Thursday, May 19, 2016

2016 மே மாத எரிச்சல்

டிசம்பர் 2015, சென்னை தத்தளித்தது. வயது,வசதி பேதமில்லாமல் எல்லார்க்கும் அவதி. அரசு ஏரி திறந்துவிட்டது அதனால் பலர் வாழ்நாள் சேமிப்புகளும் பொக்கிஷங்களும் நீரோடொழிந்தன. இணைய இணைப்பிருந்தோர் பொங்கினர்.  ஆட்சியை ஆள்பவரை வசை பாடினர்.. அவர்களை ஒழிப்போம் என சூளுரைத்தனர்.

வெள்ளம் வடிந்த ஒரு மாதம் கழித்து நான் பேசிய பலதரப்பட்டவர் சொன்னது, ஏரி திறந்தது தப்பு தான் ... முதல் நாள் தான் அரசு செயல்படவில்லை ..அப்புறம் சிறப்பாக எல்லாவற்றையும் சமாளித்தார்கள்>. எனும் தொனியிலேயே இருந்தது.
ஆட்சியின் மீது கோபம் யாருக்கும் - நான் பார்த்த வெகுஜனங்கள் யாருக்கும் பெரிதாய் இல்லை.

மே 2016, ஆட்சி மாறும் என்றார்கள், மாறவில்லை. ஏன்?
முதல்வர் சிறையிலிருந்தால் எதுவும் நடக்காது எனும் ஸ்தம்பித்த ஆட்சி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல்வர் மீண்டும் பதவியேற்புமதுவிலக்கு கோரியவர் சிறையடைப்பு, எதிலும் ஒரு மெத்தனம் என பலவகையிலும் மக்கள் வெறுப்படைய வைக்கக்கூடிய செயல்பாடுகள். இவை யாவும் மீறி தேர்தலில் அதே கட்சி அதே முதல்வர். இது எப்படி நடந்தது?
மக்களுக்கு ஆட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லை எனும் போது, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வேற்றி மாற்றம் உருவாக்க உந்துவதே எதிர்கட்சியினர் கடமை. ஆனால்,
 எவ்வித கணக்கில் எவ்வித லாபம் எனும் ஒரே நோக்கில் கூட்டணி அமைக்கவே எதிர்கட்சிகள் முனைந்தன. சதவிகித வாக்கு எனும் மாய தோற்றத்தின் பின்னேயே அலைந்தன. ஊடக பிம்பங்களையே நம்பின.
திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு தெருவோர டீக்கடையில் நின்றாலேயே புரிந்திருக்கும். அவர்கள் தம் மீது படர்ந்திருக்கும் அதிருப்தியை அறிந்து களையாமல், அடுத்த கட்சியில் யார் வந்தால் லாபம், யார் போனால் லாபம் என்றே இருந்தார்கள். பழம் கனியும் நழுவும் என்றெல்லாம் பேசி இன்னமும் தம்மையே கேவலப்படுத்தி ஏற்கனவே மக்கள் மத்தியில் தம் மீதிருந்த நம்பிக்கையின்மையை வலுவூட்டினார்கள். காங்கிரஸ் எப்போதோ செல்லா காசாகியிருந்தும் அதனுடன் கூட்டு வைத்து சில வெல்லக்கூடிய தொகுதிகளையும் தாரை வார்த்தார்கள். ஸ்டாலின் முதல்வர் என அறிவித்திருந்தாலும் ஏதோ சில கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும்.  எம்ஜியார் மறைந்தபின் கலைஞருக்காக யாரும் திமுகவை வெற்றி பெற வைக்கவில்லை, முந்தைய ஆட்சி வேண்டாம் என்றே அவர் ஜெயித்தார். தவிர அவரது குடும்பம் தான் திமுக எனும் எண்ணம் சாமான்யனுக்கு ஆழப்பதிந்துவிட்ட்து.  இந்நிலையில் தேறாத திமுக, உருப்படாத அதிமுக எனும் நிலையில் சலிப்படைந்த மக்களிடம் மாற்றம் குறித்து நிச்சயமாய் ஒரு விருப்பம் இருந்த்து.

அந்த மாற்றம் நான் என அன்புமணி வந்தது வரவேற்பை விடவும் வேடிக்கை நிகழ்வாகவே ஆனது. ஜாதி மீதான அவர்களது தீவிரம் எவ்வித தீவிர ஒப்பனையாலும் மறைக்கமுடியாத ஒன்று. ஜாதி பற்றி பார்க்க வேண்டாம் அன்புமணியை மட்டும் பார்ப்போம் என்றால், மருத்துவக்கல்லூரி ஊழல் முதல் மாமல்லபுரம் கோவில் மீதாடிய அநாகரிகம் யாவும் மக்கள் மறந்து விடவில்லை.
பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் இங்கே அர்த்தமே இல்லை. ஆகவே விஜயகாந்த்! இதுதான் ஜெ ஜெயிக்க முக்கிய காரணம்.
மநகூ எனும் சாத்தியம் விஜயகாந்த் வாசன் எனும் காரணங்களாலேயே வீணாய்ப்போனது. இவ்விரு கட்சியுமே பேரங்கள் சரியாய் படியாததாலேயே இக்கூட்டணிக்கு வந்தன. திருமதி விஜயகாந்த் பேசியதெல்லாம், கைதட்டல் பெற்றிருக்கும், வடிவேலுவுக்கு வரும் கைதட்டல் போல. ஆனால் அறிவு பூர்வமாய் மக்களை அணுகுவார்கள் என மக்களே நினைத்த கம்யுனிஸ்ட்களும் இந்த கட் அவுட் நிஜமான ஆசாமி என நம்பி பின் சென்று வாய் பொத்தி நின்ற நேரமே நிராகரிக்கப்பட்டார்கள், சில தோழர்களாலேயே. வைகோ எனும் பொய்யின் வாய்ஜாலம் தானே நிற்க முடியாது கழன்றவுடன், ப்ரேமலதா சதீஷ் என்போரெல்லாம் ஆடிய உடன் மநகூ வெறும் ஒரு ஹீரோவோடு நின்று அடிவாங்கும் காமெடியனானது.
திருமாவுக்கென ஒரு வாக்கு வங்கி நிஜம், அதேபோல்தான் கம்யுனிஸ்ட்களுக்கும். இவர்களின் கூட்டுத்தொகை வெல்லுமளவு இல்லை என்றாலும் இம்முறை வாக்கு கூடியிருக்கும். அவசரம் ஆத்திரம் பேராசையோடு விஜய்காந்த் முதல்வர் என அறிவித்தபோதே இவ்விருவரும் இருப்பதையும் இழப்பர் என எனக்குத் தோன்றியது. வாசுகி நின்றிருந்தால் கூட நான் வாக்களித்திருக்க மாட்டேன் எனும் அளவு இவர்கள் தம் மரியாதை இழந்த நிலை உருவாகியது.
இந்நிலையில் அதிமுக அல்லது திமுக எனும் போது, ஏன் திமுக எனும் கேள்வி தான் முன்னின்றது, அதுவே ஏன் அதிமுக வேண்டாம் என்பதை உள்ளடக்கியது. தாங்கள் மேல் என சொல்லும் திராணி யாருக்கும் இல்லாத்தால், இப்படியே இருக்கட்டுமே என மக்கள் நினைத்துவிட்டனர்.
வெள்ளம்  வந்து அதிமுகவை அழிக்கவில்லை. மக்கள் மனநிலை புரியா எதிர்கட்சிகள்  தான் அதிமுகவை ஜெயிக்க விட்டார்கள்.
காசு கொடுக்கப்பட்ட்து என என்னிடமே பலர் சொன்னாலும், காசு அந்த 90+ தொகுதிகளுக்கும் தானே போயிருக்கும்.
என் நோக்கில் இத்தேர்தல் முடிவு அதிமுகவை சகித்துக்கொள்வது திமுகவை நம்புவதை விட மேல் என மக்கள் எடுத்த முடிவாய்த் தெரிகிறது



7 comments:

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

அருமை

Unknown said...

super

SeiouslySportive said...

முந்தைய பதிவின் தலைப்பு "கடைசியாய்" என்றிருந்ததால், இனி இந்த வலைப்பூ உதிர்ந்தது என நினைத்திருந்தேன். இயல்பான நடையில் புதிய பதிவிற்கு நன்றி.

Ajai Sunilkar Joseph said...

2016 மே மாத எரிச்சலா ...?
இல்லை இனி 5 வருட எரிச்சலா...?

rekha said...

Good one sir

Anonymous said...

நல்ல பதிவு டாக்டர்.
"அதிமுகவை சகித்துக்கொள்வது திமுகவை நம்புவதை விட மேல் என மக்கள் எடுத்த முடிவாய்த் தெரிகிறது" - எனக்கும் தேர்தல் முடிவு வந்தவுடன் அப்படித்தான் தோன்றுகிறது.
திமுக தவிர்த்த மற்ற எதிர்கட்சிகள் ஒரு அரிய வாய்ப்பினை தவறவிட்டதாகவே கருதுகிறேன். குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி. விஜயகாந்தினை முன்னிறுத்திய போதே அவர்கள் பலரின் ஆதரவை இழந்துவிட்டதாக கருதுகிறேன்.

Yarlpavanan said...

நன்றாக அலசி உள்ளீர்கள்
அருமையான பதிவு

Post a Comment