Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Tuesday, May 25, 2010

தேர்வுகளும் தேர்ச்சியும்


பொதுவாக என்னிடம் படம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்போர் இப்போது கொஞ்ச காலமாய் மட்டுமே என் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார்கள்.. இதற்கு முன் அவர்களுக்கு என்ன தேவையோ அதை வரைந்து கொடுத்துவிட்டு, அவர்கள் என் படத்தை என்ன செய்கிறார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்காமல் வரைந்து கொடுத்துவிட்டு காசு பார்த்திருக்கிறேன். இதனாலேயே “இதுதான் உன் பாணி” என்று எதுவுமில்லாமல் என் படங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமாய் வந்திருக்கின்றன.
நான் சரியென்று நினைத்து வரைவது என் வாடிக்கையாளருக்குப் பிடிக்காமல் போனது பலமுறை. முன்பெல்லாம் அவர்கள் சொன்னபடி கேட்டு மீண்டும் அவரவர் விருப்புக்கு வரைந்து கொடுத்திருக்கிறேன். வசதிதானே திமிர்; இப்போதெல்லாம் வரைந்தது பிடிக்காவிட்டால் “ஓகே, விட்டுடுங்க” என்று என் படத்தை, என் வீட்டின் மூலையில் வைத்துக் கொள்கிறேன். வித்யாதர்மம் என்பது பணம் எவ்வளவு அவசியமாக அவசரமாக வேண்டும் என்பதா? லக்ஷ்மியை கைப்பிடித்துவிட்டால் ஸரஸ்வதியை “ பொத்திக்கிட்டு, சும்மா வா” என்று அதட்டலாமா? என் வரை அப்படித்தான் நடந்திருக்கிறது.
திமிர் என்பது ஒருவித தைரியம்தான். அதன் விளைவே அதைக் கொண்டவன் புத்திசாலியா முட்டாளா என்று தீர்மானிக்கிறது. வெற்றியே ஒரு குணத்தின் பண்புகளைத் தீர்மானிப்பது என்றால், அந்த வெற்றியை ஆராய வேண்டியதும் அவசியம்.இங்கே சில படங்களை இதற்காகவே பதிப்பிக்கிறேன். முதலில் என் ஜெயகாந்தனின் நூலுக்கான முகப்பு. நான் வரைந்து கொடுத்தவை இவை.

இது அட்டைப்படத்தில் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
ஆனாலும் இன்னும் சில அவர்கள் தேர்ந்தெடுக்க உதவும் என்று  தந்தவை-

 
 
.


தேர்வானது இது-







இதேபோல் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தன் புத்தகத்துக்கு வேண்டுமென்று கேட்டபோது நான் தந்த படங்கள் இவை-







தேர்வானது-


இதேபோல் இன்னும் பல உதாரணங்கள் உண்டு, அவற்றைக் காட்ட படங்கள் என்னிடம் இல்லை.

எது எப்படி தேர்வாகிறது என்பதை இன்னும் என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. காசுக்கு வேலை செய்தபின், உபரிமதிப்பில் பங்கு கேட்க எனக்குத் தோன்றியதில்லை. இப்போதெல்லாம் காசுக்காக மட்டுமின்றி, பெருமைக்காகவும் அன்பிற்காகவும் வரைந்து கொடுக்கிறேன். என் தேர்வு என் வாடிக்கையாளரின் தேர்வாக இன்னும் அமையவில்லை. 
முன்பெல்லாம் முறுக்கிக் கொள்வேன்- காசுக்காக வரைந்த காலத்திலும். இப்போதெல்லாம் சமரசம் செய்து கொள்கிறேன்- காசுக்காக மட்டுமே வரையாத போதிலும் !
ஏன்? இனியும் கைதட்டல்களும் காசும் அவசியம் என்று இல்லாத போது, மற்றவரின் மனநிலை கண்டு சகிப்பு வருகிறது. என்னுள் ஒருவித நிறைவு வந்தபின் மற்றவரது குறைவுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடிகிறது. முன்பெல்லாம் என் வறுமை, என் அவசரம், என் மனோவித்யாதர்மம்  என்றெல்லாம் சிணுங்கியதும் சீறியதும் இப்போதெல்லாம் விளையாட்டாகவே தெரிகிறது.
நான் மாறிவிட்டேனா?
என் தேர்வுகள் எப்போதும் வெகுஜனத் தேர்வாக இருந்ததில்லை. அன்னக்கிளி படம் பார்த்துவிட்டு வந்தவுடன் என் நண்பனிடம் சொன்னது, “ம்யூசிக் நல்லாருக்கு, பாவம் அந்த  ம்யூசிக் டைரக்டர்... படம் ஓடாது. அவனும் காணாம போய்டுவான்!”  இரண்டுமே நடக்கவில்லை.
வெகுஜன மனவோட்டத்திற்கேற்ப எப்போது நான் மாறுவேன்? நான் வித்தியாசமானவனோ விகிதாசாரத்தில் சிறப்பு பெறுபவனோ அல்ல, நானும் எல்லார் மாதிரியும்தான் என்று சொல்லும் போதே, நிறைய பேர் சரியா இல்லையே என்றும் நினைப்பது எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசம்-
நாளை என் கண்ணாடி என்னைப் பரிகசிக்காமல் இருக்க. இதன் விலை அதிகம்தான், இப்போதெல்லாம் இது செலவுக்குள் கட்டுப்படியாகிறது!
Arrogance of affordability, portrayed as the tolerance of a superiority!

என்பது மட்டுமல்லாமல் இப்போது தொழில்நுட்பம் வேலையை ரொம்பவும் சுலபமாக்கிவிட்டது.





இது தூரிகையால் வந்தது.




இது மௌஸ் கொண்டு வரைந்தது.

இரண்டையும் ஒரே கை வரைந்தாலும், ஒன்று சிரத்தையில் கவனம் அவசியமானதாக்கி மற்றது அசிரத்தையைக் கூட சரிசெய்யும் சௌகரியத்தில் வந்தது... அப்புறம் என்ன-

வாழ்க்கையில் காரியங்கள் சுலபமாகும்போது கோபங்களும் கொஞ்சம் தணிந்துதான் போகின்றன.