Tuesday, December 1, 2009

ஸரஸ்வதீ நமஸ்துப்யம்..
என் நினைவில் மிகப்பழமையான ஒன்றில், என் அம்மா, பாலில் ஊறிய பழத்தை என் வாயில் நுழைத்து, "ம்ம்ம், சொல்லு" என்றதும், சகிக்கமுடியாமல் அதை முழுங்கியதும், அந்தவெறுப்பு நிறைந்த மனத்துடன் அம்மா சொல்லச்சொல்ல, "ஸரச்வதி, நமச்துப்யம்..." என்று சொன்னதும் மட்டுமல்ல...ரவிவர்மா வரைந்த அவளது உருவத்தில் மயங்கி, வாயிலிருந்த வெறுப்பையும் மீறி உள்ளே ஒரு சுகமான அனுபவமாகவே ஸரஸ்வதி ஆரம்பம். ஒரு ஈடிபல்தனத்துடன் அவளை என் தாயாக மட்டுமல்ல காதலியாகவே காதல் என்னும் வார்த்தை அறிமுகமாகாத வயதில் பாவித்தேன்.

ஒரு காலத்தில் ஒரு பாக்கெட் சார்மினார் வாங்கிக்கொடுத்தால் கவிதை எழுதித்தருகிறேன் என்று விலை பேசி விற்றவற்றுள் ஒன்று என் பழைய காகிதங்களில் கிடைத்தது..
'கண்பார்த்த கண்ணிரண்டும் கண்ணிமைக்க மறந்ததனால்,
கண்ணுற‌ங்கும் வேளையிலும் கண்கனவில் வருகிறது,
கண்கனவில் வருகின்ற கணநேரக் காரணத்தால்
கைநினவில் விரைந்து ஒரு  கவிதையினைத்தருகிறது"....!!!
இந்த வியாபாரமெல்லாம் இருபது வயதுக்குள் முடித்துவிட்டேன்.அடுத்த நான்காண்டுகள் நான் இப்படி யாராவது காதலிக்கிறானா, கவிதை எழுதிக்கொடுத்து ஒரு சார்மினார் பாக்கெட் வாங்கலாமா என்று தவித்ததில்லை. அதற்குள் படம் வரைந்து சம்பாதிக்கத் தொடங்கிவிட்டேன்..வெட்டியாய் எழுதியபின் வெட்டியாகவும் வரைந்து இரண்டுமே சரஸ்வதியின் அருள் என்ற ஒரு நன்றிக்கடனுடன்! ஒரு சுமாரான திரைப்பாடலில் வருவதைப்போல் 'நானென்றால் அது அவளும் நானும்' என்று என்மனம் பாட, அதன் எதிரொலியாய் அவள் குரலில் அதே என் மனம் ‘Oh, there he goes again’ என்று பாடுவதாயெல்லாம் கனவு கண்டுகொண்டிருந்துகொண்டிருந்தேன்..  … கனவுகளின் ஆயுள் கொஞ்சக்காலம் தானே..விழித்தேன் அல்லது விழித்ததாய் நினைத்தேன்.
அறிவு வளர்வதாய் ஆணவமும் வளர்ந்த காலத்தில், அவளை ஒரு பிம்பம், மனோதாகத்தினால் முன்னிறுத்தப்பட்ட ஒரு மாயை என்று ஒதுக்கமுயன்று, தோற்று, தோல்வியை வெளிக்காட்டாமல்..எங்கள் நாடகக்குழுவுக்கு அப்பாலும் நடித்து வந்திருக்கிறேன். உள்ளே காதலும் வெளியே அதைக்காட்டாத அறிவுஜோடனை மிகுந்த அளப்பலுமாய் கொஞ்சகாலம் ஓடியது… அவள் காத்திருந்தாள், நிஜவாழ்வில் காத்திருக்காத காதலிகளைப்போலல்லாமல்..

நியமங்களை விடுத்து, நிர்ப்பந்தங்களை விடுத்து, பிம்பங்களை நிராகரித்து, 'அஹம் ப்ரம்மாஸ்மி' என்றெல்லாம் கூறிகொண்டு, நான் இலக்கிய தேடல்களில் மூழ்கிக்கிடந்தபின், அவள் தோன்றினாள். தாடிவளர்த்து முடியும் நீளமாய் வளர்த்திருக்கிறேன் என்பதால் யாரும் என்னையும் ஒரு 'கடவுள் பார்த்த குருவாகஎந்த மயிருக்கும் அவமானப்படுத்தவேண்டாம். என் மனத்தில் இருந்தது ஒரு தோற்றம்..( வெறும் தோற்ற மாயை- பாரதி சொன்னது/ கண்டது போல்)
இங்கே ஒரு குறள்..'தோன்றிற் புகழொடு தோன்றுக'..அப்படியென்றால்?பிறப்பு தானா அறிவை நிர்ணயிக்கும்? அறிவு தானே புகழை வரவழைக்கும்? ஜெயகாந்தன் எனக்குச்சொன்னது- ‘தோன்றி என்பது பிறந்து என்று அல்ல.. it is not being born, it is appearing’. அவள் தோன்றினாள்.
இன்னும் பல வருடங்கள் கழித்து, ஸரஸ்வதி பூஜை என்பதை ஆயுத பூஜை என்று ஏமாற்றிக்கொண்டபின்..யதேச்சையாக கூத்தனூர் கோவில் பார்க்கப்போனேன்..அப்போது அது ரொம்பவும் பரிதாபமான நிலையில் இருந்தது.
அந்தக்கோவிலில் ஒரு சம்பிரதாயம்..ஸரஸ்வதி பூஜைக்குப்பின், விஜய தசமியன்று, அவளது விக்கிரகத்திலிருந்து அலங்காரம் செய்து, வாசலில், அவளது கால்கள் போல் வெள்ளியில் வைத்திருப்பார்கள்..வித்யாரம்பம் என்று கல்விகற்க குழந்தைகள் அதைத்தான் வணங்கிவிட்டு ஆரம்பிப்பார்கள். நான் சென்றபோது எவனோ அந்தக்கால்களைக் களவாடிவிட்டிருந்தான்.. தன்னையே பார்த்துகொள்ள முடியாதவள் என்னையா பார்த்துக்கொள்ளப்போகிறாள், என்று எகத்தாளமாகத்தான் வந்தேன். பிறகு,     அவள் அருளால் எழுதியவனின் எழுத்துகள்மூலம் சம்பாதித்து அவள் தன் வெள்ளிப்பாதங்களைச்செய்து கொண்டாள் என்பது நான் நம்ப விரும்பும் ஒரு கதை.
அவளைமீறி நான் அந்த ஆதி பரம்பொருளை, அழகின், அறிவின், அன்பின், அனைத்தின் உச்சத்தையே என் தெய்வமாக உருவகித்துக்கொண்டபின், உள்ளே ஒரு நடுக்கம்.. சாமி கோவிச்சுக்கும் கண்ணைக்குத்தும்.. என்றெல்லாம் சொல்லி வளர்க்கப்பட்ட மூடநினைவுகளால்,.. அப்புறம், அதற்கப்புறம், ஸரஸ்வதியை சரசுவதி என்று எழுதிப்பழகியபின், என்னுள் இன்றிருக்கும் தெய்வீகத்தின் பிம்பம். இதுவும் பிம்பம் தான். இதுவும் போய்விட்டால் என்ற பயத்துடனேயே தக்கவைத்துக்கொண்டிருக்கும் பிம்பம் தான்..இவளைப்பற்றி..
உருகிஉருகி மனம் வியந்துவியந்து தினம்
வரைந்துவரைந்து மகிழ்நிலைகாணும்
இரவும்பகலும்சுக உறவில் இழைந்துவரம்
தவங்களின்றி இரு கரம்கூடும்
புரிந்துகொள்ளுமுனம் பரவசங்கள்வசம்
பறவைபோல் நினைவின் சிறகாடும்
பரிதவிக்குமொரு பொழுதினும்மனத்தில்
பாதுகாக்க‌ அவள் முகம் தோன்றும்....

போதாதா...இப்படித்தான் என் பல பகற்கனவுகள்... பகலுக்கும் கனவுகள் தேவைப்படுகின்றன.
எப்படி வேலனிடமும் தமிழ்நெஞ்சமிடமிருந்தும் இன்னும் பலரிடமிருந்தும் கற்றுக்கொள்கிறேனோ, அப்படித்தான் என்னைப் பிடிக்காதவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறேன். அப்படி ஒரு பதிவைப்படித்ததினால் தான் இப்போது இந்தப்பதிவு..
ஹூஸைன் ஸ‌ரஸ்வதியை வரைந்தது  த‌வறு ஏனென்றால் அவன் முஸ்லிம் என்று எழுதும் கேவலமான ஜந்துக்களையும் எழுதவைப்பது ஸரஸ்வதி என்றால்...என்னையும் 'தன்னை நன்றாய் உருசெயுமாறு" ஊக்குவதும் அவள்தான். இதை எழுத ஆரம்பித்து என்னவெல்லாமோ எழுதிவிட்டேன்.
என்னையும் வறுத்தெடுப்பார்கள் என்ற அச்சம் எனக்கு இல்லை. அருகில் வந்து பேசு என்றால் அநாமதேயங்களாகிவிடும் அவர்களைப்பற்றியா பதிவு? இது ஓர் அந்தரங்கக் குழப்பத்தின் வெட்கமற்ற வெளிப்பாடு, அவ்வளவுதான்.

இது என் முன்னாள் காதலிக்கு நான் செய்யும் ஒரு சித்ரார்ச்சனை.


11 comments:

அன்புடன் அருணா said...

/அருகில் வந்து பேசு என்றால் அநாமதேயங்களாகிவிடும் அவர்களைப்பற்றியா பதிவு?/
எனக்கும் அதே கேள்விதான்!

குப்பன்.யாஹூ said...

என்னவோ சொல்ல வரீங்கன்னு தெரியுது , ஆனால் எனக்கு தான் புரிய வில்லை.

எனது பணிவான வேண்டுகோள். உங்களை போல படிப்பும், அனுபவமும், பிரபலமும் உள்ள மனிதர்கள், இந்த பதிவு உலகத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. , நீங்களும் குழு மனப்பான்மை, சண்டை, சச்சரவு போக்கை வளர்க்க தூண்டினால் நாங்கள் யாரிடம் போக.

Dr.Rudhran said...

sorry kuppan, i shall not enter into this slugfest hereafter.

MALARVIZHI said...

ஏதோ சொல்ல வருகிறீர்கள் . என்னவென்று புரியவில்லை . ஆனால் உங்கள் வரிகள்
" உருகிஉருகி மனம் வியந்துவியந்து தினம்
வரைந்துவரைந்து மகிழ்நிலைகாணும்
இரவும்பகலும்சுக உறவில் இழைந்துவரம்
தவங்களின்றி இரு கரம்கூடும்
புரிந்துகொள்ளுமுனம் பரவசங்கள்வசம்
பறவைபோல் நினைவின் சிறகாடும்
பரிதவிக்குமொரு பொழுதினும்மனத்தில்
பாதுகாக்க‌ அவள் முகம் தோன்றும்...."

நன்றாக உள்ளது.

குப்பன்.யாஹூ said...

Sorry Doctor. It is my request, I too apologize if my comment disturbed your personal freedom.

போராட்டம் said...

சிலர் முதுமை அடைவதேயில்லை, குறைந்தபட்சம் மனத்தளவிலேனும்...:-)

eniasang said...

இப்படியே நான் முருகனை பற்றி மனதுக்குள் ...........இப்பவும் முருகன் கோயில் ,சஷ்டி,திருப்புகழ்.........ஏன் என்றாவது என்னை வந்து பார்ப்பான் என்ற நப்பாசை........இதிலிருந்து மீண்டு விட்டேன் என்றிருந்தேன் ....’அவளை’ நீங்கள் பயன்படுத்திய (sorry if i have used the wrong term,எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை)விதம் சொன்னால் உதவும்.

Balaji-Paari said...

அன்பின் ருத்ரன்,
சரஸ்வதியின் ஓவியம், வண்ணத்தில் மிளிர்ந்தது. குறிப்பாக சிவப்பு பொட்டு. அது ஒரு magical-ஆக தெரிந்தது. ஆகையால், வண்ணத்தில் இட வேண்டுகின்றேன்.

Dr.Rudhran said...

balaji i have just done it

Balaji-Paari said...

அன்பின் ருத்ரன்,
நன்றிகள்

Thekkikattan|தெகா said...

ஓவியமும் கட்டுரையும் நன்றாக இருக்கிறது. ஓவியத்தில் முகத்தை மறைத்து பெரியளவில் ஒரு திலகத்தையிட்டது நிறைய விசயங்களை எங்களின் சிந்தனைக்கே விட்டு விட்டது போல் இருக்கிறது.

ம்ம்ம்... பதிவுலகில் சில நேரங்களில் இவ்வளவு அபத்தமாகவும் சிந்திக்க முடியுமா என்ற நோக்கில் வாசிக்க கிடைக்கும் பொழுது எப்படி 'செவனே' என்று மண்டைக்குள் அதனைத் தொடர்ந்து ஓடிய எண்ணங்கள் பொருளற்றவை என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு போய்க் கொண்டே இருக்க முடியும்?

Post a Comment