Monday, May 2, 2011

மெழுகுவத்தி இல்லாத நான்..


செத்து விட்டான் அசுரன், 
இனி பட்டாசு கொளுத்துவோம். 
கெட்டவன் சாவைக்கொண்டாடுவது நம் பாரம்பரியம், கலாச்சாரம். 

செத்தவன் பற்றி எதுவும் தவறாகப் பேசக்கூடாது
என்பது அந்நிய கலாச்சாரத் தொற்று. ஹிரண்யன், ராவணன்..என்று எத்தனை கெட்டவர்களின் கெட்ட எண்ணங்களையும் செயல்களைம் நம் புராணங்களில் பட்டியலிட்டிருக்கிறோம்! ஒரு கெட்டவன் செத்ததை வைத்து உலகமுழுதும் எவ்வளவு பட்டாசு கொளுத்துகிறோம். 
அப்புறம் இன்னொரு விஷயம்... செத்தவன் என்ன மாமனா மச்சானா, எனக்கு வேண்டியவனா, நான் கும்பிடும் சாமியா நம்பிடும் சாமியாரா..கொளுத்துவோம் பட்டாஸ்...பறையடிப்போர்க்கு மட்டுமா சாவைக் கொண்டாடத் தெரியும்? ‘நம்ம எதிரி செத்தானே’  என்று கொண்டாடுவோம். ‘நம்மஎன்பது எது என்று நமக்கா தெரியாது? ‘நம்மாளுக்கு எதிரி நம்ம எதிரி’.  ‘நம்மாளு யாரு?’...”நம்பள மாதிரி இருக்குறவன் இல்ல நாம ஆகணும்ன்ற மாதிரி இருக்குறவன் தான் நம்மாளு”.  நவீனோபதேசத்தின்படி, பின்லேடன் பிணமானதைக் கொண்டாடுவோம்.


நேற்று என் நன்பனின் இல்லத்திருமண கலைநிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளி ‘தமிங்கிலிஷில் இந்தியா சுதந்திரம் அடைந்த தேதி எது என்று கேட்டாள். ச்சீஎன்று தோன்றிய அதே நேரம் ஐயோ என்றும் தோன்றியது...அவள் கேட்டது குட்டீஸ்களிடம் என்றாலும் அதுவரை சில ‘க்வஸ்டீன்ஸ்க்கு ‘ஆன்ஸர்சொல்லிக்கொடுத்த எந்த ‘ஆண்ட்டியும் அங்கே வாய் திறக்கவில்லை...எனக்கு திக்திக் அதிகமாயிற்று..நல்ல வேளை ஜூலை நாலுன்னு எதுவும் சொல்லலியேஎன்று கொஞ்சம் சப்தமாய் முணுமுணுத்தால் ‘ஓஎன்று ஒரு குரல் கேட்டது...வெறுப்புடன் அல்ல, ‘சே..மிஸ் பண்ணிட்டோமேஎனும் தொனியில். ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பனின் வீட்டு விசேஷம்..வள் என்று நான் விழுந்தால் சம்பந்திகள் என்ன நினைப்பார்களோ..என்றே நான் சும்மா இருந்தேன். நம்ம வீட்டு விசேஷம்..சிலதெல்லாம் கண்டுக்காம இருக்கணும்”  எனும் இன்றைய இருத்தலியலின் இயல்பிலக்கணத்திற்கொப்ப சும்மாயிருந்து விட்டு அடுத்த ஆட்ட்த்திற்குக் கைதட்டினேன்.

வெட்கத்தைத் துடைத்தெறிந்து அடுத்த வேலை பார்க்கும் நடுத்தர (அன்றைக்குச் சொல்லப்பட்ட நாலாந்தர) மனப்பான்மையுடன் நான் இன்று காலை எழுந்து காணாமல் போன முதலமைச்சர் பற்றியும், கடைசியில் வெற்றிவாகை சூடிய தோனி பற்றியும் படித்து விட்டு, என் அற்பவாதத்தால் எனக்கு அவசியமானவற்றைச் சேகரிக்க உழைத்து விட்டு வந்தால்..ஆஹா..இணையம் ஆர்ப்பரிக்கிறது.பின்லேடன் செத்தானாம், அப்பாடாவாம், ஸபாஷாம்!!! செத்தவனைப் பற்றி பேசலாமோ? பேசலாமே...ஏன்னா அவன் நம்மவன் இல்லையே!!!! என்று எத்தனை ஆர்ப்பரிப்புகள்!

அடடா !!!!! நம்மவன் நடத்தை பற்றிப்பேசக் கூடாது, அது அநாகரிகம், அடுத்தவன் வீட்டுப் பாடையை விமர்சிக்கலாம் அது நம் விவேகம்!!! இது தெரியாமல் நான்.. வழக்கமாக சாவு என்றாலும் சமூகவிழிப்புணர்வு என்றாலும் கொளுத்தப்படும் மெழுகுவத்தி தேடினால்...

யேசு செத்தாலும் பிறந்தாலும், உயிர்ப்பலி நிகழ்ந்தாலும் ஊழல் எதிர்த்தாலும் ஏற்றப்பட வேண்டியதாகி விட்ட மெழுகுவத்தி என்னிடம் இல்லை. ஒரு சாவுக்கு அனுதாபம் தெரிவிக்காத கல்மனம் எனக்கு வந்து விட்ட்தாய்ச் சொல்லப்பட்ட போதிலும், சரித்திரப் புகழ் லஞ்சவொழிப்புப் புரட்சியில் பங்கேற்காத பாவி என்று தூற்றப்பட்டபோதிலும், ஸாஸ்த்ர-ஸம்ப்ரதாயத்திற்காகக்கூட ஒரு மெழுகுவத்தி வாங்குவதாயில்லை நான். என்னைப் பொருத்தவரை என் மெழுகுவத்தி ஓளி மட்டுமே தரும், இருள் கூட்டாது.
அப்படியொரு மெழுகுவத்தி இன்னும் கிடைக்கவில்லை.

12 comments:

sakthi said...

ஐயா வணக்கம் ,
"என்னைப் பொருத்தவரை என் மெழுகுவத்தி ஓளி மட்டுமே தரும், இருள் கூட்டாது.
அப்படியொரு மெழுகுவத்தி இன்னும் கிடைக்கவில்லை"

தேடல் இல்லா மனிதன் இல்லை தேடல் தொடரட்டும்
அன்புடன் ,
கோவை சக்தி

tamil said...

வெளிப்படையாக நான் இதைக் கொண்டாடமாட்டேன் என்று எழுதியிருக்கலாம்.மெழுகுவர்த்தி, திருமண நிகழ்ச்சி என்று மூக்கைத் தொட இப்படி சுற்றிருக்க வேண்டாம்.

Anonymous said...

//‘நம்மாளு யாரு?’...”நம்பள மாதிரி இருக்குறவன் இல்ல நாம ஆகணும்ன்ற மாதிரி இருக்குறவன் தான் நம்மாளு”. //--->


அழகிய கிண்டல். ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? நீங்கள் நேரடியாக இங்குள்ளவர்களை குத்தும் போது அவர்களின் தவறுகளை மன்னிக்க அவர்களுக்குள் அவர்கள் தங்களை அறியாது வளர்த்திருக்கும் பிம்பத்திற்கு எதிராக உள்ளீர்கள். ஆக, உண்மையையே பேசினாலும் திரு ருத்ர‌னை அவர்கள்(I mean that சராசரிகள்) எதனால் தங்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்பதையும் அந்த சராசரிகள் அறியப்போவதில்லை. அவர்களுக்கு பிடித்த மாதிரி எழுத நிறைய பேர் அவர்களை மாதிரியே உள்ளார்கள். நீங்கள் என்னைப் போன்ற சிலருக்கு எழுதினால் அதுவே போதும்...

mohamedali jinnah said...

பின்லேடன் செய்த முதல் தவறு அமரிக்காவுடன் சேர்ந்து ஆப்கன் நாட்டில் ருஷ்ய படையினை வெளியேற உதவியது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
அதிலிருந்து தொடர்ந்த தவறு செய்ய வழி வகுத்ததும் அமரிக்காதான்.
குற்றம் செய்ய வழி வகுத்தவன் அமரிக்கன் . குற்றம் செய்பவனை விட அதனை தூண்டுபவன் பெரிய குற்றம் செய்தவனாக கருதப்பட வேண்டும்.
அமரிக்கா தனது படைகளை அராபிய நாட்டிலிருந்து ஒருகாலமும் வெளியேற்றாது .எல்லாமே அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் இது அமெரிக்காவின் கொள்கை . அமெரிக்கா கால் வைத்த சிதைந்த நாடுகள்
ஏராளம் (வியட்னாம்,ஈராக். பாகிஸ்தான் ...)
மற்றவர்களை மதிக்கும் மக்கள் பிரன்ச் இனத்தவர்தான்.
பின்லேடனை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது.அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு கடலுக்கு அடியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வது .அதுவும் இஸ்லாமிய முறையாம்! (பின்லேடன்
கடலுக்கு அடியில் அடக்கம் செய்யப் பட்டதாக செய்தி.)
அமெரிக்காவுக்கு இனி கடலுக்கு அடியில் இருந்து பல தொல்லைகள் வரலாம்

mohamedali jinnah said...

அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு கடலுக்கு அடியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வது .(அதுவும் இஸ்லாமிய முறையாம்! பின்லேடன் கடலுக்கு அடியில் அடக்கம் செய்யப் பட்டதாக செய்தி.)
அமெரிக்காவுக்கு இனி கடலுக்கு அடியில் இருந்து பல தொல்லைகள் வரலாம்.

எஸ் சக்திவேல் said...

ஆனால் அவனைக் கொன்ற அதி அசுரன் சாகவில்லை. அந்த அதி அசுரனே எல்லாவற்றிற்கும் காரணம்.

seethag said...

''ஒரு மெழுகுவத்தி வாங்குவதாயில்லை நான். என்னைப் பொருத்தவரை என் மெழுகுவத்தி ஓளி மட்டுமே தரும், இருள் கூட்டாது.''
கண்டிப்பாக. போல்போட், ஹிட்லர் ,முசோலினி இவர்களௌடய மரணத்திலும் கூட இந்த முடிவுதான்

சுதர்ஷன் said...

ஹ ஹ ..நல்ல கிண்டல் ... :) என்னுடைய ஊகத்தின் படி இது சாய் பாபாவின் பகதர்களின் கருத்துக்கு விழுந்த அடி . அவர்களின் மனோ நிலையை என்னவென்று சொல்வது .. நன்றாக இருக்கிறது Dr. :-))

mohamedali jinnah said...

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)!
http://www.inneram.com/2011050616257/doubts-about-bin-laden-murdervideos

mm said...

அன்புள்ள டாக்டர் :

உங்களைப் போன்று அதிகம் படித்த, அதிலும் மனநலம் படித்த மக்கள் நாங்கள் இல்லை.

நீங்கள் சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லலாமே!! ஏன் இப்படி சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்? அப்படியே சுற்றி வளைத்து வந்து பேசினாலும், இறுதியாக நீங்கள் சொல்ல வரும் கருத்து, இதுதான் என்று எங்களுக்கு தெளிவாக புரியவில்லை (ஒருவேளை, உங்களைப் போன்று அதிகம் படித்தவர்களுக்கு வேண்டுமானால் புரியலாம்!!)

உங்கள் பேச்சில் இருக்கும் தெளிவு - தீர்க்கம் நிச்சயமாக உங்கள் எழுத்தில் கிடையாது.

"அனுதாபங்கள் பாபா பக்தர்களுக்கு" என்ற பதிவில் 'மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை...' என்று தெளிவாக எழுதிய நீங்கள், பின்லேடன் பற்றி சொல்ல வரும் கருத்து புரியவில்லை.

நீங்கள் உலக அரசியலையும் கலந்து பேச (எழுத) முற்பட்டால், "LOOSE CHANGE" என்ற டாக்குமெண்டரி பற்றியும் அவசியம் சேர்த்து எழுதவும்.

என்றும் மரியாதையுடன்,

அப்துல் ரஹ்மான் - துபாய்

எவனோ ஒருவன் said...

நாம் எல்லோரும் சரியாக யோசிப்பதாக நினைத்துக்கொள்கிறோம்.நம் இளையவர்களிடம் யாரிடமாவது தவறு கண்டால் அவரின் சிந்தை குறித்து மறு பரிசிலனை செய்ய வலியுறுத்துவதை விட்டு, நான் எப்படி யோசிக்கிறேன் பார் என்று தன் ஆறாம் அறிவின் திறனை காட்டவும், கருத்து தெரிக்கவும் இங்கே கூட்டம் உண்டு.
இதை தான் உங்கள் பதிவில் பார்க்க முடிகிறது
இங்கே என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

எவனோ ஒருவன் said...

மகிழ் அவர்களுக்கு
ருத்ரன் என்பவரும் சாதாரண சராசரி மனிதரே .
அவர் உன்னதனமான மனிதர் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு உன்னததன்மை இருக்கிறது.
ருத்ரன் அவர்களை கேள்வி கேட்பதனாலோ அல்ல மறுப்பதனலோ, அவர்களை பற்றி ஒன்றும் தெரியாமல் எப்படி நீங்கள் "சராசரிகள்" என்று வகைபடுத்தலாம்?

Post a Comment