Wednesday, December 30, 2009

வன்புணர்ச்சி எனும் வக்கிரம்


வன்புணர்ச்சி எனும் வக்கிரம் சிலரது மனவிகாரத்தின் வெளிப்பாடுதான். சக மனித உயிரை மதிக்காமல், உணர்வை மதிக்காமல் தன் பொருந்தா அடங்கா இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளும் வெறியர்களின் விகாரம் தான் இச்செயல். அந்த நேரம் அவர்களது மனத்தில் காமவெறி மட்டுமே மேலோங்கி இருக்கும். அவ்வாறு ஒரு வெறித்தனம் சிலருக்கு போதையின் உச்சத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுவதிலும் நியாயம் இல்லை. போதை அதிகரிக்கும்போது சமூக நாணம் குறையுமே தவிர சுயநெறியாக உள்வார்த்துள்ள சமூக மதிப்பீடுகள் காணாது போய்விடுவதில்லை. உள்ளே அப்படியொரு கேவலமான எண்ணம் ஒளிந்திருந்தால்தான் போதை அதைக் கட்டவிழ்த்துவிடும்.

எப்படி ஒருவனுக்குள் இத்தகைய எண்ணம் உருவாகிறது. தனக்குத் தகுதியில்லை எனும் கணிப்போடு, தகுதியைமீறி ஒரு பென்மீது மோகம் அவனுள் மேலோங்கினால் நேர்மையாக அடையமுடியாத அவளை வன்மத்துடன் வன்முறையாலாவது அடையும் வெறி சிலருக்கு வரும். இப்படிப்பட்டவனும், அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவள்மீது உண்மையான அன்பு கலந்த ஈர்ப்பு இருந்தால் இம்மாதிரி வன்செயலில் ஈடுபடமாட்டான். காதலி என்னை நிராகரித்ததால்தான் அவளைப் பலாத்காரம் செய்தேன் என்று கூறுபவன் அவளைக் காதலிக்கவேயில்லை என்றுதான் அர்த்தம். குடிபோதையில், காதல் வெறியில் என்று அவன் பின்னர் விளக்கம் கொடுப்பதெல்லாம் குற்றத்திலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, உள்ளே ஒரு குற்ற உணர்வு குறுகுறுப்பதாலும்தான்.
குற்ற உணர்வு எப்போது வரும்? சமூகம் தவறு என்று சொல்லும் பல விஷயங்களை நாம் சாதாரணமாகச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் இருக்கிறோம். உதாரணமாக தவறாக வண்டியோட்டி, காவலரிடம் பிடிபட்டால் லஞ்சம் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போவது. இது சாதாரண விஷயம் என்றே பலருக்கும் தோன்றும். பொது மன்றத்தில் எழுதும்போதோ பேசும்போதோ இதைத் தவறு என்று முழங்குவோர் கூட நண்பர்களிடம் இதை ஒரு நகைச்சுவை நிகழ்வாகப் பேசுவதும் மிகவும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். செய்த காரியம் குறித்து நாம் குற்றவுணர்வுடன் வெட்குவது ஒரு சில விஷயங்களுக்காக மட்டுமே. அவை நம்மையே நம் மனம் கேவலமாக நடந்து கொண்டாயே என்று கேட்கும் நிலைகளில் மட்டுமே.
எது கேவலம்? பொய் சொல்வது கேவலம், என்று நமக்குத்தெரியும், ஆனாலும் சின்னச்சின்ன பொய்கள் பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக்கொள்வோம். அதை புரை தீர்க்கும் என்றும் அதனால் நன்மை பயக்கும் என்றும் ஏமாற்ற முயல்வோம்- பிறரை மட்டுமல்ல நம்மையுமே. கேவலம் என்றால் மாட்டிக்கொள்ளாவிட்டாலும் அந்தச்செயல் நம் மதிப்பீட்டில் இழிவானதாக இருக்க வேண்டும். அப்படி இழிசெயல் என்று நாம் கருதுவது நம்மைப் பற்றி நமக்கே இருக்கும் சுயமதிப்பீட்டின் உயர் பண்புகள் உடையும் போதுதான். எது கேவலம் என்பது அவரவர் வைத்துக்கொள்ளும் தனிப்பட்ட கணக்கு. ஆனால் இக்கணக்கு உள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் நாம் கற்றுக்கொள்ளும் நெறிகுறித்த கருத்துக்களின் கூட்டாகவே அமையும். இக்கருத்துகள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ளப்படுபவை. இவற்றுள் சில சொல்லிக்கொடுக்கப்படும், சில நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப உள்ளமையும்.


இப்படிக்கற்றுக்கொள்வது தான் பிற உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்பது. குழந்தைப்பருவத்தில் இது உள்பதியவில்லை என்றால் அடிப்பதும் கொல்வதும் எந்த குறுகுறுப்பையும் உருவாக்காது. இப்போது குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. ஊடகங்களின் வளர்ச்சியால் அவர்களுள் படியும் செய்திகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு சமுதாய அக்கறையின்மையும் இவர்களிடையே உருவாவதும் சாத்தியம்.  நுகர்வுபோதையின் வீச்சான சுயாராதனை இவர்களிடையே சுலபமாக ஒரு குணாதிசயமாக அமையும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் இதைவிட ஆபத்தானது இவர்களிடம் பாலுணர்வு என்பது இயல்பாக உருவாகி வெளிப்படுவதற்குப் பதிலாக ஒரு வெறியாக சமூக நிர்ப்பந்தமாக ஆகிவருவதுதான். இதன் இன்றைய நிலையில் மிகவும்
மோசமான வெளிப்பாடுதான் வன்புணர்ச்சியை ஒரு விளையாட்டாகப் பார்ப்பது.

ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து  தனியான இடம் தேர்ந்தெடுத்து, அவளைப் பல்விதங்களிலும் பலாத்காரம் செய்து வன்புணர்வில் ஈடுபடுவது ஒரு விளையாட்டாய் இப்போது சிறுவர்ளிடையே பிரபலமாகி வருகிறதாம். ஒரு பள்ளியில் ஒரு சிறுவன் இதை விளையாடி மற்றவர்களிடம் கூறினால் எல்லாரும் ஒருமுறையாவது இதை ஆடிப்பார்க்கலாமே என்றுதான் நினைப்பார்கள். எந்த விளையாட்டும் சுலபமாக வெறியாக மாறும். இந்த விளையாட்டில் இன்னும் விபரீதம் உண்டு. ஒரு பெண் போகப் பொருளாகவே, வேட்டையாடப்படவேண்டிய ஒரு விலங்காகவே அவர்கள் மனதில் ஒரு கருத்து படியும். பெண்கள் மீது மதிப்பு இருக்காது, அவர்கள் ஒரு விளையாடும் பொருளாகவே தோன்றுவார்கள். ஏற்கனவே விளம்பரங்களின் மூலம் பெண் என்பவள் அழகைப் பயன்படுத்தி ஆண்களைக் கவரவே இருக்கிறாள் எனும் தவறான கருத்தோடு இதுவும் சேர்ந்து ஒரு விகாரமான மனநிலை உருவாகும். வன்புணர்ச்சி என்பது விளையாட்டு என்று மனம் கற்றுக்கொண்டுவிட்டால், பிறகு, அது குறித்து குற்ற உணர்ச்சியும் போய்விடும்.
வியாபார நோக்கு மட்டுமே உடையவர்களும், குரூரத்தை ரசிப்பவர்களும் இத்தகைய விளையாட்டுகளை உருவாகி விற்பதை நம்மால் தடுத்துவிட முடியாது. நம்மால் முடிந்தது எல்லாம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் குழந்தைகளிடம் சகமனிதநேயம் குறித்தும், வக்கிரம் ஒரு விகாரம் என்பது குறித்தும் கொஞ்சம்கொஞ்சமாய்ப் பேசுவதுதான்; நம் வீட்டின் குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பது கூடத் தெரிந்துகொள்ளமுடியாத அவசரங்களிலிருந்து நேரத்தை உருவாக்கிக்கொள்வதுதான்.
பேசிக்கொள்வது பல குடும்பங்களில் வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய கலாச்சாரத்தில் இது குறித்துச் சிந்தித்து முதலில் குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் தயக்கமில்லாமல், நடிப்பு இல்லாமல் பேசிக்கொள்வதைப் பழகிக்கொள்வது தான் வரும் தலைமுறையினருக்கு நாம் செய்யக்கூடிய கடமை.



16 comments:

அரங்கப்பெருமாள் said...

//வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய கலாச்சாரத்தில்//

எப்படி இந்த இடத்திற்கு நாம் அழைத்து வரப்பட்டோம் என்றே புரியவில்லை. கால ஓட்டத்தினாலா?

விஞ்ஞானம் வளர்கிறது என்று மார்தட்டுகிறோம்,நாம் அந்த வளர்ச்சியில் எங்கு இருக்கிறோம் என உணரவில்லை.

D.R.Ashok said...

பல குடும்பங்கள் இன்னும் L.K.Gயாய் இருப்பதுதான் பெரிய கொடுமை சார்

ராமலக்ஷ்மி said...

//குழந்தைப்பருவத்தில் இது உள்பதியவில்லை என்றால்//

உண்மைதான்.

//நம் வீட்டின் குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பது கூடத் தெரிந்துகொள்ளமுடியாத அவசரங்களிலிருந்து நேரத்தை உருவாக்கிக்கொள்வதுதான்.
பேசிக்கொள்வது பல குசும்பங்களில் வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய கலாச்சாரத்தில் இது குறித்துச் சிந்தித்து முதலில் குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் தயக்கமில்லாமல், நடிப்பு இல்லாமல் பேசிக்கொள்வதைப் பழகிக்கொள்வது தான் வர்ம் தலைமுறையினருக்கு நாம் செய்யக்கூடிய கடமை.//

பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று. விழிப்புணர்வைத் தரும் நல்ல பதிவு.

அமுதா கிருஷ்ணா said...

sir, if possible change this page color(black)..
கண்களுக்கு உறுத்தலாக தோன்றுகிறது.
டி.வி,இண்டர்நெட்,செல் ஃபோன் வந்த பின் குடும்பத்தினர் பேசுவது வெகுவாக குறைந்து விட்டது. பெண்கள் சல,சல என்று பேசிவார்கள் என்ற கிண்டலுக்கு செவி சாய்க்காமல் குடும்பத்தினருடன் முக்கியமாக பள்ளியில் நடந்தவைகள் பற்றி தினம் குழந்தைகளிடம் கேட்க வேண்டும். பெண்களுக்கு இதில் அதிக பங்கு இருக்கிறது.
நல்ல க்ருத்துக்கள் சார்..

Anonymous said...

Nice Article.

thanks,
kar

Dr.Rudhran said...

i have tried to correct the typos. please bear with me till i am able to type better.

kalagam said...

best article doctor

D.R.Ashok said...

//டி.வி,இண்டர்நெட்,செல் ஃபோன் வந்த பின் குடும்பத்தினர் பேசுவது வெகுவாக குறைந்து விட்டது. பெண்கள் சல,சல என்று பேசிவார்கள் என்ற கிண்டலுக்கு செவி சாய்க்காமல் குடும்பத்தினருடன் முக்கியமாக பள்ளியில் நடந்தவைகள் பற்றி தினம் குழந்தைகளிடம் கேட்க வேண்டும். பெண்களுக்கு இதில் அதிக பங்கு இருக்கிறது//
அமுதா கிருஷ்ணன் மிக சரியாக சொல்லியிருக்கிறார்

குப்பன்.யாஹூ said...

வன் புணர்ச்சி எண்ணங்கள் பெண்களுக்கு வருவதில்லையே, எதனால் டாக்டர்.

ஹார்மொன்ஹள் தான் காரணமா

எனக்கு தெரிந்து ஒரே ஒரு முறை நடந்து உள்ளது எனலாம் (இராக் போர் கைதிகளை அமெரிக்கா பெண் ராணுவத்தினர் வன் புணர்ச்சி அல்லது அது தொடர்புடைய செயல்களில் ஈடு படுத்தினர்) .

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்த மாதிரி ஒரு ஆண்மகன் சில/பல பெண்களை வன் புணர்ச்சி செய்தால் வீரன் என்று அழைக்க பட்டான் என நினைக்கிறேன். ஊரில் பண்ணையார், ஜமீன்தார் போன்ற பதவிகள் அடைய இந்த மாதிரி வன் புணர்ச்சி செய்வதும் ஒரு வகை தகுதியாக இருந்தது என தமிழ் திரை படம் மூலம் அறிந்தேன்.

மகா பாரதத்தில் பாஞ்சாலியின் புடவை அவிழ்த்தல் கூட ஒரு வகை வன் புணர்ச்சி தானே.


பெண்களுக்கு கொடுக்கும் ஒரு தண்டனையாக கூட வன் புணர்ச்சி இருந்து உள்ளது (விருமாண்டி திரைப்படத்தில் வரும் காட்சி, தன் தங்கை வேறு ஒரு நபரை காதலிக்கிறார் என்று தெரிததும் அதற்கு தண்டனையாக தங்கையை தன் ஊழியர் மூலம் வன் புணர்ச்சி செய்ய சொல்வது., புதிய பாதை திரை படம் கூட).

சவுக்கு said...

நல்ல பதிவு தோழர்.

chinnappayal said...

கருப்பு நிறம் குறைந்த மின் செலவை ஏற்படுத்தும்..
நலல பதிவு மருத்துவர்..

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஒரு பெண் தந்தை,கணவன்,மகன் என்று
ஆண் உறவுகளையே சார்ந்து இருப்பது
அந்த ஜீவனின் பலவீனம் தானே! அதை
உடைத்தெறிந்து அவள் ஒரு பலவானாக
(பலவான் இரு பாலருக்கும் பொது) சமூகத்தில்
நின்றால் வன்புணர்ச்சியாவது ஒன்றாவது !

ஞானப்பழம் said...

'வன்புணர்ச்சி' என்ற சொல் இதற்க்கு முன் நான் கேட்டது இல்லை...

//. ஆனால் இதைவிட ஆபத்தானது இவர்களிடம் பாலுணர்வு என்பது இயல்பாக உருவாகி வெளிப்படுவதற்குப் பதிலாக ஒரு வெறியாக சமூக நிர்ப்பந்தமாக ஆகிவருவதுதான். இதன் இன்றைய நிலையில் மிகவும்
மோசமான வெளிப்பாடுதான் வன்புணர்ச்சியை ஒரு விளையாட்டாகப் பார்ப்பது.//

மிகவும் துள்ளியாமான பார்வை... இன்றைய இளைஞர்களிடம்(என் நண்பர்களிடம்) இதன் வெளிப்பாட்டை பார்த்துள்ளேன்.

நண்பர் ஒருவர் பின்னூடலில் கூறியது :
//வன் புணர்ச்சி எண்ணங்கள் பெண்களுக்கு வருவதில்லையே, எதனால் டாக்டர்.//

அமெரிக்காவில் இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்துள்ளது.. பெரும்பாலும் சிறுவர்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களாக (அதாவது பெண் ஆசிரியை ஒரு சிறு ஆண் மாணவனை பாலுணர்வு நோக்குடன் நடந்துகொள்வது).. பெண்களுக்கு பாலுணர்வு மிகையானால் அவர்கள் "வன்மையான" செயல்களின்மூலம் ஆண்களை அடைய வேண்டியதில்லை.. நமது அருமையான குழுமங்களில் விலை மாதராக வாழலாம்..

ஞானப்பழம் said...

வன்புணர்ச்சி நிகழ்வுகளில், பாலுனர்ச்சியே காரணமாக இருந்தாலும் அதை நாம் குறைகூறமுடியாது.. ஆனால் அது வன்மையாக நடக்கிறதே, அதைத்தான் கண்டிக்க வேண்டும்.. வெறிபிடத்த நாய் ஒன்று குதறிவிட்டுப் போனது என்றால் அதனிடம் நாம் காரணம் கேட்க முடியாது.. ஆனால் இந்த பாலுனர்ச்சியோ மனிதனை நாய்போல் நடந்துகொள்ள வைத்ததே, அதுதான் பரிதாபம்.. என்னைப் பொறுத்தவரை அத்தகைய நிகழ்வின்போது அதில் தொடர்புள்ள ஆண், பெண் இருவரின் மீதும் அனுதாபம் காட்ட வேண்டும்.. பெண் - நாயால் கடிபட்டுவிட்டாளே என்று, ஆண் - நாயாகவே மாறிவிட்டானே என்று..

thenammailakshmanan said...

//கேவலம் என்றால் மாட்டிக்கொள்ளாவிட்டாலும் அந்தச்செயல் நம் மதிப்பீட்டில் இழிவானதாக இருக்க வேண்டும். அப்படி இழிசெயல் என்று நாம் கருதுவது நம்மைப் பற்றி நமக்கே இருக்கும் சுயமதிப்பீட்டின் உயர் பண்புகள் உடையும் போதுதான். எது கேவலம் என்பது அவரவர் வைத்துக்கொள்ளும் தனிப்பட்ட கணக்கு. ஆனால் இக்கணக்கு உள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் நாம் கற்றுக்கொள்ளும் நெறிகுறித்த கருத்துக்களின் கூட்டாகவே அமையும். இக்கருத்துகள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ளப்படுபவை. இவற்றுள் சில சொல்லிக்கொடுக்கப்படும், சில நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப உள்ளமையும்.//

மிக அருமையாக சொல்லி இருக்கீங்க ருத்ரன்

sri said...

பெண்கள் குறைந்த வயதில் வயதுக்கு வருவது அதிகரித்து வருகிறதே ..(ஆண் பிள்ளைகளும் இருக்கலாம் யாருக்குதெரியும் ).
exposure to sex contents through media s the major reason isn't it?

எட்டுவயசு பய்யன் உடலுறவு கொண்டானாம் ....செய்திகளில் படிக்கிறோம் . ஆபாசமாய் நடனம் ஆட பிஞ்சு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து காசு பாக்கிறது மீடியாக்கள் ...ஓடி விளையாடு பாப்பா .இப்போ டிவி ரிமொட்டையிம்,play stationayum நம்பி இருக்கு .தாயும் இந்த ஆட்டத்தை பாக்கறப்ப..கூடவே ஒக்காந்து பார்க்கிற இந்த பிஞ்சு தம்பிகளையும் தங்கைகளையும் குற்றம் கூற முடியவில்லை .
அறியாத வயதில் அம்மா அப்பா விளையாட்டில் ஒரு குழந்தைத்தனம் இருந்தது ..இன்னைக்கு video gamesல் ஆபாசம் கலக்குது.இதற்கான தண்டனையை ..இந்த சமுதாயம் அனுபவித்தே தீரும்

Post a Comment