Friday, September 9, 2011

சும்மா கொஞ்சம் பின்னோக்கி..


அழுதது நினைவிருக்கிறது.
எதற்காக என்பது நினைவில்லை என்றாலும் அப்படி நான் அழுததாய் நினைவுக்கு வேறெதுவும் வரவில்லை. அதற்கு முன்னும் கூட அழுதிருப்பேன். அப்புறமும் அழுதிருப்பேன். ஆனால் அந்த அழுகை அப்படி இருந்தது. பொது இடத்தில், தெரியாதவர்கள் முன், விக்கி, விம்மி, கண்கள் பொங்கி, வாய் பொத்தி, சத்தமில்லாமல் உடல் குலுங்கி...
அழுகை என்றாலே எனக்கு அந்த அனுபவத்தின் உணர்வுதான் தோன்றுகிறது.


அது 1970களின் முற்பாதி என்று நினைக்கிறேன். அந்த இடம் நினைவிருக்கிறது –வடபழனி முருகன் கோவில். சன்னதிக்கு நேரே கம்பிகளின் முடிவில், உண்டியலுக்கு முன்னால் ஒரு சின்ன இடம் -அங்கிருந்து முருகன் கொஞ்சம் out of focusஆகத் தெரிந்ததாய் இப்போது நினைவில் ஒரு பழுப்பு பிம்பம். அவ்வப்போது தாடி வளர்த்து மழித்துக் கொண்டிருந்த காலம். அழும்போது தாடி இருந்ததா என்றும் நினைவில்லை. சோகத்துக்கும் என் தாடிக்கும் எப்போதும் தொடர்பு இருந்ததில்லை. அந்த அழுகை...அது ஏன் இன்று நினைவுக்கு வரவேண்டும்?

காலை, வெகுநாள் கழித்து என் நண்பன் பாலாசிங் வந்திருந்தான். பழங்கதைகள் அசைபோட்டுக் கொண்டிருந்தோம். நிகழ்ந்த அன்று நெருடிய, கோபமூட்டிய, வெறுப்படைய வைத்த பல நிகழ்ச்சிகள் இன்று நினைவூட்டிக்கொண்டு பேசும் போது சிரிக்கவே வைத்தன. கோபம், வெட்கம் என்று அன்று அனுபவித்திருக்கக் கூடிய அனைத்துமே இன்று நகைச்சுவையாகத் தெரிகின்றன. சில துரோகங்களைத் தவிர்த்து, பழைய நினைவுகள் எதுவுமே நெருடவில்லை. அப்போது திடீரென்று அவனிடம், “இதெல்லாம் சரி பாலா, நாம எப்பவாவது ரொம்ப வருத்தப்பட்டிருக்கோமா?என்று கேட்க, “ ஞாபகம் இல்லையே... சீரியஸா நாம் எதுக்கும் வருத்தப்படலேன்னு நினைக்கிறேன்... வருத்தப்பட நமக்கு எங்கே டைம் இருந்துச்சு?என்றான். அப்படி என்ன முக்கியமான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம் என்று பட்டியலிடப் பார்த்தோம். நாடகம், ஆவணப்படம் என்பவையெல்லாம் அத்தனை வருடங்களை ஆக்கிரமிக்கவில்லை. வேறென்ன செய்து கொண்டிருந்தோம்? அவன் திரைப்படங்களில் நடிக்க முயன்று கொண்டிருந்தான், நான் மருத்துவம் மூலம் சம்பாதிக்க முயன்று கொண்டிருந்தேன்.இரவெல்லாம் பாட்டு கேட்டு, இலக்கியம் பேசி, நண்பர்கள் சூழ அரட்டையுடன் அடுத்த காரியத்திற்கான கனவுகளுக்கு வரைபடம் போட்டுக் கொண்டிருந்தோம். மதுவும் புகையும் எங்களை ஊக்கவுமில்லை, தாக்கவுமில்லை. வசதிகள் குறைவான அந்தக் காலத்தில் வருத்தப்பட நேரமும் இல்லை. இப்போது? சௌகரியமாக வாழ்க்கை அமைந்தபின், அன்றைய சிரமங்கள் புன்னகையை வரவழைக்கின்றன.

அவன் போனபின் எதற்காகவாவது அழும் அளவு வருத்தப்பட்டிருக்கிறேனா என்று யோசித்தால் எதுவும் நினைவுக்கு வரவில்லை. மனதுக்கு நெருக்கமானவர்கள் மரணத்திற்கெல்லாம் நான் அழுததில்லை, தோல்விகளுக்கும் அழுததில்லை. இன்னும் கொஞ்சம் யோசித்தால், வெட்கப்பட்டு அழுதிருக்கிறேன் – அதுவும் கொஞ்சமாக! அடக்க முடியாத அழுகை வந்திருக்கிறதா என்று நினைவுகளில் தேடும்போதுதான் 1970களின் வடபழனி அழுகை நினைவுக்கு வருகிறது. இப்போது எழுதும்போது கூட எதற்காக என்று தெரியவில்லை –அந்த காலகட்டத்தில் அழவேண்டிய அளவுக்கு அடிபட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. வாழ்வில் விழுந்த ஒவ்வோர் அடியும் அடுத்த அடியின் முன் மிகச் சாதாரணமாகியிருந்த காலம் அது.

அழுகை சுகம்தான், நிச்சயமாக வலிக்கும் மனதுக்கு ஒரு நல்ல ஆறுதல்தான். ஆனால் நான் சுகப்பட அழுத ஞாபகமும் இல்லை. சில அற்புதமான பாடல்களைக் கேட்கும் போது கண்கள் கலங்குவது இப்போதும் உண்டு, ஆனல் வருத்தம் தவிர்க்கவும் வலி குறைக்கவும் அழுவது இல்லை.

அன்று என்ன நடந்தது என்பது நினைவுக்கு வரவே இல்லை. அழுத அந்த நேரம் முன்பின் தெரியாத சிலர் ஆறுதல் கூறியது நினைவுக்கு வருகிறது. “என்னப்பா கஷ்டம்?என்று சிலர் கேட்டிருக்கக் கூடும், நினைவில்லை. ஆனால் முருகன் கேட்டதாய் நினவில்லை. அவன் கேட்க வேண்டுமா என்ன? அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! அன்றைய அழுகை முருகனிடம் முறையிட்டதாகவும் தோன்றவில்லை, அதன் பின்னும் பல தோல்விகளை அனுபவித்திருக்கிறேன். அந்த அழுகைக்குப் பின் அடுத்த முறை கோவிலுக்குப் போனதும் சில வருடங்கள் கழித்துத்தான் என்று தோன்றுகிறது. அப்புறம் கோவிலுக்குப் போனதெல்லாம் ரசிக்கவும் சுகிக்கவுமே... முறையிட என்று எங்கேயும் போனதேயில்லை.

அப்புறம் அப்படி அழவில்லை. அன்று அழுதது தோல்வியால் இருந்திருக்காது, பெரும் வெட்கமாகவே இருந்திருக்கும். அப்படி எதற்கு வெட்கப்பட்டேனோ நினைவில்லை, அதற்கப்புறம் அப்படி வெட்கப்படும் அளவு வாழ்வில் எதுவும் நிகழவில்லை.
தோல்வியினால் வெட்கம் வராது. தன்னைப் பற்றிய கணிப்பை மீறி தானே தடுமாறும் போதும், தான் செய்ததும் செய்யத் தவறியதும் தன்னையே பரிகசிக்கும் போதும் பழிக்கும் போதுமே வெட்கம் வரும். வெட்கினால் அழுகை நிச்சயம் வரும். நான் அழுவதில்லை/ அழ மறந்துவிட்டேன்.

14 comments:

SURYAJEEVA said...

அழுகை பல நேரங்களில் ஆண்களால் அடக்கி வைக்கப் படுகிறது... ஆனால் ஆண்களின் கண்ணீர் அநேகமாய் சாப்ளின் சொல்வது போல் மழையில் நனைந்தபடியும் என்னை போல் இரு சக்கர வண்டியை கண்ணாடி போடாமல் ஓட்டிய படியும் வெளிபடுத்தி மனதை இலகுவாக்கி கொள்கிறோம்...

ராஜ நடராஜன் said...

எப்பொழுதும் ரசிக்க வைக்கும் எழுத்து நடை.

Enjoying your cry:)

ADMIN said...

பதிவை முழுவதுமாய் படித்தபோது(5 முறை) அழுகையின் தீவிரம் புரிந்தது..! அழகான அழுகை.. ! அழகான பதிவு..!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆண்கள் அழுகையை பாத்ரூமில் பார்க்கலாம்...!!

M. Md. Hushain said...

நம்மை பற்றிய சுயமதிப்பீடு எப்போதும் மாறிக்கொண்டு தானே இருக்கும் Dr ? ஒவ்வொரு தடுமாற்றமும், சறுக்கலும் நம் சுயமதிபீட்டை மாற்றிக்கொண்டு தானே இருக்கிறது? அல்லது நான் இன்னும் அந்த (மாறாத) நிலையை அடையவில்லையா Dr ?

Rathnavel Natarajan said...

தோல்வியினால் வெட்கம் வராது. தன்னைப் பற்றிய கணிப்பை மீறி தானே தடுமாறும் போதும், தான் செய்ததும் செய்யத் தவறியதும் தன்னையே பரிகசிக்கும் போதும் பழிக்கும் போதுமே வெட்கம் வரும். வெட்கினால் அழுகை நிச்சயம் வரும்

நல்ல பதிவு.
நன்றி ஐயா.

Anonymous said...

சின்ன புத்தி ‍- a correction

சல்லித்தனமாகவோ சிறுமையாகவோ ஒன்றை யோசிப்பதையும் செய்வதையும் சின்ன புத்தி என்கிறார்கள்.

I think it is not the accurate definition for the narrow mind. So, I'm making a correction.

சல்லித்தனமாகவும் சிறுமையாகவும் ஒன்றை யோசிப்பதோடும் செய்வதோடும் மட்டும் அல்லாமல் அடுத்தவனையும் தன்னைப் போல் தான் யோசிப்பான்/செய்வான் என்று நம்புவதே சின்ன புத்தி.d

Unknown said...

ஓஷோவின் கேம்ப்பில் பங்கெடுத்தவர்களுக்கு தெரியும்.ஒரு நாள் அழுகை,அடுத்த் நாள் சிரிப்பு,கோபம்,வெறுப்பு என்று எத்தனையோ ஜென்மங்களாக அடக்கி வைத்திருந்தவை காணாமல் போய் மனது இலேசாகி அடுத்த நாள் படு துரோகியை எதிரில் பார்த்தாலும் புன்னகைக்க தோன்றும்!

ஸ்ரீரங்கம் A.S.Murali said...

நானும் அழுதிருக்கிறேன் .என் தந்தையின் மரணத்தின் போது.யாராலும் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை.ஏன்?இன்னும் எனக்குப் புரியவில்லை.எனக்கு நன்றாகத் தெரியும் மரணம் தவிர்க்க முடியாதது. காடு சென்று காரியங்கள் அனைத்தையும் முடித்து விட்டு வரும் வரை கலங்காமல் கல் போல இருந்தேன்.இது தானே இயற்கை என்று.ஆனால் இரவு சாப்பிடாமல் விக்கி விக்கி அழுதேன். அப்பா, என் அப்பா என்னை விட்டுச் சென்று விட்டாயே என்று அழுதேன்.ஒரு மணிநேரம்.யாராலும் எனக்கு ஆறுதல் கூற முடியவில்லை. அப்படியே கலைத்து தூங்கியும் போனேன்.

சித்திரவீதிக்காரன் said...

நிறைய பிரச்சனைகளுக்கு தனிமையில் அழுதுவிட்டால் மனது நிம்மதியாகி விடுகிறது. அதனால், அடிக்கடி அழாவிட்டாலும் எப்பவாவது அழுது விடுகிறேன். பகிர்வுக்கு நன்றி.

Thooral said...

அழுகை சுகம்தான், நிச்சயமாக வலிக்கும் மனதுக்கு ஒரு நல்ல ஆறுதல்தான்...

அருமையான பதிவு ஐயா ..:)

ஜெயராம் தி

விஜி செந்தில் said...

வெட்கப்படும் போது அழுகை வருமா? ஓ...இப்படி நான் எப்போ அழுதிருக்கிறேன்...ம்ம்...யெஸ், என் சகோதரியையும் என்னையும் ஒப்புமைப்படுத்தி பார்த்து அழுத அழுகைகள் (இரண்டு முறை) இந்த வகை என்பது புரிகிறது. இப்போ புரிகிறது, வெட்கத்திற்கும் கூச்சத்திற்குமான வித்தியாசம். நன்றி.

விஜி செந்தில் said...

Sir, ஒரு இடத்தில் “ஆனால்” என்பதற்கு பதில் “ஆனல்” என்று பதிவாகியிருக்கிறது...தங்கள் பதிவுகள் ஆராய்ச்சிக்குரியவை. அதனால் தான் குறிப்பிட்டுச்சொல்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், ப்ளீஸ்...

ஜஹாங்கிர் said...

வினவில் தங்கள் வலைப்பூவின் முகவரி கிடைத்து, இங்கே வந்தேன். நன்றிகள்,,,,மனித மனதின் விகாரங்களும், விகாரப்பட்ட மனதின் வெளிப்பாடுகளை அறிந்திருந்தும் அதற்காக வெட்கப்படாமல் அதையே தஙக்ள் வலிமையாக்கிக் கொண்டு வாழ்பவர்களைக் கண்டு நாம் வெட்கப் படுவதா அல்லது கோபப்படுவதா என்பது கூட நம் கையில் சில சமயங்களில் இல்லாமல் போகிற நிலையும் உண்டு. தங்கள எழுத்துக்களை வாசிக்கும் அவா பல காலமாக இருந்தது. பரதேச வாசத்தில் கிடைக்காத அல்லது கைக்கெட்டாத எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றாகிப் போனதால் இந்த வலைப்பூ ஒரு பொக்கிஷமாகத் தோன்றுகிறது. நன்றிகள், உண்மையாகத்தான்.

Post a Comment