Tuesday, January 12, 2010

சமரசம், சாக்கு, சுயநலம்

பரவாயில்லை என்பது எவ்வளவு பழக்கிக்கொண்ட பதம்! 
லாபம் கருதித்தான் எந்த ஒரு விஷயத்திலும் நாம் சமரசம் செய்து கொள்கிறோம். சமரசம் என்பது சமாதானமாகப் போய்விடுவது எனும் ஒரு குணம் அல்லது பழக்கம் மட்டுமல்ல, சண்டையில் நமக்கே நம்பிக்கை இல்லாத போதுதான். சண்டை என்பதும் முஷ்டி மடக்கி முகத்தில் குத்தப்போவது என்று மட்டும் அல்ல, முனகலாகவோ முகச்சுளிப்பாகவோ கூடத்தான்.

பரவாயில்லை adjust செய்துகொள் என்றுதான் சொல்லி வளர்க்கப்படுகிறோம், பின்னர் அப்படியே சொல்லி வளர்க்கிறோம். என்னை அப்படி வளர்த்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் விட்டுக்கொடுக்கப் பழகியிருந்தேன். பெருந்தன்மையால் அல்ல, வேறு வழி இல்லாததால். பதின்வயதுகளில் வேறு வழியும் உண்டு, அது பட்டினியாய் ஒரு தற்காலிகத் தோல்வியாகவும் இருக்கட்டும் என்று தெரிந்துகொண்டபின், வளைந்துகொடுக்காத மனநிலை முரட்டுத்தனம் என்று வர்ணிக்கப்பட்டதை, முதலில் கோபத்தொடும் பிறகு ஒரு பாராட்டின் புல்லரிப்பாகவும் உணர்ந்திருக்கிறேன். 

அது ஒரு காலம். படித்துப்படித்து, வாழ்வின் படிமங்களைப் புரிந்து பரிசோதித்து விழுந்து எழுந்து நடக்கக் கற்றுக்கொண்ட காலம். நிற்பதிலும் நடப்பதிலும் நிமிந்திருக்கும் மனோவிசை உள் இயங்க ஆரம்பித்தபின், இப்போதெல்லாம் எதற்கு சமாதானம், சாக்கு, சமரசத்திற்கு ஆதரவாய் ஒரு தர்க்கம்? சுயநலம் தவிர இதில் வேறெதுவும் கிடையாது.

எதற்காகவும் நான் எதையும் விட்டுக்கொடுத்ததில்லை என்று யாருமே சொல்ல முடியாது. கௌதமன் கூட மனைவி தூங்கும் வரை காத்திருந்துவிட்டுத்தான் புத்தி தேடி காட்டிற்குப் போனான். இங்கேதான் எதில் எவ்வளவு என்று சமரசம் குறித்து நாம் ஒரு சௌகரியமான விதிமுறையை உள்ளமைத்துக்கொள்கிறோம். 

பெரிய விஷயங்களுக்காக விட்டுக்கொடுப்பதில்லை, சின்னச்சின்ன விஷயங்களுக்கு வீம்பு பிடித்து வறட்டுப் பிடிவாதம் செய்வதில்லை என்று நமக்குள் ஒரு தீர்மானத்தை ஏதோ ஒரு வயதில் உறுதி செய்து கொள்கிறோம். பிறகு, சின்னது எது பெரியது எது என்பது அந்தந்த விஷயங்களின் தன்மைக்கேற்ப அமைவதைவிட நம் சௌகரியத்திற்கேற்பவே அமைய ஆரம்பிக்கிறது. பிறகு கொஞ்சம் வளைந்து கும்பிடு போடுவதற்கும், கீழே விழுந்து வணங்குவதற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு சமரசம் தோன்றுகிறது. அடுத்த கட்டம் யாரும் பார்க்காவிட்டால் உடனடியாகக் கீழே விழுந்தே கும்பிடு போடலாமே என்று எண்ணம் வரும். “யாரும்” என்பது தன் அகப்பார்வைக்கும் நிலைக்கண்ணாடிக்கும் அப்பாற்பட்டவர்கள்தான் என்றும் ஒரு கணிப்பு வரும். சுயநிர்வாணத்தை தரிசிக்கமுடியாவிட்டால், அழுக்கு போகக் குளிக்கலாம் என்பதை விட, அழுக்கு மறைக்க ஒப்பனை கூட்டலாம் என்பதே செயல் முனைப்பாக ஆகிவிடும். 

Shaespearean clicheவாக இல்லாவிட்டாலும் நாம் எல்லாரும் நடிக்கத்தான் செய்கிறோம். நடிப்பது என்று வந்துவிட்டால் அப்புறம் என்ன இயற்கை, மிகை? ரசிக்கும்படி செய்கிறோமா இல்லையா என்பதே முக்கியமாகிவிடும். 

நடிக்கிறோம் என்பது நிஜம். சில நடிகர்களுக்கு நடிக்கும்போது அந்தப்பாத்திரமாகவே ஒன்றிவிடும் தன்மை உண்டு.நாம் உருவாக்கிக்கொள்ளும் அல்லது உருவாக்குமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட பாத்திரங்களை நாம் முழுமையாய் நடித்துக்கொண்டிருக்கும் வரை பிரச்சினை கிடையாது. திடீரென்று காட்சி மீறி, நிர்ணயிக்கப்பட்ட வசனம் மீறி ஏதாவது செய்தாலோ சொன்னாலோதான் சிக்கல். அதையும் சமாளிக்கத்தெரிந்தவனே சிறந்த நடிகன். அவனுக்கு அப்போது நாடக மேடை அவனது சொந்த தளமாகிவிடும். அவனுக்கேற்ப பிற நடிகர்களையும் அவனால் அப்போது மாற்ற முடியும். அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குக் காரணிகளே ஞானியர், தலைவர், தீர்க்கதரிசனமுள்ள தத்துவ மேதைகள். அவர்கள் வளைவதில்லை, சமூகத்தை நிமிர்த்துகிறார்கள். 


******* 
திடீரென்று தத்துவ விசாரணையில் இறங்கவேண்டும் என்று இதை எழுத ஆரம்பிக்கவில்லை. இன்று என்னுள் ஒரு கேள்வி. நான் விட்டுக்கொடுத்து, சமரசமாக சமாதானப்படுத்திக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வியின் தொடர்பாய்த்தான் இவையெல்லாம் தோன்றின. 

விஷயம் என்று பார்த்தால் அல்பமாகவும் இருக்கிறது! 
சென்னை சங்கமத்தின் இன்னொரு வீச்சான தமிழ்ச் சங்கமத்தில், நாளை ஒரு நிகழ்ச்சி. கனிமொழியின் சகாவான இளையபாரதி முன்னின்றெடுக்கும் விழா. அதில், ஜெயகாந்தன் எனும் ஆளுமை, குறித்து ஒரு கருத்தரங்கம். அதில் நான் பேச வேண்டும் என்று புத்தக விழாவில் பேசும்போது சொன்னார்கள். 
ஜெயகாந்தன் சம்பந்தப்பட்டதாயிற்றே! சரி என்று தான் சொன்னேன். 
நாள், இடம் எதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தெரியாது. இன்று வரை எந்த ஒரு அறிவிப்பும் அழைப்பும் எனக்கு வரவில்லை. ஆனால் இணையத்தில் நான் பேசுவதாய் அறிவிப்பில் இருக்கிறது. அதிலும் என்னை மருத்துவர் என்று குறிப்பிடாமல் தவறுதலாய் முனைவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதைச் சுட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பி, அதற்கும் ஒரு பதிலும் வரவில்லை. அவர்களுக்கு ஆயிரம் ஆயிரங்களுக்கான வேலைப் பளுவில் மின்னஞ்சல் படிப்பது சாத்தியமில்லாது போகலாம், ஆனால் அப்படி ஒரு மின்முகவரி தந்திருக்கக்கூடாது. 

இவ்வளவு வெட்டியாய் வீறாப்பாய் பேசுவதை விட, வர மாட்டேன் என்று சொல்லித்தொலைக்கலாம் என்றால், எப்படி? அதே மின்னஞ்சலுக்குத்தான் ஒரு படிக்கப்படாத கடிதம் எழுத வேண்டும்! 

இதில்  நான் செய்து கொள்ளும் சமரசங்களும் சொல்லிக்கொள்ளும் சமாதானங்களும் என்னென்ன என்று பார்த்தால் பலவும் புரிகிறது. 
முதலாவதாக ஜெயகாந்தன் என்ற உடன் அவரது நடவடிக்கைகள் அனைத்திலும் உடன்பாடு இல்லாதபோதும் பேச ஒப்புதல் தந்தது. மாமியார்-மருமகள்-மண்-பொன்-குடம் போல்தான் இது. இங்கேயே ஒரு சறுக்கல். 
நான் நெருக்கமாய் நேசிக்கும் அவரை விமர்சிப்பது என்பது நேர்முகமாய் மட்டுமே அன்றி பொதுவில் அல்ல என்ற தீர்மானம் எவ்வளவு நேர்மை? இந்த அடிப்படை நேர்மையின்மையை என் மனமே சமாதானப்படுத்திக்கொள்ள, ‘நான் பேசப்போவது அவரது எழுத்துகளைப்பற்றித்தானே’ என்பதில் எவ்வளவு சுயசௌகரியம்? அடுத்து, அந்த மேடையினால் எனக்குப் புதிதாய் நண்பர்களோ வாசகர்களோ ரசிகர்களோ வரப்போவதில்லை என்றாலும் ஒரு மேடை அழைத்தால் உடனே ஆட ஓடும் கால்களின் பரபரப்புக்கு என்ன பெயர்? அடிப்படை நாகரீகமாக இந்த இடத்தில் இந்த நேரம் நீ பேச வேண்டும் என்று எவ்வித அறிவிப்போ அழைப்போ இல்லாமல் எப்படி நான் போவது? ஒருவேளை நிஜமாகவே வேறு யாராவது முனைவர் பட்டம் பெற்ற ருத்ரன் அங்கே இருந்தால்? 

இதை இவ்வளவு யோசிக்கும்போதுதான் தோன்றுகிறது, அவர்கள் முறையாய் ஒரு கடிதமோ அழைப்பிதழோ அனுப்பியிருந்தால் இவ்வளவு நீட்டி முழக்கி இருப்பேனா? 

என் நாடகம் எனக்குத் தெரிகிறது. 
என் நடிப்பும் எனக்குப் பிடிக்கிறது. 
என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை!

25 comments:

dr.raghavan said...

well done dr

dondu(#11168674346665545885) said...

உங்களுக்கு அறிவுரை கூறுவதாக தயவு செய்து நினைக்காதீர்கள். உங்கள் இடத்தில் நான் இருந்தால் கன்ஃபர்மேஷன் சரியாக இல்லாதிருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போக மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anandi said...

beautiful :-)

சந்தனமுல்லை said...

:-) very nice introspection! சில இடங்களில் என்னை பிரதிபலிப்பதாக உணர்ந்தேன்!

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது ஸார் நீங்கள் எழுதிய விதம்..

Thekkikattan|தெகா said...

radical thinking! great! இது மாதிரி மனசில ஓடுற அனைத்து எண்ணங்களையும் வெளியே கொண்டு வந்திட முடியுமா?

//பிறகு கொஞ்சம் வளைந்து கும்பிடு போடுவதற்கும், கீழே விழுந்து வணங்குவதற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு சமரசம் தோன்றுகிறது.//

:)) அப்படி வாழக் கத்துக்கலைன்னா உயரங்களை எப்படி ஒரு 'காமன் மேன்' அடைவது. அவர் அவர்களின் நிலைக்கு ஏற்ப சமரசம், சாக்கு, சுய நல இயக்கம் இருந்தே ஆக வேண்டும் போல... ஆனா, நீங்க சொன்ன மாதிரி அது எங்கே, எதற்கு, எப்படி - அதில நமக்கு எவ்வளவு உதவும் என்பதிலேயே மனசு கணக்குப் போட்டு செய்யும் போல.

அப்படி கணக்கு போட்டு இயங்கத் தெரியலைன்னா, பிழைக்கத் தெரியாத மனுசன், எதுக்கு கொஞ்சம் விலகியே இருக்கனும்டா :))...

ராஜ நடராஜன் said...

பேசும் பட்சத்தில் உங்களுக்கு ஜெயகாந்தன் எழுத துவங்கிய காலம் தொட்டு ரஷ்ய பிளவு காலம் வரை சிலாகிக்கவும்,தேச உடைப்போடு தானும் எழுத்தால் உடைபட்டுப் போனதை சொல்லவும் இரு தருணங்கள்.

Ashok D said...

செக்ண்ட் half படிச்சுட்டு அப்புறம் first half படிக்கறது...சுலபமாஇருக்கு :)

வால்பையன் said...

சங்கமம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் இம்மாதிரியான சில சறுக்கல்கள் சகஜம் தான் சார்! செல்லுங்கள், மறக்காமல் தவறுகளையும் சுட்டிகாட்டுங்கள்!

அன்புடன் அருணா said...

நேர்மையான பகிர்வு!

wordbonds said...

கடிதமோ அழைப்பிதழோ அனுப்பியிருந்தால்...? என்ற கேள்விக்கான விடையை பிறகு தேடிக் கொள்ளலாமே? புத்தக விழாவில் ஏதோ சம்பிரதாயமாக கேட்டு விட்டு பிறகு முறையாக அழைக்காதது அனாகரிகமாகப் படுகிறது. சென்ற வருடம் இதே விழாவுக்கு முறையாக அழைக்காமல் 'சொதப்பலாக' அவ்விழாவை நடத்தி காயப்படுத்தி விட்டதாக ஒரு கவிஞர் ஜுனியர் விகடனில் புலம்பியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அந்த நிகழ்வில் யார் பக்கம் நியாயமிருந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் படிக்கும் போது இது தேவையா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏதோ...பார்த்து செய்யுங்கள்!

Chitra said...

என் நாடகம் எனக்குத் தெரிகிறது.
என் நடிப்பும் எனக்குப் பிடிக்கிறது.
என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை! ........................Superb!

Santhini said...

Nice description of feelings.
Turned out to be funny at the end.

அமர பாரதி said...

அழகாக எழுதியுள்ளீர்கள் ருத்ரன் சார்.

அரங்கப்பெருமாள் said...

//வேறு யாராவது முனைவர் பட்டம் பெற்ற ருத்ரன் அங்கே இருந்தால்? //

அப்படி நடக்க வாய்ப்பில்லை என எண்ணுகிறேன்.

//என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை!//

ஆம்...

Anonymous said...

You are making a non-issue an issue. If you are so keen to participate go there and participate without bothering about formalities.But please consider the possibility of programs starting behind the schedule, last minute changes and be prepared for some confusion.If you are keen on formalities and properr invitation and re-confirmation from organisers then dont go when these are not done.In any case is that function a part of Mela the right forum to assess and speak about JK. If you want to do an assessment and talk about him you can do that by yourself in many ways- a long essay, a meeting in which you are the only speaker and he is invited and he consents.Be pragmatic.Dont get struck in analysis is paralysis syndrome.
I was invited to attend a workshop and the topics to be addressed were also mentioned.
I told the organizers that I could speak on one
of the topics and they agreed.I knew the topic and made a good presentation.They were impressed by my presentation.Even if they had they said no to my offer I would have attended it because I can always write on that. I wont lose the chance to listen to others and meet
friends and make new acquitances.Their non-acceptance does not mean that they did not respect me.If one can think beyond ego one can approach issues differently.

Anonymous said...

'ஒருவேளை நிஜமாகவே வேறு யாராவது முனைவர் பட்டம் பெற்ற ருத்ரன் அங்கே இருந்தால்?

இதை இவ்வளவு யோசிக்கும்போதுதான் தோன்றுகிறது, அவர்கள் முறையாய் ஒரு கடிதமோ அழைப்பிதழோ அனுப்பியிருந்தால் இவ்வளவு நீட்டி முழக்கி இருப்பேனா?

என் நாடகம் எனக்குத் தெரிகிறது.
என் நடிப்பும் எனக்குப் பிடிக்கிறது.
என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை!
'
Because you all think being a critc is a great intellectual thing.It is not so.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்கள் பதிவில் பிரதிபலிப்பது அழகான நேர்மை.. பிடித்திருக்கிறது.. :)

உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானது.. பதில் உங்கள் பதிவிலேயே இருக்கிறது - போவதால் ஏதும் லாபம் வருமென்றால் போகலாம்.. இல்லையேல் விட்டு விடலாம்..

மதி said...

சின்ன ஆதரவு ஜால்ராவிற்க்காக வினவு குழுவோடு லீனா மணிமேகலை பதிவில் ஒத்துபோகிறீர்களே , உங்களுக்கெல்லாம் எதுக்கய்யா இது போன்ற பதிவு ,

நீங்களும் ஒரு தாடி வெச்ச போலி அறிவு(?)ஜீவிதான்

சிங்கக்குட்டி said...

இதில் சுற்றி வளைக்க என்ன இருக்கிறது!

யாரை பற்றி பேசுவது என்பது ஒரு விசையமே அல்ல, காரணம் எப்படியும் அவரை பற்றி இந்த உலகத்துக்கு தெரியாத எதுவும் அங்கு பேச போவதில்லை (தனிப்பட்ட முறையில் சில தெரிந்து இருந்தாலும் கூட).

ஆனால் ஒரு நிகழ்ச்சியில் யார் பேச போவது என்பது மிக முக்கியமான ஒன்று, அந்த இடம் பொருள் மரியாதை முறையே கிடைக்காத இடத்தில் ஒதுங்கி நிற்ப்பது சாலசிறந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து (எனக்கு எந்த அரசியல் துணையும் தேவை இல்லை என்பதால் :-) ).

விடுதலை said...

நல்ல எழுத்து நடை

Anonymous said...

Any comments on this
http://www.jeyamohan.in/?p=6258

Sai Ram said...

வலைப்பதிவுகளை எதற்கு வாசிக்கிறோம்? இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? எதுவாக இருந்தாலும் இதனையும் ஒரு வேலையாக கொள்ளக்கூடாது என்று நினைப்பு தோன்றுகிறது. காரணம் வேலைகள் என்று ஏற்று கொண்டாலே சுமை தான் முதலில் தெரியும். ஆர்வமாய் மாடியில் நின்று தெருவினை வெறித்து பார்ப்பது போல வலைப்பதிவுகளை படித்து விட்டு செல்வது நன்றாக இருக்கும். அப்படி தொடர்ந்து உங்களை வாசிக்கும் போது உங்களது நேர்மை பிடித்திருக்கிறது. தாடி, ஏற்கெனவே உள்ள டாக்டர் ருத்ரன் என்கிற பிராண்ட் என்பதினை தாண்டி கிராமத்தில் உள்ள ஒரு படிக்காத கிழவனின் wisdom சட்டென எப்படி நம்முள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தி செல்லுமோ அந்த சக்தி உங்கள் எழுத்தில் இருக்கிறது.

குப்பன்.யாஹூ said...

your writing is good, but for Jeyakanthan & kanimozi akka, you should go even if invitation would not have come.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் அருமையான பதிவு சார்!

ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் விட்டுக்கொடுக்கப் பழகியிருந்தேன். பெருந்தன்மையால் அல்ல, வேறு வழி இல்லாததால். //

:)))))))
நம்மில் பெரும்பாலோனோர் இப்படித்தான் போல.

Post a Comment