Thursday, September 4, 2014

ஆசிரியர் தினத்துக்காக..

ஒரு வயதில், குரு தேடி அலைந்திருக்கிறேன். அவ்வப்போது, “நீ தயாரான நிலைக்கு வந்தவுடன் குரு தானாய் உன்னை வந்து ஆட்கொள்ளுவார்”, என்று எழுதப்பட்டதையெல்லாம் நம்ப விரும்பாத ஆணவத்தில், தொடர்ந்து தேடி வந்திருக்கிறேன். தெருவில் போகும்போதுகூட தாடி வைத்தவனையெல்லாம் ஓரக்கண்ணில் எடைபோட்டவாறே தேடியிருக்கிறேன்
மனத்துள் ஒரு குரு பிம்பம் உருவாக்கி, அதையே தேடி அலைந்திருக்கிறேன். அந்த பிம்பம் உருவாய் ஆனது; குரு உருவாய் மட்டுமல்ல அருவாய், மருவாய், மணியாய், ஒளியாய், கதியாய், விதியாய்..எப்படி வேண்டுமானாலும் வருவார் எனும் அருணகிரி வாக்கை நன்கு மனத்துள் இருத்திக்கொண்டிருந்தாலும், விழிபடும் குருவை வழிபட அலைந்திருக்கிறேன்.
குருவின்றி வித்தை சாத்தியமில்லை என்றே நான் படித்த சாத்திரங்கள் திட்ட வட்டமாய் சொல்லி விட்டதால், ரொம்பவும் தீவிரமாகவே அலைந்திருக்கிறேன். அப்படி அலையும் காலகட்டத்தில், கைவசம் கொஞ்சம் ஓவியம், தேவையான அளவு மருத்துவம், தேரும் அளவு எழுத்து என்னிடம் இருந்தது. பதின்வயதுகளில் அல்ல, முப்பதுகளின் மத்தியில்தான் இந்த குரு தேடல் ஆரம்பம்.
ஆன்மிகச்சந்தையில் விளம்பர வசீகரத்துடன் வழிகாட்டுவதாய் வருமானம் சேர்க்கும் வியாபாரிகளை எளிதில் அடையாளம் காண முடிந்தாலும், உள்ளே நிச்சயம் ஒரு குரு கிடைப்பார் என்றே அலைந்தேன். குரு என்பவர் என் எல்லா கேள்விகளுக்கும் விடை தருபவராக மட்டுமல்ல, அவரது நெறியின் மீது எனக்கு எவ்விதக் கேள்வியும் எழக்கூடாது என்பதே அடிப்படை தகுதியின் தேர்வாக நானே நிர்ணயித்திருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு ஓரிருவர் மீதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது- நெருங்கிப்பார்க்கும் வரை.
 அப்படியான என் தேடல் காலத்தில், என் மருத்துவமனையில் ஒருவருக்கு மனப்பிறழ்வு என்று என்னிடம் அழைத்து வந்தார்கள். எனக்கென்னவோ உள்ளே நிஜமாக உடல் சார்ந்த நோய் இருப்பதாய்ப் பட்டது. ஓர் அனிச்சைச் செயலாய், சாயந்திரம் வாங்க, என் வாத்தியார் இருக்கார் அவர் கிட்டயும் கேட்டுடலாம் என்றேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அந்த காலகட்டத்திலேயே என் மனநல மருத்துவத்துறையில் எனக்கென ஒரு சிறப்பிடம் மக்கள் மத்தியில் இருந்தது. மாலை அவரைப் பார்க்க அவர்களோடு நானும் போனேன்.       “என்ன டாக்டர்?” என்றார், சொன்னேன். பத்து நிமிடம் பரிசோத்து விட்டு, “யு ஆர் ரைட்..இவருக்கு…..” என்றார். கூட வந்தவர்களுக்கு ஆச்சரியம் எனக்கு இது சகஜமான விஷயம்.
இப்படித்தான் அவர்.-எப்போதும்.
சிக்கலான கேள்வியோடு நான் போய் நின்றால், எளிமையாக நிதானமாக விடையும் விளக்கமும் சொல்வார். நான் விவரித்த நிகழ்வு, அவரது மாணவனாய் மருத்துவக்கல்லூரியிலிருந்து வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின். படிக்கும் காலத்திலேயே அப்படித்தான்.
என் மீது (நான் ஓவியனாய் எல்லா ஆசிரியர்களுக்கும், அவர் உட்பட, அந்த காலத்தில் அவசியமான ஸ்லைட் வரைந்து தந்து வந்ததால் மட்டுமல்லஅவருக்கு அன்பு இருந்தது. “லஞ்ச் முடிச்சுட்டு வார்டு வாங்க டாக்டர், கேஸ் பார்க்கலாம்என்பார். மதியம் வீட்டுக்குப் போகாமல், இது பாருங்க..இது ஏன்னு நினைக்கிறீங்க, இந்த டெஸ்ட் இப்படிப் பண்ணினா இன்னும் க்ளியரா தெரியும்என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயமாய் எனக்குச் சொல்லித்தந்தார். அது அவரிடம் நான் நேரடி மாணவனாய் இல்லாமல் வேறொரு வார்டில் இருந்தாலும்.
மருத்துவப் படிப்பு முடித்து நான் சின்னதாய் ஒரு க்ளினிக் வைத்தபோது அவரிடம் சென்றேன்..”சாயந்திரம் வாங்கஎன்றார்..பின்மாலையில் தன்னுடன் உட்கார வைத்து, அவர் எப்படி பார்க்கிறார், பரிசோதிக்கிறார், என்ன மருந்து தருகிறார் என்பதை கவனிக்க வைத்தார், அவரது க்ளினிக் நேரம் முடிந்தவுடன்அது என்ன கேஸ்என்று பார்த்தவற்றை எப்படிப் பார்ப்பது என்று ஒரு வாரம் விளக்கினார். அதன் பின், ஒரு நாளைக்கு என் க்ளினிக்கில் அவரை விடவும் கூட்டம்அவரிடம் இதைச் சொன்னவுடன், “வெரி குட், டாக்டர். அப்படியே டெவலப் பண்ணுங்கஎன்றார்.
அதன்பின், மனநல மருத்துவம் தான் என் துறை என்று நான் தீர்மானித்து அதில் மூழ்கியபோதும் அவரை அவ்வப்போது பார்க்காமல் இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும்இது என்ன சார், எப்படி சார்என்றுதான் போய் நிற்பேன். பதிலில்லாமல், பதிலினால் தெளிவில்லாமல் வந்ததில்லை.
அவரது மருத்துவமனையில் இருக்கும் அத்தனை பேரையும் தினமும், ஞாயிறு உட்பட மூன்று முறை பார்த்து பரிசோதித்து விடுவார். ஒரு முறை மூன்று நாட்கள் அவருக்கு வெளியே அவசர வேலை, என்னை அழைத்து இந்த மூணு நாளும் நீங்க ஹாஸ்பிடலை பார்த்துக்குங்க, என்ற போது நடுங்கினேன். நீங்க பாத்துப்பீங்கன்னு தான் உங்களை கேட்கிறேன் என்றார். எம்.பி.பி.எஸ் பாஸ் செய்ததைவிடவும் உள்ளே சிறகு விரிந்தது.
அவரிடம் தான்..மேற்சொன்ன அந்த நிகழ்வு. அன்று தான் எனக்கு ஒரு தெளிவு வந்தது. நோய் பற்றி அல்ல, என் வெற்று தேடல் பற்றி.
இதோ இவர், எல்லா கேள்விகளுக்கும் விடை தந்து, விளக்கம் தந்து, நான் உள் வாங்கினேனா என்று தெரிவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் என் மருத்துவ ஆற்றலைச் செப்பனிட்டு, அதன் தேர்ச்சியை அங்கீகரித்து.. வெளியே எந்த குரு வேறென்ன செய்து விட முடியும்?
தன் ஞானத்தை மெதுவாய் ஊட்டி விட்டு, நான் சாப்பிட்டு விட்டதை சபாஷ் என்பவரை விடவா ஒரு குரு?
அன்றிலிருந்து இவர் தான் குரு. இவரைப் போன்றோர் தான் குரு என்று தீர்மானித்தேன். ஒவ்வொரு துறையிலும் இப்படி இருப்பார்கள், அந்த துறையில் உட்புகும்போது அவர்கள் இருப்பார்கள், வழிகாட்டுவார்கள், விழி திறப்பார்கள் என்பது புரிந்தது

ஆன்மிகம் ஒரு துறையல்ல அது வாழ்வின் ஒரு பரிணாமம் ஆகவே அதற்கொரு குரு தேட அவசியமில்லை, மழை கொட்டும்போது தானாய் ஒன்று குடை விரிக்கும், குருவாய்.


என் வாழ்வின் எல்லா இன்ப துன்பங்களிலும் தன் நேரச் செலவைப் பார்க்காமல் என்னுடன் இருந்த என் குரு-, எப்போதும் என்னை டாக்டர் என்றும் வாங்க பாருங்க என்றும் விளித்து, என்னைச் சின்னவனாய்ப் பார்க்காமலேயே அவரை நான் மிகப் பெரியவராய் வியந்து மதிக்கவைத்த என் குரு- டாக்டர். வீரபத்ரன். Thank you again, sir, till I thank you again the next living moment in my life.

1 comments:

M.M.Santhoshini said...

Guru amaivadhellaam oru varaprasaadham... 'kuru kuru' ena idhai paditha en vizhigal mudivil maghizhvadaindhadhu :) respect!

Post a Comment