இன்னும் இதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்காதே
என்று அன்புடன் எனக்கு நெருக்கமானவர்கள் சொல்லியும் கேளாமல் சில விஷயங்களைத் தெரிவிக்க
வேண்டி இதை எழுதுகிறேன்.
ஹூஸைன் சரஸ்வதியை வரைந்தது
1970. இந்துத்வ எதிர்ப்பு வந்தது 1996. இடையில் அரசியல் கலந்த ஒரு மதத் தேர் தேசத்தில்
வலம் வந்தது. அவனை எதிர்க்க அவனது மதமும் ஒரு காரணம், மதத்தை அரசியலாக்கியதும் காரணம்.
அவன் அதன்பின் அது மாதிரி
வரையவில்லை. ஆனால் இன்றும் அரைவேக்காட்டுத்தனமாய் அவன் தொடர்ந்து அப்படி வரைந்து வருவதாகப்
பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஐயோ அற்புதமான ஓவியனை இழந்து
விட்டோமே என்று நான் புலம்பவில்லை. அவனைவிடச் சிறந்த இந்திய ஓவியர்களை எனக்குத் தெரியும்.
தான் பத்ம விருது கொடுத்து கௌரவித்த ஒருவனையே ஒரு வெறி பிடித்த கூட்டம் மிரட்டும் போது
கையாலாகாமல் கிடந்த வருங்கால வல்லரசின் மீதுதான் என் ஆத்திரம்.
வரலாறு தெரியாமல் விவரம் புரியாமல்
எழுதுபவர்கள் ஒரு பக்கம் என்றால், பெரியவாளின்
அருள் கிடைக்கவும், சின்னவாளின் அரவணைப்பு வேண்டியும் சிலர் எழுதுகிறார்கள்.
அறிவாளிகளின் அங்கீகாரமே எழுத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும்.
சிலர் எழுத்தை மனதாரப் பாராட்டுகிறேன், அவர்களின் மொழித்திறனுக்காக மட்டுமல்ல கருத்துச்
செறிவுக்காகவும். புதிதாய் எழுத வரும் இளைய தலைமுறையை எப்போதுமே இன்னும் எழுத வாழ்த்துகிறேன்.
எழுதுவதைப் பாராட்டுவது ஊக்குவித்தல்; எழுத்தைப் பாராட்டினால்தான் அது ஆமோதித்தல்.
புரிந்து கொள்பவர்கள் வளர்வார்கள்; புரியாததாய் நடிப்பவர்கள்
கொஞ்ச காலம் ஏமாற்றிவிட்டு காணாதொழிவார்கள்.
இத்துடன் ஹூஸைன் விவகாரம்
என்னைப் பொறுத்தவரை முடிந்தது. இதில் பின்னூட்ட விவாதம் தேவையில்லை.