Monday, March 15, 2010

விழித்தான் என்று நினைத்தான்.


வழக்கமான இரவுக்குப்பின், விழித்தான். அவனிடம் கைது செய்யப்பட்டிருப்பதாய் சொல்லப் பட்டது. 
 நீ எப்போதும் கைதிதான், இப்போது நீ கைதானது உனக்குத் தெரிய வந்திருக்கிறது”, என்றார்கள். 
இப்படித்தான் ஆரம்பமாகும் காஃப்காவின் அற்புதமான நாவல். இந்த நாவலை  அடிப்படையாய் வைத்து 1989ல் எழுதியதுதான் விசாரணை நாடகம். அதன் சில வசனங்கள், இன்னும் கொஞ்சம் யோசிக்க.
“கைதானது எப்படி?எதற்கு?” என்கிறான், 
அதற்கு அவர்கள் பதில்,”கேள்விகளை உன்னிடமே கேட்டுக்கொள். கேள்விகளைப் பழகிக் கொண்டால், கேட்க வேண்டியவை தோன்றும்”.
அவனது தொடரும் கேள்விகளுக்கு, எங்களைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ சிந்தித்து நேரத்தை வீணாக்குவதை விட, உன்னைப் பற்றி யோசி. யோசனையில்தான் எல்லாம். வாழ்க்கை, பிறப்பிலிருந்து ஆரம்பமாவதில்லை, யோசிப்பதிலிருந்துதான் ஆரம்பமாகிறது” என்கிறார்கள்.
இது என்ன வழக்கு? இது என்ன விசாரணை என்பதற்கு, அவன் மனத்தின் பதில், “உனக்கு எப்போது வசதியோ அப்போதுதான் விசாரணை ஆரம்பம். இந்த வழக்கு உன்னுள்.  வாடிக்கையாகிவிட்ட விலங்குகள் இறுக்குவதால் இப்போது விசாரணை. விலங்குகள் இயல்பாகி விட்டால், அதன் பெயர் வாழ்க்கை”.
அவன் வேறுவிதமாய் சுதந்திரமாய் இருப்பதுபோல் தெரியும் ஒருவனிடம் போகிறான். அங்கே அவனுக்குக் கிடைக்கும் பதில், “விலங்குகள் இல்லாமல் யாரும் இல்லை. சிலருக்குக் கைதட்டல்கள் விலங்குகள். சிலருக்கு கடமைகள் விலங்குகள். வசதிப்படி விலங்குகளை ஆபரணமாய் ஆக்கிக் கொள்வதுதான் சுதந்திரம்”.
அவன் எல்லாம் துறந்த, தெரிந்த, ஒருவனிடம் செல்ல, அவனுக்குக் கிடைக்கும் பதில் இதுதான். 
எல்லாரும் கைதாகி உள்ள அமைப்பில் நீ அழுவதே உன் விலங்குகளின் சப்தம். கதவருகே வருவதே சாதனை எனும் நடுத்தரம் அங்கேயே கல்லறையைக் காணும். ஏனென்றால், பதில்கள் நிறைந்த கதவின் உட்புறம் சென்றபின், கேள்விகள் நிறைந்த வெளிப்புறம் வர முடியாது. தேவையுமில்லை என்பதால்”.
“எண்ணத்தில், செயலில் நீ நடுத்தரம்”. நடுத்தரம் என்பது பொருளாதாரம் மட்டும் அல்ல என்பதற்காக இது எழுதப்பட்டது. இந்த நாடகம் தான் நான் எழுதியதிலேயே பிடித்த ஒன்று. அதன் சில வசனங்களையே இங்கேயும் எழுதியிருக்கிறேன்.
1989 விசாரணை நாடகத்தின் ஒரு காட்சி 

இதை இப்போது ஏன் பதிவிடுகிறேன்? நானும் யோசிக்கத்தான்.

24 comments:

  1. காஃப்காவின் விசாரனை புத்தகம் வாங்கி படித்து(?) ஒரு மாதிரி குழப்பத்தில் மூழ்கியிருக்க நேரிட்டது. உங்களின் முதல் பக்கமே சட்டென்று புரிந்தது போல் ..........
    வாழ்க உங்கள் மொழிவளமும், சிந்தனைவளமும்.

    ReplyDelete
  2. கேள்விகளை உன்னிடமே கேட்டுக்கொள். கேள்விகளைப் பழகிக் கொண்டால், கேட்க வேண்டியவை தோன்றும்”//ரசித்து வாசித்தேன் . அருமை நன்றி

    ReplyDelete
  3. இது வரை காஃப்கா யாரென்று தேடியதில்லை. ஆனால், தங்களது கூர்மையான, அற்புதமான வசனங்கள் தேடத் தூண்டுகின்றன.. "விசாரணை" நாவலும் எழுதி முடிக்கப் பெறாத நாவல் என்பது ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் தூண்டுகிறது. தங்கள் நாடகங்கள் நூல் வடிவில் உள்ளனவா, குறிப்பாக "விசாரணை"?

    ReplyDelete
  4. எவ்வளவு அபத்தங்கள் எங்கள் முன். காஃப்காவை நினைவூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  5. //“எண்ணத்தில், செயலில் நீ நடுத்தரம்”. நடுத்தரம் என்பது பொருளாதாரம் மட்டும் அல்ல என்பதற்காக இது எழுதப்பட்டது.//

    நிறுத்தி நிதானமா படிச்சா ஒரு தடவைக்கு நாலு முறை சொல்ல வந்த விசயம் புரியுது வரிக்கு வரி என்ன சொல்ல வருகிறதுன்னு.

    யார் யாரையெல்லாம் படிச்சிருக்கீங்க! இதெல்லாம் எப்போ அட்டைப் படத்தையாவது நானெல்லாம் பார்க்கிறதோ, போங்க...

    ReplyDelete
  6. //கேள்விகளை உன்னிடமே கேட்டுக்கொள். கேள்விகளைப் பழகிக் கொண்டால், கேட்க வேண்டியவை தோன்றும்”//

    AWESOME !! என்னென்னமோ யோசிக்க வைக்குது..அருமை..

    ReplyDelete
  7. “எண்ணத்தில், செயலில் நீ நடுத்தரம்”. நடுத்தரம் என்பது பொருளாதாரம் மட்டும் அல்ல என்பதற்காக இது எழுதப்பட்டது. இந்த நாடகம் தான் நான் எழுதியதிலேயே பிடித்த ஒன்று.


    ........... அருமை. வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்தவை.

    ReplyDelete
  8. // கதவருகே வருவதே சாதனை எனும் நடுத்தரம் அங்கேயே கல்லறையைக் காணும். ஏனென்றால், பதில்கள் நிறைந்த கதவின் உட்புறம் சென்றபின், கேள்விகள் நிறைந்த வெளிப்புறம் வர முடியாது. தேவையுமில்லை என்பதால்”.//

    நிதர்சனம்.

    ReplyDelete
  9. ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்தது உங்கள் ஒரு வரி.படிக்க படிக்க 'புதுப்புது அர்த்தங்கள்' தோன்றுகிறது.
    பகிர்விற்கு நன்றி ஐயா
    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  10. Is the book referred Kafka's "Trial"?

    ReplyDelete
  11. தன் விலங்குகளை கையில் தானே பூட்டிக்கொண்டவன் மனிதன்.
    சில சமயம் தங்க "bracelet" போல் பளபளக்கும், பல சமயம் பித்தளையாக பல்லிளிக்கும்.
    தான் ஒரு கைதி என்று அறிதலே புரிதலின் தொடக்கம்.
    மனிதனின் பார்வை சமுகத்திலிருந்து திரும்பி தன்னை பார்த்தலே விடுதலை.
    விலங்குகளை உடைதெரியபோவது யார்?
    கேள்விகளைப் பழகிக் கொண்டால், கேட்க எதுவும் இல்லை என்று கூட தோன்றலாம்.

    என் விலங்குகளை நானே உடைதெரிவேன்.

    ReplyDelete
  12. yes RV. what we did was an adaptation and interpretation in a tamil millieu. it is no way near orson welles' film on the novel TRIAL by kafka.

    ReplyDelete
  13. @@@வாடிக்கையாகிவிட்ட விலங்குகள் இறுக்குவதால் இப்போது விசாரணை. விலங்குகள் இயல்பாகி விட்டால், அதன் பெயர் வாழ்க்கை”///

    அட..நல்லாருக்கே...!!

    ReplyDelete
  14. பதில்கள் தெரிந்துவிட்டாலும் கூட இந்த இந்த கேள்விகளுக்கான இந்த இந்த பதில்கள் என்பதை தரம் பிரிக்க கேள்விகள் அவசியமாகிறது. விசாரணை நாடகம் சரியான தலைப்பு, ஏனெனில் அது நாடகமாக மட்டுமே இருக்க இயலும்.

    ReplyDelete
  15. "கேள்விகளை உன்னிடமே கேட்டுக்கொள். கேள்விகளைப் பழகிக் கொண்டால், கேட்க வேண்டியவை தோன்றும்”.
    கேள்வி என்பதே பதிலை சார்ந்தது. எங்கே பதில்கள் தெரிந்து விடுகிறதோ அங்கே கேள்வி எழுவதில்லை. இது உண்மைதான், நாம் தெரிந்த பதில்களுக்கு மட்டுமே கேள்வி எழுப்புகிறோம். எனக்கு இது தெரியும் என்பதற்காகவும், உனக்கு இது தெரியுமா? என்பதற்காகவும். எங்கே கேள்வி பதிலை சாராமல் தேடுதலை மட்டும் சார்ந்ததோ, அதுவே அறிவியல். "கேட்க வேண்டியவை தோன்றும்" என்பது பதிலை மட்டும் குறிக்காமல், கேள்வியும் மறைவதை குறிப்பதாகவே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  16. எங்களைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ சிந்தித்து நேரத்தை வீணாக்குவதை விட, உன்னைப் பற்றி யோசி. யோசனையில்தான் எல்லாம். வாழ்க்கை, பிறப்பிலிருந்து ஆரம்பமாவதில்லை, யோசிப்பதிலிருந்துதான் ஆரம்பமாகிறது”//

    முதலில் மனிதர்கள் இதைச் சித்திக்கட்டும்

    ReplyDelete
  17. //வசதிப்படி விலங்குகளை ஆபரணமாய் ஆக்கிக் கொள்வதுதான் சுதந்திரம்//ஆபரணம் எனும் விலங்குகளையோ, எதையுமோ எந்நேரமும் துறக்கத்தேவையான துணிவோடு அணிந்திருந்தால்?

    ReplyDelete
  18. “விலங்குகள் இல்லாமல் யாரும் இல்லை. சிலருக்குக் கைதட்டல்கள் விலங்குகள். சிலருக்கு கடமைகள் விலங்குகள். வசதிப்படி விலங்குகளை ஆபரணமாய் ஆக்கிக் கொள்வதுதான் சுதந்திரம்”.//

    உண்மை.. அருமை ..ருத்ரன்..

    ReplyDelete
  19. why my comments didnt publish in ur blog. is it not ok to you...
    -mani

    ReplyDelete
  20. மணி, தவறுதலாகக் காணாமல் போயிருக்கும். மீண்டும் அனுப்பவும்.

    ReplyDelete
  21. நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவைகள்தான்.

    ReplyDelete
  22. Sunantha has left a new comment on your post "ஆத்திரம் பொங்கி வருகிறது.":

    //இப்படித்தான் டாக்டர் நீங்கள் தொடர்ந்து பதிவெழுதி உங்களை குறித்து அறிவு ஜீவி என்று இன்னும் சிலர் கொண்டுள்ள பிம்பத்தை கட்டுடைக்க வேண்டும்.

    I agree.even rudhran disagrees with JM article, even if some of them are wrong, what's the big deal?.why so crude doctor?

    I never expected such shallow thoughts.rudhran has only qns. no answers?!! very strange...doctor, I recommend you to stop reading Psychiatry and start reading JM in order to stop asking qns and start answering others.




    good sunanthaa
    thanks for the advice.
    just another question-
    is it better to be crude or dishonest?

    i cannot risk my sanity for the sake of your famous writer!
    keep reading...and tell me if there are any true answers!

    ReplyDelete
  23. தன்னைப்பற்றி யோசிப்பவர்களின் ஜெனியூனிட்டிக்கு எது அளவுகோல். அவர்கள் தங்களது தவறுகளை தாங்களே முன்வந்து எப்படி ஒத்துக் கொள்வார்கள். மற்றவர்களது மீதான விமர்சனமும் கேள்விகளும் தமக்குள்ளும் எதிரொலிக்காமல் இருந்து விடுமா என்ன•..

    சமூகமும் உறவுகளும் நமக்கு அணிவித்து இருக்கும் விலங்குகளை ஒவ்வொன்றாக கழற்றி எரிவதன் மூலம்தான் வாழ்க்கை அர்த்தப்படுகிறது. கேள்விகள் இல்லாத மனிதனுக்கு மண்ணிற்கு பாரமான வாழ்க்கை அவசியமா என்றும் தெரியவில்லை.

    ஏற்றுக் கொண்ட பாத்திரங்களுக்கும் அதன் செயல்களுக்கும் நாம்தானே பொறுப்பு. அது வே விலங்குகள் எனப் புலப்படத் துவங்கினால் கொஞ்சம் கஷ்டம்தான்.
    -mani

    ReplyDelete
  24. விஷய ஞானம் என்பது விஷ ஞானம். அது நம்மை எல்லாம் தெரிந்த ஏகம்பரமாக்கி, எதுவும் தெரியாமல் போக செய்யும். பொருள் விளக்க மேற்கோள் தேவையில்லை என்ற போதும் சிவ சூத்திரத்தின் "ஞானம் பந்தஹா" நினைவிற்கு வருகிறது என்பதுதான் இதன் இயல்பு. கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. விஷய ஞானத்தை குப்பையென ஒதுக்கும் மனிதனிடம், கேள்விகள் மட்டுமே எஞ்சி நிற்கும். கேள்விகளை எப்படி பழக்கிக்கொள்வது என்பதைத்தானே இந்த பதிவும் உணர்த்துகிறது. எல்லோருக்கும் பொருந்தும் கேள்விகளுண்டு, எல்லோருக்கும் பொருந்தும் பதில் என்பது யாரிடமும் இல்லை என்பதுதானே உண்மை. இது தெரியாதவர்கள் ஜெயமொஹனையோ அல்லது ஒரு எடை குறைவான "encyclopedia" வையோ தலையில் சுமக்கலாம். டாக்டருக்கு, ஏன் பதில் தெரிவதில்லை என்ற கேள்விக்கு கூட அங்கு மனம் குளிரும் பதில் இருக்கலாம், யார் கண்டார்?

    ReplyDelete