Wednesday, September 10, 2014

அரைகுறை

1984- முப்பதாண்டுகளுக்கு முன், சென்னை மனநல காப்பகத்தில் மாணவனாய் இருந்த போது,ஃபிலிப் பினெல் அவர்களுக்கு ஒரு சிலை செய்ய முடியுமா என்று என் உதவிப்பேராசிரியர் டாக்டர் ராமநாதன் கேட்டார், கூடவே ஒரு மங்கலான படத்தையும் கொடுத்தார். 
இரண்டு நாட்களுக்குப் பின்,களிமண்ணில் செய்து அவரை வீட்டுக்கு அழைத்துக் காட்டினேன். இதை நம்ம IMHல் செய்ய முடியுமா என்று கேட்டார். 
செய்யலாம் ஆனால் இதற்கு முன் சிமெண்டில் செய்ததில்லை என்றேன். செய்து பாரேன் என்றார். மறுநாள், முதலில் சிலைக்கான பீடம் உருவாக்கினோம். அங்கே உள்நோயாளிகளில் சிலர் கொத்தனார்கள் என்பதால் அவர்களை வைத்தே நான் சொன்ன அளவில் பீடம் உருவானது. பீடத்தின் மீது செங்கற்களால் அடுக்கப்பட்ட மார்பளவுக்கான உள் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. 
மறுநாள் காலை சிமெண்ட் கலவையை அப்பி களிமண்ணில் செய்வது போலவே ஆரம்பித்தேன். இரண்டுமணி நேரத்தில்..முகம் மார்பு வந்து விட்டது.. கொஞ்சம் ஓய்வுக்காகவும் உணவுக்காகவும் கீழிறங்கி, கை அலம்பினால் தண்ணீர் படும்போதே தாங்க முடியாத எரிச்சல். கோணிகளால் சிலையை மூடி வைத்து அதன் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்குப் போனால் கை சிவந்து..மாலைக்குள் கொப்புளித்து விட்டது. கை சரியாக நான்கு நாட்களாகின. மீண்டும் சிலையைப்பார்த்தால் எல்லாமே இறுகி விட்டிருந்தது. முழுதாய்க் கொத்திவிட்டுத்தான் செய்ய முடியும் எனும் நிலை.
கையின் எரிநினைவு தைரியத்துக்குப் பதில் தயக்கமே தந்ததால், எக்ஸாம் முடிஞ்சப்புறம் பண்றேன் சார் என்று சொல்லி விட்டேன். என்ன காரணத்தாலோ அது நடக்கவேயில்லை. அந்தச்சிமெண்டி சிலையும் முதலில் உருவாகிய களிமண் சிலை போல் அமையவில்லை.
அதன்பின் 1989 திடீரென்று தொலைபேசியில் என் சிநேகிதியும் மனநல மருத்துவருமான சந்திரலேகா, “ உன் சிலைக்கு பெய்ண்ட் அடிச்சாச்சு ..திறந்து வைக்கப் போகிறோம், வா” என்றாள். “எதுக்கு இப்ப?” என்றதற்கு சும்மா வா, என்றாள். போனால், அப்போதைய காப்பகத்தின் இயக்குநர், என் முன்னாள் ஆசிரியர் டாக்டர் பீட்டர் ஃபெர்னாண்டஸ் வந்து திறந்து வைத்து, பினெலுக்கு மாலை போட்டார். எல்லாரும் படம் எடுத்துக் கொண்டதாய் ஞாபகம்...இன்று வரை அதன் படம் என்னிடம் இருந்ததில்லை.
அரைகுறையாய் விட்ட அதிருப்தி, சலனம்,கொஞ்சம் அவமானம் எல்லாமே அந்தச் சிலையிலிருந்து என்னை விலக்கி வைத்தபின்.. இப்போது முகநூலில் ஒரு சிநேகிதி (கற்பகம் வள்ளிhttps://www.facebook.com/photo.php?fbid=842906225751799&set=a.522835471092211.1073741825.100000972889964&type=1&relevant_count=1), இதைப் படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார். அலையலையாய் எண்ணங்கள்.. அன்றைய கைகளின் எரிச்சல் மனத்துள்....
philippe pinel பற்றி- அவர் நெப்போலியன் காலத்து மனநல மருத்துவர். அப்போதெல்லாம் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே வைத்திருக்கப்படுவார்கள். மன்னருடன் they too need liberty equality and fraternity என்று (allegedly)
வாதித்து, மனநோயாளிகளுக்கு சங்கிலிகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தவர் அவர். பிலிப் பினெல் சிலை, அன்று சிறையிலிருந்து மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த காவல் மிகுந்த வார்டின் முன் தான் உருவாக்கப்பட்டது, உருவகமாய்.
இன்று முடிவுறாத சிலை, முடிவுறாத பல நியாய தேடல்களையும் என்னுள் கிளறி விட்டது.
வாய்ப்பு கிடைத்தால் இதை இப்போதாவது சரி செய்ய விருப்பம்..ஆனால்... முடிந்தகதை தொடர்வதில்லையாமே

2 comments:

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

கீத மஞ்சரி said...

வணக்கம் ஐயா.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_21.html
நன்றி.

Post a Comment