Thursday, November 19, 2009

தேவி




பகுத்தறிவு மட்டுமே வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை.வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவமும் கூட.அறிவியல் அணுகுமுறையே பகுத்தறிய உதவும் என்பதும் என் நம்பிக்கை. ஆனால்
"பேய் பிசாசு பில்லிசூன்யம் என்பனவெல்லாம் இல்லை என்று தீர்மானமாகப் பேசும் நீ...நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு ஏன் திரிகிறாய்? உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா?"....இது தான் சமீபமாய் நான் சந்திக்கும் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி.
எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. என் அழகு தெய்வத்திடம் அளவு கடந்த பக்தியும் உண்டு. அவளை உண்மையாக விரும்பி, ஏற்றுக்கொண்டதன் பகிரங்கமான பிரகடன‌ம் தான் என் நெற்றியிலுள்ள குங்குமம். காதலித்தவனோடு வாழ்கிறேன் என்று பெருமிதத்தோடு சில பெண்கள் அணியும் தாலி போல, விரல் மாட்டியிருக்கும் மோதிரம் போல, மெட்டி போல. இவ்வகைச்சின்னங்கள் பொதுவாக ஆணாதிக்கச்சமுதாய நிர்ப்பந்தமாகவே பல பெண்களுக்கு அமைந்துவிட்டாலும், நான் சொல்வது, இவ்வகை அடையாளங்களை நிர்ப்பந்தமில்லாமல், ஆசையோடும், பெருமிதத்தோடும் அணிந்து கொள்ளும் சிலரைப் பற்றித்தான்.
ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வீரவசனம் பேசும் போலி பகுத்தறிவாளனாக இருப்பதைவிட, நேர்மையான கடவுள் ஏற்பாளனாக இருப்பது தான் என் நெஞ்சுக்கு நிஜ நிம்மதி.
பேய் பிசாசு போன்றவை கற்பனை, ப்ரமை என்றால் கடவுள் மட்டுமென்ன சத்தியமா, நிருபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? என்னும் கேள்விக்கு என் பதில்: பேய் பிசாசு போன்று கடவுள் என்பதும் கற்பனை தான். மனிதனின் உருவாக்கம் தான், நினைவாக்கம் தான். கடவுள் என்பது சுகம் தரக்கூடிய கற்பனை, பேய் என்பது பயம் தரக்கூடிய கருத்தாக்கம்.எது மனதுக்கு இதம் தரும்?
நான் ஏன் கடவுளை காதலிக்கிறேன்? இன்னும் இணையவில்லை என்பதனாலும் இருக்கலாம்..இன்னும் வளரவில்லை என்பதனாலும் இருக்கலாம்..அனால் என் பக்தி ஒரு காதல். காதல் சுகமான அனுபவம், சுகமான எதிர்பார்ப்பு. அடிப்படையில்லாவிட்டாலும் அழகான நம்பிக்கை!
என் பக்தியின் பெயர் காதல் என்பது போல் என் அனுபவத்தில் கண்ட அழகுக்கும் அமைதிக்கும் பெயர் கடவுள். வேறு வார்த்தைகள் தெரியாததால் இப்போதைக்கு இவை.
இது குறித்து இன்னும் பின்னால்...

12 comments:

Dr.Rudhran said...

என் தேவி என் தெய்வம் என்றெல்லாம் நான் கொஞ்சி மகிழும் அவள் மேரியாகவும் தெரிவாள், க்வான்யின்னாகவும் தோன்றுவாள்...இந்துமத‍'பார்ப்பனீய' குறியீடுகளைமீறி அவள் எனக்கொரு மனத்தின் மைய சக்தி

Anonymous said...

கடவுளென கருதப்படும் கண்ணனை மீரா, ஆண்டாள் போன்ற மானிடப் பெண்கள் காதலித்ததாக கூறப்படுவதற்கும், உங்கள் தெய்வம் தேவியை நீங்கள் காதலிப்பதற்கும் ஒற்றுமை, வேற்றுமைகள் ஏதேனும் உள்ளனவா?

-குளோபன்

Dr.Rudhran said...

இரண்டுமே மதிமயக்கம் தான்.

superlinks said...

விளக்கம் ஏற்கும்படி நேர்மையாக இருக்கிறது.
ஆனால் நீங்கள் எல்லாம் பிறருக்கு ஒரு முன்மாதிரி
அந்த வகையில் இது பின்பற்றக்கூடிய‌ முன்மாதிரி அல்ல. (:

Dr.Rudhran said...

இது பின்பற்றத்தூண்ட அல்ல, பின்பற்றவேண்டாமே என்பதாகவும் இருக்கட்டும். என் தவறுகளை நியாயப்படௌத்த அல்ல என் எழுத்து, நான் விழுந்தேன் என்பது வரப்போகிறவர்களுக்கு எச்சரிக்கவும்தான்

பித்தன் said...

//பேய் பிசாசு போன்றவை கற்பனை, ப்ரமை என்றால் கடவுள் மட்டுமென்ன சத்தியமா, நிருபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? என்னும் கேள்விக்கு என் பதில்: பேய் பிசாசு போன்று கடவுள் என்பதும் கற்பனை தான். மனிதனின் உருவாக்கம் தான், நினைவாக்கம் தான். கடவுள் என்பது சுகம் தரக்கூடிய கற்பனை, பேய் என்பது பயம் தரக்கூடிய கருத்தாக்கம்.எது மனதுக்கு இதம் தரும்?//



முரணாக உள்ளதே....!

பித்தன் said...

பேய் இல்லை எனும்போது..... கடவுளும் இல்லைதானே....?

புருனோ Bruno said...

//என் பக்தியின் பெயர் காதல் என்பது போல் என் அனுபவதில் கண்ட அழகுக்கும் அமைதிக்கும் பெயர் கடவுள். வேறு வார்த்தைகள் தெரியாததால் இப்போதைக்கு இவை.
//

:) :) :)

அன்புடன் அருணா said...

இதம் தரக் கூடிய கடவுளை மனதில் சுமப்பதில் என்ன தவறு?

eniasang said...

இதில் சிக்கல் ஆண்டவன் வர மாட்டான் என தெரிந்தும் சமயங்களில் அவரை உதவிக்கு அழைத்து .............எனக்கு அவர் மேல் தீராக் கோபம்.கண்ணுக்கு தெரியும் பகைவனே மேல்.(எனக்கு அவர் உங்களுக்கு அவள் ,எல்லோருக்கும் நல்ல காதலியும் கிடைப்பதில்லை கடவுளும் அப்படியே.

Srivathsan Margan said...
This comment has been removed by the author.
Anonymous said...

உங்களுடைய ஆளுமையின் இரட்டைத்தன்மையை பக்தி காதல் மீரா என விவரிப்பதால் நியாயப்படுத்த முடியாது. கோடிக்கணக்கான மக்களை மதம் ஒரு அபினைப் போல இருந்து போதையில் ஆழ்த்தி இகலோக வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் சொர்க்கம் நிச்சயம் என்கிறது. அதற்கு நீங்கள் உதவுகின்றீர்கள். ஒரு மனநல மருத்துவராக மக்களிடம் தோன்றும்போது, இவ்வளவு பேசும் இவரே பொட்டு வச்சுருக்காறே.. அப்போ பேய் பிசாசு தெய்வம் எல்லாம் இருக்கத்தானே செய்யுது என்ற பத்தோடு பதினொன்று ஆன மற்ற மருத்துவர் போலத்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். ஒருவரின் மன அமைதிக்காக மக்களின் நிரந்தர அமைதியை உருவாக்க முதலாளிகளின் அமைதியை குலைக்கமுடியாமல் போகின்றதே... வருத்தமாக இல்லையா... அற்ப உணர்வின் கூடாரமாக படித்த முற்போக்கு இலக்கிய நடவடிக்கை எல்லாம் எடுத்த நீங்கள் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

Post a Comment