Thursday, November 19, 2009

ஆரம்பிக்கிறேன், முடிக்கமுடியாது..


என்னைப்பற்றித்தான் இது.
இதுவும் ஒரு பயிற்சிக்காக‌த்தான். கதை எழுதத்தெரியாதுஎன்பதால் இதை எழுதுகிறேன். என் அனுபவங்கள் பற்றிய என் அபிப்ராயங்களில், உங்கள் அனுபவங்கள் பிரதிபலித்தால், உங்கள் அபிப்ராயங்களூம் இனி மாறலாம். இப்படி ஒரு சமூகநல்லெண்ணத்தொடு எழுதுவதாக நான் எனக்கே கூறிக்கொண்டாலும், உண்மையில், பின்னாள் இன்னும் நிறைய எழுத இருப்பதற்கான ஒத்திகை தான் இது.
வாழ்க்கை வரலாறாகப்போகிறது என்னும் எதிர்பார்ப்பும் இறுமாப்புமே பல சுயசரிதைகளை உருவாகியிருப்பதை உணர்ந்தாலும், தன் வாழ்வை எழுதுவதை விடவும் சுலபமான கருப்பொருள் எவனுக்குமே கிடக்காது.
அவசரமாக இதை எழுதவேண்டிய காலகட்டத்தில் நானும், அவசியம் இதைப்படிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நீங்களும்  இல்லாத நிலையில், இதை பதிவு செய்வது விநோதமாகவே இருக்கிறது. இந்தப்பதிவின் மூலம் நான் என்னை மீண்டுமொருமுறை உற்றுப்பார்த்து, அழுது,சிரித்து,பெருமை/அவமானப்பட்டு, சில பாடங்களைக்கற்றுக்கொள்வது சாத்தியம். அவை யாரேனும் ஒருவர்க்கு தங்கள் வாழ்வினை திரும்பிப்பார்த்து அலசி ஆராய உதவக்கூடும்- இது நம்பிக்கை என்பதை விடவும் ஒரு நப்பாசை.
என்னைப்பற்றிய விவரங்களை பட்டியலிட்டு, கொஞ்ச‌ம் ஜோடித்து, கொஞ்ச‌ம் பொய்சேர்த்து, இன்னும் கொஞ்சம் மிகைசேர்த்து.. ஒரு வேலை தேடி ( அல்லது இப்போதெல்லாம் நடப்பது போல் விருது வேண்டி) விண்ணப்பிக்கும் காலகட்டத்தில் என் வாழ்க்கை இல்லை. ஆகவே இதில் என்ன படித்தேன்,பணியாற்றினேன்..என்பன அவசியமில்லாததால் ஆசுவாசப்பட முடிகிறது.
எனக்கு இடப்பட்ட பெயர் ருத்ரன். சாதிமறுப்பில் முற்போக்காக இருந்த என் தாத்தா ஜோதிடரீதியாக நட்சத்திரம் பார்த்து தேர்ந்தெடுத்த பெயர் தான் இது. அதிகம் புழக்கத்தில் இல்லாத பெயராக அமைந்துவிட்டதால், புனைப்பெயர் தேடவேண்டிய வேலை எனக்கு மிச்சமாகியது.
ஓர் எழுத்தாளனாக என்னை aடையாளம் காட்டிக்கொண்டதில்லை என்றாலும் எனக்கு எழுதுவது எப்படியோ சற்றே சுலபமாக அமைந்துவிட்டது. நான் எழுத்தாளன் என்பதைவிடவும் ஓர் ஓவியனாகவே என்னைப் பார்த்துக்கொண்டும் காட்டிக்கொண்டும் வந்திருக்கிறேன். ஆனால் நான் மக்களிடையே ஒரு மனநல மருத்துவனாகவே அறியப்பட்டிருக்கிறேன். இங்கே என் மருத்துவ அனுபவங்களைத்தவிர பிற அனுபவங்களையே பதிவு செய்யப்போகிறேன்.
வலிய, எழுதவேண்டும் என்று என்னை நானே நிர்ப்பந்தப்படுத்திக்கொண்டு எழுதுவதால், இடைவெளிகள் அவசியமாகின்றன..

2 comments:

eniasang said...

உங்கள் எழுத்துக்கென ப்ரத்யேகமான ரசிகர்கள் உண்டு.உங்களுக்கு ஜோடனைகள் வராது,வலிய சேற்றையாவது பூசிக் கொள்வீர்களே தவிர சந்தனத்தை விரும்ப மாட்டீர்கள்தானே

Unknown said...

வித்தியாசம் மற்றும் மாற்று சிந்தனைகளுக்கு ஏற்றது உங்கள் எழுத்து. தொடர்ந்து எதிர் பார்க்குறோம்.

Chinnasami

Post a Comment