Tuesday, February 8, 2011

சாய்ந்தாடி சாய்ந்தாடி..


சாய்ந்து ஆடும்நாற்காலியில் ஓய்ந்த தருணங்கள் பற்பல எண்ணங்களைப் ப்ரசவிக்கும், வளர்க்கும், விரட்டி விடும் அல்லது இறுகப் பற்றிக்கொள்ளும். அதில் சில கவிதைகளும் ஆகியிருக்கலாம், சில கவிதைகளாகவே பிறந்திருக்கலாம்...

காணாமல் போன எண்ணங்கள் எல்லாமும் காகிதங்களில் தகனமாயிருந்தால் ஒரு காடு கூட மிஞ்சியிருக்காது. தகனம்? எழுத்தே அக்னிப்ரவேசம் தானே..தன்னைத் தன் கண்ணுக்கே முதலில் நிரூபித்துக்கொள்ள.

என்ன எழுத வந்தேன் எனும் ப்ரக்ஞையில்லாமல் எழுதிக்கொண்டிருப்பது மனவோடையாகாது, அது பிறழ்பதிவாகவும் கூடும். ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்காகவே என்று சொல்லிக்கொண்டே பிறருக்காக- ஏமாறவோ ஏமாற்றவோ அல்லாமலேயே இருத்தலை நினைவூட்டும் ஒரு முயற்சியாக.

இது சுயதம்பட்டமாகவும் ஒலிக்கலாம். தம்பட்டமோ ட்ரம்பெட்(trumpet)டோ இருந்தால்தான் ஒலிக்கும். இல்லாத கருவி கற்பனையில் இசைத்தாலும் கைதட்டல் வாங்காது. கைதட்டலை எதிர்பார்த்தே வாழ்க்கை.  
அம்மா கண்ணாலேயே கைதட்டவே குழந்தையின் குறும்பு, கடவுள் கைதட்டவே முனிவரின் தவம். இடையே கைதட்டல்களுக்கெல்லாம் நாகரிக அடையாளங்களை ஒட்டுவது சமூக அவசியம், சுயசௌகரியம்.

இதையெல்லாம் இப்போது ஏன் எழுதுகிறேன்? நினைப்பதால்! ஏன் நினைக்கிறேன்? நேரம் இருப்பதால்! நேரம் நிறைய ஒரு நாளில் மீதமிருந்தால் வருவது சோம்பல் மட்டுமல்ல, திமிர் கூடத்தான். 
நான் திமிருடன் இருக்கலாமா? யாருக்கு வேண்டுமானாலும் திமிர் இருக்கலாம்! காட்டிக்கொண்டால்தான் அது தவறாகத்தெரியும் திமிர், காட்டாமல் உள்பதுக்கி வெளிநடித்தால் அது நயமான கர்வம்! வித்யாகர்வம் கூட தன்வீட்டுக்குள்ளேயே சாதகம் செய்வதில் வராது, ஒரு சபையில்- அரங்கில்- கைதட்டலில்தான் வரும். எனக்கென்ன கர்வம்? எனக்கென்ன திமிர்?

பணபலமோ பின்புலமோ இல்லாமல் சாதித்தேன் என்பது நான் கொண்டுள்ள திமிர். இதை வெளிச்சொன்னால்தான் திமிர்! என்ன சாதித்தேன் என்று சிந்தித்து ஆய்ந்து அளந்து வரும் விடையைக் கூட வெளிச்சொன்னால்தான் திமிர். வெளியிடாத கர்வம் ஒரு சமூக ஒப்பனைதான். 
கர்வமோ திமிரோ வருமளவு என்ன சாதித்தாய் என்று என்னையே நான் கேட்க முயன்றபோது கிடைத்தாற்போல் தோன்றியது இதுதான்..- பயிற்சி இல்லாமல் படம் வரைந்து பணம் சம்பாதித்தேன், பெருமுயற்சி இல்லாமல் எழுதி புத்தகங்கள் விற்கவைத்தேன், 
கேவலம் என்று என் சமூகம் கருதியதை அறிவியல் கொண்டு அணுகினால் வேறு என்று விளக்கினேன், மனநோய் என்பதை மனநலம் என ஆக்கிவைத்தேன், 
விலை போகாதிருந்திருக்கிறேன், யாரையும் விலைக்கு வாங்கவும் நினைக்காமல் இருக்கிறேன்.. இதற்கெல்லாம் எனக்கு ஒரு கர்வம் வரலாம் என்றே என் மனம் அனுமதிக்கிறது. என் மனமே ஒன்றை அனுமதித்தபின் உங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருப்பது ஒரு சமூக நாடகம்தான்!

என்னவெல்லாம் செய்தேன் எனும் இறுமாப்பு மிகுந்த பட்டியலோடு, என்ன செய்ய முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலிய எதிலெல்லாம் தோற்றேன் என்றும் ஒரு கணக்கு மனத்துள் போட்டால், முதலிலும் முக்கியமாகவும் வருவது- காசு சம்பாதித்துச் சேர்த்து வைக்காமல் திரிந்திருக்கிறேன், அன்பு நட்பு என்றெல்லாம் எதிர்பார்த்து அடிபடும்வரை ஏமாந்து கிடந்திருக்கிறேன்,  


நன்றி பரஸ்பரம் என்றும், பாசம் நிரந்தரம் என்றும் என்னையே ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்...

ஆனால் இவையெல்லாம் தெரிந்தும் வெட்கப்படாமல் இருக்கிறேன். வெட்கமோ வருத்தமோ இல்லாமல் ஒரு மாறுதலும் செயல்பாட்டில் வராது என்று தெரிந்தும் அவ்விரு உணர்ச்சிகளையும் தவிர்த்து வருகிறேன்.


வென்றேன் ஆயினும் வாகை சூடவில்லை. வாழ்கிறேன் ஆயினும் நிறைநிலை அடையவில்லை. இதன் அடிப்படையாய் அடிநாதமாய் ஓடும் எண்ணம்-காசு சம்பாதிக்கத் துப்பில்லை என்று என்னையே துப்பிக்கொள்ளாமல் நிறைய வார்த்தைகளை விரயம் செய்கிறேன்.

காசு சம்பாதிக்க முடியாததால் கைதட்டல் சம்பாதித்தேன்!
இதைப் பற்றி யோசிக்கும் பொழுதில் தோன்றியது-
குட்டி அறை
தொட்டி மீனுக்கு இடமில்லை
குளத்துக்குப் பொரி.




11 comments:

Unknown said...

இருக்கும் பணத்தின் அளவைவிட மனதளவில் ஒரு பணக்கரானாக இருப்பதால் வந்த கர்வமாக கூட இருக்கலாம்.

M. Md. Hushain said...

எதையும் எதிர்பாராமல், ஒரு யோகியின் மனநிலையில் தங்கள் கடமையை செய்ததின் பலன் தான் இந்த கர்வம். ஒருவேளை பணத்தின் பின் சென்று இருந்தால், இந்த மனநிலையை நீங்கள் அடைந்து இருக்க முடியுமா?

கைதட்டல்களையும் நீங்கள் சம்பாதிக்கவில்லை, அது தானாக வந்தது. அங்கிகாரதிர்காகவோ அல்லது பணத்திற்காகவோ செய்யும் எந்த செயலும், படைப்பும் உன்னதமாக இருக்க முடியாது. உங்கள் சாதனையின் ரகசியமும் அதுவே!

இன்னும் நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. cataract மாதிரி ஏதோ ஒன்று அதை மறைப்பதால் தான், உங்களுக்கு நிறைய நேரம் மீதி இருக்கிறது (இந்த மாதிரி எழுத முடிகிறது, பணம் சம்பாதிக்கவில்லை என்று புலம்ப முடிகிறது). இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்!

Ashok D said...

அழகு :)
கவிதைபோலான
பதிவு

உள்மனபேச்சுக்கள்
சில சமயம்
மற்றவர் வாழ்வுக்கும்
மிக நெருக்கமாக
மாறிவிடுவதுண்டு...(பணபலமோ பின்புலமோ இல்லாமல் சாதித்தேன் என்பது நான் கொண்டுள்ள திமிர்...(எனக்கும் உண்டு) நானும் வாழ்வின் எல்லா சீட்டுக்களையும் கலைத்துவிட்டு புதிதாக திருப்பி ஆரம்பித்திருக்கிறேன் 2011 என்ற இந்த வருடத்தில்.. ஜெயித்தபிறகு.. திரும்ப மறுபடியும் கலத்துவிட்டு... திரும்பவும் :)

Unknown said...

puridharvargal vizhithukondargal... puriyathavargal ???

karges said...

ஹலோ டாக்டர் (beliver of godess remember..?!!lol) any way.. if possible read this articale... and say ur opinion , preferabily by mail sir...

அமர்ஹிதூர் said...

எனக்கு மனம் என்று இருப்பது தாங்கள் பல வருடங்களுக்கு முன் தொலைகாட்சியின் மூலம் பேசும் போதுதான் தெரியும்.
இந்தியர்கள் என்னதான் மன ஆராட்சியில் வல்லவர்களாக பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே இருந்தாலும், எங்களை போன்ற பலருக்கு மனம் அதன் வல்லமை பற்றிய விழிப்புணர்வு இல்லை. அந்த விழிப்புணர்வை தாங்கள் என்னை போன்ற பல ஆயிரம் பேர்களுக்கு இலவசமாக தாங்கள் வழங்கி உள்ளீர்கள். தங்களுக்கு என்றென்றும் கோடான கோடி நன்றிகள்.

Anonymous said...

Hi,

(delete this after seeing...)

தமிழ் மற்றும் ஆங்கில பிளாகுகளில் உள்ள கட்டுரைகளை படிக்கும் போது எனக்கு ஒரு சிரமம் ஏற்படும். கட்டுரையின் width சிறியதாக இருந்தால் தொடர்ந்து scroll barஐ கீழே இழுத்து இழுத்து படிப்பேன். எரிச்சலாக வரும். இதை தவிர்க்க கூகிள் ரீடரைப் பயன்படுத்தி அதில் உள்ள full-screen modeஐ உபயோகித்தேன். கூகிள் ரீடரில் நான் add செய்யாத பிளாகுகளில் உள்ள கட்டுரைகளின் அகலம் சிறியதாய் இருக்கும் போது அதை copy செய்து கீழே உள்ள linkல் pasteசெய்து விடுவேன். அதுவே மிகப் பெரிய widthஐ உடையது. நீங்களும் அகலம் குறையவாய் உள்ள கட்டுரைகளை கீழே உள்ள linkல் pasteசெய்து படிக்கவும். It will be very easy to read as it has very great width...

http://www.google.com/transliterate/indic/Tamil

...d...

Unknown said...

/விலை போகாதிருந்திருக்கிறேன், யாரையும் விலைக்கு வாங்கவும் நினைக்காமல் இருக்கிறேன்/

இன்றைய வாழ்கையில் இதை செய்வதுதான் கடினமான சாதனையாக இருக்கிறது சார்...

Anonymous said...

புரிகிறது.

இன்று குழந்தைகளுக்கும் பள்ளிச் சிறார்களுக்கும் சரியான வழி காட்ட, நல்லது அல்லதை போதிக்க, மன வலுவூட்ட யாருமே இல்லை. எனக்கென்னவோ நீங்கள் அதற்கானவர் என்றே தோன்றுகிறது.

உங்கள் உள்ளுள் இருக்கும் அன்னை காமாட்சி வழி காட்டாமலா இருப்பாள்?. கருணைத் தெய்வம் காமாட்சி கடாஷிக்கப் போகிறாள் விரைவில்.

புதிய பாதை, புதிய பயணம் விரைவில். அவளை நீங்கள் தீட்டப் போகும் ஓவியம் முற்றுப் பெறுவதற்குள்...

அன்பன்

mohamedali jinnah said...

"நன்றி பரஸ்பரம் என்றும், பாசம் நிரந்தரம் என்றும் என்னையே ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்..."
-மனநல மருத்துவர் ருத்ரன்.
இது பொது விதி . அனைவரும் நினைப்பது .போலியான உலக வாழ்வு. "உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொருவரும் நடிகன் "
Hypocrisy.
Hypocrisy is the state of pretending to have beliefs, opinions, virtues, feelings, qualities.

karges said...

எதையுமே தலைமேல் தூக்கிவைத்து கொண்ட்டாடுவதுதான் உண்மையின் உச்சகட்டம் என்றிருக்கும் வரை ஏகலைவன்களும் இருப்பர் துரோனர்களும் இருப்பர், மணமுறிவகளும் ,மசூதி இடிப்புகள் அனைத்தும் இருக்கும் என்பது என் கருத்து.. அய்யா.. தங்கள் கருத்து என்னவோ...

Post a Comment