Tuesday, May 25, 2010

தேர்வுகளும் தேர்ச்சியும்


பொதுவாக என்னிடம் படம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்போர் இப்போது கொஞ்ச காலமாய் மட்டுமே என் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார்கள்.. இதற்கு முன் அவர்களுக்கு என்ன தேவையோ அதை வரைந்து கொடுத்துவிட்டு, அவர்கள் என் படத்தை என்ன செய்கிறார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்காமல் வரைந்து கொடுத்துவிட்டு காசு பார்த்திருக்கிறேன். இதனாலேயே “இதுதான் உன் பாணி” என்று எதுவுமில்லாமல் என் படங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமாய் வந்திருக்கின்றன.
நான் சரியென்று நினைத்து வரைவது என் வாடிக்கையாளருக்குப் பிடிக்காமல் போனது பலமுறை. முன்பெல்லாம் அவர்கள் சொன்னபடி கேட்டு மீண்டும் அவரவர் விருப்புக்கு வரைந்து கொடுத்திருக்கிறேன். வசதிதானே திமிர்; இப்போதெல்லாம் வரைந்தது பிடிக்காவிட்டால் “ஓகே, விட்டுடுங்க” என்று என் படத்தை, என் வீட்டின் மூலையில் வைத்துக் கொள்கிறேன். வித்யாதர்மம் என்பது பணம் எவ்வளவு அவசியமாக அவசரமாக வேண்டும் என்பதா? லக்ஷ்மியை கைப்பிடித்துவிட்டால் ஸரஸ்வதியை “ பொத்திக்கிட்டு, சும்மா வா” என்று அதட்டலாமா? என் வரை அப்படித்தான் நடந்திருக்கிறது.
திமிர் என்பது ஒருவித தைரியம்தான். அதன் விளைவே அதைக் கொண்டவன் புத்திசாலியா முட்டாளா என்று தீர்மானிக்கிறது. வெற்றியே ஒரு குணத்தின் பண்புகளைத் தீர்மானிப்பது என்றால், அந்த வெற்றியை ஆராய வேண்டியதும் அவசியம்.இங்கே சில படங்களை இதற்காகவே பதிப்பிக்கிறேன். முதலில் என் ஜெயகாந்தனின் நூலுக்கான முகப்பு. நான் வரைந்து கொடுத்தவை இவை.

இது அட்டைப்படத்தில் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
ஆனாலும் இன்னும் சில அவர்கள் தேர்ந்தெடுக்க உதவும் என்று  தந்தவை-

 
 
.


தேர்வானது இது-இதேபோல் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தன் புத்தகத்துக்கு வேண்டுமென்று கேட்டபோது நான் தந்த படங்கள் இவை-தேர்வானது-


இதேபோல் இன்னும் பல உதாரணங்கள் உண்டு, அவற்றைக் காட்ட படங்கள் என்னிடம் இல்லை.

எது எப்படி தேர்வாகிறது என்பதை இன்னும் என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. காசுக்கு வேலை செய்தபின், உபரிமதிப்பில் பங்கு கேட்க எனக்குத் தோன்றியதில்லை. இப்போதெல்லாம் காசுக்காக மட்டுமின்றி, பெருமைக்காகவும் அன்பிற்காகவும் வரைந்து கொடுக்கிறேன். என் தேர்வு என் வாடிக்கையாளரின் தேர்வாக இன்னும் அமையவில்லை. 
முன்பெல்லாம் முறுக்கிக் கொள்வேன்- காசுக்காக வரைந்த காலத்திலும். இப்போதெல்லாம் சமரசம் செய்து கொள்கிறேன்- காசுக்காக மட்டுமே வரையாத போதிலும் !
ஏன்? இனியும் கைதட்டல்களும் காசும் அவசியம் என்று இல்லாத போது, மற்றவரின் மனநிலை கண்டு சகிப்பு வருகிறது. என்னுள் ஒருவித நிறைவு வந்தபின் மற்றவரது குறைவுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடிகிறது. முன்பெல்லாம் என் வறுமை, என் அவசரம், என் மனோவித்யாதர்மம்  என்றெல்லாம் சிணுங்கியதும் சீறியதும் இப்போதெல்லாம் விளையாட்டாகவே தெரிகிறது.
நான் மாறிவிட்டேனா?
என் தேர்வுகள் எப்போதும் வெகுஜனத் தேர்வாக இருந்ததில்லை. அன்னக்கிளி படம் பார்த்துவிட்டு வந்தவுடன் என் நண்பனிடம் சொன்னது, “ம்யூசிக் நல்லாருக்கு, பாவம் அந்த  ம்யூசிக் டைரக்டர்... படம் ஓடாது. அவனும் காணாம போய்டுவான்!”  இரண்டுமே நடக்கவில்லை.
வெகுஜன மனவோட்டத்திற்கேற்ப எப்போது நான் மாறுவேன்? நான் வித்தியாசமானவனோ விகிதாசாரத்தில் சிறப்பு பெறுபவனோ அல்ல, நானும் எல்லார் மாதிரியும்தான் என்று சொல்லும் போதே, நிறைய பேர் சரியா இல்லையே என்றும் நினைப்பது எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசம்-
நாளை என் கண்ணாடி என்னைப் பரிகசிக்காமல் இருக்க. இதன் விலை அதிகம்தான், இப்போதெல்லாம் இது செலவுக்குள் கட்டுப்படியாகிறது!
Arrogance of affordability, portrayed as the tolerance of a superiority!

என்பது மட்டுமல்லாமல் இப்போது தொழில்நுட்பம் வேலையை ரொம்பவும் சுலபமாக்கிவிட்டது.

இது தூரிகையால் வந்தது.
இது மௌஸ் கொண்டு வரைந்தது.

இரண்டையும் ஒரே கை வரைந்தாலும், ஒன்று சிரத்தையில் கவனம் அவசியமானதாக்கி மற்றது அசிரத்தையைக் கூட சரிசெய்யும் சௌகரியத்தில் வந்தது... அப்புறம் என்ன-

வாழ்க்கையில் காரியங்கள் சுலபமாகும்போது கோபங்களும் கொஞ்சம் தணிந்துதான் போகின்றன.

17 comments:

Madumitha said...

நிச்சயமாக.

வால்பையன் said...

எலிக்குட்டையை விட தூரிகை தான் கட்டிபோடுது சார்!

Chitra said...

திமிர் என்பது ஒருவித தைரியம்தான். அதன் விளைவே அதைக் கொண்டவன் புத்திசாலியா முட்டாளா என்று தீர்மானிக்கிறது. வெற்றியே ஒரு குணத்தின் பண்புகளைத் தீர்மானிப்பது என்றால், அந்த வெற்றியை ஆராய வேண்டியதும் அவசியம்.


..... நமக்கு தெரிந்தும் தீர்க்கமாய் உள்ளே புகுந்து யோசிக்க தயங்கும் விஷயங்களை, எவ்வளவு தெளிவாக சில வரிகளில் சொல்லி விட்டீர்கள்.... பாராட்டுக்கள்!

தூரிகையில் வரைந்த ஓவியம் இன்னும் அழகு....சிறப்பு!

ராம்ஜி_யாஹூ said...

இனியும் கைதட்டல்களும் காசும் அவசியம் என்று இல்லாத போது, மற்றவரின் மனநிலை கண்டு சகிப்பு வருகிறது.வாழ்க்கையில் காரியங்கள் சுலபமாகும்போது கோபங்களும் கொஞ்சம் தணிந்துதான்

அதனால் தான் மேலை நாட்டு வாழ்க்கை முறையில் அதிக வசதிகள், சொகுசுகள் வேண்டும் என்று சொல்கிறார்களா கோபத்தை தணிக்கும், மன தை, எண்ணங்களை விசாலப் படுத்தும் என்றா.

D.R.Ashok said...

கலைமனம் இப்படிதான் பயனிக்கும்..

ஒரு பர்ஸனல் கேள்வி.. நானும் வரைவேன்.. ஒரு பரிட்சையில் தவறிவிட்டதினால் ஐந்தாரு வருடங்கள் வரைந்து வைத்த என் ஓவிய புத்தகங்ளை என் அம்மா கிழித்து எரிந்துவிட்டார்... அதன்பின் எதையும் வரைவதில்லை.. (ஒருவேளை திமிரோ.. கோபமோ)

இந்த பதிவு.. என்ன சொல்ல.. pleasure reading :)

கோமதி அரசு said...

//வாழ்க்கையில் காரியங்கள்
சுலபமாகும் போது கோபங்களும் கொஞ்சம் தணிந்து தான் போகின்றன//

பெரும்பாலும் இயலாமை தானே கோபமாய் மாறுகிறது.

நம்மால் இயலும் போது கோபம் இல்லை.

ராஜ நடராஜன் said...

ஓவிய மிரட்சி!

சர்வோத்தமன் said...

அன்னக்கிளி - ம்யூசிக் நல்லாருக்கு என்பதில், வெகுஜன மக்களின் ஏற்கவும் செய்ததில் உண்மையில் ஒப்புமை தானே.

சர்வோத்தமன்

ஹேமா said...

ஓவியம் அழகு.உங்கள் பதிவுகள் ஏதோ ஒன்றைச் சொல்லி வைக்கின்றன் எப்போது.நன்றி.

rk guru said...

நல்ல பதிவு உண்மையை ஏற்றுகொண்ட பதிவாக இருக்கிறது... உங்களுக்கு என்றும் வாழ்த்துகள் உண்டு...முகநூலில் தொடர்ந்தும் வலைப்பக்கத்திலும் உங்க புரிதல் நட்பு தொடர்கிறது...

"வாழ்கையில் காரியங்கள் ஆகும் போது கொஞ்சம் கோவங்களும் குறைந்துதான் போகின்றன"...மறுக்க முடியாதா உண்மை அது எப்போதும் காரியம் சார்ந்த கோவமாகதான் இருக்கின்றன காரியம் இல்லையென்றால் கோவமும் அப்படியியேதான் இருக்கும்....அது என்றும் சுயநலம் சார்ந்த தேவையாகத்தான் இருக்கும்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்கள் ஓவியங்கள் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றன. அவர்களுக்காக மாற்றினாலும், உங்கள் ”டச்” உடன் வருவது போல் தான் இருக்கிறது..

போராட்டம் said...

உண்மையான ஓவியர்கள் பேசும் பொழுதும், எழுதும் பொழுதும், ஒரு கவிதையின் வீர்யத்தோடும், ஆழத்தோடும் அவர்களது சொற்கள் வெளிப்படுவதுண்டு.வான்கா,கோயா முதல் ஆதிமூலம்,டிராட்ஸ்கி மருது, சந்ரு,ருத்ரன் வரை இதனைக் காண முடிகிறது.

தங்களிடம் பலரும் பலசமயங்களில் கண்டு வியப்பதும், மிகப் பலரிடம் இல்லாதிருப்பதும், ஒரு அழுத்தமான சுயவிமர்சனப் பார்வையோடு தாங்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் அழகுதான். மேலே தாங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளும் ஒரு தனிப்பதிவாக விரித்து எழுதத் தக்கவை, விழுமியங்களுக்காக வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் பலரும் தத்தமது வாழ்வில் கண்டுணரும் உண்மைகள்.

சிறு கோரிக்கை. தங்களுக்கு விருப்பமானால், தங்களது ஓவியங்களை மட்டும் தொகுத்து ஒரு தனி இணையத்தளமாகவோ, ஒரு பதிவுத் தளமாகவோ நடத்த வேண்டுகிறேன்.ஓவிய ரசனையுள்ள தங்கள் வாசகர்களும், பொதுவில் ஓவிய ரசனை உள்ளவர்களுக்கும் அது மிக்க மகிழ்ச்சியளிக்கும்.

Shangaran said...

வயதாக வயதாக வாழ்வின் மீதான கண்ணோட்டம் மாறுமோ?

~சங்கரன்~
http://shangaran.wordpress.com

Murali said...

The other side of the pride or arrogance can mean the competency.

கிரி said...

சார் படங்கள் நன்றாக உள்ளது.

balasubramanian said...

வணக்கம் திரு ருத்ரன் அவர்களுக்கு. உங்களுடைய வலைப்பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். மிகச்சிறப்பாக இருக்கின்றது.

வாழ்த்துக்கள்.

பாலசுப்ரமணியன்.

Anonymous said...

டாக்டர்சாப்,

நலமா?

சில்பி என்ற ஓவியரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவரைப் பற்றி சமீபத்தில் படித்தேன், ஒரு பதிவும் எழுதினேன் - http://koottanchoru.wordpress.com/2010/08/24/சில்பியின்-சிறப்பான-ஓவி/

சில்பியின் ஓவியங்கள் எனக்கு பிடித்திருக்கின்றன. ஆனால் ஓவியத்தைப் பற்றி எதுவும் தெரியாதவன் நான். சில்பியின் ஸ்டைலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பிரதி எடுப்பதை நோக்கமாக கொண்ட ஓவியங்கள் பெரிதாக மதிக்கபடுவதில்லையோ என்று எனக்கு ஒரு சந்தேகம். அதே நேரத்தில் நார்மன் ராக்வெல் போன்றவர்கள் கொண்டாடப்படுவதும் உண்மை.

எனக்குத் தெரிந்த ஒரே ஓவியரும் நீங்கள்தான். உங்கள் கருத்தை தெரிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

அன்புடன்
ஆர்வி

Post a Comment