இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை; நேரமில்லை என்பதாலோ படிக்குமளவு முக்கியமானவை இல்லை என்பதாலோ இல்லை, மனத்தளவில் படிப்பதில் ஈடுபாடு குறைந்திருக்கிறது. இது அவ்வப்போது நேரும் என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக இப்படி இருக்கிறது. இந்த நிலை ஆரம்பமாகும் முந்தைய வாரம் என் நண்பர் ஒரு மாதத்தில் எவ்வளவு படிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சுமாராகப் பத்து நூல்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் என் மனைவி, ‘இந்த மாதிரி படித்துக் கொண்டிருந்தால்புத்தகங்கள் வாங்கிக் கட்டுப்படியாகாது' என்று சொல்லியிருக்கிறாள். சுவாசத்திற்கு அடுத்து நான் உயிருடன் இருக்க, படிப்பது எனக்கு அவ்வளவு அவசியமான ஒன்று.
இன்றும் தினமும் பத்திரிகைகளைப் பார்க்கிறேன். படிப்பதில்லை, மேய்கிறேன். பதிவுகளை தினமும் பார்க்கிறேன், சிலவற்றைப் படிக்கிறேன், பலவற்றை பக்கங்களை வேகமாகக் கீழிறக்கியவாறு மேய்ந்து முடிக்கிறேன். உறக்கம் குறையவில்லை, உணவும் குறையவில்லை. செய்யும் வேலையில் சிரத்தையும் குறையவில்லை. உறவு வட்டமோ வருமானமோ குறைந்து விடவில்லை, அடைய விரும்பும் எதுவுமே தொடுவானுக்கு அப்பால் தொலைந்திருக்கவில்லை.
எழுத முடியாமலில்லை, எழுதுவதற்கு விஷயம் இல்லாமலும் இல்லை; பதிவெழுதுவது என்பது நிர்ப்பந்தமாகி விடவும் இல்லை. ஓவியம் வரைய முடியாமலில்லை, வரைந்து கொடுக்கவும் அவசரமான நிமித்தங்களும் இல்லை.
ஏன் இந்த மாற்றம்? இது தளர்ச்சியா இல்லை மலையேறும்போது எதிர்படும் சமதளமா? எந்தக் கேள்விக்கும் மனம் உடனே எடுத்து வைக்கும் பதில் அந்தந்த நேரத்துக்கான சௌகரியமே தவிர சத்தியம் அல்ல. இப்போது மனம் சொல்லிக் கொள்ளும் பொய், ‘ இது ஒரு தற்காலிக ஓய்வு’ என்பதே. எதிலிருந்து ஓய்வு? வாழ்வின் இதுவரை உயிர்ப்பித்துக் கொண்டிருந்த ஆதார இயக்கத்திலிருந்தா?
தேர்வுக்காகப் படித்த காலத்திலேயே தேர்ந்தெடுத்துத்தான் படித்திருக்கிறேன். மருத்துவக் கல்லூரியில் விடுதியில் சக மாணவர்கள் தடிமனான புத்தகங்களில் உடலியங்கியல் படிக்கும் நேரத்தில் அதைவிடவும் உள்வாங்கிக்கொள்ளச் சிரமமான சார்த்தரின் நாசியா படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்- பரீட்சைக்குத் தேவையான அளவு படித்து விட்டதால் மட்டுமல்ல, அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு பாசாங்கிற்காக. அவசியம் கருதிப் படிக்கவில்லை ஆசைப்பட்டுத்தான் படித்தேன் என்பது கூட உறுத்தலாக இருக்கிறது. ஆசையல்லவா அவசியங்களை உருவாக்கி விடுகிறது!
பாடம் என்பது ஒரு நிர்ப்பந்தமான படிப்பு என்றாலும், நிர்ப்பந்திக்கப் படும்போதெல்லாம் நான் எளிதாய்க் கடமைகளை முடித்துக்கொள்ளவே முயன்றிருக்கிறேன். இது சோம்பலாகவும் இருந்திருக்கலாம், திமிராகவும் இருந்திருக்கலாம். மொழி எனக்குச் சுலபமாகக் கைவந்ததால், படித்தை எல்லாமும் சுருக்கி நினைவில் வைத்துக் கொண்டு பரீட்சையில் விரிவாக எழுதித் தப்பித்திருக்கிறேன். படித்துத் தேர்ச்சி பெற்றதாய் அறிவிக்கப்பட்ட பாடங்களில்கூட நான் மதிப்பெண்களுக்காக என்பதைவிடவும் மனோசுகத்திற்காகப் படித்ததுதான் அதிகம்.
பாடம், படிப்பு என்று என் சிந்தனை இப்போது அலைவது நேற்று என் மனைவி வினவு ஆரம்பித்த ஒரு தொடர்பதிவிற்காக எழுதியதைப் (பதிவின் சுட்டி) படித்ததால்தான். இதுவல்ல நான் எழுத ஆரம்பித்த விஷயம். “நான் படிப்பதில்லை என்பதா படிக்க என்னால் முடியவில்லை என்பதா” என்ற கேள்வியே இத்தனை வார்த்தைகளுக்கும் காரணம்.
அது எப்படி தினமும் சாப்பிடும்போதும், தூங்குமுன்னும், தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதும் படித்துக் கொண்டேயிருந்தவனுக்கு இப்போது படிக்க முடியாமல் போகும்? இதேபோல் இதை ஒரு பிரச்சினை என்று என்னிடம் யாராவது சொல்லும்போது நான் சொல்லிக் கொடுப்பது இதுதான்- ‘ முதலில் ராஜேஷ்குமார் படியுங்கள், படிப்பது பழக்கமாகிவிடும், பிறகு ரஷ்ய மொழிபெயர்ப்புகள் படிப்பதும் சுலபாமாகிவிடும்’. மற்றவர்க்கு சொல்லிக்கொடுப்பதைத் தன் வாழ்விலும் முயல வேண்டும் என்று நினைப்பவன் என்பதால் நானும் இதை முயன்று பார்த்தேன் முடியவில்லை. மிகுந்த சுவாரஸ்யத்துடன் அந்த நாவல் விறுவிறுப்பாகப் போகும்போதே மனம் ‘சீ.. இந்த நேரத்தில் பின் நவீனத்துவக் கோட்பாடுகளின் நுண்ணரசியல் பற்றி புத்தகம் படிக்கவில்லையே’ என்று ஒரு குற்ற உணர்வைக் கிளப்பும். முடியாததைச் செய்ய முயல்வது முயற்சி, முடிந்ததைச் செய்வது பயிற்சி என்று தெரிந்தாலும் மனம் முடிந்தததைக் கூடச் செய்யாவிடாமல் முரண்பிடித்து மனம் வருந்தவே விரும்பும்.
இது நிஜம். வருத்தம் வலி மட்டுமல்ல, ஒரு சுகம். ‘அழுதால்தான் பால் கிடைக்கும்’ என்று கற்றுக்கொண்ட குழந்தை’ பசியால் கூட அழுவதில்லை, யாரும் தன்னைக் கொஞ்சவில்லையே என்றும் அழும். இந்த அனிச்சை கவனஈர்ப்பு காலந்தோறும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படும். மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான். இதன் முதல் கட்டம் மனம், ‘என்னால் முடியாது’ என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது. இந்த அவலம் அசிங்கமானதோ அருவருப்பானதோ அல்ல, இயல்பானது. உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.
இப்போது நான் படிக்க முடியவில்லை என்று புலம்புவதும் இப்படித்தான். யாராவது இனி இப்படிப் படியேன் என்று சொல்ல வரமாட்டார்கள் என்று முடிவானால், ஒன்று படிக்க ஆரம்பிப்பேன் அல்லது புலம்பாமல் இருப்பேன்.
21 comments:
நீங்களாவது வருத்தப்படுகிறீர்கள்.தொலைக்காட்சிகளில் படிப்பை தொலைத்தவர்கள் இங்கே மிகவும் அதிகம்.
the very first sentence alone is right for me ...
:(
:)
படிக்காம இருந்து பாருங்கள் கொஞ்ச நாள், அதுவும் போர் அடித்து பின்பு படிக்க தூண்டி விடும்.
//உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.//
அழகிய பதிவு, இப்போதெல்லாம் நான் அதிகம் படிக்கிறேன்.
/உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்./
அருமை!
ஆசையல்லவா அவசியங்களை உருவாக்கி விடுகிறது!
மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான்?
ஒன்று படிக்க ஆரம்பிப்பேன் அல்லது புலம்பாமல் இருப்பேன்.
..// மூன்று வரிகளையும் மிகவும் ரசித்தேன்//..
//அவசியம் கருதிப் படிக்கவில்லை ஆசைப்பட்டுத்தான் படித்தேன் என்பது கூட உறுத்தலாக இருக்கிறது. ஆசையல்லவா அவசியங்களை உருவாக்கி விடுகிறது!//
//மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான். இதன் முதல் கட்டம் மனம், ‘என்னால் முடியாது’ என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது. இந்த அவலம் அசிங்கமானதோ அருவெறுப்பானதோ அல்ல, இயல்பானது. உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.//
கவிதைகளை உரைநடையாக எழுதுவது தங்களுக்கு வாடிக்கையாகப் போய் விட்டது.
வாசிப்பு ஒரு தொடர்ந்த அனுபவம். உயிரோடு கலந்துவிட்டப் பழக்கம். வாசிக்காமலிருப்பது என்பது ஒரு ஓய்வுதான். மீண்டும் நீங்கள் தீவிரமாக வாசிக்கப் போகிறீர்கள் என்பதற்கான முன்தயாரிப்பு என்று கூட சொல்லலாம். எனக்கு உங்களை தாடியில்லாமல் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
செம சூப்பர்ப்.. நிஜம்தான் எல்லாம்.. ருத்ரன்...மனசை வார்த்தையா வடிக்க வந்திருக்கே இது போதாதா.. எல்லாருக்கும் ஒரு வெறுமை அவ்வப்போது இருக்கத்தான் செய்யிது..ஆனா அதைப்பதிவு செய்வதிலும் U R SIMPLY GREAT...!!!
உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.
reading apart இதை இன்று நான் எனக்கான வரிகளாய் எடுத்துக்கொள்கிறேன் .. நன்றி .
சிலசமயம் நாம மன meandering ஐ ஆராய துவங்கினால் கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது .நல்லதொரு இடுகை டாக்டர்
அருமையா உள்ளே புகுந்து புரப்பட்டிருக்கு பதிவு. அனுபவித்தேன். நன்றி!
எல்லாமே ஒரு சுழற்சிதானோ? ஆமா, ஆண்களுக்கும் menopausal syndrome மாதிரியே ஏதாவது உண்டா, நான் சில அவதானிப்புகளை கண்டுணர்ந்து வைத்திருக்கிறேன் - அதனைத் தொட்டு இந்தப் பதிவிற்கு தொடர்பில்லையெனினும் கேட்க வேண்டும் போல இருந்தது, கேட்டு வைத்திருக்கிறேன் :) .
ரொம்ப கஷ்டமாதான் இருக்கு சார்
இனையத்தில் அவ்வளவு புத்தகங்கள் வந்தாலும்
படிக்க மனது ஒத்து கொள்ளமாட்டுது
மேம்புல் மேய தான் முடியுது
எப்படி மாற்றலாம்?
வாவ்! நமது சராசரி விருப்பு வெறுப்புகளில் கூட எத்தனை விஷயங்கள். ......
தேர்வுக்காகப் படித்த காலத்திலேயே தேர்ந்தெடுத்துத்தான் படித்திருக்கிறேன். மருத்துவக் கல்லூரியில் விடுதியில் சக மாணவர்கள் தடிமனான புத்தகங்களில் உடலியங்கியல் படிக்கும் நேரத்தில் அதைவிடவும் உள்வாங்கிக்கொள்ளச் சிரமமான சார்த்தரின் நாசியா படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்- பரீட்சைக்குத் தேவையான அளவு படித்து விட்டதால் மட்டுமல்ல, அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு பாசாங்கிற்காக. அவசியம் கருதிப் படிக்கவில்லை ஆசைப்பட்டுத்தான் படித்தேன் என்பது கூட உறுத்தலாக இருக்கிறது. ஆசையல்லவா அவசியங்களை உருவாக்கி விடுகிறது!
....... வாவ்! நமது சராசரி விருப்பு வெறுப்புகளில் கூட எத்தனை விஷயங்கள். ...... யோசிக்க வைத்த வரிகள்.
புலம்பல் நன்றாகயிருக்கிறது.. :)) கொஞ்சம் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.. பிறகு சரியாகிவிடும்..
இதெல்லாம் தற்காலிகம்தான்.
படிச்சதெல்லாம் UNDO பண்ணிடலாம் சார்..
Wat an IDEA :)
there are still some cheap scoundrels posting comments presuming they cannot be traced and dealt with.
henceforth only those with a mail id can comment here.
anonymous courage shall be appropriately handled.
nice one.
True words. I have felt the same situation and I believe there are many others also. This post is very interesting one.
Post a Comment