செத்து விட்டான் அசுரன்,
இனி பட்டாசு கொளுத்துவோம்.
கெட்டவன் சாவைக்கொண்டாடுவது நம் பாரம்பரியம், கலாச்சாரம்.
செத்தவன் பற்றி எதுவும் தவறாகப் பேசக்கூடாது
என்பது அந்நிய கலாச்சாரத் தொற்று. ஹிரண்யன், ராவணன்..என்று எத்தனை கெட்டவர்களின் கெட்ட எண்ணங்களையும் செயல்களைம் நம் புராணங்களில் பட்டியலிட்டிருக்கிறோம்! ஒரு கெட்டவன் செத்ததை வைத்து உலகமுழுதும் எவ்வளவு பட்டாசு கொளுத்துகிறோம்.
அப்புறம் இன்னொரு விஷயம்... செத்தவன் என்ன மாமனா மச்சானா, எனக்கு வேண்டியவனா, நான் கும்பிடும் சாமியா நம்பிடும் சாமியாரா..கொளுத்துவோம் பட்டாஸ்...பறையடிப்போர்க்கு மட்டுமா சாவைக் கொண்டாடத் தெரியும்? ‘நம்ம எதிரி செத்தானே’ என்று கொண்டாடுவோம். ‘நம்ம’ என்பது எது என்று நமக்கா தெரியாது? ‘நம்மாளுக்கு எதிரி நம்ம எதிரி’. ‘நம்மாளு யாரு?’...”நம்பள மாதிரி இருக்குறவன் இல்ல நாம ஆகணும்ன்ற மாதிரி இருக்குறவன் தான் நம்மாளு”. நவீனோபதேசத்தின்படி, பின்லேடன் பிணமானதைக் கொண்டாடுவோம்.
நேற்று என் நன்பனின் இல்லத்திருமண கலைநிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளி ‘தமிங்கிலிஷி’ல் இந்தியா சுதந்திரம் அடைந்த தேதி எது என்று கேட்டாள். ச்சீஎன்று தோன்றிய அதே நேரம் ஐயோ என்றும் தோன்றியது...அவள் கேட்டது ’குட்டீஸ்’களிடம் என்றாலும் அதுவரை சில ‘க்வஸ்டீன்ஸ்’க்கு ‘ஆன்ஸர்’ சொல்லிக்கொடுத்த எந்த ‘ஆண்ட்டி’யும் அங்கே வாய் திறக்கவில்லை...எனக்கு திக்திக் அதிகமாயிற்று..”நல்ல வேளை ஜூலை நாலுன்னு எதுவும் சொல்லலியே” என்று கொஞ்சம் சப்தமாய் முணுமுணுத்தால் ‘ஓ” என்று ஒரு குரல் கேட்டது...வெறுப்புடன் அல்ல, ‘சே..மிஸ் பண்ணிட்டோமே’ எனும் தொனியில். ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பனின் வீட்டு விசேஷம்..வள் என்று நான் விழுந்தால் சம்பந்திகள் என்ன நினைப்பார்களோ..என்றே நான் சும்மா இருந்தேன். ”நம்ம வீட்டு விசேஷம்..சிலதெல்லாம் கண்டுக்காம இருக்கணும்” எனும் இன்றைய இருத்தலியலின் இயல்பிலக்கணத்திற்கொப்ப சும்மாயிருந்து விட்டு அடுத்த ஆட்ட்த்திற்குக் கைதட்டினேன்.
யேசு செத்தாலும் பிறந்தாலும், உயிர்ப்பலி நிகழ்ந்தாலும் ஊழல் எதிர்த்தாலும் ஏற்றப்பட வேண்டியதாகி விட்ட மெழுகுவத்தி என்னிடம் இல்லை. ஒரு சாவுக்கு அனுதாபம் தெரிவிக்காத கல்மனம் எனக்கு வந்து விட்ட்தாய்ச் சொல்லப்பட்ட போதிலும், சரித்திரப் புகழ் லஞ்சவொழிப்புப் புரட்சியில் பங்கேற்காத பாவி என்று தூற்றப்பட்டபோதிலும், ஸாஸ்த்ர-ஸம்ப்ரதாயத்திற்காகக்கூட ஒரு மெழுகுவத்தி வாங்குவதாயில்லை நான். என்னைப் பொருத்தவரை என் மெழுகுவத்தி ஓளி மட்டுமே தரும், இருள் கூட்டாது.
அப்படியொரு மெழுகுவத்தி இன்னும் கிடைக்கவில்லை.