something in return...and we have been so cruel in masking that egotism of ours into sweet concepts like...love..affection..!!

gowridentist said...

நண்பராக இருந்தாலும், நாயாக இருந்தாலும், நெருங்கிய உறவினராக இருந்தாலும் நாம் அன்பு காட்டி அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எதிர்வினை இல்லாவிட்டால், எவ்வளவு காலம் அதே அளவில் அதே அன்பு தொடரும்? வெறுப்பு வராவிட்டாலும் சலிப்பு வரும். அந்தச் சலிப்பு ஒருநாள் அக்கறையின்மையாக மாறும். முன்பு நாம் அன்பு காட்டியவர் அந்த நேரத்தில் என்ன ஆனாலும் நமக்குள் எந்த உணர்வுமீட்டலும் இருக்காது.
this makes me understand so many unidentified quarels with in my mind.

Post a Comment