Friday, May 29, 2009

'பதிவு' பற்றி..

பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என் தனிப்பட்ட உணர்ச்சிப்பெருக்கினையே எழுத ஆரம்பித்து, என் தட்டச்சுப்பயிற்சியின்மையால் குறுக்கிப் பின் (இப்போதெல்லாம் அதிகமாய் விலை போகக்கூடிய சமூக உந்துதலில்) ஈழத்தையும் இணைத்துப் பதிவிட்டேன்!
ஒரு நாள் முழுவதும் பதிவை எங்கும் இணைக்காமல், சும்மா விட்டுப்பார்த்தேன்! ஓரிருவர் பார்த்தார்கள், இருவர் கருத்துக்களை வெளியிட்டார்கள்... மறுநாள், தமிலிஷ் தளத்தில் இணைத்தேன்.. நான்கு மணி நேரத்தில் அது பிரபல இடுகை ஆனது!

இனி என்ன செய்யப்போகிறேன்?
ஈழம் பற்றி இன்னும் கொஞ்சநாள் ஓடும், பிறகு கருணாநிதி கரு கொடுக்கத்தயங்காத வள்ளலாகப்போகிறார்..சீக்கிரம் ஒரு தேர்தல் வரும்..ஓ பற்றி எழுதுவோம்..எதுவுமே கிடைக்காவிட்டால் நமீதா, த்ரிஷா என்றெல்லாம் எழுதலாம்..
பதிவு எழுதுவது ஒரு செளகரியம், ஒரு சந்தோஷம்...
அதில் ஒரு அந்நியத்தன்மையோடு கூடிய அன்னியோன்யம் உள்ளது, அதில் பொய்கள் எளிது, அதில் போலித்தனம் சுலபம், மேம்போக்கான புத்திசாலித்தனம் விலைபோகும்... புதுப்புது உறவுகள் ஏற்படும், அவை பல்வேறு விதங்களில் லாபகரமாகவும் ஆகலாம்..
பதிவு என்பது என்ன?
அந்தரங்கத்தின் பகிரங்கமா? பகிரங்கமாக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்படும் அந்தரங்கத்தின் ஒப்பனையா?
காலம் எனக்கு விடை சொல்லத்தான் போகிறது..அதுவரை எது விடை என்று யோசிக்கலாமா

Wednesday, May 27, 2009

ஒவ்வொன்றும் பொய்யாக மாறும்போது

ஏனோ இன்று காலை எழும்போதே மன‌த்துள் இந்தப்பாடல் ஓடியது..
இத்தணைக்கும் எனக்கு மிகச்சமீபத்தில் பெரிய இழப்போ அதன் தொடர்பான சோகமோ ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. நான் கண்ணாதாசனின் தீவிர ரசிகன்தான் என்றாலும், தினமும் காலை அவன் பாட்டோடு ஆரம்பிக்கும் வெறியெல்லாம் எனக்கு இல்லை.
பின் ஏன்?
ஒருவேளை இன்று காலை என் குடும்பக்கோயிலின் கும்பாபிஷேகம் ஒரு காரணமாயிருக்கலாம்..குடும்பம் பல காலமாய் சென்றுவந்த கோவிலே தவிர அது ஒன்றும் என் குடும்பச்சொத்து அல்ல..அங்கே ஏதோ சரியில்லை என்று தோன்றினாலும், அது குறித்து எனக்கு ஒன்றும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை (என்று நினைக்கிறேன்).

பின்?
சில நேரங்களில் காரணமேயில்லாமல் ஒரு சோகம் நம்மைக்கவ்வி, விழியில் இருட்டடிப்புச்செய்யும்.
அது ஒரு நோயின் அறிகுறி..இதற்கு மருத்துவவுதவி உண்டு என்றெல்லாம் தெரிந்தாலும்...
இப்போது தோன்றுவது இதுதான்..
ஊரேது உறவேது உற்றார் ஏது...
உறவெல்லாம் பகையாக மாறும்போது,
ஒன்றேது இரண்டேது மூன்றுமேது,

ஒவ்வொன்றும் பொய்யாகிப்போகும்போது"


ஈழத்தமிழனின் மனநிலை போலவும் இவ்வரிகள் தொனிக்கின்றன‌..டெல்லியில் மகுடாபிஷேகம், மக்கள்வதையில் அசிரத்தை, பொய்களின் வியாபார முழக்கம், போலி அரசியலின் பம்மாத்து..ஒவ்வொன்றும் பொய்யாகிப்போகும்போது

பாடலை நான் தேடிய சிரமம் உங்களுக்கு வேண்டாமென்றே இங்கே சுட்டி

Saturday, May 23, 2009

வாய்ச்சொல்

வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை
பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் பற்றியே என் சிந்தனை. சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்பது பற்றிய மிதப்பை மீறி, அதே பாட்டில் வளர்ச்சி நோக்கிப்பாடப்பட்ட ஆலைகள் கல்விச்சாலைகள் குறித்து யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.
ஆலைகள் உருவாக்க முதலாளிகள் நிறையபேர் இந்தியாவிலிருந்தே துடிப்பாகக்காத்திருக்கிறார்கள்,
கல்விச்சாலைகள்?
முப்பது ஆண்டுகள் போரிட்டுப்படிக்காத தலைமுறை, அடுத்த முப்பது ஆண்டுகளிலாவது பாடம் பயில வேண்டாமா..
படிக்காதவன் என்ன செய்யமுடியும்...படித்தவர்களே வாக்களிப்பதால் வாழ்க்கை மாறும் என்று நம்பும்போது.. ஈழம், புலி, பீற்றல், பொய்...எல்லாமும் செளகரியமான, பாதுகாப்பான அந்நிய அன்னியோன்னியத்தின் வெளிப்பாடுகளாகிவிட்ட வேதனையான நிஜத்தில், பொய்களாகிப்போவதென்றாலும், கனவுகளை மீட்டுப்பார்ப்போம்..
அங்கே குழந்தைகள் காத்திருக்கிறார்கள்
உங்கள் பதிவுகளுக்காக அல்ல, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உணவுப்பொட்டலங்களுக்காக அல்ல, உங்கள் முதலாளிகள் போடப்போகும் சாலைகளுக்காகவும் அவற்றின் ஓரம் உருவாகப்போகும் ஆலைகளுக்காகவும் அல்ல, நீங்கள் தருவதாகப்பாவனை காட்டும் மருத்துவ உதவிக்காகவும் அல்ல...
அந்தக்குழந்தைகளின் கண்களில் ஒரு புரியாத வருங்காலம் வெறுமையாய் மின்னுகிறது..
என்ன செய்யலாம்?
பதிவெழுதி,
பார்ப்போர் எண்ணிக்கை எண்ணி
நாளை காலை பத்திரிக்கை படிப்போமா..பழக்கமில்லாமல் புதிதாய் உருப்படியாய் சிந்திப்போமா?
இவ்வளவும் பேச எனக்கு வாய் தான் இருக்கிறது, செயலில் இறங்க வசதியில்லை..இருப்போர் காதில் இது விழுமா என்று கூடத்தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டுத்தட்டுத்தடுமாறி..தட்டச்சு செய்கிறேன்..வக்கில்லாமல்தான்!

Friday, May 15, 2009

காத்திருக்கிறேன், கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்

49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது.
தோழர்களைப்போல், போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வாக்கிட்டு வெறுப்பை வெளிப்படுத்தலாமே என்று தான் மாலை வரை யோசித்துவிட்டு சாவடிக்குப்போய்
கையெழுத்திட்டுவிட்டு, "49ஓ போடணும்" என்றேன். அந்த ஆசாமி/அதிகாரி சத்தமாகஇவர் 49 என்றார். ஓரமாய் இருந்த இரண்டு கழகத்தின் கண்மணிகளும் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்..அவசரமாய் ஒருவர் வீடியோ எடுத்தார்..அதிகாரி போல் இருந்தவர்" சரி" என்றார்..." போன தேர்தலில் ஒரு பதிவேட்டில் கையெழுத்து போட்டேனே அது போல் இப்போது எங்கே" என்றால், தேவையில்லை என்றார்கள்..என் முகத்தில் என்னவோ தொந்தரவு தெரிந்ததாலோ, அவசரமாக ஒரு காகிதத்தைக்கிழித்து இதில் கையெழுத்து போடுங்கள் என்றார்கள்..
அந்த காகிதம் நான் வெளிவந்தபின், உள்ளே சென்ற பஜ்ஜி துடைக்கப்பயன்பட்டிருக்கும்..
பக்கத்து அறையில் என் மனைவிக்கும் இப்படியே..

கொஞ்ச‌ம் அல்ல நிறையவே கேவலமாக உணர்ந்து கையாலாகாத மெளன கோபத்துடன்..தொலைகாட்சியில் அலசப்படும் அப்பட்டமான பேரங்களைப் பார்த்துவிட்டு..
கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
காத்திருக்கிறேன், அடுத்த தேர்தலையாவது புறக்கணிக்க‌

Monday, May 4, 2009

மே 10, மாலை

மே 10, மாலை என்று பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்படும் நிகழ்ச்சி குறித்து சில சிந்தனைகள்...
தீபாவை தெரியும், மற்றவர்களில் சிலரைப்பார்த்திருக்கிறேன், சிலருடன் பேசியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பு எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நேரடியாய் பரிச்சயம் ஆகாமலேயே நன்கு பழகியவர்களைப்போன்றதொரு நெருக்கத்தை வலையுலகம் நம்மில் பலருக்கு அமைத்துத்தந்துள்ளது.

ஆனாலும்---
இப்போதுதான் அன்புள்ள தீபா என்று ஆரம்பித்து..
உன் பதிவில் தான் இதன் ஆரம்பம், அதனால் உனக்கே இதற்கான முதல் வாழ்த்தும் நன்றியும்.
இவ்வளவு பரபரப்பாக இது எதிர்பார்க்கப்படுவது உள்ளே ஒருவித சலனத்தையே ஏற்படுத்துகிறது.
இது வரை என்னை யாருமே வருகிறாயா என்று கேட்கவில்லை, ஆனால் நான் வரத்தான் போகிறேன்.. இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் அழைப்பு தேவையில்லைதான்..ஆனாலும் ஏனோ ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
இன்னும் பொறுப்பாக..வருவதாய் அறிவிக்கப்படுபவர்களின் முன் ஒப்புதலோடு இனி வரப்போகும் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
இது ஒரு கெளரவப்பிரச்சினையல்ல.., ஒரு செளகரியம் சம்பந்தப்பட்ட விஷயம்.
நாளை சந்திப்போம்....ஷாலினியிடமாவது கேட்டு நிச்சயித்து விட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
என்று எழுதி முடித்தேன் ...
பதிவர்கள் உருப்படியாகவும் காரியங்கள் செய்வார்கள் என்று காட்ட முயற்சிக்கும் இந்த நிகழ்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் இருந்தாலும்,

ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் அறிவிப்பில் முன்வைக்கப்பட்டால் அவர்களிடம் ஒப்புக்க்காகவேனும் ஓர் ஒப்புதல் அவசியம் என்பது என் கருத்து .

சரி
அன்புடன் சில விஷயங்களுக்கு சிலரை அழைக்கவேண்டியதில்லை, அவர்கள் வருவது இயல்பாக எதிர்பார்க்கப்படும் ஒன்று என்றே நாம் நினைத்துக்கொண்டாலும்.. அந்த நெருக்கம் எப்படி வலைஉறவுகளில் உருவாகிறது என்பதை இப்போது நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் சற்றே யோசித்திருக்கிறேன் ..
இதை இன்னும் ஆழமாக நாம் கவனித்தால் நாளை இதன் மூலம் இன்னும் சில சமுதாய சாத்தியங்கள் எனக்கு கனவுகளாக விரிகின்றன.

அப்புறம்,
நாளைஎதிர்பார்ப்புகள் குறைய இருந்தால் மகிழ்ச்சிகள் கூடும் என்பது என் எண்ணம். நான்உரையாற்ற வரவில்லை, உரையாடத்தான் வருகிறேன்

சந்திப்பின் பின் இது குறித்து எழுத முயல்கிறேன்.
இதை வருத்தத்தோடு இல்லை ..அக்கறையோடு தான் எழுதுகிறேன்