Tuesday, July 6, 2010

சுயசரிதையெனும் பரிசோதனை.1.1

 
வெற்றி பெற்றவனது வாழ்க்கை மட்டுமல்ல, வெற்றியை நோக்கிப் பயணித்தவனது வாழ்க்கை கூட எழுதப்படக்கூடிய கதைதான்.

அவசரமாக இதை எழுதும் கட்டாயத்தில் நான் இல்லை என்பது போலவே அவசியம் இதைப் படிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நீங்களும் இல்லை. இருந்தும் இது எழுதப்படுகிறது, படிக்கப்படும் என்பதும் தெரிகிறது. கதை சொல்வதிலும் கதை கேட்பதிலும் நமக்கெல்லாம் உள்ள இயல்பான ஆர்வம்தான் காரணம். சுயசரிதைகளிலும் கதை உண்டு. பொய் என்ற அர்த்தத்தில் அல்ல, கற்பனையும் கலந்திருக்கும் என்ற அர்த்தத்தில். அன்று நடந்தவற்றை மனம் அப்படியே பதித்து விடுவதில்லை. உணர்ச்சிகளை மிகைப்படுத்தியும் குறைத்தும் பதிவு செய்யும். நிகழ்வுகளுக்கான காரணங்களை மாறிய கண்ணோட்டத்தில் பார்க்கும்.

அப்படி இல்லாமல் ஒருவன் ன் வாழ்க்கையின் கடந்த காலங்களை நினைவுக்குக் கொண்டுவந்து அதை எழுத்தாக்கும் போது, அவனே ஒரு பார்வையாளனாகவும் விமர்சகனாகவும் அந்த நாடகத்தில் பங்கேற்கிறான். அதுபோல ஒரு விலகி நின்று பார்க்கவும், புரிந்து கொள்ளவுமான முயற்சியாகவே இந்த நேர எழுத்து. இன்னும் சில பக்கங்களுக்கப்புறம் இந்நிலை மாறலாம். சுயச்செயல்பாட்டிற்கு புது நியாயங்கள் கண்டுபிடிக்கவும் படலாம். வேறெதுவுமாக அமையாவிட்டாலும் இது சுவையான பொழுதுபோக்கிற்கும், அதே நேரம் சுய பரிசீலனைக்குமாவது உதவும். படிப்பவர் என்னோடு சேர்ந்து காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும், சில நிகழ்வுகளையும் சில மனிதர்களையும் தத்தம் வாழ்வின் அனுபவக் கண்ணோட்டத்தில் பார்க்கவும், ரசிக்கவும், சிரிக்கவும், புரிந்து கொள்ளவும் உதவலாம்.

இதை எழுதியதும் இப்போது பதிவிடுவதும் ஒரு பரிசோதனைதான். இதன் நீளம் அதிகம் போலத் தோன்றினாலும் பதிவிடுகிறேன், நானே பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

முடிவிலிருந்து ஒரு கதையைப் பின்னோக்கி நகர்த்துவது ஒரு நல்ல இலக்கிய உத்தி என்றாலும், ஒருவன் தன் கதையை முடிவிலிருந்து பின்னோக்கிச் சொல்லிக்கொண்டுவர முடியாது. வாழ்வின் மையத்திலிருந்துதான் பின்னோக்கிப் போக முடியும். எனக்கு நான் இன்னும் மீதியிருக்கிறேன் என்பதால், முதலிலிருந்து ஆரம்பிப்பது சௌகரியம்.

ஒரு சித்திரை மாதம், பௌர்ணமி நேரத்தில் அந்த ஆரம்பம். தந்தை நிழற்பட நிபுணராகவும் இருந்ததால், அந்தக்காலகட்டத்தின் பல படங்கள் கைவசம் இருக்கின்றன. நாம் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட இடங்களையும், நபர்களையும் படங்களாகப் பார்க்கும் போது, பொதுவாகப் பழைய நினைவுகள் மனத்துள் மீண்டும் நிழலாடலாம். ஆனால் என் பழையப் படங்களைப் பார்க்கும் போது, நினைவுகள் அனுபவங்களின் மீட்சியாக வரவில்லை. சுமார் நான்கு வயதிலிருந்துதான் ஓரளவு பிசுபிசுப்பாக நினைவில் வருகிறது.

“நான் பிறந்தவுடனே என் வாயிலிருந்து வேதம் ஒலித்தது; என்னை எல்லாரும் வணங்கினார்கள், தொட்டிலிலிருந்தே நான் அனைவரையும் ஆசீர்வதிக்க ஆரம்பித்தேன்” என்றெல்லாம் புளுகி ஒரு சாமியாராகத் தொழில்விருத்தி செய்து கொள்ளும் நிலையில் நான் இல்லாததால், நினைவில் இல்லாததைப் பொய்யாக்கி புனைவாக்கிச் சொல் வேண்டிய அவசியம் இல்லை. நான்கு வயதிலிருந்துதான் ஞாபகங்கள்.

நான்கு வயதானதும் தாத்தா செத்துப் போனார். அவரைப் படுக்க வைத்து எல்லாரும் அழுது கொண்டிருந்தது ஞாபகமாய்த் தோன்றுகிறது. அவரைப் பற்றி மிகுந்த பிரயத்தனத்தோடு யோசித்தால், ஒல்லியாக ஒரு கிழவன் புத்தகம் படித்துக் கொண்டிருப்பது போல ஒரு பிம்பம் வருகிறது. தாத்தாவுடன் கொஞ்சிய விளையாடிய எதுவும் நினைவில் இல்லை. அந்த தாத்தா என் வாழ்வில் முக்கியம். இன்று என் அடையாளமாக நான் சொல்லிக்கொள்வதும் பிறர் அழைப்பதுமான பெயர் அவர் வைத்ததுதானாம். நட்சத்திரப்படி ரு என்ற எழுத்தில் பெயர் வரவேண்டும் என்று எனக்கு இந்தப் பெயர் வைத்தார் என்று கூறுவார்கள். தாகூர் ரசிகையான என் அத்தை ரவீந்த்ரநாத் என்று முன்வைத்த பெயரை தாத்தாதான் நிராகரித்தார் என்றும் என் அத்தை சொல்லியிருக்கிறார்கள். 

அந்த அத்தையும் என் வாழ்வில் மிக முக்கியம். என்னை வளர்ப்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாதவர், என் அம்மாவை விடவும் என்னிடம் நெருக்கமும் அக்கறையும் கொண்டவர். குழந்தையாகவும் சிறுவனாகவும் இன்னும் இருக்கும் பல நினைவுகளெல்லாம் அத்தையுடன் சேர்ந்தே தோன்றுகின்றன.
அத்தை எனக்கு விகடனை, கல்கியை வாசித்துக் காட்டுவார். அப்போது விகடனில் வெளியான கென்னடியின் கதை (மயன் என்ற பெயரில் மணியன் எழுதிய தொடர்) கேட்டுக் கேட்டு கென்னடியின் ரசிகனாகவே மாறியிருக்கிறேன். அதன் பாதிப்பு எவ்வளவு என்றால் நாற்பத்துநான்காம் வயதில் வாஷிங்டன் போனபோது நான் முதலில் பார்க்க விரும்பிய இடம் ஆர்லிங்டன் கல்லறைதான்!


அம்மாவுக்கும் என் கல்விக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஐந்து வயதில்,  “ம், சொல்லு” என்று என்னை, “சரஸ்வதி நமஸ்துப்யம்” என்று சொல்ல வைத்தவள். வித்யாராம்பம் முன்னாடியே நடந்திருக்கும், ஆனால் ஐந்து வயது சரஸ்வதி பூஜைதான் நினைவுள் நிற்கிறது. அந்த வயதில் பார்த்த ரவிவர்மாவின் சரஸ்வதி படம் –வரும் வருடங்களில் வாயில் வழுக்-நசக் என்று திணிக்கப்பட்ட, பிரசாதம் என்று சொல்லப்பட்ட பாலில் ஊறிய வாழைப்பழத்தின் விரும்பமுடியாத சுவையுடனேதான்  மனத்துள் தங்கியிருந்தது. அந்த பிம்பத்திலிருந்து விடுபட பலப்பல வருடங்கள் தேவைப்பட்டன.

நினைவுகள் வார்த்தைகளாக மட்டுமின்றி நுகர்வுகளாகவும் பிம்பங்களாகவும் சேர்ந்தே ஞாபகங்களாக சேமித்து வைக்கப்படுகின்றன.. தாத்தா என்றால் ஒல்லியான புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஒரு கிழ உருவும், அம்மா என்றால் பாலில் ஊறிய பழத்தை வாயில் திணித்து அதை அப்படியே விழுங்கினால்தான் படிப்பு வரும் என்று ஏமாற்றிய ஒருத்தியாகவும், அத்தை என்றால் மடியில் கிடத்தி கதை சொல்லி தலை கோதிவிட்டுக் கொண்டிருந்த அன்பானவளாகவுமே நினைவுள் எனக்குத் தோன்றுகின்றன.

நினைவுகளில் மேலோங்கி நிற்வை மனிதர்களும், அவர்களின் உருவங்களும் செயல்களும்தான். உற்றுத் தேடி மீட்கப் பார்த்தாலும் தெரிய வருபவை பெயர்களும் பழக்கங்களும்தான். ஆனால், நினைவுமீட்டலில் ஒருவரை இன்றைய தராசில் எடைபோட அந்த காலகட்டத்தின் பொருளாதாரச் சமூகச் சூழலோடும் பொருத்திப் பார்ப்பது அவசியம்.

நான் விவரிக்க விரும்பும் காலகட்டம்- 1955 முதல் 1965 வரை. வீட்டில் பேசியவர்களின் வார்த்தைகள் அப்படியே இல்லை என்றாலும் சில நிகழ்வுகள் என் வீட்டிலும் விமர்சிக்கப்பட்டவை. பின்னாளில் படித்துத் தெரிந்து கொண்டவையும் அன்று காதில் விழுந்தவையும் பல விதங்களில் வேறானவை. ராஜாஜி அற்பமாய் இங்கே பதவி வகித்தது, பெரியார் சாமி சிலையைச் செருப்பால் அடித்தது, அண்ணா அழகாகத் தமிழ் பேசுவது, சைனாக்காரன் நம்முடன் சண்டை போட்டது என்று பல கருத்துக்கள் என் வீட்டார் பேச்சின் மூலமாகவே படிந்தன. சமகால அரசியல் பற்றி மட்டுமல்லாமல், சினிமா, பாட்டு என்று பல விஷயங்களை ஒரு சின்னப் பையனை வைத்துக்கொண்டே விவாதித்த குடும்பம் அது. நடிப்புன்னா சிவாஜி,ல்ல மனுஷன்னா எம்ஜியார், புல்லாங்குழல் என்றால் மாலி, நாதசுரம் என்றால் ராஜரத்தினம் பிள்ளை, வயலின் என்றால் சௌடையா... என்று எனக்குப் புரியாத ரசனைகளும் என் சிந்தையில் பதிவிடப்பட்டன. இன்று, அன்றைய என் வயதையொத்த சிறுவர்களுக்கு இப்படி ஒன்று மிகமிகக் குறைந்து விட்டது. சமகாலச் சமுதாய அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனங்கள்  நிறைய குடும்பங்களில் இன்றைக்கு பேசப்படும் பொருளாக இருப்பதில்லை. இன்றைய காலத்தில் பேசப்படும் பொருள் மட்டுமல்ல பேசுவதே குறைந்து விட்டது.

இவர்களது பேச்சுக்களைத் தவிரவும் வீட்டில் (அன்றைய என் கண்ணுக்கு) பெரிதாய் ஒரு பிலிப்ஸ் ரேடியோ சில விஷயங்களைச் சொல்லியது. “உன்னையறிந்தால்..   எனும் பாட்டு அவ்வப்போது காதில் விழுந்ததாலோ என்னவோ இன்று வரை என் மௌனத்திலும் ரீங்கரிக்கிறது. அதேபோல் எம்ஜியார் ஆணையிட்டபடி நடந்து விட்டால் ஏழைகள் கண்ணீர் விட மாட்டார் என்பது ஒரு நம்பிக்கையாகியது. வளர வளர கருத்து ரீதியாக மட்டுமில்லாமல் ரசனைரீதியாகவும் முரண்கள் புரிபட ஆரம்பித்தது. டிஎம்எஸ் எனக்குப் பிடிக்க ஆரம்பித்து, பீபியெஸ் மற்றும் ஏஎம்ராஜா அத்தைக்கும் அம்மாவுக்கும் பிடித்தது ஏன் என்று புரியாமலேயே ஏன் ரசனைகளை ரகசியமாக்கவும் கற்றுக் கொண்டது அந்த பத்து வருடங்களில்தான். இத்தனைக்கும் வீட்டில் இருந்த கிராமஃபோன் பீபிஸ்ரீநிவாஸ் பாட்டு ரெகார்ட் எதையும் பாடியதில்லை. அவ்வப்போது ஏதோ ஒரு ஸ்னோ விளம்பரத்தில் வரும் ராஜா முகத்தைக் காட்டி இதுதான் நல்ல குரல் என்று என்னை மாற்ற முயன்றதும் நினைவில் லேசாக நிழலாடுகிறது. ரசனைகளிலிருந்து பத்து வயது எட்டுவதற்குள் ரகசியங்களின் அவசியம் எனக்குப் புரிபட ஆரம்பித்தது. பிறர் ரசனைகளை எதிர்க்காமலேயே என் ரசனைகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவும் என் மனது கற்றுக் கொள்ள ஆரம்பித்தது. ஏமாறுவது குறைந்து ஏமாற்றுவது  பழகுவது எல்லாருக்கும் பத்துவயதிற்குள்தான். திட்டமிட்டுச் சொன்ன முதல் பொய்யும் அந்த வயதிற்குள்தான் நிகழ்ந்திருக்கும்.

அந்த முதல் பத்தாண்டுகளில்தான் பள்ளி மாற்றமும். என் அம்மா தான் படிக்க முடியாததால் என்னை மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்த்திருக்க வேண்டும். அப்போது அதன் பெயர் பேபி க்ளாஸ்’. குட்ஷெபேர்ட் கான்வென்டில்தான் என் பள்ளி வாழ்க்கை ஆரம்பம். அந்தப் பள்ளியை விட்டு வெளியேறி முப்பதாண்டுகளுக்குப் பின் அங்கேயே சிறப்பு விருந்தினராக ஒரு நிகழ்ச்சிக்குப் போனபோது, பள்ளி மிகவும் மாறி விட்டதைப் பார்த்து மகிழ்வதா வருந்துவதா என்று புரியாத நிலையில் சுற்றிப் பார்த்ததும் நினைவில் இருக்கிறது.

அங்கேதான் முதன்முதலாய் ஒரு சேப்பல் (ஆலயம்) எனக்குப் பரிச்சயம். அங்கே இருந்த மாதா படம் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மேரியைப்போல் எங்கள் வீட்டு மேரியின் படம் இல்லை. எங்கள் வீட்டுப் பூஜையறையில் வேளாங்கண்ணி மாதா படம் இருக்கும். கற்பூரம் அதற்கும் காட்டப்படும். மதச்சார்பின்மை என்னும் வார்த்தை அறிமுகமாவதற்கு முன்பேயே சென்னை மவுண்ட்ரோடிலுள்ள தர்காவும் அதன் பாத்தியா ஓதிய பூந்தியும், ஜூன் மாதம் எங்கள் வீட்டு வழியே தேர் மாதிரி ஒரு அலங்காரத்தோடு மேரிமாதா ஊர்வலமும் எனக்குப் பரிச்சயம். எல்லாமும் சாமிதான் என்று போதிக்கப்பட்ட காலத்தில் பழநியாண்டி கோலத்தில் இருந்தவனும் ஆறுமுகத்தோடு மயில் மேல் இருந்தவனும் முருகன்தான் என்றாலும் வேறுவேறு என்று நினைத்துக் கொண்டிருந்தவன் நான்.

பள்ளியில் யேசு சிலைதான் பிரதானம் என்றாலும் எனக்கு மேரி படத்துடன்தான் நெருக்கம். அதேபோல் வள்ளலாரின் படமும் பூஜையறையிலிருக்கும், அதன் மீதும் இனம்புரியாத ஒரு நெருக்கம். சாமிகளில் சரஸ்வதியுடன்தான் எனக்கு அன்பு-வெறுப்பு-சுழலுணர்வு. படிக்க அவள் தேவை, ஆனால் அவளைக் கும்பிட்டால் பாலிலூறிய பழத்தை விழுங்கவேண்டிய அசூயையும்  இணைந்தே மனத்துள் போராட்டமாகும். மதம், தெய்வ நம்பிக்கை எல்லாமும் எல்லாருக்கும் அந்த முதல் பத்து வயதுக்குள் ஊட்டப்படும், எனக்கும் அப்படித்தான். “நாமெல்லாம் ஹிண்டூ, அவாளெல்லாம் கிறிஸ்டீன்” என்று தான் எனக்குப் பிரிவினை சொல்லிக் கொடுக்கப்பட்டது, நல்லவேளை அந்த வயதில் ஜாதி போதிக்கப்படவில்லை. என் வீட்டுச் சூழலிலும் அதற்கு எந்தவித சாத்தியமும் இல்லை, நாங்கள் பரம்பரையாகவே கலப்புமணம் செய்துவந்த குடும்பம்!

சாதி-மறுப்பு, கலப்புமணம், மதச்சார்பின்மையைவிடவும் எம்மதமும் சம்மதம் எனும் கோட்பாடு- இவையே நான் வளர்ந்த சூழல். சரஸ்வதீ நமஸ்துப்யம் சொல்லிவிட்டு ஹெய்ல் மேரி சொல்லவும் கற்றுக்கொண்டது இந்தக் காலகட்டத்திற்குப் பின்னர்தான்.

முதல் பள்ளியில்தான் என்னைப்போல பலரும் அவரவர் வீட்டுக்குச் செல்லம் என்று தெரிந்தது. நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், புரியாவிட்டாலும், சைக்கிள் ரிக்ஷா காரை விடக் குறைவு என்று ஒருமாதிரி புலப்பட ஆரம்பித்தது. சில அப்பாக்கள் ஸ்கூட்டரில் வருவார்கள் என் அப்பா சைக்கிளில் வருவார்- வர்க்கபேதம் என்றெல்லாம் அப்போது தெரியாது. எல்லாரும் ஒன்றில்லை என்பது ஒருமாதிரியாகப் புரிந்தது. இந்தப் புரிதலின் கட்டத்தில் ஒரு பொறாமை வந்திருக்க வேண்டும், வரவில்லை. அப்படிப் பொத்திப்பொத்தி வளர்த்தார்கள். நான் பள்ளிக்குக் கொண்டு போகும் பொம்மைகளை ஹெரால்டு காரில் வந்திறங்கும் பிள்ளைகள் கூட என்னிடம் கேட்பார்கள். பணக்காரனுக்குத்தான் பணத்தின் மதிப்பு தெரியும், ஏழைக்கு தேவைக்குமேல் கிடைக்கும் எதையும் செலவிட முடியும் என்பது அப்போது புரியவில்லை. பிற மாணவர்கள் மத்தியில் இருந்த பொம்மைப் பெருமையே போதுமானதாக இருந்தது. இதன் வீச்சு இன்று வேறு விதம். உபரிவருமானத்தில் வெட்டியாய் பொம்மைகள் போல சிலைகள் வாங்குகிறேன், நானே மெச்சிக்கொள்ள.

அந்த குட்ஷெபர்ட் பள்ளியில் சில அனுபவங்கள் அதே வியர்வையோடு, பொறாமையோடு, வருத்தத்தோடு, பெருமையோடு நினைவில் உள்ளன. காமராஜர் வருகிறார் என்று வெயிலில் எங்களை நிற்கவைத்து வாட்டியபோது, என் சோர்வுக்கும் சோகத்துக்கும் ஆறுதல் போலத் தோன்றிய செடியை பார்த்துக் கொண்டிருந்ததால் திட்டு வாங்கி பின், “மிஸ், இது என்ன செடி?” என்று கேட்க, அவளும் அந்தச் செடியின் பெயர் கென்னா என்று சொல்லிக் கொடுத்ததன் விளைவு, இன்றும் யாராவது என்னிடம் செடி வேண்டுமா என்று கேட்டால் முதலில் அந்த மஞ்சள் பூக்கும் கற்றாழையே விருப்பமாக வெளிவருகிறது.

விடுமுறையில் எல்லாரும் அவர்களது நண்பர்கள் வீட்டுக்குப்போய் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது. எனக்கு இருவரோடு ஒட்டுதல் அதிகம். ஒரு பையன் திமுகவின் முக்கிய புள்ளியின் மகன், இன்னொருவன் அதே கிராமச்சாலையில், (இப்போது அதன் பெயர் வள்ளுவர்கோட்டம் சாலை) ஒரு பேக்கரி வைத்திருந்தவரின் பையன். பேக்கரிக்கு நான் அத்தையுடன் ரிக்ஷாவில் போனதும், அங்கிருந்து இன்னொரு பையன் வீட்டுக்குப் போக அடம் பிடித்ததும், அங்கே எங்களை உள்ளே விடாமல் கதவருகே ஒரு கூர்க்கா டுத்ததும் நினைவுக்கு வருகிறது. உள்ளே போக முடியாவிட்டால் சரி, அங்கே இருந்த நாய் வேண்டும் என்று கேட்டேன். பங்களா வேண்டுமென்று கேட்காமல் நாய் வேண்டுமென்று கேட்டதால் இரண்டு நாளில் எங்கள் வீட்டுக்கு ஒரு அல்சேஷன் குட்டி வந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது நான் வைத்த பெயர் பிரபாகர்’- என்னிடம் சண்டைபோட்ட இன்னொரு பையன் பெயர். நாய் ன்ற சொல்லை வசவாகவும் பிரயோகிக்கலாம்  என்று கூடத் தெரியாத வயதில் இது எப்படி என்று இன்னும் யோசித்தாலும் விடையில்லை.

ஒரு வருடத்திற்குப்பின் அந்த நாயைக் காணவில்லை. ஓடிவிட்டது என்று சொன்னார்கள். செத்துக்கூடப் போயிருக்கலாம். நெருக்கமானவர்கள் சாவார்கள் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கலாம். நாய் வேண்டுமென்று அடம் பிடித்த நான் அதைக் காணவில்லை என்று வருத்தப்படவுமில்லை- எனக்கு விளையாட இன்னொரு பொம்மை இருந்தது- என் தம்பி!  அவன் பெயர் அம்பி! அம்பிகைநாதன் எனும் பெயரின் சுருக்கம்! அவனைப் பற்றியும் அவன் வாழ்வையும் சாவையும் பின்னால் பார்க்கலாம். இந்த பாலகாண்டத்தில் லக்ஷ்மணன் முக்கியமில்லை!

அந்தப் பள்ளியின் நினைவாக இரண்டு பெயர்கள் நினைவுக்கு வருகின்றன- ஹனி மிஸ், அப்புறம் ஜெயஸ்ரீ! ஆண் பெயராக மயில்வாகனன் நினைவுக்கு வருகிறது.

ஹனி மிஸ், மூன்றாம் வகுப்பின் ஆசிரியை. அந்த வகுப்பறையின் கூரை ஆஸ்பெஸ்டாஸ், கொதிக்கும். சன்னலுக்கு அப்பால் விளையாடும் இடம். வெய்யில், ஓரத்தில் ஒரு புளியமரம். ஹனி மிஸ் நினைவாக இருப்பது அவளது கைகள்தான். அவள் பேசும்போது என்ன செய்திருப்பேன் தெரியாது, ஒரு வேளை அந்த வெய்யில் எல்லையில் இருந்த புளியமரத்தின் கிளைகள் ஆடுவதைக் கூடப் பார்த்திருக்கலாம். அவள் கரும்பலகையில் எழுதுவது போல ஒரு பிம்பம்தான் தெரிகிறது. கருப்பில் சில வெள்ளைக் கோடுகள், அவளது பழுப்பு கைகள் என்று தான் நினைவு கூறுகிறது.

வண்ணச்சேர்க்கை, வடிவ ஆதாரம் தெரியாத வயதிலும் அப்படி ஒரு பிம்பம் உள்ளே படிந்திருக்கிறது.

ஜெயஸ்ரீ வேறு கதைகளின் ஆரம்பம். பொதுவாகவே பாடம் நடத்தும் மனநிலையில் இல்லாத போது படம் வரையச் சொல்லி ட்ராயிங் க்ளாஸ் நடத்துவது இன்றும் உண்டு என்று நினைக்கிறேன். அப்படி ஒரு ட்ராயிங் க்ளாஸ் நடக்கும் போது எனக்கு வரைய வந்ததால்  ஒரு சிங்கம் வரைந்து விட்டுத் திமிருடன் பார்த்தபோது, பக்கத்து இருக்கையில் ஜெயஸ்ரீ எனக்கு யானை வேண்டும் என்று கேட்க அவள் புத்தகத்தில் வரைந்து கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. இத்தனைக்கும் அப்படி ஒன்றும் அவள் என் நட்புக்குரியவள் அல்ல. பீற்றிக் கொண்டதன் முதல் ஞாபகமாகவே இது இருக்கிறது. இந்தப் பள்ளிப்பழக்கம் கல்லூரியிலும் இருந்தது, அது வேறொரு காண்டம்!

மயில் அப்போது என் உடன்படித்த மாணவன். அவனைப்பற்றிய நினைவில் முக்கியமாக இருப்பது, பரீட்சை எழுத சில உபகரணங்களோடு வருவான். அதில் ஒன்று அந்தக் காலத்தில் பிரபலமான பிளைவுட் வெட்டிய சாமி படம். அதை மேஜையில் வைத்துவிட்டு, கும்பிட்டு விட்டு எழுத ஆரம்பிப்பான். அந்த குட்டி கட் வுட்  முருகனே அவனுக்கு நிறைய மதிப்பெண் வாங்கிக் கொடுப்பதாய் நினைத்துக் கொள்வேன், ஆனாலும் அதேபோல் ஒரு சரஸ்வதி கட் வுட் நான் வைத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, சின்ன சரஸ்வதி பொம்மை ஒன்று பரீட்சையின் போது என் பையில் இருக்கும்- பக்தியை வெளியே காட்டாமல் நடிக்கும் போலி பகுத்தறிவு பற்றி அறியாத வயதில்! அந்தப் பொம்மை (விக்ரகமாகி, மீண்டும் பொம்மையாகி, அவ்வப்போது பூஜிக்கப்படும் பொருளாகி)  இன்றும் என்னிடம் இருக்கிறது!

இவன் பற்றி இன்னொரு வருத்தம் உண்டு, தகுந்த வயதுக்கு முன்னமேயே என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்ட என் அம்மாவால்! குட்ஷெபர்ட் முக்கியமாகப் பெண்கள் பள்ளி. ஐந்தாம் வகுப்பு வரை போனால் போகிறது என்று ஆண் குழந்தைகளையும் அனுமதிப்பார்கள். அது மெட்ரிக்! நான் அடுத்துச் சேர்ந்த பள்ளி ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளி- செயிண்ட் மேரீஸ். இங்கே பள்ளியாண்டு ஜனவரியில் ஆரம்பம், குட்ஷெபர்ட் ஜூலையில் ஆரம்பம். ஆறுமாதம் அங்கே நான்காம் வகுப்பு படித்து விட்டு இங்கே ஜனவரியில் மீண்டும் நான்காம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்! மயில் மெட்ரிக் பள்ளி ஒன்றில் தொடர்ந்ததால் பின்னால் மருத்துவக் கல்லூரியில் என்னை விட சீனியராக இருந்தான்.

பள்ளி மாற்றம் என்னைப் பெரிதாய் பாதித்ததாய் எதுவும் நினைவிலில்லை. ஆனால் அதே நேரம் எங்கள் வீட்டில் என் நினைவு தெரிந்து முதல் கல்யாணம்!  என் (இன்னொரு) அத்தையின் மகள் அப்போதெல்லாம் எங்கள் வீட்டிலேயே இருப்பாள். அவள் பெயர் ஜான்சிராணி விஜயலக்ஷ்மி! சுருக்கி ராணி என்றே அழைக்கப்பட்டாள், இளவரசியாகவே நடத்தப்பட்டாள். அவளது திருமணத்தின் போது நகை முதல் புடைவை வரை என் அபிப்ராயம் கேட்கப்பட்டது நினைவிருக்கிறது, ஏற்கப்பட்டதா என்று நினைவில்லை! அபிப்ராயம் கேட்கப்பட்டாலே போதும், அதன்படி நடக்கிறார்களா இல்லையா என்ற கண்காணிப்பு முக்கியமில்லை என்று இருக்கும் இப்போதைய பழக்கம் அப்போதே என்னுள் பதிந்திருக்கலாம்.

அவளது திருமண காலத்தில்தான் கல்கியில் ரா.கணபதி எழுதிய அறிவுக்கனலே அருட்புனலே படித்த ஞாபகம். அவளது திருமணத்திற்கு முன்னர் ஆவலோடு அவளுடன்  சேர்ந்து பார்த்த படம்- காதலிக்க நேரமில்லை. வரலாற்றின் காலநிர்ணயம் அல்ல இது, கேள்விகளை உள்தொக்கியது. அன்று நாங்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, என்ன பார்வை பாடல் வரும்போது, இது ஜோதி வெங்கடாசலம் கார்’, என்று என் அத்தை சொன்னது ஞாபகம் இருக்கிறது! அதில் நிறைய சமூக-அரசியல் பின்னணி இருப்பதை உணர எனக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆயின. 

அந்த ராணியின் கணவரை மட்டும்தான் நான் மாமா என்று அழைத்திருக்கிறேன், அவர்தான் வீட்டுக்குள் குமுதம் கொண்டு வந்தார். கல்கி விகடன் குமுதம் தவிர வீட்டில் எப்படியோ முரசொலியும் கிடக்கும்! அத்தையின் உதவி இல்லாமல் நானே பத்திரிகை படிக்க, மிகமிக மெதுவாக என்றாலும் நானாகக் கற்றுக்கொண்டது இந்தக் கட்டத்தில்தான்.

முதல் பத்து வருடங்கள் எந்தவிதத் தயக்கமுமில்லாமல் சொல்ல முடிகிறது, இதன் பிறகிருக்கும் நினைவுகளைத்தான் சல்லடை போட்டுப் பகிர வேண்டியிருக்கிறது.

அடுத்த பதிவும் இந்த முதல் பத்து வயதுகள் பற்றியதுதான்.

26 comments:

தமிழ் உதயம் said...

சுயசரிதையை பரிசோதனை என்று சொல்வதை விட. சுயசரிதை- உண்மையாகவே, சரியாக வாழ்ந்த மனிதர்களின் வாழ்நாள் சாதனை என சொல்லலாம்.

raafi said...

மிகவும் எளிமையான நடையில் பிளந்து கட்டுகிறீர்கள். இது புத்தக வடிவிலும் வரவேண்டும் என்பதே எமது அவா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விரைவாய், விறுவிறுப்பாய் சொல்லிவிட்டீர்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

நல்லா வந்திருக்கு டாக்டர்.. //இதன் நீளம் அதிகம் போலத் தோன்றினாலும் பதிவிடுகிறேன்// சந்தேகமே வேண்டாம் நீளம் தான். ஆனாலும் வாசிக்க முடிகிறது. :))

அடுத்த பாகம்..?!

Chitra said...

சுவாரசியமான தொகுப்பு..... வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

கதை சொல்லும் பாங்கு தனி அழகு தொடருங்கள் ஆவலுடன்.....

uthamanarayanan said...

A parallel linear motion picture runs along unwinding itself voluntarily although not as clear as you write when I am reading your writing, all cobwebs of memories; well, now I think , if not for others , at least for myself I can also write and keep it as a draft without publishing.Well what I would like to say is , your writing inspires and sure I will continue reading yours.Thanks

Subamenu said...

என் வயதொத்த உங்கள் வாழ்கையை படிக்கும் போது நானும் என் வாழ்கையை எழுத நினைத்து, நீங்கள் முன்பகுதியில் சொல்லி இருப்பதுபோன்ற காரணங்களுக்காக இதுவரை எழுதவில்லை.நான் இதுவரை எதையும்
பெரிதாக சாதித்தவன் இல்லை .அனால் என் கதைமூலம் எப்படி வாழக்கூடாது என்று தெரிந்துகொள்ளலாம் .உங்கள் வாழ்கையை உளவியல் பார்வையில் எழுதி இருப்பது நிரம்ப பிடித்திருக்கிறது .மேலும் உங்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Mahi_Granny said...

இந்த அளவு பத்துவயது வரையுள்ள நினைவுகளைக் கொண்டுவரமுடியுமா எனத் தெரியவில்லை. . பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று தான். ஓரளவு அதே காலம் தான். முயற்சித்துப் பார்க்க ஆவல். நன்றி டாக்டர்

Deepa said...

Interesting!
Waiting for more.

கண்ணகி said...

தொடர்கிறேன்..

அன்புடன் அருணா said...

/பழநியாண்டி கோலத்தில் இருந்தவனும் ஆறுமுகத்தோடு மயில் மேல் இருந்தவனும் முருகன்தான் என்றாலும் வேறுவேறு என்று நினைத்துக் கொண்டிருந்தவன் நான்./
நானும்!!

YUVARAJ S said...

நம்முடைய பால்ய பருவத்து நினைவுகளை அசைபோடுவது மிகவும் ரசிக்கக்கூடிய ஒரு விஷயம். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

நமக்கு பிடித்தவர்களின் சுய சரிதையை அறிவதில் எப்போதுமே ஒரு ஆர்வம் இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள் காத்து இருக்கிறோம்.

பனித்துளி சங்கர் said...

///////தமிழ் உதயம் said...
சுயசரிதையை பரிசோதனை என்று சொல்வதை விட. சுயசரிதை- உண்மையாகவே, சரியாக வாழ்ந்த மனிதர்களின் வாழ்நாள் சாதனை என சொல்லலாம்.
////////

மிகவும் சரியாக சொல்லி இருக்கிறார்கள் தமிழ் உதயம் . பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

பழைய நிகழ்வுகளை படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.
மேலும் படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது.
வாழ்த்துகள்!

Anonymous said...

தொடருங்கள்...

Thekkikattan|தெகா said...

அவசியம் எழுதப்பட வேண்டும்... முதல் பகுதி ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டாமென்று கருதி பாதி விட்டு வைத்திருக்கிறேன் :) காலையில் படிக்க.

சிறு, சிறு பகுதிகளாக உடைத்துக் கூட கொடுக்கலாம் ... முழுதும் படித்து விட்டு இன்னொருமொரு பின்னூட்டம் விடுகிறேன். நன்றி!

Murali said...

biographies inspires and motivates people. all the best for its completion in book form.

Thekkikattan|தெகா said...

வைத்துப் படித்ததும் நல்லதுதான் என்று இரண்டாவது அமர்வில் உணர்ந்தேன். வித்தியாசமான முறையில் உள்ளும், வெளியுமென முதல் பத்து வயதிற்குள்ளான அனுபவங்களை வைத்திருப்பது விசயங்களை இப்படியும் கொடுக்க முடியுமென அறியச் செய்கிறது.

எப்படி முதல் பத்துக்குள் இனிப்பானதும், கசப்பனதுமாக மனதிற்குள் விசயங்கள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறதெனவும், அவைகள் எப்படி இன்றும் சில விசயங்களில் இன்ஃபுளுயன்ஸ் செய்கிறதெனவும் (யாரும் செடி எனக் கேட்டால், நீங்க சிபாரிசு செய்யும் அந்த வெயில், வேர்வை, அயர்ச்சியினையொட்டிய நிழலாக அந்தச் செடி மனதினுள் பதிந்து போனது...), வீட்டில் தன்னைச் சுற்றி புழக்கத்தில் இருக்கும் மதம், சாதி மற்றும் ஏனைய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியான அணுகுமுறை எப்படி well into our adulthood வறைக்குமே பயணிக்க முடியும் என்பதும் ...உங்கள் சுயசரிதையெனும் முதல் பத்துக்குள்ளரயே ஓரளவிற்கு வெளியாகி இருக்கிறது.

தொடருங்கள் ருத்ரன்...

செங்கோல் said...

தமிழ்ஓவியாவில் படித்தேன்,தாங்கள் சுயமறியாதை திருமணம் செய்துகொண்டீர்களாமே?தங்கள் மகனுக்கும் அப்படித்தான் செய்துவைத்தீர்களாமே?.தாங்கள் சடங்குகளை வெறுப்பவரா?

Raji said...

நான் பிறந்தவுடனே என் வாயிலிருந்து வேதம் ஒலித்தது; என்னை எல்லாரும் வணங்கினார்கள், தொட்டிலிலிருந்தே நான் அனைவரையும் ஆசீர்வதிக்க ஆரம்பித்தேன்”” என்றெல்லாம் புளுகி ஒரு சாமியாராகத் தொழில்விருத்தி செய்து கொள்ளும் நிலையில் நான் இல்லாததால், நினைவில் இல்லாததைப் பொய்யாக்கி புனைவாக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான்கு வயதிலிருந்துதான் ஞாபகங்கள் - Very Nice....

Vijay Prasath said...

எதேச்சையாக ஒரு தொலைகாட்சியில் உங்கள் நிகழ்ச்சி பார்த்து கவரப்பட்டு உங்கள் பேச்சுக்கு அடிமையானவன் நான். அன்று உங்கள் அரை மணி நேர உரையாடலை காண பல எதிர்ப்புகள் எனக்கு. உங்களை புரியாதவர்கள் என்னை கண்டித்தார்கள். பல வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களை Facebook இல் கண்டதும் என்னை அறியாமல் ஒரு புத்துணர்வு. உண்மையை சொல்கிறேன் பலருக்கு ரஜினி கனவு நாயகனாய் திகழ்ந்த காலத்தில் உங்கள் புகை படத்துடன் திரிந்தவன் நான். என் தாழ்வு மனப்பான்மையை உடைத்தது நீங்கள் தான் அய்யா. கோடான கோடி நன்றிகள் !!!

MARIAPPAN V K said...

I am very much interested to read such things. I am also having the memories from my 5th age. School, college, working places. Your life will be a good lesson to follow. Expecting your contineous writing. Thank you sir.

MARIAPPAN V K said...

Your life will be a lesson to follow. Expecting your contineous writings. I am also having the memories from my age of 5. Now I am 47. But I have not forgotten my childhood. Our best wishes. Thank you sir.

mohamedali jinnah said...

நல்ல கட்டுரை . தொடரட்டும் உங்கள் தொண்டு
எத்தனையோ சரிதைகளும் ,சுயசரிதைகளும் படித்திருக்கின்றோம் .பண்டித ஜவகர்லால் நெஹ்ரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் (Glimpses of World History) உலக வரலாறு(உலக சரித்திரக் கடிதங்கள்) .மகாத்மா காந்தியின் சுயசரிதை,பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள், மற்றும் கணக்கிலடங்காதவைகள் இருக்கின்றன . நமக்குள் எத்தனை உயர்ந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதில் நடந்தவைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது நமக்கு மன நிறைவு உண்டாகும் மற்றும் அதனை மற்றவர்கள் படித்தும் பயனும் அடையலாம். ஒவ்வொருக்குள்ளும் ஓர் சரித்திரம் புதைந்து கிடக்கின்றது. நாம் பெற்ற நல்ல அனுபவத்தினை மற்றவர்களும் அறிந்து அவர்களும் பயன் அடைந்தால் உங்களுக்கும் நன்மை செய்த பாக்கியம் கிடைக்கும் .

Post a Comment