Saturday, December 25, 2010

நட்புக்காக(வும்) நாசர்!


ஹை எனக்கு இந்தப் பிரபலம் தெரியுமே எனும் பதிவு அல்ல இது- ஒரு நண்பனைப்பற்றி ஒரு பத்திரிகையில் எழுதக் கிடைத்த வாய்ப்பின் பகிர்தல். நட்பு பகிர்தல்தானே.

 நாசர் பற்றி நேர்காணல்பத்திரிகைக்காக எழுதவேண்டுமென்று பௌத்த அய்யனார் கேட்டபோது சரியென்று சொல்லி, இரண்டு நாட்களில்  இன்னொரு நண்பனின் இல்லத்திருமண வரவேற்பில் நாசரைப் பார்க்க நேர்ந்தது.
“உன்னப்பத்தி எழுதணுமாமே..என்ன எழுத? “ என்றதற்கு, “நீ என்ன வேணும்னாலும் எழுதுஎன்றான். என்ன எழுத என்று யோசித்தால்... எழுதக்கூடியவை போலவே எழுதாமல் இருக்க வேண்டியவையும் நிறைய மனத்துள் தோன்றுகின்றன.
அவனது முதல் திரைப்படம் பார்த்த பின், பிரபலமாகிய படத்தைப் பார்த்தபின், ஒரு பிற்பகல் நடந்த அவனது திருமணத்தின் போது, ஒரு பின்னிரவு அவனுக்கு முதல் குழந்தை பிறந்த போது.. பிறகு அந்தக் குழந்தையின் முதல் பிறந்தநாள்.. அவதாரம் பிரத்யேகக்காட்சி... என்று நாசருடன் நிறைய நெருக்கமான நெகிழ்-மகிழ் தருணங்களும் நினைவில் வருகின்றன. ஆனால் என்னை பௌ.அ. எழுதச்சொன்னது நாசருடனான நாடக அனுபவங்கள் பற்றி!

1984- எங்கள் முத்ரா நாடகக் குழுவில் இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகத்தைத் தயாரிக்க முடிவெடுத்தோம். பாலாசிங் அதற்கு முந்தைய நாடகத்தின் கதாநாயகனாக நடித்து விட்டதால் எங்கள் ஜனநாயக முட்டாள்தனம் இதற்கு வேறொரு கதாநாயக நடிகனைத் தேடிக் கொண்டிருந்தது. இன்றைய முன்னணி நவீன நாடகக்காரரான ப்ரீதம் ஔரங்கசீப்பில் நடிப்பதாக இருக்க அவளது கணவர் (சக்ஸ்) சக்கரவர்த்தியிடம் இந்த ஆளில்லா குறையைப் புலம்பிக் கொண்டிருந்தேன். சக்ஸ் தாடியும் வைத்துக்கொண்டு சிவப்பாகவும் இருந்ததால் மனுஷன் நான் நடிக்கிறேன் என்று சொல்ல மாட்டானா என்றுதான் கேட்டேன். எனக்கு ஒரு பையன் தெரியும் உன்னை வந்து பாக்கச் சொல்றேன்என்று சக்ஸ் என்னிடம் அனுப்பிய அந்த இளைஞன் தான் நாசர்.

1984
இன்று என்னை ‘நீஎன்றும் ‘டேய்என்றும் விளிக்கும் அவன் என்னிடம் முதலில் பேசியது “சார்..”!
“சக்ஸ் அனுபிச்சார்...நான் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்..என்று ஆளில்லாமல் அலையும் என்னிடம் வாய்ப்பு கேட்பவன் போல நின்றான். அன்று மாலை ஒத்திகையில் எல்லாரிடமும் “இவந்தான் ஔரங்கசீப்என்றேன். நாசருக்கே கூட தான் கதாநாயகன் என்பது அப்போதுதான் தெரியும்!

காலையிலிருந்தே நண்பர்கள் கூட ஆரம்பித்தாலும் நான் எல்லா பேஷண்ட்ஸையும் முடித்துவிட்டு, எல்லாரும் சாப்பிட்டுக் கிளம்ப மதியம் இரண்டு மணியாகிவிடும். பெரியார் ரோடு (தி.நகர்) என் கிளினிக்கிலிருந்து பெங்கால் அஸோஸியேஷனுக்கு நடந்து போவோம். நான்கு மணிக்கு மேல் அந்த இடம் எங்களுக்குக் கிடையாது என்பதால் மாலை திரும்ப வந்து விடுவோம். ஒருவழியாக எல்லாரும் வசனத்தை மனப்பாடம் செய்து விட்ட நேரத்தில் நாசருக்கு சென்னை தொலைக்காட்சிப் படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு வாரம் படப்பிடிப்பு என்று போனவன் வர இரண்டு வாரம் ஆனது. அதற்குள் வீம்புடன் தேதி முடிவு செய்து நடிகர் சங்க அரங்கத்தை முன்பதிவு செய்துவிட்டோம்.
நாடகத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் அவனால் முழு ஒத்திகையிலும் எல்லாருடனும் பங்கேற்க முடிந்தது. 

நாடகத்தின் முதல் காட்சியிலேயே கோணல்! எங்கள் குழுவின் ஜனநாயக-மடமையும் ஆள் பற்றாக்குறையும் சேர்ந்து பின்மேடைப் பணிகளில் மட்டும் இருக்க முடியாமல் நான் ஷாஜஹானாய் நடிக்க வேண்டி வந்த அந்த முதல் காட்சியின் முடிவில், பாலாசிங்கும் ப்ரீதமும் அவர்களது வசனத்தைப் பேசிவிட்டுப் போனபின், விளக்குகள் அணையும்வரை நான் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கவேண்டும். ஒளியமைப்பின் பொறுப்பேற்ற சக்ஸ் விளக்கை அணைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலை..பாலாவும் அங்கே  இல்லை.. நாசர் தன் நுழைவுக் காட்சிக்காக இடப்புறம் காத்திருக்கிறான். ஒலிநாடாவின் இசையும் முடிந்துவிட்டது. மிகவும் தற்செயலாக நடந்த அந்த வெறுமையான காட்சி என் (ஷாஜஹானின்) தனிமையை மிகவும் சிறப்பாக முன்வைத்ததாக ஒரு நாடக ஆர்வலர் கூறியதிலிருந்து நிபுணர்களை நான் நம்புவதில்லை.
அந்த முதல் காட்சியில் நாசர் பிரமாதமாக நடிக்க, பின்னாலிருந்து வசனம் தூண்டி விட வேண்டியவன் சிகரெட் புகைக்க வெளியே போனான்... திரும்பி வருவதற்குள் இன்னும் சில காட்சிகள் முடிந்து விட்டன. நாசரும் பாலாசிங்கும் வாதம் புரிய வேண்டிய முக்கியமான காட்சி. வசனங்களும் அங்கே மிக முக்கியம்.
நாசருக்கு ஓரிடத்தில் வசனம் இடறியது. தாமதமாக வந்து ப்ராம்ப்ட் செய்தவன் இரண்டு பக்கங்களுக்குப் பின் இருந்த வார்த்தையைக் கிசுகிசுக்க, நாசரும் அங்கிருந்து வசனத்தைத் தொடர்ந்து விட்டான். பாலாசிங் பண்பட்ட நடிகன் என்பதால், தான் பேச வேண்டியதை விட்டுவிட்டுத் தொடர...நாடகம் முடியும் போது நாசர் ஒரு ஹீரோ! பிரபலமான வில்லனாகப் பின்னர் பரிமளித்தாலும்.

1989
அதன்பின் படிப்படியாக அவனுக்குத் திரைவாய்ப்புகள். எங்கள் நாடகக்குழுவும் இரண்டாண்டுகள் சும்மாயிருந்துவிட்டு, “இனிஎன்ற நாடகத்தை 1987-ல் அரங்கேற்றினோம். அதில் தானும் கலந்து கொள்வேன் என்று அடம் பிடித்ததால் அவனுக்கு டாக்டர் பாத்திரம். ஒத்திகை கூடத் தேவையில்லை, எதிரே இருப்பவரிடம் ஒரு ஃபைல் பார்த்துக் கேள்வி கேட்டால் மேடையின் பல இடங்களிலிருந்து பலர் பதில் தருவதாய் காட்சி!
அடுத்த ஆண்டு நாங்கள் ஈடிபஸ் போடும்போது அதில் நடிப்பேன் அன்று அடம் பிடித்தான்...அப்போதுதான் திரைப்படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த நேரம், ஆகவே அவனுக்கு நாடகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது, அதற்கு அடுத்த ஆண்டு மேக்பெத் நாடகத்திலும் நடிப்பேன் என்றான், நான் விடவில்லை. நடிக்காவிட்டாலும் உடைகளையும் ஒப்பனையையும் நான்தான் செய்வேன் என்று தான் மிகவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த திரைப்படங்களுக்கு இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு எங்களுடன் பணியாற்றினான். 1989க்குப் பிறகு நாங்கள் நாடகம் போடுவதும் குறைந்து விட்டது. ஆனால் நட்பு தொடர்ந்தது.

இன்னும் நட்பு இருக்கிறது, சந்தித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன் பார்த்த அந்த நிகழ்ச்சியில் மறுபடியும் நாடகம் போடலாமா என்று அவன் கேட்ட போது சபலம் வந்தது. ஆனால் புத்தி ஆசையை அடக்குகிறது. ஒரு நல்ல நடிகன் இருந்தும், வசதி இருந்தும் நாடகம் போட முடியாத வருத்தமும் இருக்கிறது....நாசர் நல்ல நடிகன்.
நல்ல நடிகனாக இருப்பது சிரமம், நல்ல நடிகன் நல்ல நண்பனாக இருப்பது அபூர்வம். பல நட்பு பாவனைகள் நாடகங்களாகப் பார்த்தவன் நான்.
அந்தக் காலக்கட்டத்தில் என் நண்பர்களை எல்லாம் நாடகத்தில் நடிக்க வைத்தேன், நாடக நடிகர்களையெல்லாம் நண்பர்களாகவும் ஆக்கிக்கொண்டேன். இன்று நடிப்பவர்களையெல்லாம் விலக்கி வைக்க நாடகமாடிக்கொண்டிருக்கிறேன்.

13 comments:

Unknown said...

நல்ல நட்பைச் சொன்ன பதிவையும் இறுதி வரிகளையும் மிக ரசித்தேன்.

நாணல் said...

//நட்பு இருக்கிறது, சந்தித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. //

இன்றைய அவசர உலகின் பரிதாமான நிலை இது.. :(
நாசர் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்..

pichaikaaran said...

ரசித்து படித்தேன்

அமிர்தா said...

"இன்று நடிப்பவர்களையெல்லாம் விலக்கி வைக்க நாடகமாடிக்கொண்டிருக்கிறேன்."

நிஜ வாழ்க்கையில் நடிப்பது சிரமம் தான்

suneel krishnan said...

அந்தக் காலக்கட்டத்தில் என் நண்பர்களை எல்லாம் நாடகத்தில் நடிக்க வைத்தேன், நாடக நடிகர்களையெல்லாம் நண்பர்களாகவும் ஆக்கிக்கொண்டேன். இன்று நடிப்பவர்களையெல்லாம் விலக்கி வைக்க நாடகமாடிக்கொண்டிருக்கிறேன்.//

அற்புதம் ..

Ananth said...

As usual the finishing line was excellent !! Cinema baani la sollanum na "punch dialogue" :)

Vathees Varunan said...

நல்ல ஒரு பதிவு...

Vathees Varunan said...

:)

Thekkikattan|தெகா said...

enjoyed, reading! thanks.

போ. மணிவண்ணன் said...

சிஷ்யர்கள் நண்பர்கள் ஆகலாம் என்பதை உங்கள் பதிவு பரிச்சார்த்தமாக உணர்த்தியது .உங்கள் பழைய நாடக அனுபவங்கள் பற்றி தெரிந்துகொன்வதற்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளமைக்கு நன்றி. காரணம் நாடகம் என்ற ஒரு தொன்மைக் கலை கொஞ்சமா கொஞ்சம் அழிந்து வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. இந்நிலையில் நாடகம் குறித்த பதிவுகள் அக்கலையை உயிர்ப்பிக்கலாம் தமிழ் திரையின் நான் ரசித்துப் பார்க்கும் தேர்ந்த நடிகர்களை ஒருவர் நாசர் அவர்கள்தான்.திரைக் கல்லூரியின் தொடங்கி நாடகத்தில் வளர்ந்து திரையில் பூத்துக்குலுங்கும் நாசரின் பரிமாணங்கள் பாராட்டுதலுக்கு உரியவை.அவரின் கடின உழைப்பிற்கும். நல்ல கலைஞர்களை அடையாளப்படுத்திய உங்களின் பெருந்தகமையான உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றியும் வாழ்த்தும்.

வணக்கங்களுடன்
மணிவண்ணன்

Saravana Raja said...

//மிகவும் தற்செயலாக நடந்த அந்த வெறுமையான காட்சி என் (ஷாஜஹானின்) தனிமையை மிகவும் சிறப்பாக முன்வைத்ததாக ஒரு நாடக ஆர்வலர் கூறியதிலிருந்து நிபுணர்களை நான் நம்புவதில்லை. //

:-) அருமையான பதிவு

உண்மைத்தமிழன் said...

நன்று..!

Deepa said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள் டாக்டர்.

திரைப்பட வாய்ப்புகள் நிறைய வந்தும் நீங்கள் போட்ட நல்ல நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டியது நாசர் ஒரு சிறந்த கலைஞர் என்பதை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

//மறுபடியும் நாடகம் போடலாமா என்று அவன் கேட்ட போது சபலம் வந்தது. ஆனால் புத்தி ஆசையை அடக்குகிறது. // Why not?

Post a Comment